"சுதேச மித்திர"னில் பாரதி சேர்ந்த சமயம் நாடெங்கும் தேசபக்தி வித்துவிடத் தொடங்கியது. 1905ஆம் வருஷம் பாரதி சென்னை வந்த பத்து மாதங்களில் இந்திய மக்கள் விருப்பத்துக்கு மாறாக வங்கப் பிரிவினை ஏற்பட்டது.
வங்கப் பிரிவினை சமயத்தில்தான் பாரதி அரசியலில் தலையிட்டிருக்கிறார். வங்கப் பிரிவினைக்கு முன்னமேயே, சென்னைக் கடற்கரை பெருங் கூட்டமொன்றில் பாரதி கலந்து கொண்டு, "வங்கமே வாழிய!" என்ற பாட்டையும் பாடினார். இப்பாடல் "மித்திர"னில் 1905, ஸெப்டம்பர் 15ஆம் தேதி வெளியாயிற்று.
வங்கப் பிரிவினையால் ஏற்பட்ட கொதிப்பு இந்திய தேசீய காங்கிரஸ் சபையையும் பாதித்தது. காங்கிரஸ் மகாசபையை "பணிவுடன் வண்ணப்பம் சமர்ப்பிக்கும் மிதவாதிக"ளிடமிருந்து தியாகத்துக்குத் துணிந்த தீவிரவாதிகள் கைப்பற்ற முயன்று வந்தார்கள். இந்தத் தீவிர கோஷ்டியில் மூன்று பெயர்கள் முக்கியமாய் அடிபட்டன. பஞ்சாபிலிருந்து லாலா லஜபத் ராய், மகாராஷ்டிரத்திலிருந்து பால கங்காதர திலக், வங்காலத்திலிருந்து பெபின் சந்திர பால் இம் மூவர் பெயரும் ஒன்றாக "லால் - பால் - பால்" என்று இணைக்கப்பட்டு ஒதே பெயர்போல் முழங்கியது. பாபு அரவிந் கோஷும் தீவிரவாதிகளில் ஒருவர். கோபாலகிருஷ்ண கோகளே, வி.கிருஷ்ண ஸ்வாமி அய்யர், பிரோஸிஷா மேத்தா, ராஷ் பிஹாரி கோஷ் முதலியோர் மிதவாதத் தலைவர்கள்.
1905ஆம் வருஷம் காசியில் காங்கிரஸ் மகா சபை கூடிற்று. பாரதி காசி காங்கிரஸுக்குப் போனார். தெரிந்த பழைய ஊரான காசியை மீண்டும் பார்க்கலாம் என்றுதான் போனாரோ என்னவோ, தெரியாது.
காசியிலிருந்து திரும்பும்போது கல்கத்தா அருகிலுள்ள டம்டம் என்ற இடத்துக்குச் சென்று, அங்கே "விவேகானந்தரின் தர்மபுத்திரி" நிவேதித்தா தேவியை தரிசித்தார். பாரதியின் வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிட்டது இந்தச் சந்திப்பு!
நிவேதித்தா தேவி ஆங்கில மாது. பூர்வத்தில் மார்கரட் இ.நோபிள் என்ற பெயர் கொண்ட அவர், ஸ்வாமி விவேகானந்தரின் வீர முழக்கம் கேட்டு, பழம் பெரும் புனித பூமியான பாரத நாட்டுக்குத் தொண்டு புரியவென இங்கே வந்த இளம் மாது. விவேகானந்தரின் ஆசி பெற்று சந்நியாஸ மார்க்கம் ஏற்று, ராமகிருஷ்ண மிஷனில் முதல் சந்நியாஸினியாகத் தொண்டு புரிந்தார் அவர். நிவேதித்தா தேவி பேச்சிலும் செயலிலும் அக்னி ஸ்வரூபமானவர். தேச பக்தியே தெய்வ பக்தியாகக் கொண்ட அவர், முப்பது கோடி மக்களும் தெய்வங்களென வணங்கிய அவர், அயர்வறியாத் தொண்டர்.
இந்தப் புனிதவதியை பாரதியார் தரிசித்தபோது, நிவேதித்தா தேவி, "மகனே! உன் மனத்தில் பிரிவுணர்ச்சியை நீக்கு. ஜாதி, மதம், குலம், கோத்திரம் என்ற அநாகரிகமான வித்தியாசங்களை விடு. அன்பை மட்டும் அகத்தில் கொள். பிற்காலத்தில் நீ ஒரு தீரனாக, சரித்திரப் பிரசித்தி பெற்ற தேவனாக வருவாய்" என்றுரைத்தாராம்.
பிறகு, பாரதிக்கு விவாகமாகவில்லையா என்று கேட்டார். பாரதி, தமக்கு விவாகமாகி இரண்டு வயதுப் பெண் குழந்தை இருக்கிறதென்றார். பின் ஏன் மனைவியை உடனழைத்து வரவில்லை என்றார் நிவேதித்தா தேவி.
"இன்னும் எங்களில் மனைவியைச் சரிசமமாகப் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை. மேலும் காங்கிரஸுக்கு அவளை அழைத்து வந்தால் என்ன பிரயோஜனம்?" என்றார் பாரதி.
இதைக் கேட்ட நிவேதித்தா தேவி மிகக் கோபமடைந்தார்.
"சமூகத்தில் பாதி அடிமைப் பட்டிருக்கையில் மறு பாதி விடுதலை பெற முடியுமா? போனது போகட்டு, இனியும் அவளைத் தனியென்று நினைக்காமல், உன் இடது கையென மதித்து, மனதில் அவளைத் தெய்வமெனப் போற்றி நடந்து வா" என்றார்.
அப்படியே வாக்களிதுக் கொடுத்தார் பாரதி. நிவேதித்தா தேவி தாம் ஹிமாலயத்திலிருந்து கொணர்ந்த ஆலிலை அளவுள்ள ஓர் இலையை தம் ஞாபகார்த்தமாக பாரதிக்கு அளித்தார். பாரதியார் தம் கடைசி காலம் வரை அதை விடாது பொக்கிஷமாய்ப் போற்றி வந்தார். சில நண்பர்கள் அதிக விலை கொடுப்பதாய்க் கேட்டுப் பார்த்தபோது கூட அதை அவர் கொடுக்க இஷ்டப்படவில்லை. அவரது மரணத்துக்குப் பின் அவ்விலை எங்கேயோ காணாமற் போய்விட்டது.
நிவேதித்தா தேவியைத் தாம் சந்தித்ததால் ஏற்பட்ட மனப் புரட்சியை பாரதியே எழுத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். "ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணி" என்று நிவேதித்ததையைத் தொழுகிறார் அவர்.
நிவேதித்தா தேவியைத் தரிசித்த பாரதி புது உற்சாகத்துடன் சென்னை திரும்பினார். அவரது மனம் ஓயாமல்
"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனிசிறந்தனவே"
என்று ஜபித்த வண்ணமிருந்தது. பிறர் பிற தெய்வங்களைத் தோழ, பொலிவிழந்து நிற்கும் பாரதத் தாயையே எங்கும் எதிலும் கண்டு வழிபடத் தொடங்கினார் கவித் திலகம்.
நிவேதித்தா தேவியைச் சந்தித்தபோது நடந்த ஒரு விஷயம் பற்றித் தம் ஆப்த நண்பர் எஸ்.துரைசாமி அய்யரிடம் வெகு நாள் கழித்து பாரதி சொன்னாராம். அந்தச் சந்திப்பு பாரதியின் மனதை எப்படி அடியோடு மாற்றியது என்பதற்கு இதுவும் தக்க ஆதாரம் காட்டுகிறது.
பாரதத் தாய் விலங்குகளோடு கண்முன் நிற்பதாய்க் காணுமளவுக்கு உணர்ச்சி வேண்டும்; அப்படிக் கண்டால்தான் விலங்கை எப்படியாவது நீக்க வேண்டுமென்ற உணர்வு வரும் என்று நிவேதித்தா தேவி வற்புறுத்திச் சொன்னாராம். இப்படிக் கூறிவந்த அந்த அம்மையார், திடீரென ஆவேசம் வந்தவர்போல், தமது மேலங்கியை மார்பெதிரே பிய்த்துத் திறந்து, "உங்களுக்கு தைரியம் வேண்டும். எங்களை இங்கே குத்திக் கொல்ல உங்களுக்கு தைரியம் வேண்டும்!" என்றாராம். தேச விடுதலைக்காகத் தம் போன்ற வெள்ளையரைத் "துஷ்ட நிக்ரஹம்" செய்யவும் அஞ்சாத தீரர் வேண்டுமென்பது நிவேதித்தையின் குறிப்பு. அடிமை மக்களுக்கு ஆண்மையின் அவசியத்தை அவர் அவ்வாறு வற்புறுத்தினார். இந்த உபதேசம் பாரதியின் நெஞ்சில் ஆழப் பதிந்தது.
காசி காங்கிரஸுக்கு அடுத்த வருஷம், 1906ல் காங்கிரஸ் மகாசபை கல்கத்தாவில் நௌரோஜி அக்கிராசனப் பதவியிலிருந்து சுயராஷ்யமே நம் இலட்சியம் என்று சங்கை முழக்கினர்.
"சுதேச மித்திர"னில் உதவியாசிரியராகச் சிறந்த பணி புரிந்து வந்த பாரதி தம் மனதில் தோன்றிய புதிய கருத்துக்களைக் கொட்டி முழக்க முடியாமல் தவித்தார். "மித்திர"னில் தலையங்கம் எழுதும் வேலை அவருக்கு ஒருபோதும் வாய்க்கவில்லை. "மித்திரன்" காரியாலயமே நடத்தி வந்த "சக்ரவர்த்தினி" என்ற மாதப் பத்திரிகைக்கு பாரதி ஆசிரியராக இருந்தார். ஆனால் "சக்கரவர்த்தினி"யில் அன்றாட அரசியலுக்கு அதிக இடமில்லை. வங்கப் பிரிவினை, சுதேசி இயக்கம், சுயராஜ்ய முழக்கம், சர்க்கார் அடக்குமுறை இவை அலைமேல் அலையாய் நாட்டு மக்கள் மனதில் மோதி, அவர்கள் மனதில் சுமையாகக் கிடந்த அடிமை எண்ணங்களைத் தகர்த்து வந்தன. நாடெங்கும் சுதந்திர ஆசை தீவிரமாய் வளரலாயிற்று. இவ்வாசைக்கு ஓர் உருவம் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் பதியும்படி அதை எளிய இனிய தமிழில் விளக்கிக் காட்ட நல்ல தமிழ்ப் பத்திரிகை வேண்டும். அதில் தம் இஷ்டம் போல் எழுதவேண்டும் என்ற எண்ணம் பாரதியின் மனதைக் கவ்வியது. இதற்குத் தக்க மருந்தாக வந்து சேர்ந்தது "இந்தியா" என்ற வாரப் பத்திரிகை.
"இந்தியா" பத்திரிகை ஆரம்பமான கதையை, அதை ஆரம்பித்த கோஷ்டியில் ஒருவரான மண்டயம் எஸ்.ஸ்ரீநிவாஸாச்சாரியார் விவரித்திருக்கிறார்:
"பாரதியார் எட்டயபுரம் ஜமீன்தாரிடம் இருந்தபோதும், பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுத்தபோதும், சுதேசமித்திரனில் வேலை பார்த்தபோதும்கூட தம் மட்டுக்கு சுதந்திரராய் நடந்துகொள்ள முடிந்ததேயன்றி வெளியாருக்கு அதைப் புகட்ட மேல் எஜமான்கள் இடம் கொடுக்கவில்லை... அவரோ பணமில்லாதவர். தாமாக ஒரு பத்திரிகை ஆரம்பிக்க முடியுமா? முடியாதுதான்."
"அவருக்காகவேதானோ என்னமோ, 1905ன் பிற்பகுதியிலிருந்தே ஒரு பத்திரிகைக்கு வழி கோலப்பட்டுக் கொண்டே வந்தது. திருவல்லிக்கேணியில் ஒரு செல்வக் குடும்பத்தில் பிறந்த ஸ்ரீ நா.திருமலாச்சாரியார் ஆங்கிலத்தில் வெளியாகி வந்த 'பிரம்மவாதின்' என்னும் மாதப் பத்திரிகையை நாட்டில் நன்கு பரப்புவதென்று அதைச் சில காலம் கையிலெடுத்து நடத்தினார். அது மதசம்பந்தமான பத்திரிகையானதால் பொது ஜனங்களுக்கு வேண்டிய ராஜீய உணர்ச்சியை வளர்க்கும் வியாசங்களுக்கு அது இடம் தராது என்று அதன் சொந்தக்காரரான ஸ்ரீ எம்.ஸி.அழகிய சிங்கப் பெருமாள் சொன்னார். அதோடு நாட்டில் இவ்வுணர்ச்சி நன்கு பரவவேண்டுமானால் ஆங்கிலத்தைவிடத் தமிழில் பத்திரிகையை நடத்தினால்தான் தக்க பயன் விளையும் எனத் தெரிய வந்தது. உடனே திருமலாச்சாரியார் ஒரு தமிழ் வாரப் பத்திரிகைக்கு வேண்டிய அச்சு யந்திரத்தைத் தேடலானார். பத்திரிகை நடத்துவதில் பயிற்சியும் எழுதும் திறனும் கொண்ட பாரதியார் வந்து சேர்ந்தார்"