1987 முதல் 1904 முடிய எட்டு ஆண்டுகளுள் பாரதியின் வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்த பற்பல சுழல்களைக் கண்டது.
1897 ஆம் வருஷம் ஜூன் மாதம் (ஆனி 15ஆம் தேதி என்று சோமசுந்தர பாரதி குறிப்பிடுகிறார்) பாரதிக்கும் கடையம் செல்லப்பா அய்யரின் குமாரி செல்லம்மாளுக்கும் அதிவிமரிசையாக நாலு நாள் கல்யாணம் நடந்தது. அதே சமயம், பாரதியின் மூன்று வயதுத் தங்கை லக்ஷ்மிக்கும், செல்லம்மாளின் தமக்கைக்கும் கூடத் திருமணம் நடந்தது. நான்கு நாட்களும் ஊர்வலம். ஹரிகேசவ நல்லூர் முதலிய ஊர்களிலிருந்து சங்கீத வித்வான்களும் தமிழ் வித்வான்களும் வந்திருந்தனர்.
கல்யாண விமரிசையைச் செல்லம்மா பாரதி பின்வருமாறு விவரிக்கிறார்: "கிருஷ்ணசிவன் (பாரதியின் அத்தை கணவர்) அவர்களின் நண்பர்களான ராமநாதபுரம் ராஜாவிடமிருந்தும், சேத்தூர், தலைவன்கோட்டை ஜமீன்தார்களிடமிருந்தும், பட்டும் பட்டாவிளியுமாகச் சால்வைகள், மோதிரங்கள், முத்து மாலைகள் முலலிய வெகுமதிகள் ஏராளமாய் வந்தன. தங்க நாதஸ்வர வித்வான் ரத்னசாமியை ராமநாதவுரம் ராஜா அவர்கள் அனுப்பியிருந்தார்கள். அந்தச் சமயம் கியாதியடைந்திருந்த திருநெல்வேலி அம்மணி பரத நாட்டியம். பாரதியாருக்கு பால்ய விவாகத்தில் அவ்வளவாகப் பிரியமில்லாவினும், ரசிக்கத் தகுந்த கேளிக்கைகள் மிகுதியாயிருந்தமையால் விவாகத்தில் உற்சாகமாகவே காணப்பட்டார்." அப்போது பாரதிக்கு வயது 14 1/2; செல்லம்மாளுக்கு வயது 7.
விவாகமானவுடன் கணவன் மனைவி பேசுவது வழக்கமாக இல்லாத அந்தக் காலத்திலேயே, பாரதி தமது புதிய கருத்துக்களைக் காட்டத் தொடங்கினாராம். எல்லோருக்கும் எதிரில்
"தேடக் கிடையாக சொன்னமே - உயிர்ச்
சித்திரமே! மட அன்னமே!...
கட்டியணைத் தொரு முத்தமே - தந்தால்
கை தொழுவேன் உனை நித்தமே"
என்று காதல் பாட்டுகள் பாடினாராம்.
"நான் நாணத்தால் உடம்பு குன்றி, எல்லாரையும் போல் சாதாரணமான ஒரு கணவன் கிடைக்காமல், நமக்கென்று இப்படி ஓர் அபூர்வமான கணவர் வந்து வாய்க்க வேண்டுமா என்று எண்ணித் துன்புறுவேன். கிராமத்தில் பழகிய, ஒன்றும் தெரியாத ஏழு வயதுச் சிறுமிக்குக் கவிஞர்களின் காதல் ரஸ அனுபவம் எப்படிப் புரியும்?" என்று செல்லம்மாள் கூறுகிறார். மேலும்:
"விவாகத்தின் நாலாம் நான், ஊர்வலம் முடிந்து, பந்தலில் ஊஞ்சல் நடக்கிறது. ஓர் ஆசுகவி இயற்றினார். அதை இனிய ராகத்தில் பாடி, பொருளும் உரைத்துக் குட்டிப் பிரசங்கம் ஒன்றும் செய்தார். கல்யான விமரிசையைப் புகழ்ந்து, அதை நடத்தியவர்களின் சலியா உழைப்பையும், என் தகப்பனார் கல்யாணத்திற்குக் கஞ்சத்தனமின்றி மிகத் தாராளமாகச் செலவு செய்ததையும் வியந்து, வித்வான்களின் சங்கீதத் திறமையை மெச்சி இயற்றிய பாலல் அது. அதைக் கேட்டு யாவரும் 'பலே பேஷ்!' என்று ஆரவாரித்து 'மாப்பிள்ளை வாய்த்தாலும் செல்லப்பா அய்யருக்கு வாய்த்ததுபோல் வாய்க்க வேண்டும். மணிப் பயல், சிங்கக்குட்டி!' என்றெல்லாம் அவரவர் போக்கின்படி புகழ்ந்தார்கள். என் தகப்பனார் மாப்பிள்ளையைக் கண்டு உள்ளம் பூரித்து, உடல் பூரித்து மகிழ்ச்சியடைந்தார். திருநெல்வேலி ஜில்லாவிலேயே சில காலம் வரையில் அந்தக் கல்யாண விமரிசை மக்கள் காதில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. எங்கும் அதுபற்றியே பேச்சு."
