53. காந்திஜீயைச் சந்தித்தது |
ரவுலட் சட்ட எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பிக்கு முன் நாட்டின் பல பாகத்திலுமுள்ள தலைவர்களைக் கலந்து கொண்டார் மகாத்மா காந்தி. இது சம்பந்தமாகக் காந்திஜீ சென்னைக்கும் வந்தார், 1919 மார்ச்சில்.
சென்னையில் காந்திஜீ ராஜகோபாலாச்சாரியாரின் விருந்தினராக, கதீட்ரல் ரோடு இரண்டாம் நம்பர் பங்களாவில் தங்கியிருந்தார். காந்திஜீயின் இந்த விஜயத்தின்போது பாரதியும் அவரும் சந்தித்தார்களென வ.ரா. கூறுகிறார். ராஜாஜியும் இதை ஊர்ஜிதம் செய்கிறார். இந்தச் சந்திப்பு வெகு சுவாரஸ்யமான சம்பவம்.
பகல் இரண்டு மணி சுமார். காந்திஜீ ஒரு கட்டிலில்மெத்தையில் சாய்ந்திருந்தவண்ணம் தம் காரியதரிசி மகாதேவ் தேசாய்க்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். சேலம் பாரிஸ்டர் ஆதிநாராயண செட்டியார் குடகுக் கிச்சிலிப் பழங்களை உரித்துப் பிழிந்து காந்திஜீ அருந்துவதற்காகப் பழரசம் தாயரித்துக் கொண்டிருந்தார். அறையில் ஒரு பக்கம், "சுதேசமித்திரன்" ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி அய்யங்காரும், எஸ்.ஸத்தியமூர்த்தியும் சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தார்கள். எதிலே ராஜாஜியும் மற்றும் சிலரும் நின்று கொண்டிருந்தனர். அறையில் வாயில்காப்போனாக வ.ரா. நின்றுகொண்டிருந்தார். யாரையும் உள்ளே விடவேண்டாம் என்று கண்டிப்பான உத்தரவு.
அச்சமயம் பாரதி அங்கே வந்தார். புதுவையில் தமக்கு அறிமுகமான வ.ரா.நிற்பதைக் கண்டு "என்ன ஓய்!" என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் நுழைந்துவிட்டார்.
பாரதி நேரே காந்திஜீயை வணங்கிவிட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்துவிட்டார். "மிஸ்டர் காந்தி! இன்று மாலை ஐந்தரை மணிக்குத் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அக்கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?" என்று கேட்டார்.
அன்று மாலை தமக்கு என்ன அலுவல் என்று காந்திஜீ மகாதேவ தேசாயைக் கேட்டார். வேறு ஒரு அலுவல் இருந்தது.
"இன்றைக்கு நான் வர இயலாது. தங்கள் கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போட முடியுமா?" என்றார் காந்திஜீ.
"முடியாது. நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி, தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு பாரதி வெளியே போய்விட்டார்.
பாரதி போனதும், காந்திஜீ, "இவர் யார்?" என்று வினவினார். யாரும் பதில் சொல்லவில்லை; ராஜகோபாலாச்சாரியார்தான், "இவர் எங்கள் தமிழ் நாட்டுத் தேசீயக் கவி" என்று அழகுறச் சொன்னார்.
இதைக் கேட்ட காந்தியடிகள், "இவரை பத்திரமாய்ப் பாதுகாக்கவேண்டும். இதற்குத் தமிழ் நாட்டில் எவரும் இல்லையா?" என்றாராம்.
இந்தச் சம்பவம் பாரதியின் சுபாவத்தையும் காந்திஜீயின் சுபாவத்தையும் நன்கு காட்டுகிறது. மற்றவர்களெல்லாம் பயபக்தியுடன் நின்று கொண்டிருக்கையில் சரிசமமாய் காந்திஜீயுன் பாரதி அமர்ந்தது அங்கிருந்த பலருக்குத் திகைப்பை யளித்திருக்கக்கூடும். மேலும், காந்திஜீயின் இனி வரும் இயக்கத்துக்கு பாரதி ஆசீர்வாதம் செய்ததும் அங்குள்ளோருக்கு விசித்திரமாகப் பட்டிருக்கலாம். ஆனால், காந்திஜீக்கோ அப்படித் தோன்றவில்லை. இந்த மேதையைக் காப்பது உங்கள் கடமையல்லாவா என்று ஒரே வாக்கியத்தில் தமிழ் நாட்டுக்கு அதன் கடமையை நினைவுறுத்திவிட்டார். காந்திஜீயைச் சந்தித்த அந்தக் காலத்தில் பாரதி வேதாந்தம் முற்றிய பித்த சந்நியாசிபோல் இருந்தாரென ராஜாஜி சொல்கிறார். உடலிலும் மனதிலும் அவர் அனுபவித்த வேதனை அவரை அப்படி ஆக்கிவிட்டன போலும்!
பாரதி 1908ஆம் ஆண்டிலேயே மகாத்மா காந்தியின் மேன்மையை நன்கறிந்திருந்தார். 1919-20ல் அவர் பாடியுள்ள "வாழ்க நீ எம்மான்" என்ற பாடலிலும் இது புலனாகிறது.
தமிழ் நாட்டுத் தலைவர்களில் பாரதியாரை வெகு நாளாய் அறிந்தவர் ராஜகோபாலாக்சாரியார். 1906ல் சூரத் காங்கிரஸுக்குச் சென்ற சென்னைப் பிரதிநிதிகளில் அவர் ஒருவர். பாரதியார் புதுச்சேரியில் இருந்த சமயம் அவரைப் போய்ப் பார்த்து வந்திருக்கிறார் ராஜாஜி. புதுவையிலிருந்து திரும்பி, மீண்டும் சென்னைக்கு வந்தேபோது அவரை ரயில் ஸ்டேஷனில் வரவேற்றவர்களில் ராஜாஜி ஒருவர். காந்திஜீயிடம், "இவர் எங்கள் தமிழ்நாட்டுத் தேசீயக் கவி" என்று ரத்தினச் சுருக்கமாகச் சொல்லித் தமிழர் மானத்தைக் காத்த இவரே, பாரதி காலமான பிறகு, சில பாரதி பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மகாத்மா காந்தியின் "யங் இந்தியா" பத்திரிகையில் பாரதியின் மேதையை விளம்பரப்படுத்தினார். அப்போது வருஷம் 1925.
54. எட்டயபுர மன்னருக்கு சீட்டுக் கவிகள் |
கடயத்திற்கு வந்த கொஞ்ச நாட்களில் பாரதி தாம் பிறந்த ஊராகிய எட்டயபுரத்துக்குப் போய் உற்றார் உறவினருடன் அளவளாவினார். உணர்ச்சி மிக்க வாலிபனாய், இளம் புருஷனாய் எட்டயபுரத்தைவிட்டு 1904ல் சென்ற பாரதி 15 வருஷங்களுக்குப் பின் எலும்பும் தோலுமாக, பழுத்த வேதாந்தியாக, அதி தீவிரவாதியாகத் திரும்பபியபோது, எட்டயபுர மக்களுக்கும் அவர் ஒரு விசித்திரப் பேர்வழியாகவே தோன்றினார்.
செல்லம்மாளுடன் கை கோத்துக்கொண்டு தெருவில் நடப்பவர், எட்டயபுரம் மண்ணில் இடறி விழுந்தபோது அதைப் புண்ணிய பூமியென்று முத்தமிட்டவர், அரசாங்கத்துக்கு விரோதி, சமூக சீர்திருத்தம் என்று பேச்சளவிலன்றிச் செயலிலும் காட்டும் துணிச்சலுள்ளவர் என்றெல்லாம் எட்டயபுர மக்கள் பாரதியை ஏளனக் கண்களோடு பார்த்தார்கள்.
காசியிலிருந்து 1902ல் எட்டயபுரம் திரும்பியபோது இருந்த மன்னர் காலமாகிவிட்டார். அவருக்கு வார்சு இல்லாததால் அவருடைய சிற்றப்பனம் இளம் பாரதியைப் பிரியத்துடன் நடத்தியவரும் தமிழ்ப் பற்றுடையவருமான வெங்கடேசுர ரெட்டப்ப பூபதி 1919ல் எட்டயபுரம் மன்னராக இருந்தார்.
மன்னருக்கு பாரதியைப் பார்க்க வேண்டுமென்ற ஆசைதான். குழந்தையாகத் தாம் எடுத்துப் பாலித்த பாலகன் தமிழுலகம் போற்றம் பெருங் கவிஞனாக விளங்குவது அவருக்கு மனப் பூரிப்பையே கொடுத்தது. ஆனால் அந்தச் சிறுவன் ஒரு அரசியல் தலைவனுமாகி, பிரிட்டிஷ் ஆட்சியின் வைரையாக விளங்குவதுதான் மன்னருக்கு தர்ம சங்கடமாக இருந்தது.
