3. சித்திரபாநு, கார்த்திகை, மூலம் |
கலை, தொழில் இரண்டிலும் புகழெய்திய சின்னசாமி அய்யர் தமது தாய்மாமன் மகளான லக்ஷ்மி அம்மாளை மணந்திருந்தார். லக்ஷ்மி அம்மாள் அழகிலும் அருளிலும் பெயருக் கேற்பச் சிறந்திருந்தார்.
இந்த அந்நியோந்நியத் தம்பதிகளுக்கு சித்திரபாநு வருஷம் கார்த்திகை மாதம் 27ஆம் தேதி மூல நக்ஷத்தில் (1882, டிஸம்பர், 11) மூத்த குழந்தை பிறந்தது. பிள்ளைக் குழந்தை. சுந்தர வடிவம். சுப்பிரமணியன் என்று பெயரிட்டனர். செல்லப் பிள்ளை. வீட்டாராலும் ஊராராலும் பிரியமாக சுப்பையா என்றழைக்கப் பெற்றான். இவனே பிற்காலத்தில் ஊரும் உலகும் பெருமைப்படும்படி சுப்பிரமணிய பாரதி ஆக விளங்கினான்.
சுப்பையா பிறந்த நேரத்தை யாரும் சரியாய்க் குறிக்கவில்லை. ஆகையால், பாரதியாருக்கு ஜாதகம் இல்லாமல் போய்விட்டது.
சுப்பையா நாளில் பெரும்பகுதியைத் தாய் வழிப் பாட்டனார் ராமசாமி அய்யர் வீட்டிலும் சிறு பகுதியைப் பெற்றோர் வீட்டிலும் கழிப்பான். தாயின் உடன் பிறந்த சதோதரிகளும் சிறுவனை மிகச் செல்லமாக வளர்த்தார்கள். சிறுவனும் துடுக்கும் மிடுக்குமாகப் பேசுவான். எல்லாரும் அவனுடன் உரையாடுவதை விரும்பினர்.
சுப்பையாவுக்கு வயது ஐந்து. திடீரெனப் பேரிடி வீழ்ந்தது. சுப்பையாவின் தாய் காலமாகிவிட்டாள். தாயில்லாக் குழந்தை என்று பாட்டனார் வீட்டில் இன்னும் அதிக செல்லம் காட்டினார்கள்.
தாம் தாயின் அன்பை இழந்துவிட்டதால், பிற்காரத்தில், வயதுவந்து காளைப் பருவமெல்லாம் தாண்டிய பிறகுகூட, சுப்பையா அம்மா என்ற சொல்லைக் கேட்டால் ஒரு க்ஷணம் துடித்துப் போவாராம். இளமையில் தாயை இழந்த அவர் பிற்காலத்தில் அன்னை பராசக்தியையே தம் இஷ்ட தெய்வமாகக் கொண்டதும் இக்காரணத்தினால்தானோ என்னவோ?
சுப்பையாவின் தாய் காலமான ஒரு ஆண்டில் தந்தை மறுமணம் செய்துகொண்டார். தமது மறுமணத்தின்போது புத்திரன் சுப்பையாவுக்கு உபநயனமும் செய்வித்தார் சின்னசாமி அய்யர். மாற்றாந் தாய் வள்ளியம்மாள் குணவதி. சுப்பையாவைத் தன் குழுந்தை போலவே அன்போடு நடத்தினாள். சுப்பையா சங்கோஜி. தந்தையிடம் எதிரே நின்று பேசவும் பயப்படும் சுபாவமுள்ளவராயிருந்தார் என்று செல்லம்மா பாரதி கூறுகிறார். பாரதி தமக்கு ஆகவேண்டிய காரியங்களைத் தந்தையிடம் கேட்டுப் பெறுவதற்கு பதிலாக சிற்றன்னையிடமே தாராளமாய்க் கேட்டுப் பெற்று வந்தாராம்.
சுப்பையாவின் இளமைத் தோழர்களில் ஒருவர் அவருடைய தாய்மாமன் சாம்பசிவ அய்யர். சப்பையாவைவிட இரண்டே வயது பெரியவர் இவர். இரு சிறுவர்களும் சேர்ந்து ஊர் சுற்றுவார்கள். ஸ்ரீ ஆர்.சாம்பசிவய்யர் இன்றும் ஜீவிதமாயிருக்கிறார்.
இளமையில் ஓரு சமயம் சப்பையா உயிர் தப்பியதைச் சாம்பசிவய்யர் கூறியிருக்கிறார்.
பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யர் நடத்திய பஞ்சாலைக்குச் சப்பையாவும் சாம்பசிவமும் அடிக்கடி போய்வருவார்கள். தம் மகன் யந்திரக் கலை பயில இரு ஊக்கமளிக்குமெனச் சின்னசாமி அய்யர் மகிழ்வார். ஒரு சமயம், சாயந்திரம் அந்தி வேளையில், இரு சிறுவர்களும் பஞ்சாலைக்குள் சுவரேறிக் குதித்து உள்ளே சென்றார்கள். அங்கே சின்னசாமி அய்யரின் மேஜை திறந்திருந்தது. காசு கிடைக்குமாவெனச் சிறுவர்கள் மேஜையைக் குடைந்தனர். காசு இல்லை. பளபளப்பான குழாய் ஒன்று இருந்தது. அது ஒரு சுழல் துப்பாக்கி. சிறுவர்களுக்கு அது என்னவென்று தெரியாது. சாம்பசிவம் அதை எடுத்து விஷமம் செய்துகொண்டிருந்தான். துப்பாக்கிக் குதிரையை டப், டப்பென்று அழுத்தினான். காலி அறைகள் போன சமயம் வெறும் சத்தம் கேட்டது. அடுத்தாற்போல் தோட்ட இருந்த ஒரு அறை வந்ததும், டபார் என்று வேட்டுப் பறந்தது. எதிரேயிருந்த பாரதியின் தலைக்கருகில் குண்டு பாய்ந்து சென்றது. பாரதி மயிரிழையில் பிழைத்தார்.
சின்னசாமி அய்யர் தம் புதல்வன் நான்றாகப் படித்து ஆங்கிலக் கல்வியில் தேறி பெரிய உத்தியோகம் பார்க்க வேண்டுமென்று விரும்பினார். குழந்தையாக ஆடிப்பாடி, தோழர்களுடன் உறவாடி ஊர் சுற்றி வரவேண்டிய இளம் வயதில் பாடம், படிப்பு, புஸ்தகம் என்று தந்தையின் உத்தரவினால் தவித்தார் பாரதி. பகற் கனவுகள் காண்பதிலும், கவிகள் இயற்றுவதிலும், இயற்கை எழிலை நுகர்வதிலுமே அவருக்கு விருப்பமிருந்தது. பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுபோகும் கற்பலகை, குச்சி, புத்தகங்களை அவர் மறந்தேவிடுவார். பாடங்களைக் கவனிக்கமாட்டார். உபாத்தியாயர் தம்மை நிற்கச் செய்து திட்டினால், அவர் உபயோகித்த சொற்களுக்கு அடுக்குமொழிகளை சொல்லிப்பார்த்துக் கொள்வாரே தவிர பாடத்தை கவனிக்க மாட்டார்.
தந்தை எவ்வளவுக்கெவ்வளவு நவீன ஆங்கிலக் கலை, கணிதம், யந்திர அறிவு முதலியவைகளை வற்புறுத்தினாரோ அவ்வளவுக்கவ்வளவு இளம் சுப்பையாவுக்கு அவை வேப்பங்காயாக இருந்தன. தமிழ் இலக்கியமும் புலவர் விவாதங்களும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. வயதான புலவர் பேச்சுகளில் சிறு குழந்தையான அவனும் கலந்துகொள்வான். இது தகப்பனார் இல்லாத சமயம் நடக்கும். தமிழபிமானமுள்ள மன்னரும் அவருடைய சிற்றப்பனும் சுப்பையாவின் ஆர்வத்தை ஊக்குவித்தார்கள். சிறுவன் சொந்தமாய்க் கவிதை புனைந்து வந்து மன்னர் மகிழப் பாடிக் காட்டுவான்!
எட்டயபுரத்தில் கம்ப ராமாயணத்துக்குப் பெயர் போன ஒரு கிழட்டுப் பண்டிதரிடம் பாரதி இலக்கிய பாடம் கேட்டான். இளமைத் தோழர் சோமசுந்தர பாரதியும் அவனுமாக, திருட்டுத்தனமாய்க் கோயில் பல்லக்குகளில் நடுவே உட்கார்ந்துகொண்டு தமிழ் இலக்கியம் படித்தார்களாம். "எங்கள் இருவருடைய வீட்டிலும் நாங்கள் தமிழ் படிக்க அவ்வளவு தடை இருந்தது. தமிழ் படித்துக் கெட்டுப் போகிறான்களே என்ற வசவு கிடைக்கும்" என்று சோமசுந்தர பாரதி சொல்கிறார்.
சுப்பையாவின் தாய்வழிப் பாட்டனார் மட்டும் தந்தைபோலின்றி அவன் தமிழ் படிப்பதற்கு ஊக்கமளித்தார். தந்தைக்கும் மகன் தமிழ் கற்க வேண்டாமென்ற கருத்தல்ல; புதிய கலைகளை முதலில் கற்கவேண்டுமென்றே எண்ணம். ஆனால் கம்பனையும் வள்ளுவனையும் சுவைத்த சுப்பையா அவர்களைப்போல் புகழெய்தவே விரும்பினான்.
சுப்பையாவின் இளமை பற்றிச் ஸ்ரீ சோமசுந்தர பாரதி பல அழகான சம்பவங்களை விவரித்துள்ளார். அவர் கூறுகிறார்,
"பாரதியார் தமது ஏழாவது பிராய முதலே அருமையான தமிழ்க் கவிகளை விளையாட்டாக விரைந்து கவனஞ் செய்வதைக் கண்ட வித்வான்கள் நமது கவியின் தந்தையாரைப் புகழ்ந்திருப்பதை நான் நேரில் அறிவேன். எட்டு ஒன்பது ஆண்டுகளில் ஸர்வசாதாரணமாய், கொடுத்த ஸமஸ்யைகளை வைத்து அற்புதமான கவிகளைப் பூர்த்தி செய்து பெரிய புலவர் கூட்டங்களைப் பிரமிக்கச் செய்த பல காலங்களிலும் நான் கூட இருந்திருக்கிறேன்."
குமரகுருபரர், ஞானசம்பந்தர்போல் அருள் பெற்ற கவி பாரதி என்பது சோமசுந்தர பாரதியின் அபிப்பிராயம்.
பதினொரு வயதில் சுப்பையாவுக்கு பாரதி என்ற பட்டம் கிடைத்தது. இளம் புலவனைச் சோதிக்க ஒரு பெருஞ் சபை கூடியது. பெரும் புலவர்கள் புதிது புதிதாகக் கொடுத்த அடிகளைக் கொண்டே பூர்ணமான கவிதைகளைப் பாடி, சபையோரை வியப்பித்தான் சுப்பையா. சிறுவனுடைய கவித்திறனையும் அமிர்த வாக்கையும் கண்ட புலவர்கள் "பாரதி" (ஸரஸ்வதி) என்ற பட்டத்தை அவனுக்களித்தனர்.
சுப்பையாவுக்கு ஏற்பட்ட பெருமையை எல்லாருமே மகிழ்வுடன் ஏற்கவில்லை. அவனை மட்டம் தட்டும் எண்ணத்துடன் சிலரும் அவன் பெருமையை அறியும் கருத்துடன் சிறரும் அவனை சோதித்தார்கள். ஒரு பண்டிதர் வாழை, கமுகு இரு பொருள்களும் ஒரே பாட்டில் வரும்படி பாடச் சொன்னார்கள். அவர் கேட்டு வாய்மூடு முன்னே பாரதி பாடிவிட்டான். மற்றொரு சமயம், எட்டயபுரம் மன்னரும் புலவோரும் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துபோல் பாடுதல் யாராலும் முடியாதென்றனர். அன்று மாலையே "பச்சைத் திருமயில் வீரன்" என்று தொடங்கும் ஒரு சிந்தைப் பாடினான் பாரதி. அதே போல படிக்காசுப் புலவர் பாடலொன்றைக் கேட்டதும் "செல்வத்துட் பிறந்தனமா" என்றுதொடங்கும் பாடலைப் பாடினான்.
பாரதி எட்டயபுரத்தில் ஆங்கிலோ-வெர்ணாகுலர் ஸ்கூலில் படித்துவிட்டு, திருநெல்வேலி ஹிந்து காலேஜ் தமிழ்ப்பண்டிதர் சிவராம பிள்ளைக்கும் பாரதிக்கும் நடந்த வாக்குவாதங்கள் பல. வகுப்பில் காலரியில் உயரமான இடத்தில் உட்காந்திருந்த பாரதியிடம் ஒரு சமயம் பண்டிதர், "மேகம்போல் கவி பொழிவதாகப் புகழப்படுகிறீர். உயரேயும் இருக்கிறீர். கேள்விக்குக் காளமேகம்போல பதில் பொழியாமல் இருப்பதேன்?" என்று கிண்டலாகக் கேட்டார். உடனே பாரதி, "பண்டிதரவர்களுக்கு மேகத்தின் ஸாமான்ய குணம் கூடத் தெரியவில்லையே. காளமேகம் தனக்குத் தோன்றியபொழுது பொழிவதன்றிப் பண்டிதர் உத்தரவுக்கப் பயந்து பெய்தில்லையே!" என்றான்.
காந்திமதிநாதப் பிள்ளை என்ற உயர் வகுப்பு மாணவர், தமிழ் கற்றிருக்கும் மமதையில் "பாரதி சின்னப் பயல்" என்ற சொற்களைக் கடைசி அடியின் முடிவாகக் கொண்டு ஒரு வெண்பா பாட முடியுமாவென பாரதியைக் கேட்டார். அப்படியே பாடினான் பாரதி.
"காரதுபோல் நெஞ்சிருண்ட
காந்திமதி நாதனைப்
பார்அதி சின்னப் பயல்!"
என்று முடிந்தது அந்தப் பாடல்!