மகாகவி பாரதியார்
(வ.ரா.)

                 
1

“என்ன அநியாயம், பார்த்தீர்களா? ” என்றார் நண்பர் கேசவன்.

திடீரென்று கேள்வி கேட்டால் யாருக்குத்தான் திகைப்பு உண்டாகாது?

“போலிக் கவிகளைத் தண்டிப்பதற்குப் பிள்ளைப் பாண்டியன், வில்லிபுத்தூரார். ஒட்டக்கூத்தர் முதலியவர்கள் இல்லாமையார் எவரும் தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே என்ற பாட்டு உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? ஒரு பாரதியார் தோன்றி மறையப் பல பாரதியார் முழக்கத்துடன் வெளிவந்துள்ளார்கள்” என்று நண்பர் மிகுந்த ஆவேசத்துடன் பிரசங்கம் செய்தார்.

“பட்டத்திலேனும் பாரதியாரைப் பலர் பின்பற்றுவது பாரதியாருக்கு ஒப்பற்ற பெருமையல்லவா?” என்றேன். தனிக்காதல் கொண்ட உத்தமி ஒருத்தி தன் கணவன் பெயரை, வேறு ஒருத்தி ருசியுடன் சொன்னால் பொறுப்பாளா? நண்பர் கேசவனுக்குப் பாரதியாரின் பெயர் அதைப் போலத்தான்.

“ஞாபகமிருக்கிறதா அல்லது நினைவூட்ட வேண்டுமா?” என்றார் நண்பர். “நல்ல மாட்டுக்கு ஒரு சூடும், நல்ல பெண்சாதிக்கு ஒரு வார்த்தையும் போதாதா?” என்றேன். நல்லது நீங்கள் பாரதியாரை முதன் முதலாகச் சந்தித்த வரலாற்றை விவரமாகச் சொல்லுங்கள் என்றார்.

கதைக்கு அடியெடுத்துக் கொடுத்த புண்ணியத்தைப் புராவும் அவருக்கே கொடுத்துவிட்டதாக உறுதி கூறினேன். “வீணாகக் காலம் கடத்துகிறீர்கள்” என்றார் நண்பர்.

“சொல்லுகிறேன், கேளும்” என்றேன்.

“1910 ஆம் வருடம் மார்ச்சு, ஏப்ரல் மாதத்திய தினசரிப் பத்திரிகைகளைப் புரட்டினால், ஒரு வேடிக்கையைப் பார்க்கலாம். எங்கே போனார்? எப்படிப் போனார்? ஸ்விட்ஸர்லாந்து தேசத்திலே, ஜெனிவா நகரில் இருக்கிறார் என்ற தலைப்புகளுள்ள தந்திகள் பறந்தன. யாரை பற்றி? ”

“பாரதியாரைப்பற்றியா?” என்றார் நண்பர்.

“ஏமாந்து போனீர்கள் பாரதியாரைப்பற்றியல்ல. பாபு அரவிந்த கோஷ் அவர்களைப்பற்றி. கடைசியாக ரகசியமாய்ப் புதுச்சேரிக்குப் போய்ச் சேர்ந்துவிட்டதாகச் செய்தி வந்தது.

காலஞ்சென்ற கனம் கொடியாலம் வா.ரங்கசாமி அய்யங்கார் மாசற்ற தேசபக்தர் உண்மையான பிரபு. அவருக்கு அரவிந்தரிடம் மகத்தான பக்தி. “புதுச்சேரிக்கு அரவிந்தர் வந்துவிட்டதாகச் சொல்லப்படும் செய்தி உண்மையாக இருக்குமா?” என்று அய்யங்கார் என்னைக் கேட்டார். “குறி சொல்லத் தெரியாது ஆரூடமும் பழக்கமில்லை” என்றேன். அப்படியானால், புதுச்சேரிக்குப் போக உம்மைச் சபித்திருக்கிறேன் என்றார் அய்யங்கார். “ரிஷி சாபத்துக்குப் பின்பலம் தவம் உங்கள் சாபத்துக்குப் பின்பலம் பணம்” என்றேன். “தந்தேன்” என்றார். புறப்பட்டேன் புதுச்சேரிக்கு.

புறப்படுவதற்கு முன் இரண்டொரு வார்த்தைகள்.

சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் சுதேசமித்திரன் ஆபீஸில் இருந்தார் என்பது 1910 இல் தெரியாது. இந்தியா பத்திரிகையில் இருந்தது தெரியும். பாரதியார் சென்னையில் இருந்த காலத்தில், அவரைவிட மிகவும் வயதான இரண்டு நண்பர்கள் அவருக்கு இருந்தார்கள். அவர்களிருவருக்கம் பாரதியாரிடமிருந்த மோகத்தை அளவிட்டுச் சொல்லவே முடியாது. அவர்களுடைய பெயர்களைச் சொன்னால் நீங்கள் திடுக்கிட்டுப் போகவும் கூடும்.

ஒருவர், ஹைகோர்ட்டு ஜட்ஜாயும், கவர்னர் நிர்வாக சபை அங்கத்தினராயுமிருந்து உயிர் நீத்த கனம் வி.கிருஷ்ணசாமி அய்யர். மற்றவர், போலீஸ் டெபுடி கமிஷனர் வேலை பார்த்து விலகிய ஏ.கிருஷ்ணசாமி அய்யர். இந்த இரண்டு கிருஷ்ணசாமி அய்யர்களும் இணைபிரியாத் தோழர்கள். இவர்களுடைய தூண்டுதலினால்தான் பாரதியார் புதுச்சேரிக்குச் சென்றார் என்று பின்னர் எனக்குத் தெரிய வந்தது.

கனம் வி.கிருஷ்ணசாமி அய்யர் தமிழ்நாட்டுககுச் செய்த ஓர் ஒப்பற்ற தொண்டை மட்டும்தான் குறிப்பிடாமலிருக்க முடியாது. தமிழர்கள் அதிகால வர்க்கத்தினரின் கொடுமைக்கு அஞ்சி, அநாகரிக பயத்துக்கு ஆட்பட்டுக் கிடந்த அந்தக் காலத்தில், கனம் அய்யர், பாரதியாரின் சுதேச கீதங்கள் இரண்டு பகுதிகளாக அச்சுப் போட்டுப் பிரசுரம் செய்தார்.

அந்தக் கீதங்களைப் படித்துப் படித்துப் பரவசமானவர்களில் நானும் ஒருவன். இது 1910 ஆம் ஆண்டுக்கு முன்னர்.

நண்பர் இரட்டிப்பு ஆனந்தம் அளித்தது. அந்தக் காலத்தில், பிரெஞ்சு இந்தியாவின் தலைநகரான புதுச்சேரிக்குப் போகும் பேர்வழிகளைப் போலீசார் கண் பரிசோதனை செய்வது வழக்கம் “ராஜ பார்வை பொல்லாதது” என்று பாட்டிகள் சொல்லுவார்கள். அந்த அனுபவம் எனக்குக் கிடையாது. ஆனால் சூரியனைக் காட்டிலும் மணல் சுடும் என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். போலீஸ் கண்ணுக்குத் தப்பிப் போய்வர வேண்டுமே என்று என்பேரில் இரக்கங் கொண்டு நண்பர் அய்யங்கார் மனம் ஏங்கினார்.

என்னைப்பற்றி என்ன சொல்லட்டும்? எனக்கு உண்டான ஆனந்தத்தில், நான் இந்த மண்ணுலகத்தில்தான் இருக்கிறேனா என்று சந்தேகமேற்பட்டது.

ரயில் வண்டி காலை சுமார் ஐந்தரை மணிக்குப் புதுச்சேரி போய்ச் சேர்ந்தது. வழியில் யார் என்மீது கண் வீசினார், கண் வீசவில்லை என்ற கவலையே எனக்குக் கிடையாது. மலரிலிருக்கும் தேனைக் குடித்துவிட்டு, மதிமயங்கி, மதோன்மஸ்தாய் ரீங்காரம் செய்துகொண்டு ஆகாயத்தில் விசையுடன் விர்ரென்று பறக்கும் வண்டைப் போல நான் இருந்தேன் என்றால், அது கற்பனையே அல்ல. இத்தகைய உணர்ச்சி, ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு தரமாகிலும் ஏற்பட்டிருக்கும்.

அந்தக் காலத்தில், எனக்கு வண்டி ஏறியே பழக்கமில்லை. கால் படைக்கப்பட்டது நடப்பதற்கேயன்றி வண்டி முதலிய வாகனங்களில் ஏறுவதற்கல்ல என்பது அந்நாளைய கர்நாடகக் கொள்கை. இது காசில்லாத் தத்துவம் என்று சிரிக்கிறீர்கள். நல்லது. சிரியுங்கள் சிரித்தால் ஜீரணமாகும் என்கிறார்கள்.

புதுச்சேரி 'புஷ்' வண்டி எனக்குப் புதிது. பெரிய இடத்துக்குப் போகிறபொழுது, பதவிசாகப் போக வேண்டுமானாலும் கௌரவத்தையும் இழக்கக் கூடாது என்று திடீரென்று எனக்குத் தோன்றிற்று. புஷ் வண்டியைக் கூப்பிட்டேன். ஆள் வந்தான் வண்டி வரவில்லை.

“பாரதியார் வீடு தெரியுமா?” என்றேன். “பட்டணத்து எஜமான், பாட்டுப் பாடுகிற எஜமான், மீசை வச்சிருக்காங்களே, அவுங்கதானே? அவுங்க இருக்கிற வீடு நல்லாத் தெரியுமே” என்றான்.

அவன் சொன்ன முன்னடையாளங்கள் எல்லாம் உண்மைதான். ஆனால், மீசை சங்கதி எனக்கு எப்படித் தெரியும்? நான்தான் அதுவரையிலும் பாரதியாரைப் பார்த்ததில்லையே ஈசுவர தர்மராஜா கோயில் வீதியின் ஒரு கோடியிலிருந்த வீட்டின் எதிரே புஷ் வண்டியை நிறுத்தினான். அதுவரையிலும் ஆனந்தம் அலைமோதிக்கொண்டிருந்த என் உள்ளத்தில், என்ன மாயவித்தையினாலோ, பயம் வந்து புகுந்தகொண்டது. மார்பு படபடவென்று அடித்தது. எனது கேவலமான நிலைமையை வெளியே காண்பித்துக்கொள்ள மனமில்லாமல், வாய் பேசாமல் கொஞ்சம் அதிகமானவே வாடகை கொடுத்து, புஷ் வண்டிக்காரனை அனுப்பிவிட்டேன். இடக்கையால் மார்பை அணைத்துக்கொண்டு, மெல்லப் படியேறினேன். மூட்டை, முடிச்சு கிடையாது ஆள் பாரம், உடை பாரம், சில ரூபாய்கள் பாரம் – இவ்வளவுதான். இரவில் தூக்கமில்லாமையின் பெருஞ்சுமை, சிறிதளவு கண்ணிமையிலே தொங்கிக்கொண்டிருந்தது. அதையும் ஒப்புக் கொள்கிறேன்.

“ஸார்” என்றேன் ஒருதரம் இரண்டாந்தரம் மூன்றாவது தரமும் கூப்பிட்டேன். பயில்வானைப்போல் இளவயதுப் பையன் ஒருவன் வந்து, “யார்?” என்றான். “யார் என்றால் நான்தான்” என்றேன். என்னை ஏற இறங்கப் பார்த்தான். நானும் அவனை அப்படியே பார்த்தேன். ராஜிக்கு வந்தான். “யார் வேண்டும்?” என்றான். “சுப்பிரமணிய பாரதியார்” என்றேன். “சரி, மேலே வாரும்” என்றான். இருவரும் மேலே மாடிக்குப் போனோம்.

“மீசை வச்சிருக்காங்களே அவுங்களைக்” கண்டேன். சட்டை, அங்கவஸ்திரம் முதலியன இருப்பதாகவே நினைவில்லை. சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தேன். புலி பாய்வதைப் போலப் பாய்ந்து, என்னைத் தூக்கி நிறுத்தி, “நமஸ்காரம் வேண்டாம். நீர் யார்? வந்த காரியத்தைச் சொல்லும்” என்றார்.

சிறிது நேரம் பேசாமல் நின்றுகொண்டிருந்தேன். அவரது பொலிவு நிறைந்த முகத்தை அப்படியே கண்ணால் விழுங்கிக்கொண்டிருந்தேன். “நல்லது, பல் விளக்கியாகிவிட்டதா? ஏதாவது சாப்பிட்ட பிறகு பேசிக்கொள்ளலாம். பாலு பல்பொடியும் தண்ணீரும் கொண்டுவா” என்றார்.

என்னை வாயிற்படியண்டை எதிர்த்து நின்ற பயில்வானுக்குப் பெயர் பாலு என்பதைத் தெரிந்துகொண்டேன்.

பல் தேய்த்துகொண்டிருக்கிற சமயத்தில் ஒரு கிழவர் வந்தார். “வாரும் விளக்கெண்ணெய்ச் செட்டியாரே” என்றார் பாரதியார். எவ்வளவு வரவேற்பு அளித்தாலும், செட்டியாரின் உடம்பு பட்ட பாட்டை நான் எவ்வாறு வர்ணிப்பது செட்டியார் யார் தெரியுமா? பாரதியார் குடியிருந்த வீட்டுக்கு உடையவர். அவர் வாடகைப் பணம் பாக்கி. என்றாலும், கேட்பதற்கு நடுக்கம் விளக்கெண்ணெய்ச் செட்டியார் என்பது பாரதியார் கொடுத்த செல்லப் பெயர் “செட்டியாரே என்ன அவசரம் நல்ல பதவிக்காக ஜன்மம் ஜன்மமாய்ப் பிறக்கலாம் என்ற ஹிந்து பரம்பரையிலே பிறந்து வளர்ந்த உமக்கு, ஏன் வாடகைக்கு அவசரம்? இன்னும் பத்து வருஷத்துக்குள் சுயராஜ்யம் வரப்போகிறது. அந்த ராஜாங்க கஜானாவுக்கு ஒரு செக் கொடுக்கிறேன், வாங்கிக்கொள்ளுமே” என்று சொல்லிவிட்டு, வெண்கலத்தை இடைவிடாமல் தட்டியதுபோலக் கலகலவென்று சிரித்தார். தரித்திரத்தை நிந்தனை செய்யும் நகைப்பு!

செட்டியார் என்ன செய்கிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். “மகான்! உங்கள் உண்டியல் ஏன் செல்லாது? கூசாமல் கொடுங்கள். வாங்கிக்கொள்கிறேன்” என்று செட்டியார் முணுமுணுத்தார். “செட்டியாரே, உமக்கு நூறு வயது. போம். பணம் வந்தவுடன் ஒரு விநாடிகூடத் தாமதிக்காமல் அனுப்பி வைக்கிறேன்” என்றார். செட்டியார் வணக்கத்துடன் மறைந்தார்.

ஏதோ சாப்பிட்டோம். வந்த சங்கதியை மெல்ல மெல்லச் சொன்னேன். “அரவிந்த பாபு இங்கே இருக்கிறார் என்று உமக்கு எப்படித் தெரியும்? அது எனக்கே தெரியாதே! அதிருக்கட்டும். தமிழ்ப் பாட்டிலே உமக்கு அபிமானம் உண்டா?” என்றார். நான் சிரித்தேன்.

“சிரித்தற்கு அபராதமாக ஒரு பாட்டுக் கேளும்” என்றார்

“இந்த மாதிரி பாரதியார் எனக்கு அபராதம் விதித்ததில், எனக்கு ஆட்சேபனை இருக்கும் என்று நீர் நினைக்கிறீரா, கேசவா?”

“உம்முடைய பாக்கியத்திலே எனக்குப் பொறாமை” என்றார் கேசவன்.
நண்பர் கேசவன், பாரதியாரை நேரே பார்த்ததேயில்லை.

                 
1

 

Website Designed by Bharathi Sangam, Thanjavur