சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
20
39. சுப்பிரமணிய சிவா
முன் பக்கம்
   

நாற்பதாண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் தீவிர தேசபக்தி கொழுந்துவிட்டெரிந்த சமயம் "சுப்பிரமணியம் மூவர்" இருந்தனர். சுப்பிரமணிய பாரதி, வ.வே.சுப்பிரமணிய அய்யர், சுப்பிரமணிய சிவம் - இந்த மூவரும் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாய் விளங்கினார்கள்.

சுப்பிரமணிய சிவம் (இவரை சுப்பிரமணிய சிவா என்றும், சிவா என்றும்கூட அழைப்பர்) மதுரை ஜில்லா வத்தலக்குண்டு கிராமத்தில் பிறந்தவர். ஏழைக் குடும்பம். சிறு வயதிலேயே சிவம் ஆத்மீக விசாரணையில் பற்றுதல் காட்டி, தமது தாய் மாமனாகிய ஓதசுவாமிகளிடம் தீட்சையும் பெற்றார். ஆயினும் வறுமையை முன்னிட்டு, தந்தையின் வறபுறுத்தலின் பேரில் கோர்ட்டில் ஒரு சிறிய உத்தியோகம் பார்த்தார். ஆனால் அவரது தீவிர தேசீய மனப்பான்மையினால் அவ்வேலையிலிருந்து நீங்கினார்.

சுப்பிரமணிய சிவம் சிறந்த பேச்சாளர். அவருக்கு வழவழாப் பேச்சிலோ கொள்கையிலோ வழவழாச் செயலிலோ நம்பிக்கையில்லை. வெட்டொன்று துண்டிரண்டு என்பவர். திலகர் வழியைப் பின்பற்றி, 'துஷ்டநிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்' செய்ய வேண்டும் என்பவர்.

பரலி சு. நெல்லையப்ப பிள்ளையின் தமையனரான பரலி ஷண்முக சுந்தரம் பிள்ளை மூலம் வ.உ.சிதம்பரம் பிள்ளையுடன் இவருக்கு நட்பு உண்டாயிற்று. சதேசிக் கப்பல் கம்பெனிப் பிரசாரத்திலும் சுதேசியப் பிரசாரத்திலும் பிள்ளையவர்களுக்கு சிவம் நல்ல துணையாக இருந்தார். நாள்தோறும் சிதம்பரமும் சிவமும் தூத்துக்குடி கடற்கரையிலும் மற்ற இடங்களிலும் கூட்டம் கூட்டி தூத்துக்குடியைத் தென் ஜில்லாக்களின் தேசீய இயக்கக் கோட்டையாக்கினார்கள். அக்காலத்தில், சுதேசியத்தைத் தாக்கிப் பேசிய ஒரு வக்கீலுக்கு க்ஷவரம் செய்துகொண்டிருந்த நாவிதர், வக்கீலின் பேச்சு பொறுக்காமல் பாதி க்ஷவரத்தில் அவரைக் கைவிட்டு விட்டார். அந்த வக்கீல் போலீஸ் பந்தோபஸ்துடன் மதுரை சென்று மறு பாதி க்ஷவரத்தை முடித்துத் திரும்ப வேண்டியதாயிற்று! அக்காலத்தில், தூத்துக்குடியிலிருந்த வெள்ளையர் இரவு நேரத்தை நகரில் கழிக்கத் துணிவின்றி கடலில் ஏழு மைல் தள்ளி நின்ற கப்பல்களில் தினமும் இரவைக் கழித் வந்தார்கள்!
சிதம்பரம், சிவம் கோஷ்டியின் செல்வாக்கு இப்படி அபரிமிதமாய் வளர்வதைக் கண்டு போலீஸார் அவர்கள் மீது முதலில் ஜாமீன் வழக்கும் பிறகு ராஜத்துவேஷ வழக்கும் தொடர்ந்தார்கள். இவ்வழக்கில் இருவருக்கும் ஆறு வருஷம் சிறைவாசம் கிடைத்தது! சிறையில் சிதம்பரம் செக்கிழுத்தார்; சிவம் கம்பளி மயிர் வெட்டினார்.

1912ல் விடுதலையடைந்த சுப்பிரமணிய சிவம் சென்னை மயிலாப்பூரில் குடியேறி ''ஞான பாநு" என்ற மாதப் பத்திரிகையை 1913 ஏப்ரல் முதலாக நடத்தத் தொடங்கினார். "ஞான பாநு" மூன்று வருஷங்கள் நடந்தது. பின்னர், சிவம், "பிரபஞ்ச மித்திரன்", "இந்திய தேசாந்திரி" என்ற பத்திரிகைகளை சிறிது காலம் நடத்தி வந்தார். தம் தேச பக்திப் பேச்சுக்களுக்காக மீண்டும் மூன்று தடவை சிறைவாசம் அனுபவித்தார்.

ஜாதிமத பேதமின்றி பாரத மக்கள் பாரத மாதாவை தெய்வமாக வணங்க ஸ்ரீ பாரத மாதா ஆலயம் கட்ட அவர் பல இடங்களில் மாதா ஆலயம் கட்ட அவர் பல இடங்களில்முயன்றார். சென்னைக் கோடம்பாக்கம், அமராவதிபுதூர், மானாமதுரை யடுத்த பசலை முதலிய இடங்களில் முயன்று, முடிவாக சேலம் ஜில்லா பாப்பாரப்பட்டியில் ஸ்ரீ பாரத மாதா கோயிலுக்கு தேசபந்து தாஸ் அஸ்திவாரக்கல் நாட்டச் செய்தார். ஆனால் அதற்கு மேல் கோயில் வேலைக்கு ஆதரவிருக்கவில்லை.

சுப்பிரமணிய சிவா தமிழ்நடெங்கும் தமது மனைவியார் சகிதம் கால்நடையாகச் சென்று தேசீயப் பாடல்களைப் படியும், உணர்ச்சி மிக்க பிரசங்கங்கள் செய்தும் மக்களைத் தட்டியெழுப்பி வந்தார். இப்படி ஒரு சமயம் அவர் புதுச்சேரிக்கும் போயிருந்தார்.

1925ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதி பாரதபுரத்தில் சுப்பிரமணிய சிவம் சாமதியானார். அப்போது அவருக்குத் தமிழ்நாட்டில் ஏராளமான செல்வாக்கு இருந்தது. மதுரை தியாகராஜ சிவம், சிதம்பர பாரதி, ஸ்ரீநிவாஸவரதன், தற்சமயம் 'கல்கி' நிர்வாகியாக இருக்கும் தி.சதாசிவம், சென்னை எவரெஸ்ட்' ஹோட்டல் ஸ்தாபகர் சுந்தரம் முதலியோர் சிவாவின் சிஷ்யர்களாவர்.

"ஞான பாநு"வை ஆரம்பித்த போதே பாரதி அதற்கு விஷயதானம் செய்து வந்தார். இரண்டாவது இதழிலேயே "சின்னச் சங்கரன் கதை" தொடர் கதையாக வெளியாகியிருக்கிறது. "ஞான பாநு"வின் மூன்றாவது ஆண்டு ஆரதம்பித்தபோது "ஞான பாநு" என்ற பெயரில் ஒரு கவிதையும் எழுதியனுப்பினார் பாரதி. இது அப் பத்திரிகையின் 1915 ஏப்ரல் மாத இதழில் முகப்புக் கவிதையாக வெளியாயிற்று.

40. சின்னச் சங்கரன் கதை
முன் பக்கம்

"ஞான பாநு"வுக்கு பாரதியார் கவிதைகள் எழுதினார். வசனத்தில் விஷயதானம் செய்தார். தமது சுயசரிதை போல, குலுங்கச் சிரிக்க வைக்கும் நடையில் எழுதிய "சின்னச் சங்கரன் கதை" கைப்பிரதி போலீஸ் வசம் போய்க் கிடைக்காமற் போனபோது, நண்பர்கள் வற்புறுத்தலின் பேரில் மீண்டும் எழுதி, "ஞான பாநு" வில் பிரசுரத்துக்கு அனுப்பி வந்தார். ஆறு அத்தியாங்கள் எழுதிய பின், ஏனோ அவருக்குச் சலிப்பு வந்துவிட்டது. அதற்குமேல் எழுதாமல் நிறுத்திவிட்டார்.

"சின்னச் சங்கரன் கதை"யின் கதையே விசித்திரமானது. பாரதியார் அதை முழுவதும் எழுதிச் தம் வீட்டில் வைத்திருந்தார். அப்போது அவர் வீட்டில் முருகேசன் என்றொரு சிறுவன் வேலை செய்து வந்தான். திடீரென ஒருநாள் முருகேசனைக் காணவில்லை. கிட்டத்தட்ட அதே சமயம் "சின்னச் சங்கரன் கதை" கையெழுத்துப் பிரதியும் மாயமாய் மறைந்து போயிற்று. சுமார் நாற்பது நாள் கழித்து முருகேசன் எலும்பும் தோலுமாய்த் திரும்பி வந்தான். பாரதியைக் கண்டதும் தேம்பித் தேம்பி அழுதான். பிரிட்டிஷ் இந்தியப் போலீஸ் ஆசாமி ஒருவன் தன்னை விழுப்புரம் வரை போய் வரக் கூப்பிட்டதாயும், தமாஷாய்ப் போய் வரலாமென்று போனதாயும், விழுப்புரத்தில் தன்னைக் கைதுசெய்து, 'லாக்கப்'பில் அடித்து உதைத்து இம்சை செய்து பாரதியாரைப் பற்றித் தெரிந்ததையெல்லாம் சொல்லச் சொன்னதாகவும், ஒரு மாதம் கழித்து விடுதலை செய்ததாகவும், கையில் காசில்லாமல் சென்னையிலுள்ள தன் உறவினர்களிடம் சென்று கடன் வாங்கிக்கொண்டு ஊர் திரும்ப நேர்ந்ததாகவும் முருகேசன் சொன்னான். "சின்னச் சங்கரன் கதை" கையெழுத்துப் பிரதி பற்றித் தனக்கொன்றும் தெரியாதென்றான்.

அவன் நிரபராதியென்று பாரதி நம்பினார். பிறர் நம்பவில்லை. எப்படியும் கதையின் கையெழுத்துப் பிரதி போனது கிடைக்கவில்லை. நண்பர்களின் விரும்பபத்திற் கிணங்க பாரதி மீண்டும் எழுதிய ஆறு அத்தியாங்களே இன்று நமக்குக் கிடைத்துள்ளன.

"சின்னச் சங்கரன் கதை"யின் நடையே கவர்ச்சிகரமானது. "முதல் குட்டி அத்தியாய"த்திலேயே தம் கதையின் நகைச்சுவைக்கு மாதிரி காட்டுகிறார் ஆசிரியர். பின் அத்தியாயங்களில், "கவுண்டனூர் சமஸ்தான"த்தில் சமஸ்தானாதிபதி "அடாணா ராமசாமிக்கவுண்டர்" நடத்திய அட்டஹாசங்களையும், சங்கரன் கவுண்டனூர் ராஜசபைப் புலவர்களை முறியடித்துப் புகழ் எய்தியதையும், "கம்பராமாயணம் முத்திருளத் தேவர்" என்ற "திருதராஷ்டிரக் கிழவன்" (கண் பார்வையிழந்தவன்) பேத்தி "இருளாயி"யை சங்கரன் காதலிப்பதையும், இன்னும் பல விஷங்களையும் பாரதி விவரிக்கிறார். எட்டயபுரத்தில் பாரதி வாழ்க்கையை விவரிக்கும் சுயசரிதம் என்று இதைக் கருதலாம் போலிருக்கிறது. தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம் பாரதி இதை இரண்டாவது தடவை எழுதியபோது பாதியில் நிறுத்திவிட்டார். ஈடற்ற நகைச்சுவைப் பொக்கிஷமொன்றைத் தமிழ்நாடு இழந்துவிட்டது.

"ஞான பாநு"வில் "சின்னச் சங்கரன் கதை" "சாவித்திரி என்ற நிருப நேயர்" எழுதுவதாக வந்தது. தம் சொந்தப் பெயரிலும் "சரஸ்வதி", "நித்திய தீரர்", "ஓர் உத்தம தேசாபிமானி" முதலிய புனைபெயர்களிலும் பாரதி "ஞான பாநு"வுக்கு விஷயதானம் செய்தார். "ஒளியும் இருளும்", "மது", "கண்ணன் என் தாய்", "யோகசித்தி", "வேய்ங்குழல்", "இறவாமை", "பாப்பாப் பாட்டு", "ஞான பாநு" என்ற பாடல்கள் இப்பத்திரிகையில் வெளிவந்தவை.

"ஞான பாநு"வின் 1913 நவம்பர் இதழில் பாரதியாரின் "பாஞ்சாலி சபதம்" (முதல் பாகம்) பற்றி விமர்சனம் வந்துள்ளது. அதிலே ஒரு சுவாரஸ்யமான செய்தி கிடைக்கிறது. "ஆசிரியர் இப்புத்தகத்தில் ஒரு பிரதியை சென்னை கவர்னரவர்களுக்கு அனுப்பியிருந்ததாகவும் அவர் தாம் அதை வந்தனத்துடன் ஏற்றுக் கொண்டதாக ஆசிரியருக்குக் கடிதம் எழுதியதாகவும் கேள்விப்படுகிறோம்" என்ற குறிப்பு இவ் விமர்சனத்தில் காணப்படுகிறது.

1916 ஜனவரி இதழில் "மாதா" என்ற பெயர் கொண்ட பாரதி கவிதைத் தொகுதியின் விளம்பரம் காண்கிறது. இது 1910ல் பாரதி புதுவையில் வெளியிட்ட மூன்றாவது கவிதைத் தொகுதி; "மாதா வாசகம்" என்பது இந்நூலின் முழுப் பெயர். "பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி", "வந்தே மாதர" கீதத்தின் புதிய மொழிபெயர்ப்பு, "ஸ்வசரிதை" முதலிய பாடல்களும் சக்திப் பாடல்கள் சிலவும் இந்நூலில் இடம் பெற்றிருந்தன.

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur