பரலி சு.நெல்லையப்ப பிள்ளை பாரதியை விட ஏழு வயது சிறியவர். 1889ஆம் ஆண்டு ஸெப்டம்பர் 18ஆம் தேதி திருநெல்வேலி ஜில்லாவில் பிறந்தவர். வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு வலக்கை போலிருந்த "வந்தே மாதரம் பிள்ளை" என்ற பரலி சு.ஷண்முக சுந்தரம் பிள்ளையின் இளைய சகோதரர். இவர் வ.உ.சி.யுடனும் பாரதியுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல் கம்பெனியில் நெல்லையப்பர் ஒரு குமாஸ்தாவாக வேலை பார்த்தார்.
திலகரைச் சேர்ந்த காங்கிரஸ் தீவிரவாதிகள் 1908ல் ஒரு நாளை சுயராஜ்ய தினமாகக் கொண்டாடினார்கள். அந்த முதல் சுயராஜ்ய தினத்துக்கு ஏற்பாடு செய்த தமிழ் இளைஞர்களில் ஒருவர் நெல்லையப்பர். உ.உ.சி.யுடன் இருந்த அவர், திருநெல்வேலியில் சுயராஜ்ய தின ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.
தூத்துக்குடியில் வெள்ளையர் ஆதிக்கத்தை ஒடுக்க வ.உ.சி.வெள்ளையர்களின் பட்ளர்கள் வேலை நிறுத்தம் செய்யக் காரணமானார். இதிலும் நெல்லயப்பருக்குப் பங்கு உண்டு.
திருநெல்வேலி சுயராஜ்ய தினக் கொண்டாட்டத்தை ஒரு கலவரம் என்று விவரித்து, சிதம்பரம்பிள்ளை, சுதேசி பத்மநாபய்யங்கார் ஆகிய நால்வர் மீது அரசாங்கம் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் சாட்சியம் சொல்வதற்காக பாரதியும் ஸ்ரீநிவாஸாச்சாரியாரும் சென்னையிலிருந்து திருநெல்வேலி போய் வந்தார்கள்.
இவ் வழக்கில் நால்வருக்கும் சிறைவாசம் விதிக்கப்பட்டது. சிறையிலிருந்து விடுதலையடைந்த பின் நெல்லையப்பர் ஒரு வருஷம் தலைமறைவாக இருந்து, கோவைச் சிறையிருந்த வ.உ.சி.யுடன் ரகசியத் தோடர்பு கொண்டு, சிறு சிறு துண்டுக் காகிதங்களில் வ.உ.சி. தரும் செய்திகளைப் பெற்று அவரது திட்டங்களை நிறைவேற்றி வந்தார்.
இதன் பிறகு புதுவை சென்று பாரதியின் "இந்தியா" பத்திரிகையில் சிறிது காலம் உதவியாசிரியராக இருந்தார். பாரதி இவரைப் பரிவுடன் "தம்பீ" என்றழைப்பார். இவர் சிறந்த கவி, நல்ல பத்திரிகாசிரியர் என்று பாரதி கருதினார். "நெல்லையப்பருக்கு நன்கு மதிப்பு" என்றபாரதி அளித்த சிபார்சுக் கடிதம் பாரதியின் அபிப்பிராயத்தை எடுத்துக் காட்டுகிறது.
புதுவையிலிருந்து சென்னை வந்த நெல்லையப்பர், பாரதியின் கவிதைகளைத் தொகுத்து, 1917ல் பாரதியின் காலத்திலேயே, "நாட்டுப் பாட்டு" என்ற நூலாக வெளியிட்டார். இதன் இரண்டாம் பதிப்பு 1919ல் வெளிவந்தது.
"தேசீய கீதங்கள்" என்று பெயரிட்டு விற்றால் பாரதி கவிதைகளை அரசாங்கம் தடுத்துவிடும் என்றே நெல்லையப்பர் "நாட்டுப் பாட்டு" என்று பெயர் கொடுத்தாராம். அரசாங்கம் புத்தகத்தில் என்னென்ன கவிதைகள் வெளி வரும் என்று கேட்டது . அவர்களிடம் சொல்லி அனுமதி பெற்ற கவிதைகள் தவிர, அனுமதி பெறாத சில பாடல்களையும் தனியாக அச்சடித்து நூலில் ரகசியமாய்ச் சேர்த்து விற்றார் நெல்லையப்பர்!
