சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
37
70. முகவுரை


இச் சித்திர பாரதிக்கு முகவுரை அவசியமில்லை. ஆயினும் ஆசிரியரின் வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. அவர் இதற்காகப் பட்டுள்ள பாடு இவ்வளவு அவ்வளவன்று. பாரதியாரைச் சித்திரித்துக் காட்டும் படங்கள் இதில் பல இருப்பதோடு அவரைப் பற்றி வரைந்துள்ள சொற்சித்திரங்கள் பெரிதும் போற்றத்தக்கனவாகும். பாரதியார் சம்பந்தப் பட்ட பத்திரிகைகள், புத்தகங்கள், புகைப்படங்கள், கைப் பிரதிகள் சேகரிப்பதில் இவ் வாசிரியர் காட்டியுள்ள ஊக்கமும் உடல் உழைப்பும் சிறிதன்று. இவற்றின் பொருட்டு ஊர் ஊராய் அலைந்து திரிந்து, மூலை முடுக்குகளில் போய் பாரதியாருக்கு அறிமுகமானவர்களையும் அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்களையும் கண்டுபிடித்துள்ளார். அவர்களோடு பாரதியார் கூடிக் குலாவிப் பேச் குலுங்கச் சிரித்தும், வம்புகள் பேசியும் விளையாடிப் பிரிந்த செய்திகளில் கிடைத்தமட்டும் நேரில் சேர்த்துள்ளார். பாரதியாரின் நடையுடை பாவனைகளுக்கு இந்நூலாசிரியரைத்தான் தற்கால பொக்கிஷம் எனலாம். தாம் இப்படி வருந்திச் சேர்த்த இரத்தினங்களை உலகமெல்லாம் படித்தும் கேட்டும் களிப்படைய புத்தக ரூபமாய்ப் பகிர்ந்து கொடுக்க முன் வந்துள்ளார். இந் நூலின் பொருட்டுத் தமிழ் உலகம் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது. சென்ற வருஷம் நான் குடும்பத்தோடு சென்னை சென்றபோது, இந் நூலாசிரியர் தாம் பாரதியார் விஷயமாய் சேர்த்துள்ள பொருள்கள் யாவற்றையும் ஒன்று விடாது அயர்வின்றி ஒரு நாள் முழுதும் சுவையோடு எமக்குக் காட்டி விளங்க வைத்தார். அவருக்கு பாரதியாரிடமுள்ள அன்பும் ஆர்வமும் பக்தியும் அன்று எனக்கு விளங்கிற்று.

'இந்தியா' பத்திரிகை சென்னையில் வெளிவர ஆரம்பித்த கொஞ்ச நாட்களுக்கெல்லாம் பாரதியார் அதில் வந்து சேர்ந்தார். இதற்கு முன்பே 'பால பாரதா' என்னும் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் அவர் எழுதியிருந்த ஒரு கட்டுரையைப் படித்து அவர் திறமையை நான் அறிந்திருந்தேன். பின்பு அவரை சந்தித்ததிலிருந்து எங்கள் நட்பு வெகு சீக்கிரத்தில் வளர ஆரம்பித்தது. அந்நாட்களில் அவரை நாங்கள் 'பாரதி, பாரதி' என்று அழைத்து வந்தோம். மகா காவியங்கள் இயற்றி, வரகவியாய், கவிச் சக்கரவர்த்தியாய் விளங்கும் இந் நாட்களில் எல்லாரும் அவரை 'பாரதியார்' என்று அழைக்கும்போது, "இவர் யார்? நம்மோடு சகஜமாய்ப் பழகி, குழந்தை போல், 'சி.சு.பாரதி' என்று சொல்லிக் கொண்டிருந்தோமே அவரா?" என்று கேட்கும் படி ஆகிவிட்டது.

சென்னையில் அவரோடு ஓரிரண்டு வருஷங்கள் பழகி இருந்தாலும் நாங்கள் அன்னியோன்யமாய் நெருங்கிப் பழகியது புதுச்சேரி சென்ற பிறகுதான். அங்கு எங்கள் சிறு கூட்டத்தில் அவர்தான் ராஜா. நாங்கள் சதுரங்கம், சீட்டு முதலியன ஆடியதுண்டு; பெரும்பாலும் வ.வே.ஸு. அய்யர் ஜயம் பெறுவார். இருந்தாலும் எங்கள் ஆட்டம் பாரதியார் இல்லாவிட்டால் சுவைபெறாது. ஆட்டத்தின் ஜயத்தில் எங்களுககுச் சுவையில்லை. அங்கு நடக்கும் சம்பாஷணையில் உள்ள ரஸம் எங்களுக்கு வேண்டியிருந்தது. கடற்கரையில் அரை இருள் படர்ந்து வரும் அந்தி பொழுதில் கணீரென்று அவர் பாட ஆரம்பித்தால், அவர் மாத்திரமன்று, அவரைச் சுற்றியுள்ள நாங்களும், எங்களைச் சுற்றியுள்ள சராசரிப் பொருள்களும்கூட அசைவற்று மெய் மறந்து அவரது இன்னொலியில் ஈடுபட்டிருப்பதுபோல் தோன்றும்.