இவ்வளவு கோலாகலமான கல்யாணம் நடந்த மறு வருஷம் பாரதிக்குப் பெரும் துக்கம் நேர்ந்தது. பாரதியின் தந்தை பஞ்சாலையில் பெரு நஷ்டமடைந்தார். அதனால் மனமுடைந்து போய், அதே வருஷம் காலமுமானார். தாயில்லாச் சிறுவன் பாரதி, தந்தையற்றவனுமானான். இருவரையு மிழந்த பாரதி எங்கே, யாரிடம் வசிப்பதென்ற பிரச்னை எழுந்தது. முடிவில், தன்னிடம் பிரியமுள்ள அத்தை குப்பம்மாள் அழைக்கவே, காசிக்குச் சென்று, அத்தை வீட்டில் இருந்துகொண்டு மேல் படிப்புப் படிக்கலானான்.
அத்தை குப்பம்மாளின் புருஷர் கிருஷ்ணசிவன் பெரிய சிவ பக்தர். காசியில் பக்தி செய்து வாழச் சென்ற அவரது பக்தியைக் கண்டு, ஹநுமந்த கட்டத்தில் உள்ள சிவ மடத்தின் சொந்தக்காரரான பிரம்மச்சாரி மடத்தைக் கிருஷ்ணசிவனுக்கு எழுதி வைத்துவிட்டுக் காலமானார். மடத்துக்கு வரும் தென் இந்திய வட இந்திய யாத்ரீகர்களுக்கு உபசரணை செய்து வாழ்ந்தனர் கிருஷ்ண சிவனும் அத்தை குப்பம்மாளும் அவர்களுடைய புதல்வர்களும். இவர்களிடையே போய்ச் சேர்ந்தான் சுப்பையா.
அத்தை அழைத்துக் காசி போனோரென்றாலும், அங்கே படிப்பு எளிதாயிருக்கவில்லை. அலாகாபாத் சர்வகலாசாலையின் பிரவேசப் பரீட்சைக்காக பாரதி புதிதாக ஹிந்தியும் ஸமஸ்கிருதமும் கற்பது அவசியமாயிற்று இரு பாஷைகளையும் கற்று ஓரளவு புலமை பெற்று, பரீட்சையிலும் தேறினார்.
காசியில் எதிர் வீட்டில் இருந்தவரும் பாரதிக்கு நண்பராக விளங்கியவருமான பண்டிட் எஸ்.நாராயண அய்யங்கார், காசியில் சுப்பையாவைப் பற்றி வருமாறு விவரிக்கிறார்:
"சுப்பையா மிக்க வறுமையில் ஆழ்ந்திருந்தார். ராஜீய விஷயங்களில் எவ்வித சம்பந்தமும் அவருக்கு அப்போது கிடையாது. சப்பையா அரசியல் விஷயத்தில் கொஞ்சமும் அறிவு இல்லாமலே இருந்து வந்தது எனக்கு வியப்பைத் தந்தது. அக்காலத்தில் காசியில் தங்கியிருந்த அன்னி பெஸண்ட் அம்மையாருடன் சர்ச்சை செய்யப் போவார். அம்மையார் பதில்களில் திருப்தி கொள்ளாமல் அம்மாயார் அறிவைப் பற்றி கேலி செய்வார்."
"காசியில் அவர் கடைசியாக ஒரு பள்ளியில் ஆசிரியர் பதவி பெற்று மாதம் இருபது ரூபாய் சம்பாதித்து வந்தார். அக்காலதில் அவருக்குத் தமிழ் இலக்கியம் தெரியும் என்றோ, கவிபாடும் திறமை பெற்றவர் என்றோ நான் நினைக்கச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. கையில் எப்பொழுதும் ஷெல்லியின் ஆங்கிலக் கவிதைப் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிப்பார். ஓய்வு நேரங்களில் கங்கைக் கரையில் படிக்கட்டில் உட்கார்ந்து ஷெல்லி பாடல்களைப் படித்து அர்த்தம் சொல்லுவார். வடமொழியில் அவருக்குப் பயிற்சி அல்பமே. ஆனால் வடமொழிக் கவிகளின் அர்த்தத்தைக் கேட்டு ரசிப்பதில் நிகரற்றவர்."