"லோகோபகாரி", "பாரதி", "நாரதர்", "திராவிடப் பத்திரிகை", திரு.வி.க.வின் "தேச பக்தன்" ஆகிய அக்காலத்திய பத்திரிகைகளிலும் நெல்லையப்பர் உழைத்திருக்கிறார். 1921ல் "தேசபக்தன்" ஆசிரியர் வ.வே.சு.அய்யர் சிறை செய்யப்பட்ட சமயம் நெல்லையப்பர் அப்பத்திரிகையின் ஆசிரியரானார். பின்னர் "லோகோபகாரி"யின் ஆசிரியரும் அதிபருமாகி, அப்பத்திரிகை மூலம் பாரதி எழுத்துக்களைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும் இணையற்ற தொண்டு புரிந்தார்.
எளிய தமிழில் பெரிய விஷயங்களை எழுதித் தமிழ்ப் பத்திரிகை வசன நடையை வளர்த்தவர்களில் நெல்லையப்பரும் ஒருவர். சிறு சிறு வாக்கியங்களால் எவரும் புரிந்து கொள்ளக்கூடிய சொற்களால் அவர் "லோகோபகாரி"யில் எழுதி வந்த தலையங்கங்களும், "பாரி" என்ற புனை பெயரில் எழுதி வந்த நானாவிதக் குறிப்புகளும், "மண்ணெண்ணெய்ச் சனியனை" எதிர்த்தும், மகாத்மா காந்திக்காகவும், கதருக்காவும் ஆதரவு தந்தும் அவர் எழுதிவந்த விஷயங்களும் முந்தின தலைமுறைத் தமிழ்ப் பத்திரிகை வாசகர்களின் அபிமானத்தைப் பெரிதும் கவர்ந்தன. தமது தமிழ்நடையைப் போலவே, வாழ்க்கையிலும் எளிமையைப் பேணுபவர் நெல்லையப்பர்.
பாரதி நூல்களை லட்சக் கணக்கில் அச்சடித்தால் மலிவாக இரண்டணா விலையில் விற்கமுடியும்; அப்போதுதான் கிராமங்களிலும் பாரதி பாடல் பரவும் என்று நெல்லையப்பர் வற்புறுத்துவார். இதை இன்னும் தமிழ்நாடு செய்யத் துணியவில்லை.
குழந்தையுள்ளம் படைத்த நெல்லையப்பர், பாரதியுடன் பழகிய பழம் பெரும் தேச பக்தர்களில் இன்னும் நம்முடைனிருக்கும் வெகு சிலரில் ஒருவராவார். இவர் சென்னை, குரோம்பேட்டையில் வாழ்கிறார்.
1910லிருந்து 1915 வரை பாரதிக்கு தீராத கடன் தொல்லைகள் ஒரு புறம், கற்பனா வேகத்தால் படும் அவஸ்தைகள் ஒரு புறம். குடும்பப் பொறுப்பை நிர்வகிக்க அவர் பெரும்பாடு பட்டிருக்கவேண்டும். ஆனால் வறுமையிலும் துன்பத்திலும் உற்ற துணையாக செல்லம்மாள் இருந்தார்.
1907ல் நின்று போன பாரதி "சுதேச மித்திரன்" தொடர்பு 1915ஆம் ஆண்டில்தான் மீண்டும் எற்பட்டது. பல வருஷங்களுக்குப் பிறகு, 1915 ஜூன் 15ஆம் தேதிதான் முதன் முதலாக பாரதி கட்டுரை ஒன்று "சுதேசமித்திர"னில் இடம் பெற்றது. அது முதல், பாரதி எழுதினாலும் எழுதாவிட்டாலும் மாதம் முப்பது ரூபாய் அனுப்புவதென "மித்திரன்" ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி அய்யங்கார் முடிவு செய்தார். இந்த முப்பது ரூபாய் அன்று முதல் இன்றளவும் பாரதி குடும்பத்துக்கு அனுப்பப்பட்டு வருவது, "மித்திரன்" செய்து வரும் இணையற்ற மௌனத் தொண்டாகும்.
1915ல் பாரதிக்கு வறுமைப் பிணி எவ்வளவு கடுமையாக இருந்த தென்பதை அந்த வருஷம் அவர் எழுதியுள்ள குறிப்புகளிலிருந்தும் கடிதங்களிலிருந்து அறிகிறோம்.
ஜூலை மாதம் முதல் தேதி அவர் எழுதிய குறிப்பில், "காலை கண் விழிக்கும் போதே 'பணம்' என்ற ஞாபகம்" என்று எழுதுகிறார். மறுநாள், ஜூலை 2ஆம் தேதி, எழுதிய குறிப்பில், "வியாதி, பயம், சோம்பல். இன்று காலைப் பொழுதையும் இவை வந்து வீணாக்கிவிட்டன. செ - வழக்கம்போல் வந்தான். பரமேச்வரி, மகா சக்தீ - உன்னிடத்தில் அமரத் தன்மை கேட்கிறேன். என்னை மனக் கவலையிலிருந்து விடுவிக்க வேண்டும்" என்று வேண்டுகிறார்.
மேலும்...
"முதலாவது எனக்கு என்மீது வெற்றி வரவேண்டும், குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாய்விட்டது. இரண்டு மாத காலம் இரவு பகலுமாக நானும் செல்லம்மாளும் புழுத் துடிப்பதுபோலத் துடித்தோம் ஊண் நேரே செல்லவில்லை இருவருக்கும். உறக்கம் நேரே வரவில்லை - இருவருக்கும். எப்போதும் சஞ்சலம். பயம், பயம், பயம்! சக்தீ, உன்னை நம்பித்தானிருக்கிறோம். நீ கடைசியாகக் காப்பாற்றினாய். உன்னை வாழ்த்துகிறேன்.
"கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம் - தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!
"பராசக்தீ, ஓயாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படி திருவருள் செய்ய மாட்டாயா? கடன்களெல்லாம் தீர்ந்து, தொல்லையில்லாதபடி என் குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் எப்போதும் உன் புகழை ஆயிர விதமான புதிய பிதிய பாட்டுக்களில் அமைக்க விரும்புகிறேன். உலகத்தில் இதுவரை எங்குமில்லாதபடி அற்புதமான ஒளிச் சிறப்பும் பொருட் பெருமையும் உடைய பாட்டொன்று என் வாயிலே தோன்றும்படி செய்யவேண்டும்."
வீட்டுக்காரச் செட்டியாருக்கு "எத்தனை நாள் பொய் வாயிதா, பொய் வாயிதா - தினம் இந்தக் கொடுமைதானா? சீச்சீ! பராசக்தி உன்னை நான் நம்புவதை முற்றிலும் விட்டு, நிச்சயமாக நாஸ்திகனாய் விடுவேன், நீ என்னை அற்பத் தொல்லைகளுக்கு உட்படுத்திக்கொண்டே யிருந்தால்" என்றும் பராசக்தியிடம் உரிமையுடன் மன்றாடுகிறார்.
ஆனால், பராசக்தியிடம் அசையாத பக்தி கொண்ட அவர், முடிவில், "சொல், மனமே சொல்லு! பராசக்தி வெல்க! பராசக்தி வெல்க!" என்றே தமது அன்றைய குறிப்பை முடிக்கிறார். எத்தனை தொல்லையிலும் எவ்வித சோதனையிலும் தெய்வ பக்தி அவரை விட்டகலவில்லை. துன்பக் கனலில் அவரது பக்தி புடமிட்டு மெருகேறுகிறது.
1915ஆம் வருஷம், அதே ஜூலை மாதம், 19ஆம் தேதி பாரதி தமது "அருமைத் தம்பி" நெல்லையப்பருக்கு எழுதிய நீண்ட கடிதம் அப்போது அவருக்கிருந்த வறுமையையும், வறுமைக்கு மேலாகச் சுடர் விட்டுப் பிரகாசித்த லட்சிய வேகத்தையும் நன்றாகக் காட்டுகிறது.
எரிர்ப்பக்கங்களில் முழுதும் வெளியாகியுள்ள அந்தக் கடிதம் ஒரு கடித இலக்கியமாக விளங்குகிறது.