சிறு வயதிலிருந்தே பாரதியார் தம் நாவில் தமிழணங்கு உலாவுவதை உணர்ந்திருந்தார். ஆனால் அவருடைய தகப்பனார் சின்னசாமி அய்யருக்கு தமிழைவிட ஆங்கிலம், கணிதம் போன்றவைகளில் தம் மகன் முன்னுக்கு வர வேண்டும் என்பது கருத்து. அவர் தகப்பனார் என்ற தோரணையில் மகன் மேல் தம் அதிகாரத்தைச் செலுத்தப் பார்த்தார். "சிங்கக் குட்டிக்குப் பசும்புல்லை உணவாகக் கொடுத்து வளர்க்க முயன்றது போலாயிற்று" எனறு பாரதியாரே இதை ஏளனம் செய்திருக்கிறார். அவ்விதமாகத் தமக்கு இயல்பாயில்லாத வழியில் ஆங்கிலத்தைப் புகட்டும் முயற்சியை வெறுக்க ஆரம்பித்தார்.

இவ் வெறுப்பைத்தான் பிற்காலத்தில் தம் காவியங்களில் கூறியுள்ளார். இதனால் அவருக்கு இங்கிலீஷ் பாஷை தெரியாதென்றும், அதிலுள்ள பேரெண்ணங்களை அவர் இகழ்ந்தாரென்றும் எண்ணலாகாது. அது ராஷ்டிரபாஷை என்று நம் தாய் மொழிகளுக்கும் முன் அதைச் சிறுவர்களுக்கு வலுவில் புகட்டுவது தவறு என்பதே அவர் கருத்து. அவருக்குத் தக்க வயது வந்து காசியில் வசித்தபோது சொற்ப காலத்தில் ஷெல்லி, கீட்ஸ், வேர்ட்ஸ் வொர்த் என்னும் பெரிய பெரிய ஆங்கிலேய இயற்கைக் கவிகளைச் சுவையோடு படிக்கலானார். அதன் பயனாக ஆங்கிலக் காவியங்களையும் தமிழ்க் காவியங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, மற்றவைகளுக்கு ஒரு சிறிதும் குறைவில்லாத தமிழ்க் காவியங்களும் அந்த ஆங்கிலக் காவியங்கள் போல் உலகனைத்தும் பரவாமல் மறைந்து கிடக்கின்றனவே என்று பெரிதும் குறைப்படுவார்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவதெங்கும் காணோம்;
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழர் எனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலக மெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்...."

என்று உலகிலுள்ள மூலை முடுக்குகளில்கூட ஒலிக்கவேண்டிய 'தமிழோசை'யை மூடிவைத்துககொண்டு "பாமராராய், விலங்குகளாய், நாமமது தமிழரென"ப் பெருமையோடு வெட்கமின்றித் திரிகின்றோமே என்று மனம் கசிந்து வருந்தினார். அவர் இப்பாட்டை எழுதி அரை நூற்றாண்டுக்கு மேலாகிறது. நம் நாடு சுதந்திரம் பெற்று பத்து வருஷங்களாகின்றன. அவர் காலம் சென்ற கால் நூற்றாண்டில் சுதந்தரம் பெற்ற தமிழ்நாடு அவர் வறிய நிலையிலேயே இன்னும் இருப்பதைக் காண்பாரானால் அவர் மனம் எப்படித் துடிக்குமோ என்பதை நினைக்கவே பயமாயிருக்கிறது!

நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழ்த் தாய் தன் மக்களிடையே புதிய வழியில் தவழ்ந்து விளையாட ஆரம்பித்திருப்பதைக் காண்கிறோம். ஆனால் சொற்ப தினங்களில் பூமண்டலம் சுற்றி வரும் நிலையிலிருக்கும் நாம் நம் தாய் மொழியின் திருவிளையாடல்கள் இக்குறுகிய சிறு தமிழ்நாட்டில் அடக்கி வைத்து வேடிக்கை பார்ப்பது தகுமா? கிரேக்க நாட்டினர் நாம் குறுகிக் கிடந்தாலும் தம் உயர்ந்த தாய் மொழியின் பெருமையை உலகம் போற்றும்படி செய்து விட்டார்கள். ஸாக்ரடீஸ், ப்ளேடோ, அரிஸ்டாட்டில் போன்ற மாரும் மேதாவிகள் மூலம் உலகில் அடைந்த தன் உச்சஸ்தானத்தை அம்மொழி இன்றைக்கும் பாதுகாத்து வருகிறது. அதன் அக்காடெமி (Academy) என்னும் பண்டிதக் குழுவுக்கு நம் தமிழ்ச் சங்கம் சிறிதும் குறைந்ததன்று. நீர்வள, நிலவளங்களிலும், விஸ்தீரணத்திலும் தமிழ்நாடு கிரேக்க தேசத்திற்குக் குறைந்ததில்லை. நம் கவிவாணர் அப் பண்டைக்காலப் புலவர்க்கு எவ்விதத்திலும் ஈடு கொடுக்க வல்லவரே. சிவபிரான் ஆதியில் தந்த தமிழ் மொழி இன்று நேற்றையதன்று. மனிதன் குகைவாசியாய் இருந்ததற்கும் முன்பு விருக்ஷவாசியாய் இருந்தபோது அப் பண்டையினம் பண்டைக் காலத்தில் அவன் உச்சரித்த சொற்கள் பல இன்றைக்கும் தமிழில் காணக் கிடைக்கின்றன.

நிலப் பரப்பில் மலைகளும் பள்ளத் தாக்குகளும் மாறி மாறி உயர்ந்தும் விரிந்தும் கிடப்பதுபோல் நமது இலக்கியப் பெருக்கிலும் காணக் கிடக்கின்றன. அதனால் மனம் குன்றாது பேரிலக்கியங்களைப் பரப்பப் பாடுபட்டு வருவோமானால் நம் தாய் மொழி ஓங்காமல் இராது. அதை வெளிநாடுகளில் பரப்புவதால் அந்நாட்டினர்க்கு நாம் புதிய கண்களைத் அறித்தது போலாகும். அவர்கள் உலகைப் புது நோக்கோடு காண்பார்கள். அவர்கட்கு தமிழின் பெருமையும் அதனால் விளங்கும்.

உதாரணமாக, திருக்குறளைச் சீராகப் படித்தறிந்த வெளிநாட்டுப் பேரறிஞர்கள் ஒரே குரலாய் அதன் பெருமையைப் போற்றுவதைக் காண்கிறோம். உலகில் எந்த பாஷையிலும் இம்மாதிரி நூல் கிடையாது என்று அவர்களே கூறுகிறார்கள். ஆனால், எவ்வளவு திறமையோடு மொழி பெயர்த்தாலும் முதல் நூலின் அழகும் சுவையும் மொழிபெயர்ப்பு பெறுவதில்லை.

'தொட்டனைத் தூறும் கேணி' போலத் தோண்டத் தோண்டச் சுரக்கும் தன்மையை மொழிபெயர்ப்பில் கொண்டுவர முடியாது.

"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை"

என்கிறார் பாரதியார். இப்படிப்பட்ட மிக்குயர்ந்த இரத்தினங்களைக் கையில் வைத்துக் கொண்டு,

"ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம், ஒரு சொற்கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் !"

தெருவெல்லாம் என்றது தமிழ் நாட்டும் தெருக்கள் மாத்திரமன்று, மற்ற இந்தியப் பிராந்தியங்களிலும், விரிந்த இவ்வுலகிலுள்ள வெளிப் பிரதேச நகரங்களிலும் உள்ள தெருக்களில் எல்லாம் "தமிழ் முழக்கம் செய்வீர்" என்றே பாரதி தமிழ் மக்களைத் தூண்டுகிறார்.

பாரதியாரின் இக்கட்டளையை நிறைவேற்றவே இச்'சித்திர பாரதி' வெளி வந்துள்ளது. இந்திய நாடுகள் மாத்திரம் அன்று, இவ்விரி உலகில் "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை" இது செய்தே தீரும் என்று எதிர்பார்க்கலாம். இதன் ஆசிரியரும், அந்நிய தேசத்தினர் தம் கலைகளை நம் நாட்டில் பரவச் செய்துவரும் முறைகளை நன்கறிந்தவரே. அம் முறைகளைப் பின்பற்றி தலை சிறந்த தமிழ் நூல்களை வெளிநாட்டினர் சுவைக்கச் செய்து பாரதியார் மனதைக் குளிரச் செய்வது அவருக்கு எளிதென்றே நம்புகிறோம்"

இதில் இவர் முயற்சி திருவினையாக்குக!

ஸ்ரீ. ஸ்ரீ. ஆசார்ய
7/8, ஈஸ்ட் படேல் நகர்
புது டெல்லி - 12
21-5-1957

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur