சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
1
1. 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு
முன் பக்கம்
   

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெள்ளையர் ஆட்சி நாட்டில் வலுவாக ஏற்பட்டது.

முதன் முதலில், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், தென் தமிழ் நாட்டில் ஆதி சுதந்திரப் போராட்டம் நடந்தது. பாளையக்காரர் சண்டை என்று அதை வெள்ளையர்கள் வர்ணித்தனர். அக்காலத்தில் ஆங்கிலம் படித்த அறிவாளிகளும் அதை அப்படியே ஏற்றனர். ஆனால் கட்டபொம்மனும் ஊமைத் துரையும் சிவத்தையாவும் நடத்தியது நமது சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பம் என்று பிற்காலத்தவர் உணர்ந்து விட்டனர்.

கட்டபொம்மன் சம்பவம் நடந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது சுதந்திர முயற்சி நடந்தது. அதையும் ஏளனமாக சிப்பாய்க் கலகம் என்றனர் ஆங்கிலப் பண்டிதர்கள். ஹிந்துவும் முஸ்லிமும் ஒன்று சேர்ந்து, சகோதர பாவத்துடன் அந்நியரை எதிர்த்த சுதந்திரப் போர் என்று இதையும் பிற்காலத்திய மக்கள் உணர்ந்தனர்.

இந்தப் போராட்டமும் வாள் வலிமையால் ஒடுக்கப்பட்டபோது, பிரிட்டிஷ் ஆட்சி இந்நாட்டில் ஸ்திரமாக வேரூன்றிற்று. கும்பெனி ஆட்சி முடிந்து மாட்சிமை தங்கிய விக்டோரியா மகாராணியின் கருணை மிக்க ஆட்சி ஏற்பட்டது. பழைய கும்பெனி கவர்னர் ஜெனரல்கள் போய், ராஜப் பிரதிநிதிகள் வந்து சேர்ந்தனர். இந்தியாவின் தலைவிதிக்கு பிரிட்டிஷ் பார்லிமெண்ட் முழுப் பொறுப்பும் ஏற்றது.

ஆனால், இந்திய மக்களைப் பொறுத்த வரையில் நிலைமையில் விசேஷமான லாபம் ஏதுமில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்கவென ஏற்பட்ட கெடுபிடிகள் ஒரு புறம் நீடித்து வந்தன. மறுபுறம் காட்டிமிராண்டி இந்தியர்களுக்கு ஆங்கிலக் கல்வி மூலம் மேலை நாகரிக வாசனை உண்டாக்கி, படிப்படியாக இவர்களை மனிதர்களாக்குவதான சீர்த்திருத்த முயற்சிகள் நடந்துவந்தன. ஏமாளி இந்திய மக்களும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாதென்றும், இந்தக் கருணை மிக்க ஆட்சி இல்லாவிட்டால் பெருங் கேடுதான் விளையும் என்றும் நம்பி வந்தார்கள். அது ஒரு வினோதமான காலம்.

அது, நகர வாழ்க்கை பரவாத காலம். கிராம வாழ்க்கை பாழாகாத காலம். காப்பிக் கடைகள் தோன்றாத காலம். சினிமாக்கள் இல்லாத காலம். நாடக மேடை கூட இல்லாத காலம். தெருக் கூத்துகளும், சதிர் கச்சேரிகளுமே இருந்த காலம். தேரும் திருவிழாவுமே மக்கள் மனதைக் கவர்ந்த காலம். ரூபாய்க்கு இருபது படி அரிசி விற்ற காலம். நோட்டுகள் பரவாத காலம். மேல் உத்தியோகங்களெல்லாம் வெள்ளைக்காரரே வகிக்கத் தக்கவை என்றிருந்த காலம். தாசில் என்றால் இந்திரலோகப் பிறவி என ஜனங்கள் நினைத்த காலம். கோச்சு வண்டியும் ஸாரட்டு வண்டியும் மிகப் பெரிய செல்வத்தின் சின்னங்களாய்க் கருதப்பட்ட காலம். மோட்டார்கள் ஏற்படாக காலம். சலங்கை கட்டிய இரட்டை மாட்டு வண்டிகள் ஜல் ஜல்லென்று பாதைகளில் முழங்கிய காலம். யந்திரக் கைத் தொழிலகள் தோன்றாத காலம் நாட்டுக் கைத் தொழில்கள் நலிந்த காலம்.

விதி விதி என்ற ஏழ்மை முதல் நோய் வரை எல்லாவற்றையும் மந்திர தந்திரத்தால் போக்க முயன்ற காலம். இகம் பரமென்று வாயளவில் பேசிக் கொண்டே. பட்டம் பதவிகளுக்குப் பத்தாயிரம் சலாம் போட்ட காலம். குட்டி ஜமீன்தார்களெல்லாம் ராஜ மகாராஜாக்களாய் விளங்கிய காலம். நம் மதம், நம் கலாசாரம் என்ற உணர்வே இல்லாத காலம். சீமைப் படிப்பு, சீமை மனோபாவம் இவையே சிறந்தவையென்ற காலம். வெள்ளைக்காரனைப்போல நாமும் யந்திர சக்தியைக் கையாளக் கற்றால்தான் முன்னேற முடியும் என்ற உலகாயத வாதம் தோன்றிய காலம்.

ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன என்றும், பிரிட்டிஷ் ராஜ்யமே ராம ராஜ்யமென்றும், ஆளும் சக்கரவர்த்தினிக்கு அடி பணிவதே தேச பக்தியென்றும் கொள்கை மலிந்திருந்த அக்காலத்திலும் இந்தப் பழம் பெரும் நாட்டில் பல பெரும் மணிச் சுடர்கள் தோன்றின. ராஜாராம் மோஹன் ராயும், கேஷுப் சந்தர் ஸென்னும், ராமகிருஷ்ண பரமஹம்ஸரும், விவேகானந்தரும், வள்ளலாரும் இந்தியப் பண்பாட்டின் பெருமையை, இந்திய மதங்களின் பெருமையை வலிஹயுறுத்தினர், பண்பாட்டின் பக்தியோடு தேச பக்தியும் வளரலாயிற்று. 1885ல் இந்திய தேசீய காங்கிரஸ் மகாசபை தோன்றிற்று. அதற்கு மூன்று வருஷம் முன்னால், 1882ல் தென் பாட்டி நாட்டில் எட்டயபுரம் என்ற ஜமீனில் சுதந்திர தேவியின் திருவவதாரமாய்ப் பிறந்தது ஓர் ஆண் குழந்தை. முன்னர் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த கும்பலைச் சேர்ந்த எட்டயபுரத்தில் இக் குழந்தை பிறந்ததே விதியின் விளையாட்டுகளில் ஒன்று.

2. எட்டயபுரம்
முன் பக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எட்டயபுரம் ஜமீன் மிகுந்த கீர்த்தியுடன் விளங்கியது. அரசியலில் அதிக சிரத்தை காட்டாவிட்டாலும், சுதந்திரம் என்ற பேச்சு துளியும் இல்லாவிட்டாலும், அங்கே தாய்மொழிக்கு மரியாதை இருந்தது. எட்டயபுர மன்னர் தமது ஜமீனை இரண்டாவது மதுரை ஆக்கிவிட விரும்பினார். இதில் அவருக்கு உறுதுணையாக அவரது சிற்றப்பன் வெங்கடேசுர எட்டப்பன் நின்றார்.

இவர்கள் காட்டிய ஊக்கத்தால் தமிழ்ப் புலவர்களும் சங்கீத மணிகளும் எட்டயபுரத்தை நாடினார்கள்.

தென் பாட்டி நாட்டிலே, பொதிய மலைக்கு வடக்கே இருபது காத தூரத்தில் பூமி தேவிக்கத் திலகம் (வைத்து அது உலர்ந்து போயிருப்பது) போலக் கவுண்டபுரம் என்ற நகரம் திகழ்ச்சி பெற்றது. அதைத்தான் பாமர ஜனங்கள் கவுண்டனூர் என்பார்கள். இந்நகரத்தில் நமது கதை தொடங்கும் காலத்திலே, மகா கீர்த்திமானாகிய ராமசாமிக் கவுண்டரவர்கள் அரசு செலுத்தி வந்தார்கள். வெளியூர்ப் பாமர ஜனங்கள் இவரை ஜமீன்தார் என்பார்கள். கவுண்டபுரத்திலே இவருக்கு மகாராஜா என்று பட்டம்.... ராமசாமிக் கவுண்டர் (இவருடைய முழுப் பெயரைப் பட்டங்கள் சகிதமாகப் பின்பு சொல்கிறேன்.) தமிழில் அபிமானமுள்ளவராதலால் கவிதை பாடத் தெரிந்தவர்களுக்கு அவ்வூரில் மிகுந்த மதிப்புண்டு.

பாரதியாரது சுயசரிதம் எனத் தக்க சின்னச் சங்கரன் கதையில் கவுண்டனூர் அரசரின் அன்றாட வாழ்க்கை, அவரது சபையை அலங்கரித்த பண்டிதப் புலவர்கள், அவர்ளிடையே சின்னச் சங்கரன் (பாரதி) இடம்பெற்றது, பண்டிதர்களது பொறாமை, அவர்கைளிடையே சூழ்ச்சிகள் முதலியன விவரிக்கப்பெற்றுள்ளன.

சின்னச் சங்கரன் கதையில் விவரிக்கப்பட்டுள்ள எட்டயபுரம் ராஜசபை, அந்த ஜமீனில் அக்காலத்தில் இருந்த ஊழல்களை நன்கு எடுத்துக்காட்டுகிறது. ஊரிலுள்ள அனைவர் வீட்டிலிருந்தும் உணவுப் பதார்த்தங்களைத் தருவித்தல், கோழிச் சண்டை, சிங்காரரஸப் பாடல்களை முக்கியமாக கூளப்ப நாய்க்கன் காதல் என்ற பாடலை ரஸித்தல், தமக்கு வரும் மனுக்களுக்கு யதேச்சாதிகாரமாய் உத்தரவிடுதல் இத்தகைய விஷயங்கள் அங்கு சகஜமாய் நடந்தேறி வந்தன.

எட்டயபுரம் மன்னரின் அரண்மனையில் காலை முதல் இரவு பத்து மணி வரை தமிழ் வித்வான்கள், தெலுங்கு வித்வான்கள், ஸமஸ்கிருத வித்வான்கள், ஸங்கீத வித்வான்கள் குழாம் மொய்த்துக் கொண்டிருக்கும். எப்பொழுதும் வித்வத் விஷயமாய் விவகாரங்களும் யுத்தங்களும் நடந்து கொண்டேயிருக்கும்.

எட்டயபுரம் அறிஞர்களுக்கு உறைவிடமாய் விளங்கியதால், அங்கு சென்று முன்னுக்கு வரலாமென்று, தம் சொந்த ஊராகிய சீவலப்பேரியை விட்டு எட்டயபுரத்துக்கு வந்தார் சின்னசாமி அய்யர் என்ற அறிஞர். பிரஹசரண பிராமணராகிய இவர் தமிழில் சிறந்த பண்டிதர், ஆங்கிலத் தேர்ச்சியும் கலாசாலை உதவியின்றியே அடைந்தவர். மேனாட்டுக் கணித முறைகளில் நிபுணர். தர்க்கத்தில் நிகரற்றவர். இவ்வளவும் போதாதென்று, நவீன யந்திர சாஸ்திர ஆராய்ச்சியிலும் திறமை படைத்தவர். எந்த யந்திரமானாலும் அக்கக்காய்ப் பிரித்துப் பார்த்து மீண்டும் பூட்டி ஓட்டும் சாமர்த்தியசாலி.

அறிவாளி சின்னசாமி அய்யருக்கு எட்டயபுரம் அரசவையில் முதல் ஸ்தானம் கிடைத்தது. அவர், தமது திறமைக்கு அறிகுறியாக சுமார் 1880ஆம் ஆண்டிலேயே பஞ்சு அறைக்கும் மில் ஒன்றை எட்டயபுரத்தில் நிறுவிப் புகழெய்தினார்.

எதிரே உள்ள பக்கத்தில்(படம்) மேலே, ஆண் சிங்கமெனத் தோற்றமளிப்பவரே பாரதி பிறந்த சமயம் எட்டயபுரம் மன்னராக இருந்தவர். சின்னச் சங்கரன் கதையில் வரும் ராமசாமிக் கவுண்டர் இவரே. பாரதி இளைஞராக இருந்த சமயம் அவருடைய துடுக்குப் பேச்சிலும் பாட்டிலும் லயித்துப் போனவர் இவர். பிற்காலத்தில், காசியிலிருந்த பாரதியை 1902ல் மறுபடி எட்டயபுரம் அழைத்து வந்தவரும் இவரே.

மன்னரின் சிற்றப்பனும், அவர் சந்ததியின்றிக் காலமானபின் பட்டத்துக்கு வந்தவருமான, வெங்கடேசுர எட்டப்ப நாயக்கர் படம் கீழே உள்ளது. மன்னரிலும் சிறந்த தமிழ்ப் பற்றுள்ள இவரும் இளம் பாரதியின் மேதையில் மோகித்துப் போனவர். பாடலை இவர் அச்சிட்டுப் போற்றியதாகத் தெரிகிறது; ஆனால் அப் பாடல் இப்போது கிடைக்கவில்லை. 1919ல் புதுவையிலிருந்து திரும்பியபின் பாரதி சீட்டுக்கவி அனுப்பியது இம்மன்னருக்கே.

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur