சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
34
67. அனுபந்தம்: 1 - பாரதி இறந்த ஒரு வாரத்தில்


பாரதியார் காலமான செய்தி தாங்கிய 1921 ஸெப்டம்பர் 12ஆம் தேதி "சுதேசமித்திர"னிலேயே, தலையங்கத்துக்கு எதிர்ப்பக்கமான 5ஆம் பக்கத்தில் பின்வரும் விளம்பரம் வெளியாயிற்று:

"காலஞ்சென்ற கவிராயர் சுப்பிரமணிய பாரதியார் எழுதிய அநேக விஷயங்கள்
நமது கதா மாலிகா என்னும் நூலின் வெளியிடப்பட்டிருக்கின்றன. சுமார் 33 பிரிவுகளுடன் கூடியது. கதைகளும் ரஸமான குறிப்புகளும் பொதிந்து கிடக்கின்றன. விலை ரூ.1.
மானேஜர்,
சுதேசமித்திரன் புத்தகசாலை,
சென்னை."

மறுநாள் ஸெப்டம்பர் 13ஆம் தேதி இதழில், பாரதியார் மரணத்தையொட்டிய முதல் அனுதாபக் கூட்டத்தைப் பற்றிச் செய்தி வெளியாயிற்று:

"ஓர் அனுதாபக் கூட்டம்

நேற்றிரவு தம்புச் செட்டி வீதி சாந்தாச்ரமத்தில் அமரகலா விலாஸினி ஸபையினாதரவில் ஓர் கூட்டம் கூடி, ஸ்ரீ.வெ.சோமதேவ சர்மாவின் தலைமையின் கீழ் கீழ்க்கண்டபடி தீர்மானித்தது:
1. இச்சபையின் கௌரவ அங்கத்தினரும் தமிழ்க் கவிராயருமான ஸ்ரீ.சுப்பிரமணியபாரதியாரின் அகால மரணத்திற்கு ஆறத்துயரமடைவதுடன், அவரது குடும்பத்தாருக்கு அநுதாபத்தை அறிவிக்கிறது. 2. அடியிற் கண்ட நபர்களை கவிராயரின் சின்னத்திற்காக அவரது கவிகளை அச்சிட்டுப் பிரசுரித்து அதன் லாபத்தைக் கொண்டு அவர் குடும்பத்தை ஸம்ரக்ஷிக்க ஓர் தக்க கமிட்டி ஏற்படுத்தும்படி வேண்டுகின்றன:- தி.வெ.சோமதேவ சர்மா, ஏ.கிருஷ்ணசாமி அய்யர், கல்யாணசாமி அய்யங்கார், நாராயண ராவ், மணி பாகவதர், ஸரம்பய்யர்."
அடுத்த நாள், 14.9.1921 இதழில் 'நகரச் செய்திகள்' பத்தியின் கடைசியில் இந் நிருபம் வெளிவந்தது:

"எனது குருவையிழந்தேன்"

"சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு 1 மணிக்கு எனது குருவாகிய ஸ்ரீமான் சி.சுப்பிரமணிய பாரதியார் இம்மண்ணுலகைவிட்டு விண்ணுலகமடைந்தார் என்ற துக்கச் செய்தியைக் கேட்டு ஆற்றொணாத் துயரமடைந்தேன். அவர் புதுச் சேரியிலிருந்த காலத்தில் 'ஜாதி வித்தியாச'மென்னும் தொத்து வியாதியை இந்தியாவிலிருந்து ஓட்டினால்தான் நம் பாரதமாதா விடுதலை பெறுவாளென்று என்னிடம் அடிக்கடி சொல்லி போதிப்பார். இவர் கவிசிரேஷ்டர் மாத்திரமல்ல. வேதவேதாங்க வேதாந்த, சாஸ்திரங்களிலும் நிகரில்லாத பாண்டித்யமுள்ளவர். இவர் தம்முடைய சக்தி மழுவதையும் மத விஷயங்களிலும் இராஜீய விஷயங்களிலும் ஜாதி விஷயங்களிலுமே உபயோகப்படுத்தி வந்தார், காளிதேவியின் சுயரூபத்தையே அவர் கண்ணால் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார். அவர் பயமென்பதே கிஞ்சிற்று மில்லாத தீரபுருஷர். கவிசிரேஷ்டருக்குள் கவிசிரேஷ்டரென்றும், பேசும் திறமையுள்ளர்களுக்குள் சிறந்தவரேன்றும், இராஜ தந்திரியெனவும் இப்படிப் பலவிதங்களில் சிறந்த புகழ் பெற்ற இப் புண்ணிய புருஷர் நம்மெல்லோரையும் விட்டுப் பிரிந்து சென்றதானது பாரத புத்திரர்களெல்லோரையும் துக்கக் கடலில் அமிழ்த்தியது என்பதற்கு எம்மாத்திரமும் சந்தேகமில்லை. பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு ஆத்மாவுக்குச் சாவு இல்லையென்று சொல்லியதைப்போல எனது குருவாகிய ஸ்ரீமான் பாரதியாரின் சருரம் மறைந்து போனாலும் அவருடைய ஆத்மாவானது நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும். அவரைப் பிரிந்து தவிக்கும் அவரது மனைவியாருக்கும் இரு குழந்தைகளுக்கும் என் அநுதாபத்தைத் தெரிவிப்பதாக சீஷன் ஸ்ரீமான் ரா.க.லிங்கம் எழுதுகிறார்"

14-9-1921 "சுதேசமித்திர"னிலேயே சில இரங்கற் பாக்களும் பிசுரமாயின:
காலஞ்சென்ற ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி கையறு நிலை

இடியேறு எதிர்ந்து படவர வென்னச்
செந்தமிழ் மாது நொந்து வருந்தவும்
இசைத் தமிழ்வாணர் அசையா தழுங்கவும்
நேற்று நின்னுடைலுயிர் வேற்றுமை கண்ட

கூற்றுவ னென்னும் மாற்றலன் நின்னுயிர்
பருகின னன்றி யுருகின னின்றே
தமிழ்ச் சுவை யின்பஞ் சற்று மறியான்
அமிழ்தின் றேறல் அதுவென வறியான்

இப்பிலா பாரதி சுப்பிரமணிய நின்
நாட்டுப் பாட்டின் நலஞ் சிறிதுணரான்
கண்ணன் பாட்டின் கருத்தைத் தேறான்
வீரச் சுவையதில் விளங்குவ துணர்கிலன்

நேரமின்னும் நெங்கிலை யுண்டான்
நினைக்க நினைக்க நெட்டுயிர்ப் பெடுக்கும்
வினை விளை காலம் வேறில்லை
பினையும் பிறப்பாய்ப் பெறுவாய் பணியே.

ஆர்வலன்
சு.அர்த்தநாரீச வர்மா.

"சுதேச மித்திரன்" 17-9-1921 இதழில் 'கடிதங்கள்' பகுதியில் பின்வரும் கடிதங்கள் பிரசுரமாயின:

காலஞ்சென்ற ஸ்ரீமான் பாரதியார்

I
ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியாரை இப் பாரத தேசத்தில் இன்னம் சில காலம் வைத்திருப்பதற்கு பாரத மாதாவிற்கு இஷ்டமில்லை திருந்ததற்கு நாம் இங்கு மிகவும் வருத்தமடைகிறோம் என்று புதுச்சேரி ஸ்ரீமான் வெ.கிருஷ்ணசாமி செட்டியார் எழுதுகிறார்.

II
உத்தம தேசாபிமானியும் தெய்வபக்தி நிறைந்தவரும், தேசீய கீதாமிருதத்தை இந்தியாவுக்கு அளித்தவருமாகிய ஸ்ரீமான் ஸி.சுப்பிரமணிய பாரதியார் தமது குடும்பத்தையும் இந்திய ஜனங்களையும் விட்டு விண்ணுலகமடைந்ததின் பொருட்டுக் கொண்டுள்ள அநுதாபத்தை "ஈரோடு செங்குந்த சன்மார்க்க பரிபாலன சபையார்" மேற்படி குடும்பத்திற்கு நேரே தெரிவித்திருப்பதோடு இதன் மூலமாகவும் தெரிவித்துக் கொள்ளுகிறார்கள் என்று காரியதரிசி எழுதுகிறார்.

III
காரைக்குடியில் 15ஆம் தேதி நடந்த ஓர் பொதுக் கூட்டத்தில், ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியாரின் மரணத்துக்காக அநுதாபம் தெரிவிக்கப் பட்டதோடு, ஸ்ரீமான் வ.வே.சு.அய்யரும் ஹநுமந்த ராவும் தேச சேவை செய்து அடக்கு முறைகளுக்கு ஆளாயிருப்பது பற்றி அவர்களைப் பாராட்டுவதாகவும் தீர்மானம் செய்யப்பட்டது. ஸ்ரீமான்கள் கோவிந்தராஜ ஐயங்காரும் சுப்பிரமணிய சிவாவும் மேற்படி விஷயமாகப் பாடுபட்டு வருகின்றனர். பாரத மாதா ஆலய்த்துக்கு மகாத்மா காந்தி அஸ்திவாரக்கல் நாட்டுவாரென்றும் தெரிகிறது என்று ஸ்ரீமான் பசலா கிருஷ்ணய்யர் தந்தி மூலம் அறிவிக்கிறார்.

அதே ஸெப்டம்பர் 17 ந்தேதி "மித்திரன்" இதழில் எஸ். ஸததியமூர்த்தியின் கடிதமொன்றும் வெளியாயிற்று:

காலஞ்சென்ற ஸ்ரீமான் பாரதியார்

ஸ்ரீமான் எஸ்.ஸத்தியமூர்த்தி ஐயர் பி.ஏ., பி.எல். பின் வருமாறு நமக்கு எழுதுகிறார்: ஒவ்வொரு தேசத்தின் சுதந்திர உணர்ச்சிக்கும் புனருத்தாரணப் பிரயத்தனங்களுக்கும் அனுகுணமான கவி சிரேஷ்டர்கள் அவ்வப்போது தோன்றி வந்திருக்கிறார்கள். ராஜ தந்திரிகளும் பட்டாளக்காரும் ஒரு தேசத்துக்கு எவ்வளவு நலத்தைத் தந்தருளக் கூடுமோ, அந்த அளவுக்குக் கவிராயர்களும் நலந் தரக்கூடும். திருஷ்டாந்தமாக "மார்ஸல்லே" என்ற தேசகீதத்தைக் கேட்ட மாத்திரத்தில் பிரெஞ்சுக்காரத்களின் உணர்ச்சி எத்தகைத்ததாயிருக்கிறதென்று நான் சொல்ல வேண்டியதில்லை. அந்த கீதத்தை உச்சரித்தவுடனே பிரெஞ்சுக்காரர்களின் உடல் புளகாங்கிதமாகி, மகா உத்தமமான தீரச் செயல்களுக்கு அவர்களைத் தூண்டி விடுகின்றது. அப்படிப்பட்ட தேச மகா கவிகளில் எனது நண்பர் ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியும் ஒருவராகக் கொள்ள வேண்டும. கவிபாடும் திறமை அவருக்கு இயற்கையாகவே உண்டாகி, சிறு வயது முதற்கொண்டே தமது அபார புத்தியை தேசத்திற்காக அர்ப்பணஞ் செய்துவிட்டார். ஆங்கிலக் கவிளான ஷெல்லியும் கீட்ஸும் இவரைப் போன்ற இளம் வயதில்தான் அற்புதமான கவிகளை இயற்றியபின் உலக வாழ்வை விட்டொழித்தனர். ஸ்ரீ பாரதியாரின் தமிழ்ப் பாடல்கள் எளிய நமடயில் இயற்றப்பட்டு மனதை மிகவும் உருகச் செய்துவிடும் தன்மையுடையன. ஆயினும் எவ்வளவு பிராபல்யம் அடையவேண்டுமோ அந்த அளவுக் அவருடைய கவிகள் பிரசித்தியடையவில்லை. ஆனால் அக்கவிகளை எங்கு பாடிய போதிலும், ஒரு மாயசக்தி அதில் மறைந்து கிடத்தல் புலப்படாமற் போகாது. இதை நான் அனுபவத்திற் கண்டிருக்கிறேன். ஒரு கவியின் மனத்தே உதயமாகி வெளிவரும் விஷயம் எப்போதுமே ஸாமான்யமாயிராது. ஸ்ரீ பாரதியார் போன்றவர் இங்கிலாந்தில் பிறந்திருந்தால் அரண்மனைக் கவியாக அவர் கொண்டாடப்பட்டிருக்பார். சுயேச்சையடைந்த எந்த நாட்லாவது அவர் ஜனித்திருப்பாராகில், இவ்வளவு பால்த்தில் மாண்டிருக்கமாட்டார்; தேசபாஷைக்கும்தாம் பிறந்த ஜாதிக்கும் ஒரு மஹத்தான செல்வத்தைச் சேர்த்து வைத்திருப்பார். வங்காள சிரேஷ்டர் ரவீந்திரநாதருக்கு அவர் சமமானவர். நான் மிகைபடப் பேசுவதாக நினைக்கக் கூடாது. ஸ்ரீ பாரதியாரை அறிந்தவர்களுக்கே நான் சொல்வதன் உண்மை செம்மையாகப் புலப்படும். தமது ஆயுள் காலத்தில் பெரும் பாகத்தை அவர் வன வாஸத்தில் செலவழித்துவிட்டார். தமிழ்நாட்டில் பிறந்து படாத கஷ்டங்கள் எல்லாம் பட்டு இளவயிதிலேயே அவர் இறந்துபோய்விட்டார். ஆயினும் கடுகளவாவது இத்தமிழ் நாட்டுக்கு தேசாபிமானம் இருக்குமளவும், தமிழ் பாஷை இந்நாட்டைவிட்டு மறையாதிருக்கும் வரையிலும், ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் ஞாபகம் இருந்து கொண்டேதானிருக்கம். அவருடைய கவிகளை நான் பூராவும் நேரில் பாடிக் கேட்டிருக்கிறேன். அவருடைய குடும்பம் சிர்க்கதியாயிருப்பது பலருக்குத் தெரியும். தமிழ்நாடு அதைச் சகித்திருக்கக்கூடாது. அவருடைய கவிகளை அச்சிட்டு விற்று, பெரிய நிதி சேர்த்து, அவரது மனைவி மக்களைக் காப்பாற்ற நாம் கடமைப் பட்டிருக்கிறோம். பண உதவி செய்வோரும் செய்க.

"சுதேசமித்திரன்" அதே இதழில், ஸெப்டம்பர் 17ஆம் தேதி சனிக்கிழமையன்று, வார அநுபந்தத்தில் "பிரஜழநுகூலன்" ஆசிரியரும் பாரதியை நன்கறிந்தவருமான பிரபல எழுத்தாளர் எஸ்.ஜி.ராமாநுஜலு நாயுடு பாரதி பற்றித் தம் நினைவுகள் சிலவற்றை விவரிக்கிறார். பாரதியார் பற்றிய முதல் கட்டுரை இதுவென்றே சொல்லலாம். கட்டுரையாவது:

ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி சில குறிப்புகள்

ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியார் ஆதியில் சுதேசமித்திரன் உதவி ஆசிரியராக இருந்து கொண்டே "சக்கரவர்த்தினி" என்ற தமிழ் மாதப் பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்து அதை நடத்தி வந்தார். அதன் பின்னர் "இந்தியா" பத்திரிகையுடன் "பால பாரதம்" என்ற ஆங்கில வாரப் பத்திரிகையையும் நடத்தினார். "இந்தியா" பத்திரிகை 4000 காபிகள் வரைபோல் பிரசுரமாகிக் கொண்டிருந்தது. பிறகு புதுச்சேரிக்குச் சென்றார். அந்த சமயம் ஸ்ரீ அரவிந்த கோஷ் "கர்மயோகின்" என்ற பத்திரிகையை நடத்துவதைப் பார்த்து, அதன் கருத்துக்களைத் தமிழில் தெரிவிக்க "கர்மயோகி" என்ற மாதப் பத்திரிகையை பாரதியார் ஆரம்பித்தார். மிக்க நன்றாக நடந்தது. அதன் பின் "விஜயா" என்ற தினசரித் தமிழ் பத்திரிகையைத் தொடங்கினார். அப் பத்திரிகை முற்றும் சித்திரங்கள் நிறைந்திருந்தன. அதுவும் எங்கும் வியாபகமாயிற்று. அதன் பினி படங்களைப் பிரசுரித்து அதன் விளக்கம் வரைந்து அவ்விதமாக ஒரு மாத சஞ்சிகையை வெளியிடுவதென்று ஏற்பாடு செய்தார். அந்த சமயத்தில் "இந்தியா" பத்திரிகை பறிமுதலாகி விடவே, அவரது பத்திரிகை முயற்சிகளும் நின்று போயின.

------

சென்னையில் "இந்தியா" பத்திரிகையை நடத்தும்போது அதில் சுதேச கீதங்கள் அடிக்கடி பிரசுரித்து வந்தார். அக்கீதங்களையெல்லாம் ஒன்று சேர்த்து "ஸ்வேதேச கீதங்கள்" என்ற பெயருடன் ஸ்வல்ப கிரயமாகிய அணா 2 விலை வைத்து வெளியிட்டார். அக்காலை ஸ்ரீ திலகரின் புதிய கக்ஷியின் வியாபகம் எங்கும் பரவவுதாயிற்று. ஸ்ரீ திலகர் 'புதிய கட்சியின் கோட்பாடுக்ள' என்ற ஒரு அரிய பிரசங்கத்தைச் செய்ய, அதை அப்பெயருடனேயே தமிழில் வெளியிட்டு ஒரு அணா கிரயத்துக்கு எல்லோருக்கும் வழங்கனிர். சூரத்தில் நடந்த காங்கிரஸுக்கு ஸ்ரீ.ஜி.சுப்பிரமணிய ஐயரவர்கள் சென்றபோது, இவரும் சென்றிருந்தார். ருரத்தில் காங்கிரஸ் பிளவுபட்டது. ஸ்ரீ பாரதியார் சென்னையிலிருந்து பிரயாணப் பட்டது முதல் மறுபடியும் சென்னை வந்து சேர்ந்த வரையில் நடந்த விஷயங்களைக் கோவையாகத் தொகுத்து "எங்கள் காங்கிரஸ் யாத்திரை" என்று வெளியிட்டார். அதன் கிரயமும் இரண்டணாதான். நூல்கள் யாவும் சொற்ப விலைக்கே உதவப்பட்டன.

------

சென்னையில் "இந்தியா" பத்திரிகை நடத்திய போது "ஞானரதம்" என்ற தலைப்பின் கீழ் இயற்கை யனுபவங்களையும தேசச் செயல்களையும் கலந்துகொண்டு அற்புதமான கற்பனைகளோடும் ஒரு அரிய ஞானப் பிரபந்தம் எழுதி வந்தார். இறுதியில் அவற்றையெல்லாம் ஒன்ற சேர்த்து "ஞானரதம்" என்று வெளியிட்டார். அதற்கு இணையான நூல் தமிழ் மொழியில் இல்லை. சொற் சுவையும் பொருட் சுவையும் நிரம்பியது. பாச்சுவை பரவிய நடையாகவமைந்தது. அதன் பின் புதுச்சேரியிலிருந்து "ஸ்வதேச கீதங்"களின் இரண்டாம் பாகமாக "ஜன்மபூமி" என்ற நூலை வெளியிட்டார். ஆதியில் வந்தே மாதர கீதத்துக்கு ஸ்ரீ பாரதிதான் "இனிய நீர்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை" என்று தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிட்டுதவினார். இந்த மொழி பெயர்ப்பு, அத்தனை தெளிவாயில்லை என்று, "நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும் குளிர்பூந் தென்றலும்" என்று தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிட்டுதவினார். இந்த மொழி பெயர்ப்பு, அத்தனை தெளிவாயில்லை என்று, "நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும், குளிர்பூந் தென்றலும்" என்று வேறொரு மொழிபெயர்ப்பும் பிரசுரம் புரிந்தார். பின் சொல்லிய பாவுடன் வேறு பலவும் சேர்த்து "மாதா மணி வாசகம்" என்ற பெயருடன் ஒரு நூலை வெளியிட்டார். இது மூன்றாவது கீத நூலாகும்.

------

அதன் பின்னர் "பாஞ்சாலி சபதம்" என்ற அரிய நூலை வெளியிட்டார். அதிலுள்ள சுவையை என்னதென்று புகழ்வோம்? அதற்கு இதுவே நிகர். அதை முதற் பாகமாகத்தான் வெளியிட்டார். இரண்டாம் பாகம் பார்க்கத் தமிழ் நாட்டிற்கு பாக்கியமில்லை. ஸ்ரீ பாரதியார் பாலகர்களுக்கென "முரசு", "பாப்பா பாட்டு" என்று சிறு நூல்களை எழுதினார். அவை இரண்டும் இரண்டு தங்க விக்கிரகங்கள்தாம். அதற்கடுத்ததாக "கண்ணன் பாட்டு" என்ற அரிய பிரபந்தத்தைத் தமிழகத்திற்கு உதவினார். அதன் அற்புதத்தைப் பேச நமக்கு சக்தியில்லை.

------

காங்கிரஸ் மகா சபையின் ஆரம்பகால முதற்கொண்டு, ஒவ்வொரு காங்கிரஸ் சபையின் நடவடிக்கைகளையும் விளக்கி "பாரத ஜனசபை" என்று தொடர்ந்த நூல்களாக எழுதினார். அவை நம் "மித்திரன்" அச்சுக்கூடத்தில் அழகாய்ப் பதிக்கப்பட்டு வெளியாயின. வங்காள வரகவியாகிய ஸ்ரீ ரவீந்திரநாத் டாகூரின் பிரசங்கங்களைத் தமிழில் மொழிபெயர்க்க முன் வந்து தமது வித்வத் திறனையெல்லாம் உணர்த்தி, அவரது ஐந்து உபந்யாசங்களையும் வெளியிட்டார். இதுவும் நம் "மித்திரன்" காரியாலயத்தில் பதிப்பிக்கப்பட்டது. அவர் புதுச்சேரியில் இருந்த போது "ஸக்திதாஸன்", "காளிதாஸன்" எந்ற புனைப்பெயருடன் "மித்திர"னில் எழுதி வந்த பல அரிய கதைகளையும் இயற்கைச் சம்பவங்களையும் ஒரு சேரத் திரட்டி சென்ற வருஷத்தில் "கதா மாலிகா" என்று ஒரு நூல் "மித்திரன்" புஸ்தகசாலையினின்றும் வெளியேறிற்று. இன்னும் அவரால் "மித்திர"னுக்கு எழுதப்பட்ட எத்தனையோ விஷயங்கள் புஸ்தக உருவம் பெறாமல் உள்ளன. அவற்றையெல்லாம் ஆராய்ந்தேடுத்து வெளியிடுவது தமிழ் நாட்டிற்குப் பெரிய உபகாரமாகும்.

------

ஸ்ரீ பாரதியார் தாம் இதுவரையில் எழுதிய விஷயங்களையெல்லால் ஒன்றாகச் சேர்த்து, "தமிழ் வளர்ப்புப் பண்ணை" என்ற பெயரின் கீழ் நூலுருவமாக வெளியிடக் கருதி, அதற்காக பகீரதப் பிரயத்தனங்கள் செயத்கொண்டிருந்தார். இன்னும் எத்தனையோ ஆசைகளையெல்லாம் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை அலங்கரிக்க எண்ணியிருந்தார். அதற்கு நாம் கொடுத்து வைக்கவில்லை.

------

காதல் முறையில் நவீனமாகக் கவிதை இயற்ற வேண்டுமென்றும், பச்சைப் பச்சையாக எழுதும் வழக்கம் தவிர்க்கப்படவேண்டும் என்றும் தெரிவித்து, அதற்கு உதாரணமாக "வள்ளிப் பாட்டு" என்ற சிங்கார ரஸக் கீர்த்தனை சென்ற 1920ஆம் வருஷ "மித்திரன்" அநுபந்தத்தில் வெளியிட்டார். இன்னும் அநேக பாடல்கள் இயற்றி வைத்திருப்பதாக முகவுரையில் கூறியிருக்கிறார். இனி இயற்றலாம் எனக் கருதினாரோ, இயற்றித்தான் வைத்துள்ளாரோ அறியோம்.

-----

ஸ்ரீ பாரதியார் புதுச்சேரியினின்றும் வந்த பின்பு பழைய பாரதியின் உருவமே இல்லை. ஒரு வங்காளி போன்ற உருவுடனும் காணப்பட்டார். அதற்கான படி தலைப்பாகையும் பிளவும் பொருந்தியிருந்தது. அவரது நடையும் கோலமும் யாவுமே மாறின. எல்லாம் புதுவிதமாக இருந்தது. ஒரு பிரம்மக் ஞானி போன்றும் காணப்பட்டார். அவரைப் பார்த்தாலே உற்சாகம் தோன்றிவிடும். எவ்வித கர்வமும் இல்லை. அவர் படிப்பை அவர் அறியார். சிறு குழந்தை போன்றும் இருப்பார். தமக்கென்று ஒரு பெருமையை அவர் வைத்துக்கொள்ளவில்லை. எந்த இடத்தில் அவரை உட்காரவைத்துப் பாடச் சொன்னாலும் உடனே ஆனந்தத்துடன் பாட ஆரம்பித்துவிடுவார். அவர் பாடுங்கால் கூட இருந்து கேட்ட பாக்கியம் நமக்கு உண்டு. அவர் பாடுகையில் அந்தப் பாட்டின் அத்தனை ரசங்களும் அவரது வதனத்தில் தத்ரூபமாய்த் தோன்றும், ஜ்வலிக்கும். எவரையும் ரக்ஷ்யம் பண்ணுகிற சிந்தை அவருக்கில்லை. எல்லோருக்கும் வணங்கயி உடம்பாகத் தாழ்ந்து பணிந்து நடந்து கொள்வார். ஏதேனம் நெஞ்சில் எண்ணம் குடி கொண்டுவிட்டால் ராஜபுத்திர வீரனாய்விடுவார். விரிக்கிற் பெருகும்.

-----

ஸ்ரீ பாரதியார் வெளியிட்ட கீதங்களை காலதிற்கேற்றபடி ஒழுங்குபடுத்தி அவரது நண்பர் ஸ்ரீமான் பரலி சு.நெல்லையப்ப பிள்ளை "நாட்டுப் பாட்டு" என்று வெளியிட்டார். அது இப்பொழுது விலைக்குக் கிடைக்கும். அவரது நூல்களில் பலவற்றை "மித்திரன்" புஸ்தகசாலையில் பெறலாம்.

----

ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி போய்விட்டார். இனி அவர் பெயரால் புதிய கவிதைகள் வெளிவரப் போவதில்லை. 1921ம் வருஷத்து "மித்திரன்" அநுபந்தத்திற்கு விஷயங்கள் எழுத அவர் இப்போது இல்லை. ஔவை வாக்கைப் போன்ற சிறு சிறு முடிவுகளில் அழகாக இயற்றம் பாக்களும் வனாமிர்தங்களும் இனிக் காணப் போவதில்லை. அவரது வாக்கே ஒரு தனி வாக்கு. அந்த வாக்குக்கே ஒரு தனிச் சுவை.

அவர் வாழ்த்திச் சென்ற தமிழ்நாடு அவருக்குப் பின் அவர் குடும்ப சம்ரக்ஷணைக்கான திரவிய சகாயம் செய்வித்துக் கொடுத்துத் தன் கடமையைச் செலுத்துமென்று எதிர்பார்க்கிறோம். "தோறிற் புகழொடு தோன்றுக."
- எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு,
ஸ்ரீரங்கம்.

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur