1908ஆம் அண்டில் அரசாங்க அடக்குமுறை மீண்டும் தலை காட்டியது. லோகமான்ய பாலகங்காதர திலகர் கைது செய்யப்பட்டு ஆறு வருஷம் கடுங்காவல் விதிக்கப்பட்டார். அவரை பர்மாவிலுள்ள மாண்டலே சிறைக்குக் கொண்டு சென்றார்கள். (1935ஆம் ஆண்டு வரை பர்மா இந்தியாவில் ஒரு மாகாணமாக இருந்தது என்பது நினைவில் வைக்கத் தக்கது)
தென்னாட்டில், சுதேசிக் கப்பல் கம்பெனி ஆரம்பித்திருந்த தூத்துக்குடி வக்கீல் வ.உ.சிதம்பரம் பிள்ளை திருநெல்வேலி கலெக்டர் வின்சு என்பவனைப் பார்க்கப்போன சமயம் கைது செய்யப்பட்டார். அவருக்கு 40 வருஷம் தீவாந்தர தண்டனை விதித்தார்கள்!
சிதம்பரம்பிள்ளை போலவே தீவிரக் கட்சியில் உழைத்த சப்பிரமணிய சிவா என்ற இளம் தலைவருக்கும் பத்தாண்டு சிறைவாசம் கிடைத்தது.
சென்னையில் ஜீ.சுப்பிரமணிய ஐயரைக் கூடக் கைது செய்துவிட்டார்கள். பாரதியாரைக் கைது செய்வதற்கு அதிக நாளாகாது என்பது எதிர்பார்த்த விஷயமாயிற்று.
பாரதியைக் கைது செய்வதற்கு முதல்படியாகவோ அல்லது பாரதியையே கைது கெய்ய நினைத்துத்தாலோ என்னவோ, "'இந்தியா' ஆசிரியரைக்" கைது செய்ய வாரண்டு பிறந்தது.
போலீஸ்காரன் ஒருவன் இந்த வாரண்டுடன் பிரட்வேயில் "இந்தியா" பத்திரிகைக் காரியாலத்துக்கு வந்தான். (அப்போது "இந்தியா" பிராட்வேயில் 34ஆம் எண் வீட்டில் வெளியாயிற்று. இக் கட்டடம் டேனிஷ் மிஷன் சர்ச்சுக்கு வடபுறத்தில் இரண்டாவது வீடு. இன்னும் இருக்கிறது. தற்சமயம் தோல் கிடங்காக உபயோகப்பட்டு வருகிறது)
காரியாலயம் மாடியில். பாரதி அப்போதுதான் படியில் இறங்கி வந்து கொண்டிருந்தார். போலீஸ்காரன் அவரிடம் வாரண்டை நீட்டினான். பாரதி படித்துப் பார்த்தார். வராண்டு 'இந்தியா' ஆசிரியருக்கென இருந்ததைக் கவனித்தார். "ஆசிரிர்தானே? நான் இல்லை" என்ற சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
பாரதி பொய் சொல்லவில்லை. "இந்தியா" ஆசிரியர் வேலையை அவர் செய்துவந்த போதிலும் சட்டப்பூர்வமான ஆசிரியரென அவர் பெயர் இல்லை; முரப்பாக்கம் ஸ்ரீனிவாசன் என்பவர் பெயர் இருந்தது. ஸ்ரீநிவாசன் 'இந்தியா'வின் சொந்தக்காரர் எஸ்.என்.திருமலாச்சாரியாரின் உற்ற நண்பர், பள்ளித் தோழர். ஸ்ரீனிவாசனைப் போலீஸார் கைது செய்து சென்றார்கள்.
ஸ்ரீனிவாசனுக்கு நேர்ந்த கதி பாரதிக்கும் "இந்தியா" பிரசுரகர்த்தர்களுக்கும் நேர்ந்தால் இனி ஆச்சரியமில்லை என்றாகிவிட்டது. பாரதிக்கும் வராண்டு வரும் என்று போலீஸ் இலாகாவலிருந்த நண்பர்கள் பாரதியை ரகசியமாய் எச்சரித்தார்கள். பாரதியும் நண்பர்களும் கூடி ஆலோசனை செய்தனர். வி.கிருஷ்ணசாமி அய்யரும் பாரதி சென்னையிலிருப்பதைவிட வேறிடம் செல்வது மேல் என்று சொன்னார், பாரதி பிரெஞ்சு ஆதிக்கத்திலுள்ள புதுச்சேரிக்குப் போய்விட வேண்டும் என்று தீர்மானமாயிற்று. சிட்டி குப்புசாமி ஐயங்கார் என்ற புதுவை நண்பருக்கு ஓர் அறிமுகக் கடிதம் தந்தார் ஸ்ரீநிவாஸாச்சாரியார்.
பாரதியார் சென்னையிலிருப்பதற்கு அஞ்சவில்லை. ஆனால் நண்பர்கள்தான், சிறை செல்வதைவிட, புதுவை சென்று அங்கிருந்து 'இந்தியா'வை தொடர்ந்து நடத்த முயல்வதே சரி என்ற வற்புறுத்தினார்கள். மேலும், அக்காலம் காந்தியுகத்துக்கு முந்தியது. திலகர் முதலிய தலைவர்கள், சிறை சென்று ஆத்மிக வழியில் பிரிட்டிஷ்காரனை எதிர்க்க முடியும் என்று கருதவில்லை. போராட்டத்தை விடாமல் நடத்தவேண்டும் என்பதே கருத்தாயிருந்தார்கள்.
புதுவை பாரதிக்குப் பழக்கமான ஊர் அல்ல. அங்கே யாரையும் அவருக்குத் தெரியாது. இருந்தாலும் அங்கே போக அவரும் சம்மதித்தார்.
மறுநாள் இரவு பாரதி சைதாப்போட்டை ஸ்டேஷனில் டிக்கட் வாங்கி, ரயில் ஏறிப் புதுவை போய்ச் சேர்ந்தார். போலீஸாருக்கு இது தெரியவேயில்லை.
அதுவரை கடன்காரர்களின் புகலிடமாக விளங்கிய புதுச்சேரியை அரசியல் புகலிடமாக மாற்றிய பெருமை சென்னை வாசிகளையே சாரும், இதை முதலில் நடத்திக் காட்டியவர் பாதி. அவர் அங்கே போன பிறகுதான் அரவிந்தகோஷ் முதலான பிற அரசியல் தலைவர்கள் புசுச்சேரியில் புகலிடம் தேடினார்கள்.
20. புதுவையில் முதல் நாள் |
முன்பின் தெரியாத ஊர்; தம்மை பகிரங்கமாக அறிவித்துக் கொள்ளவும் விரும்பாத நிலைமை; யாரிடமும் உதவி கேட்டுப் பழக்கமில்லாத சுபாவம். புதுவையில் முதல் நாள் பாரதி பட்டபாடு சொல்லத் தரமன்று.
ரயிலில் இரவெல்லாம் கண் விழித்து, விடியுமுன் புதுவையடைந்து, விடியும் வரையில் ஸ்டேஷனில் இருந்து, காலையில் பெருமாள் கோயில் தெருவில் சிட்டி குப்புசாமி அய்யங்கார் என்பவர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். சிட்டி குப்புசாமி அய்யங்காருக்கு ஒரு கடிதம் பெற்றுச் சென்றிருந்தார் பாரதி.
அய்யங்கார் பாரதியை வரவேற்று உபசரித்து காலைச் சிற்றுண்டியளித்தார். அதன் பின், பகல் போஜனத்துக்காகக் காத்திராமல், பாரதி வீட்டுத் திண்ணையிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார்!
அய்யங்ககார் வீட்டில் இரண்டு நாள் கழிந்தது. இதற்குள் சென்னையில் பாரதி இல்லை என்ற விவரத்தை அறிந்த சென்னைப் போலீஸார், அவர் எங்கேதான் போயிருப்பாரென்று தேடலானார்கள். இரண்டு நாட்களில் பாரதி புதுவையில் இருக்கும் சமாசாரம் தெரிந்து கொண்டார்கள். அவ்வளவுதான். பாரதியின் ஆயுட்காலம் முடிய அவரைத் தொடர்வதாயிருந்த போலீஸ் கண்காணிப்புத் தொல்லை அவரைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது.
சிட்டி குப்புசாமி அய்யங்கார் செல்வாக்கு மிகுந்தவரல்ல. சாமானியமானவரே. சிறு வியாபாரி. அவர் பாரதியை விரட்டி விடும்படிச் செய்ய நயத்தாலும் பயத்தாலும் முயற்சி செய்தார்கள் பிரிட்டிஷ் போலீஸ் ஏவலாட்கள். புதுச்சேரி பிரெஞ்சுப் பிரதேசமானதால் நேரடியாக ஏதும் செய்ய முடியவில்லை. ஆனால், முதல் மகா யுத்தத்துக்கு முந்திய ஆண்டுகளில், புதுச்சேரி பல விதங்களில் பிரிட்டிஷ் தயவை நாடி வாழ வேண்டியிருந்தது. பிரிட்டிஷ் ஏவலாட்களுக்கு இது மிக சௌகரியமாயிருந்தது. பாரதி ஒரு பெரிய அரசியல் போக்கிரியென்றும், அவரை வீட்டில் வைத்துக் கொள்வது பேராபத்து என்றும் ஐயங்கரின் உற்றார் உறவினர் மூலம் அவருக்கு உபதேசித்தார்கள்.
குப்புசாமி அய்யங்கார் மானி. வீட்டில் வந்துள்ள விருந்தினரைப் போ என்று சொல்லவும் முடியவில்லை; பாரதியை வீட்டில் இருக்கச் செய்வது வம்பை விலைக்கு வாங்குவதாகுமே என்றும் தவித்தார்.
நிலைமைய உணர்ந்த பாரதி அதற்கு மேல் தவித்தார். தன்னால் இந்த அப்பாவி மனிதருக்குச் சங்கடம் ஏன் என்று துடித்தார்.
இந்த நெருக்கடியில், தெய்வமே அனுப்பிய சமய சஞ்சீவியாய் "எங்கிருந்தோ வந்து சேர்ந்தான்" குவளைக் கண்ணன்.
குவளைக் கண்ணன் என்பது குவளையூர் கிருஷ்ணமாச்சாரி என்ற இளைஞரின் சுருக்கமான பெயர். புதுவை வாசி. குப்புசாமி அய்யங்கரின் உறவினர். கல்வே கல்லூரியில் பத்து வருஷம் படித்தவர்.
புதுவையில், தாம் முதன் முதலாக பாரதியைச் சந்தித்த கதையைக் குவளைக் கண்ணன் வர்ணித்துள்ளார்.
கல்வே கல்லூரித் தலைமையாசிரியர் வி.எஸ்.ஸ்வாமிநாத தீஷிதர் வீட்டுக்கு குவளைக் கண்ணன் அடிக்கடி போய் வருவார். ஆங்கில மோகம் இருந்த அக்காலத்திலும் தீஷிதர் "இந்தியா" பத்திரிகையைத் தவறாமல் படித்து வருவதையும், தமிழ்ப் பத்திரிகைகளில் சிறந்தது அதுவே என்று சொல்வதையும் கேட்டு, குவளை தாமும் அப்பத்திரிகையை இரவல் வாங்கிப் படிக்கலானார்.
பத்திரிகையை தாம் சந்தா கட்டித் தருவிக்கவில்லை, சுந்தரேசய்யர் என்பர் தருவிக்கிறார் என்று ஸ்வாமிநாத தீக்ஷிதர் கொஞ்ச நாள் கழித்துத் தெரிவித்தார். குவளை சுந்தரேசய்யரைவும் சிநேகம் பிடிக்க வேண்டியதாயிற்று. இனி குவளையின் மொழிகளிலேயே பாரதியாரை அவர் யாரென்று தெரியாமல் சந்தித்த விகாரத்தைக் கேட்போம்:
"புதுச்சேரி பெருமாள் வீதியில்தான் என் மாமனார் வீடு. அதற்கு மேலண்டைப் பக்கத்து வீடு என் மைத்துனி வீடு. அதன் குறட்டு ஓரமாக ஒரு நாள் மாலையில் போகையில், மேற்படி வீட்டுத் திண்ணையில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருக்கக் கண்டு யார் என்று கேட்டேன். தாம்தான் பாரதி என்று தெரிவிக்காமலே, அவர், தமக்குச் சென்னை என்றும் புதுவைக்குப் புதிதாய் வந்திருப்பதாயும் சொன்னார்; எனக்கும் அவருக்கும் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் பேச்சு நடந்தது."
"சம்பாஷணையின் இடையில் 'இந்த ஊரில் "இந்தியா" பத்திரிகை வரவழைப்பவர்கள் யாராவது தெரியுமா?' என்று கேட்டார். எனக்குத் தெரிந்த ஒருவர் வரவழைப்பதாகச் சொன்னேன். "அவரைத் தமக்குக் காட்ட முடியுமா?" என்று கேட்டார்.
"கூட வந்தால் காட்ட முடியும்" என்றேன். அவர் உடனே ஆவலுடன் என்னுடன் வந்தார் - சுந்தரேசய்யர் வீட்டுக்குப் போனோம்."