பாரதி எட்டயபுரம் மன்னரைக் காண விரும்பி அவருக்கு இரண்டு சீட்டுக் கவிகள் அனுப்பினார். முதலில் 1919ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி ஐந்து பாக்கள் கொண்ட சீட்டுக் கவியும், அடுத்தபடி மறுநாள் மே 3ஆம் தேதி மூன்று பாக்கள் கொண்டதோர் சீட்டுக் கவியும் மன்னருக்கு எழுதியனுப்பினார் அவர். மேனாட்டு அறிஞரெல்லாம் என் கவிதையைப் போற்றுகின்றனார், உனைக் காண நான் வந்தேன், இருள் போக்கும் சூரியனொப்ப எனக் காண விரைகிலாயோ என்று பாரதி விடுத்த வேண்டுகோள்களுக்கு மன்னரிடமிருந்து பதில் இல்லை. பயம்!
அதன் பின்னும் பாரதி அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு கடிதம் எழுதி மன்னருக்கனுப்பினார்:
எட்டயபுரம்,
6 ஆகஸ்ட், 1919.
ஸ்ரீமான் மஹாராஜ ராஜ பூஜித மஹாராஜ ராஜ ஸ்ரீ எட்டயபுரம் மகாராஜா, வெங்கடேசுர எட்டப்ப நாயக்க ஐயனவர்கள் ஸந்நிதானத்துக்கு சி.சுப்பிரமணிய பாரதி அநேக ஆசீர்வாதம்.
முன்பு கவிகேஸரி ஸ்ரீ ஸ்வாமி தீக்ஷிதரால் எழுதப்பட்ட 'வம்சமணி தீபிகை' என்ற எட்டயபுரத்து ராஜ வம்சத்தின் சரித்திரம் மிகவும் கொச்சையான தமிழ் நடையில் பலவிதமான குற்றங்களுடையதாக இருப்பது ஸந்நிதானத்துக்குத் தெரிந்த விஷயமே.
அதைத் திருத்தி நல்ல, இனிய, தெளிந்த தமிழ் நடையில் நான் அமைத்துத் தருவேன். அங்ஙனம் செய்தால் அந் நூலை ராஜாங்கப் பாடசாலைகளில் தமிழ்ப் பாடமாக வைக்க ஏற்பாடு செய்யலாம். சில மாசங்களுக்கு முன் கூடலூரில் என்னை விடுதலை செய்யுங் காலத்தில் விதிக்கப்பட்ட தடைகளெல்லாம் சமீபத்தில் நீங்கிவிட்டதினின்றும், ஆங்கில ராஜாங்கத்தார் என்னிடம் பரிபூர்ணமான நல்லெண்ணம் செலுத்துகிறார்களென்பது தெளிவாகப் புலப்படும். எனவே அந் நூலை சர்க்கார் பள்ளிக்கூடப் பாடங்களில் சேர்க்கும்படி செய்தல் எளிதாகும்.
மேலும், நான் அதை எழுதுகிற மாதிரியை ஒட்டியும் என் பெயரை ஒட்டியும் அந்நூல் தமிழ்நாட்டில் வசன காவியத்துக்கோர் இலக்கியமாக எக்காலத்திலும் நின்று நிலவும்படி செய்யப்படும்.
அதை அரமனை அச்சுக் கூடத்திலேயே அடிக்கலாம். சந்நிதானத்தின் உத்தரவு கிடைத்ததற்கு மறுநாள் முதலாகவே அச்சுக் கூடத்தில் கோப்பு வேலை தொடங்கிவிடலாம். அன்றாடம் சேர்க்க வேண்டிய பகுதியை நான் முதல் நாள் எழுதிக் கொடுப்பேன். இக் காரியத்தில் இவ்விடத்து ராஜ குடும்பத்துக்கு அழியாத கீர்த்தியும் தமிழ் மொழிக்கொரு மேன்மையும் பொருந்திய சரித்திர நூலும் சமையும்.
இது தொடங்குவதற்கு விரைவில் உத்தரவளிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். நூலின் "காபிரைட்" அரமனைக்கே சேரும்.
சந்நிதானத்துக்கு மஹா சக்தி அமரத் தன்மை தருக.
சந்நிதானத்திடம் மிக்க அன்புள்ள,
சி.சுப்பிரமணிய பாரதி.
குறிப்பு: நான் இவ்வூரிலேயே ஸ்திரமாக வசிப்பேன். கைம்மாறு விஷயம் சந்நிதானத்தின் உத்தரவுப்படி.
பாரதி
பிரிட்டிஷ் அதிகாரத்துக்கு அஞ்சிய மன்னர் பாரதியைப் பார்க்கத் துணியவில்லை, பாரதிக்கு பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் பாரதியின் கடிதத்தையும் சீட்டுக் கவிகளையும் பலரிடம் படித்துக் காட்டி மகிழ்ந்தாராம்.