புகைப்படம் எடுத்துக்கொள்வதில் பாரதிக்கு விருப்பம் அதிகம்.
பாரதிக்குப் புகைப்படங்களில் விருப்பமென்றாலும், தமது ஆயுளில் அவர் ஆறு படங்களே எடுத்துக் கொண்டுள்ளார்.
பாரதியாரின் இளமையில் ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. சிறுவன் சுப்பையாவின் இந்தப் படம் இப்போது நமக்குக் கிடைக்கவில்லை.
இந்த முதல் படத்துக்குப் பிறகு பாரதி எடுத்துக்கொண்ட படம், முன்பக்கதிலுள்ள பாரதி-செல்லம்மா படம்தானென்று தோன்றுகிறது. இது புதுவையில் 1917ல் எடுத்துக்கொண்ட படம். மனைவியுடன் இப்படம் எடுத்துக்கொண்ட அதே தினம், மனைவி மக்கள், இரு நண்பர்களுடன் இன்னொரு படமும் பாரதி எடுத்துக்கொண்டார்.
இந்தப் படத்திலும், அக்கால வழக்குக்கு மாறாகச் சில விஷயங்கள் இருக்கின்றன. புருஷன், மனைவி படமெடுத்துக் கொள்வதென்றால் புருஷன் உட்கார்ந்துகொண்டும் மனைவி நின்றுகொண்டும் படமெடுத்துக் கொள்வதே நம்மவர் வழக்கம். ஆனால் இந்தக் குடும்பப் படத்திலோ, பாரதி நிற்கிறார், செல்லம்மாள் உட்காந்திருக்கிறார். இது மேனாட்டு ஆசாரத்தைப் பின்பற்றிய தெனலாம். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை ஒழிக்க வந்த வாரதி, தம் மனைவியை அமரச் செய்து, தாம் நின்றவண்ணம் படமெடுதுக்கொண்டதில் வியப்பில்லை.
இப்படத்தில், பாரதியையும் செல்லம்மாளையும் தவிர, பாரதியின் இரு புதல்வியரும், நண்பர்கள் இருவரும் இருக்கிறார்கள். செல்லம்மாள் அருகே இளைய பெண் சகுந்தலா உட்கார்ந்திருக்கிறாள். மூத்த பெண் தங்கம்மாள் பின்னே நிற்கிறாள். பாரதியுடன், ராமு என்ற ஒரு இளைஞரும், விஜயராகவன் என்ற மற்றொரு இளைஞரும் நிற்கிறார்கள்.
இருவரும் புதுவையில் பாரதியின் வீட்டுக்கு அருகில் இருந்த இளம் நண்பர்கள். ராமு என்பவரைப் பற்றி மேல் விவரம் கிடைக்கவில்லை. விஜயராகவன் என்பவர் மட்டும், இன்னும் ஜீவிதமாயிருக்கிறார். தற்சமயம் திருப்பாதிரிப்புலியூரில் ஸப்-போஸ்ட் மாஸ்டராக இருக்கிறார். எஸ்.விஜயராகவாச்சாரியார் என்பது இவரது முழுப் பெயர். பாரதி குடும்பப் படத்தின் பிரதியை அவரெ இந்நூலில் பிரசுரிக்க உதவியுள்ளார்.
பாரதியின் சகவாசத்தால் இளைஞர்கள் எப்படி உற்சாகமடைந்தனர் என்பதற்கு, இப்படத்தில் இளம் விஜயராகவன் பாரதி போலவே தலைப்பாகை அணிந்திருப்பது சான்றாகும்.
புதுவையில் எடுக்கப்பட்ட இவ்விரு படங்களுக்குப் பின், புதுவையை விட்டுக் கடயத்தில் வசித்த சமயம் காரைக்குடிக்குச் சென்று, அங்கே ஹிந்து மதாபிமான சங்கத்தில் ஒரே நாளில் இரண்டு புகைப்படங்கள எடுத்துக் கொண்டார். ஒரு படத்தில் தாம் மட்டும் தனியாகவு, மற்நொன்றில் சங்க அன்பர்களுடனும் அவர் விளங்குகிறார். இப் படங்கள் இந்நூலில் வேறு பக்கங்களில் வெளிவந்துள்ளன.
இதன் பிறகு, கடயத்திலிருந்து சென்னைக்கு 1920ல் திரும்பிய பின், வி.பி.ஹாலில் செய்ததோர் ஆங்கிலப் பிரசங்கத்தை அறிவிக்கும் துண்டுப் பிரசுரத்தில் வெளியிடவென மார்பளவுப் படமொன்று எடுத்துக்கொண்டார். இந்தத் துண்டுப் பிரசுரமும் அதில் வெளியான படமும் இப்போது நமக்குக் கிடைக்கவில்லை.
பாரதி கடைசியாக எடுத்துக் கொண்ட படமும் அவ்வளவு பிரசித்தமாகவில்லை. ஆனால் அதன் ஒரு பகுதி மட்டும் மிகப் பிரசித்தமாகிவிட்டது. அன்பர் பாரதிதாஸனின் விருப்பப்படி, மழு அளவுப் படம் ஒன்று எடுத்துக் கொண்டார் பாரதி. இது 1921ல் இருக்கவேண்டும். மெலிந்த உருண்டைக் கழி நாற்காலி யொன்றில் உட்கார்ந்திருக்கும் பாரதியை, தாடியற்ற பாரதியை, மிசையும் தலைப்பாகையுமுள்ள பாரதியை இப் படத்தில் காண்கிறோம். வாழ்க்கையில் துயரின் ஆழத்தைக் கண்டிருந்தும் கலங்காத நெஞ்சும் மாறாத வீரத் திருப்பார்வையும் கொண்ட இப்படத்தில் பாரதியின் 'பாதரஸம் போன்ற' பரபரப்பான இயல்வு நன்கு தெரிகிறது. படமெடுத்தாகிவிட்டதா, நான் எழுந்து போகலாமா என்று கேட்பது போல நாற்காலியில் பட்டும் படாமலும் முன் தள்ளி முன்னால் குனிந்து வீற்றிருக்கிறார் இப் படத்தில்.
வழக்கமாக நறுக்கு மீசையுடனும் தலைப்பாகையுடனும் திறந்த கோட்டுடனும் காணும் பாரதியின் பிரபலமான மார்பளவுப் படம் இந்த முழு அளவுப் படத்தின் ஒரு பகுதியே யாகும். ஆனால் இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம்! பரபரப்பு மிக்க புலவராக முழு அளவு படத்தில் விளங்கும் பாரதியை, முன்னால் சாய்ந்து வீற்றிருக்கும் பாரதியை, நிமிர்த்தி வைத்து பரபரப்பற்ற கவிராஜ சிங்கமாக்கிவிடுகிறது வழக்கமான மார்பளவுப் படம்!
44. ஆங்கில எழுத்தாளர் பாரதி |
பாபு அரவிந்த கோஷ் தனியாக ஆசிரமம் அமைத்துகொண்ட பின்னரும் பாரதி அடிக்கடி அவரைப் போய்ப் பார்த்து வருவார். ஒரு நாள் அரவிந்தரிடம் பாரதி எதையோ படித்துக் காட்டிக்கொண்டிருந்தார். அதைக் கேட்கக் கேட்க, அரவிந்தர் விடா நகைப்படைந்து, தாம் மகிழ்வதுடனில்லாமல் ஆசிரமத்திலிருந்த வாலிப வித்வான்களையெல்லாம் அழைத்து, "பாரதியார் எவ்வளவு அருமையான இங்கிலீஷில் ஒரு அதிசயமான கட்டுக்கதை எழுதியிருக்கிறார்! அதை அவரே வாசித்துக் காட்டும்போது நீங்கள் கவனிக்காமலும் கேட்காமலும் எங்கே கவனித்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே!" என்று சொன்னார்.
அந்த நகைச்சுவை மிக்க கட்டுக் கதை, "பொன் வால் நரி" என்று தமிழிலும், "The Fox With the Golden Tail" என்று ஆங்கிலத்திலும் 1914ல் வெளிவந்தது. அன்னி பெஸண்டின் அரசியலைப் பற்றியும், ஜே.கிருஷ்ணமூர்த்தியையும் அவரது சகோதரரையும் பெஸண்ட் வளர்த்து வந்தது பற்றியும் வரையப்பட்ட இந்த கேலிக் கதை சென்னையில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கிற்று. மயிலாப்பூரில் பெயர் பெற்ற வைத்தியரும் தேசபக்த திலகமாக விளங்கியவருமான டாக்டர் நஞ்சுண்ட ராவ் இந்நூலைப் பற்றிக் கேள்விப்பட்டு உடனே 5000 புத்தகங்களுக்கு வி.பி.ஆர்டர் அனுப்பினார்.
மேலும் இந்தப் புத்தகத்தைக் கொண்டாடி பி.ஏ., எம்.ஏ. படித்த பலர் பாரதியாருக்குப் பாராட்டுக் கடிதங்கள் அனுப்பினார்கள். இத்தகைய கடிதங்களில் ஒன்றைப் பிரித்து பாரதியார் படித்துக் கொண்டிருக்கையில் குவளைக் கண்ணன் அவரிடம் "என்ன ஐயா கடிதம்?" என்று கேட்டார்.
பாரதியார் சொன்னார்: "போகச் சொல்லு, விதவைப் பசங்களை!" நான் என்னுடைய சொந்த பாஷையில் என் முழு மூளையையும் கசக்கிப் பிழிந்து 'பாஞ்சாலி சபதம்' எழுதியிருக்கிறேன். அது நன்றாக இருக்கிறதென்று ஒருவனும் ஒரு கடிதமும் எனக்கு எழுதவில்லை. அந்தப் புஸ்தகத்தை நீ ஒருவன்தான் வாசிக்கிறாய்! ஆங்கிலத்தில் எழுதின இந்தப் 'பொன் வால் நரி'க்கு 50 பிரதி உடனே வேண்டுமாம்!"
தமிழனின் அடிமை மனப்பான்மையும் ஆங்கில மோகமும் அவர் மனதை எவ்வளவு தூரம் புண்படுத்தின என்பது இந்த பதிலின் ஆழத்தில் தொனிக்கிறது.
பாரதி எட்டயபுரத்தில் ஷெல்லி, கீட்ஸ் ஆகிய ஆங்கிலக் கவிகளைச் சுவைத்தவர். "ஷெல்லியன் கில்டு" சங்கம் அமைத்தவர். "ஷெல்லி தாசன்" என்ற புனைபெயர் கொண்டவர். ஸானெட் என்ற ஆங்கிலப் பண்முறையைத் தமிழில் கையாண்டவர். அவர் சொந்தமாகவும் ஆங்கிலக் கவிதை புனைந்திருக்கிறார். அது மட்டுமல்ல, தம்முடைய சில கவிதைகளையும், நம்மாழ்வார், ஆண்டாள் முதலிய தமிழ்க் கவிகளின் பாக்கள் சிலவற்றையும் ஆங்கிலப் படுத்தியிருக்கிறார். இவை அரவிந்தரின் "ஆர்யா" பத்திரிகையிலும், பெஸண்டின் "நியூ இந்தியா" "காமன்வீல்" பத்திரிகைகளிலும் வெளிவந்தன. (1937ல் "Agni and other Poems" என்ற நூலாக பாரதி பிரசுராலயம் இவைகளை வெளியிட்டது).
"எங்கள் வேள்விக் கூட மீதில்", "பாயுமொளி நீ எனக்கு", "உண்ண உண்ணத் தெவிட்டாதே", "மாதவன் சக்தியினை", "பகைவனுக் கருள்வாய்", "கும்பியடி தமிழ் நாடு முழுவதும்", "இயற்கை யென்றுனைப் புகழ்வார்" என்று ஆரம்பமாகும் 7 பாரதி பாடல்களுக்கு அவரே செய்துள்ள ஆங்கில மொழி பெயர்ப்புகள் இந்நூலில் இருக்கின்றன.
வைஷ்ணவர்கள் போற்றும் "வாரணமாயிரம்" பாட்டு உள்ளிட்ட பல பிரபந்தப் பாடல்களும் பாரதியால் ஆங்கிலப்படுத்தப் பட்டுள்ளன.
சென்னையில் "மெட்ராஸ் ஸ்டாண்டர்டு" என்று ஒரு தினசரி இருந்தது. அதில் பாரதிக்கும் புரொபஸர் எம்.கே.சுந்தரராமன் (கே.எஸ்.ராமசாமி சாஸ்திரியாரின் தந்தை) அவர்களுக்கும் கீதையைப்பற்றி நடந்த விவாதம் உயர்ந்த முறையில் பத்திரிகைச் சர்ச்சைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியதாம். சுந்தரராமன் சாஸ்திரிய ஆதாரங்களைக் காட்டி விவாதித்தாராம். பாரதியின் இந்த விவாதம் இன்னும் நூலாக வெளிவரவில்லை.
வெளியாகாத பாரதி ஆங்கில எழுத்துக்களில் "Political Evolution in the Madras Presidency" என்பதும் ஒன்று. அதில், கொலை வழியைத் தாம் ஆதரிக்கவில்லை என்பதைத் தெளிவாய்க் கூறியிருக்கிறார் கவிஞர்.
பாரதியின் ஆங்கிலக் கட்டுரைகள் சில "Essays and other Prose Fragments" என்ற நூலாக 1937ல் வெளிவந்தன. "Coming Age" என்ற 1918ஆம் ஆண்டுக் கட்டுரையில் பூதான இயக்கக் கருத்தை தீர்க்கதரிசனமாக வெளியிட்டிருக்கிறார் கவிஞர்.