காசியில் ஸரஸ்வதி பூஜையன்று பாரதி ஒரு கூட்டம் கூட்டி, "பெண் கல்வி" என்பது பற்றித் தமிழில் பேசினார். பெண்கள் கல்வியின்றித் தேசம் முன்னுக் வராது என்று அடித்தும் பேசினாராம். "பெண்களின் சமத்துவத்தைப் பற்றி அடிக்கடி வற்புறுத்துவது அவர் வழக்கம். பெண்கள் கல்வி, சமத்துவம், இந்த இரு விஷயங்களைத் தவிர அப்போது வேறு எதிலும் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை" என்று பண்டிட் நாராயண அய்யங்கார் எடுத்துக் காட்டுகிறார்.
காசியிலிருந்த சமயத்தான் பாரதி அது வரை இருந்த சிகையை எடுத்துவிட்டு கிராப் வைத்துக் கொண்டார். வட இந்தியர் போல் வால்விட்ட தலைப்பாகையும், மீசை வைத்துக் கொண்டும் பழக்கமும் இச்சமயம் ஏற்பட்டதே.
ஏழாம் எட்வர்டு முடிசூட்டலையொட்டி லார்டு கர்ஸன் நடத்திய டெல்லி தர்பாருக்கு எட்டயபுர மன்னரும் வந்தார். திரும்பிச் செல்கையில் ஜமீன்தார், தமது பரிவாரங்களுடன், காசிக்கு வந்தார். ஜமீனைச் சேர்ந்த பலர் சுப்பையாவை எட்டயபுரம் அழைத்துச் செல்லவேண்டும் என்றும் ஜமீனில் உத்தியோகம் தரவேண்டும் என்றும் ஜமீன்தாரிடம் சொன்னார்கள். ஜமீன்தாரும் இசைந்தார். ஜமீன் உத்தியோகம் நீடிக்குமென்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும், எட்டயபுரத்திலிருந்த செல்லம்மாளை மீண்டும் பார்ப்போம், சேர்ந்து குடித்தனம் நடத்துவோம் என்ற காரணத்தினால் பாரதிக்கு ஓரளவு உற்சாகம் இருந்தது.
காசியிலிருந்து திரும்பிய பாரதி, எட்டயபுத்தின் வரண்ட உலகில் உண்மைக் கவிதை ரசனையை உண்டாக்க முயன்றார். கவிதையென்றால் சிருங்கார ரசம் என்பதே மன்னர் அறிந்தது; யமகம் திரிபுகளே எட்டயபுரப் பண்டிதர் அறிந்தது. இரண்டையும் தவிர்த்த உணர்ச்சிப் பெருக்கான உயர் சுவைக் கவிதைகளுக்கு ஆதரவாளர் இல்லை. பாரதி ஆங்கிலக் கவி ஷெல்லியின் கவிதை நயங்களை நண்பர்கள் உணரும் பொருட்டு "ஷெல்லியன் கில்டு" என்ற ரஸிகர் குழு அமைத்தார். "ஷெல்லி தாஸன்" என்ற புனை பெயரில் கட்டுரைகளும் எழுதினாராம்.
ஆங்கிலக் கவிதை வடிவமான ஸானெட் என்ற 14 வரிப் பாடலைத் தமிழில் அமைக்க பாரதியும் முயற்சி செய்தார். (ஏற்கனவே 1902ல் "பரிதிமாற் கலைஞன்" வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி இவ்வாறு தமிழ் ஸானெட் நூலொன்று வெளியிட்டிருந்தார்.)
இத்தகைய ஸானெட் ஒன்று, "தனிமை இரக்கம்" என்ற பாடல், மதுரையிலிருந்து கந்தசாமிப் புலவர் நடத்தி வந்த "விவேக பாநு" பத்திரிகையில் 1904 ஜூலை இதழில் பாரதியின் பெயருடன் பிரசுரமாயிற்று. நாமறிந்தவரை முதன் முதலாகப் பிரசுரமான பாரதி பாடல் இதுவே. இது வெளியான சமயம் பாரதி எட்டயபுரத்தை விட்டுக் கிளம்பவில்லை.
இந்தப் பாடலின் கடுமையான பண்டித நடைக்கும், இரண்டு வருஷங்களுக்குப் பின் வெளியான வந்தேமாதரம் பாடல் மொழிபெயர்ப்பின் சரள நடைக்கும் உள்ள வித்தியாசம் கவனிக்கத் தக்கது.