சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
4
7. மன்னருக்குத் தோழர்
முன் பக்கம்
   

காசியிலிருந்து எட்டயபுரம் திரும்பிய பாரதி அரண்மனையில் இரண்டு வருஷம் உத்தியோகம் பார்த்தார். அவருக்குக் கடுமையான வேலை ஏதுமில்லை. ஓரளவு சுதந்திரமாக இருக்க முடிந்தது.

பாரதிக்கு உத்தியோகம் மன்னருக்குத் தோழராக இருப்பதுதான். பெரிய மனுஷர்கள் சகவாசம் சிலருக்கே இயற்கையாக அமைகிறது. துல்லியமான உணர்ச்சிகளை உடையவர்களுக்கு இது மிகவும் சிரமமான காரியம். அதுவும், கவிகளுக்கு மிக மிகச் சிரமமான சமாசாரம்.

மன்னருக்கு ஒழிந்த வேளைகளில் அன்றாடப் பத்திரிகைகளைப் படித்துக் காட்டுவதும். சம்பாஷிப்பதும், சல்லாபிப்பதும், இலக்கிய விவாதங்களில் ஈடுபடுவதும்தான் பாரதியின் உத்தியோகம். உத்தியோகப் பொறுப்பு பிரமாதமில்லை. ஆனால் பாரதி போன்ற நுண்ணறிவாளிக்கு வேலையில்லாமல் உத்தியோகம் பார்ப்பதே பெரும் பாரமாக இருந்திருக்க வேண்டும்.

எட்டயபுரம் மன்னருக்கும் தமக்கும் இருந்த உறவு நிலையைப் பாரதியாரே பிற்காலத்தில் நண்பர்களிடம் விளக்கியிருக்கிறார். புதுவையில் "சின்னச் சங்கரன் கதை" எழுதிய காலத்தில் வ.ரா.முதலிய நண்பர்களுக்குக் கதையைப் படித்துக் காட்டி, விளக்கமும் செய்வார் பாரதி. (இதை வ.ரா. தமது "மகாகவி பாரதியார்" நூலில் விவரித்திருக்கிறார்.) மன்னரின் ரசனைச் சுவை, உறுதியற்ற மனப்போக்கு, நிர்வாகத் திறமையின்மை முதலியவைகளைச் "சின்னச் சங்கரன் கதை"யில் பாரதி விரித்திருக்கிறார். "ராக்கப் பிள்ளைக்கு நிலம் கொடுக்கவும்" என்று மொட்டையாக ஓர் உத்தரவு போடுவாராம் மன்னர். எந்த ராக்கப் பிள்ளை, எவ்வளவு நிலம், எந்த மாதிரி நிலம், நஞ்சையா புஞ்சையா, எந்த இடத்தில், எந்த நிபந்தனைகளின் பேரில் - ஒரு விவரமும் இராது. அரண்மனை நிர்வாகிகள் மன்னரிடம் விளக்கம் கேட்பதும் பெரிய தவறு! ஏதோ, அவரவர் இஷடப்படி, அவருக்குத் தெரிந்த வழியில் உத்தரவு "நிறைவேற்"றப்படும்.

இதையெல்லாம் நண்பர்களிடம் சொல்லி, "இந்தக் கண்மூடி ராஜ்யத்தில் நான் எப்படிக் காலந்தள்ள முடியும்?" என்று கேட்பாராம் பாரதி.

"கூளப்ப நாயக்கன் காதல்" சிருங்கார ரஸம் மலிந்த பாடலிலும், நாட்டியக் கூத்துக்களிலும், காதல் என்ற கண்காணாப் பொருளிலும் அவர் லயித்திருந்தது மன்னரின் ரசனைச் சுவக்கு உதாரணங்கள். சாப்பாடு முப்பது கவளம் சாப்பிடவேண்டும் என்று பாரதிக்குப் போதிப்பார், சாப்பிடவும் சாப்பிடுவார் மன்னர். அப்படித் தின்று விட்டு ஜீரண சக்திக்காகப் "பூரணாதி லேகிய"ங்களை உள்ளே தள்ளுவார்! இந்த வழக்கத்தை பாரதிக்கு ஏற்படுத்தியது இவரே.

மன்னருக்கு பாரதி இல்லாமல் பொழுதே போகாது, தம்முடைய அபூர்வமான சிந்தனைச் சுடர்களை யெல்லாம் கேட்க ஓர் ஆள், விஷயம் தெரிந்த ஆள் வேண்டாமா? ஆனால் பொருத்தமில்லாத பேர்வழி! அவரால் கூழைக் கும்பிடு போட முடியாது; மற்றவர்களைப் போல, அரமனை சம்பிரதாயங்களை அப்படியே ஏற்று நடந்து கொள்ளவும் வளைந்து கொடுக்காது அவர் உள்ளம்.

மன்னர் சற்று கடின சுபாவமுள்ளவர். அவருடன் பழகுவது எளிதல்ல. அவரெதிரிலே வருபவர்கள் மேல் அங்கவதஸ்திரத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு, மரியாதை செய்துவிட்டு, பேசும்போது இடையிடையே "மகாராஜா! மகாராஜா" என்று சொல்லிக் கொண்டிருக்கவேண்டும். மன்னர் புவியரசரானால் தாம் கவியரசர் என்ற சமத்துவ மனோபாவம் வளர்ந்துகொண்டிருந்தது பாரதியின் உள்ளத்தில். அவருக்கு இம்மாதிரியான "நரியுயிர்ச் சேவகர்" வேஷம் பிடிக்கவில்லை, அருவருப்பாகவும் இருந்தது. இவற்றை எல்லாம் அறிந்தும் ஊர்போய்ப் பரீட்சை செய்து பார்ப்போம் என்றே காசியிலிருந்து எட்டயபுரம் வந்திருந்தார்.

அப்படி யிப்படி இரண்டு வருஷங்களை எட்டயபுரத்தில் தள்ளினார். ஷெல்லியின் சுயேச்சை உணர்ச்சி மிக்க பாடல்கள் அவருக்கு ஆறுதலளித்தன; கம்பன், வள்ளுவன், இளங்கோ இவர்களும் பெருந்துணையிருந்தனர்.

நாளாக ஆக மனக் கசப்பு அதிகரித்தது. முடிவில் எட்டயபுரத்தை விட்டுப் போய்விடுவதென்று தீர்மானித்தார் பாரதி. வேறு வேலை தேட மதுரை போக முடிவு செய்தார். புதிதாக ஏற்பட்ட துணிவில், மன்னரை நையாண்டி செய்து ஒரு பாடலைப் பாடிவிட்டு எட்டயபுரத்தை விட்டுக் கிளம்பிவிட்டார்.

இப்பாடலும் நமக்குக் கிடைக்காமற்போய்விட்ட பொக்கிஷங்களில் ஒன்று.

8. மதுரைத் தமிழ்ப் பண்டிதர்
முன் பக்கம்

மதுரை வந்த பாரதிக்கு அந்நகரில் ஒன்றிரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்களில் மதுரைக் காலேஜ் பிராஞ்சு தமிழ்ப் பண்டிதர் எம்.கோபாலகிருஷ்ணய்யர் ஒருவர். இவரிடம் பாரதி வேலை விஷயமாகப் பேசியபோது, சேதுபதி ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் சண்முகம் பிள்ளையை (அரசன் சண்முகனார்) கண்டுவரும்படி பாரதியை அனுப்பினார். துணைக்கு, ப.ரா.அய்யசாமி அய்யரென்ற தமிழாசிரியரையும் அனுப்பினார். சண்முகம் பிள்ளை இவர் யாரென்று கேட்டதற்கு அய்யாசாமி அய்யர், "இவர் எட்டயபுரம் கவிஞர்" என்றார். உடனே சண்முகம் பிள்ளை, "நான் உடல் நலமில்லாததால் விடுமுறையில் போகிறேன். இவர் என் ஸ்தானத்துக்கு வருவாரா?" என்றார். பாரதி சம்மதித்தார். 1904ஆம் அண்டு ஆகஸ்ட் முதல் தேதியன்று பாரதி சேதுபதி ஹைஸ்கூலில் தற்காலிகத் தமிழ்ப் பண்டிதரானார். மாதச் சம்பளம்
ரூ.17 1/2.

பாரதி இயற்கைக் கவி; இலக்கண பண்டிதரல்ல. யமகம் திரிபுகள் தெரியுமென்றாலும், இலக்கணத்தை விட இலக்கியத்திலேயே பற்றுதல் வைத்தவர். அவர் மூன்று மாதம் பத்து நாள் எப்படியோ தமிழ்ப் பண்டிதராக வகுப்பு நடத்தினார். அவருடைய மாணாக்கர்களில் ஒருவர் மதுரை தேசபக்தர் ஏ.வைத்தியநாதய்யர். "அப்போதே பாரதியுடைய கண்களில் ஏதோ ஒரு விசேஷ சக்தி இருப்பது தெரிந்தது. ஆனால் அவருடைய பெருமை முழுதும் தெரியவில்லை" என்று வைத்தியநாதய்யர் கூறியுள்ளார்.

மூன்று மாதம் பத்து நாள் ஆனதும் பாரதியின் தற்காலிக வேலை முடிந்தது. 1904 நவம்பர் 10ஆம் தேதியோடு பாரதி தமிழ்ப் பண்டிதர் வேலையை விட்டார்.

இந்த மூன்று மாதத்துக்கு முன்பிருந்தே பாரதி வேறு வேலைக்கு முயன்று வந்தார். தம் நண்பராகிவிட்ட தம் பள்ளி சகோதர ஆசிரியர் அய்யாசாமி அய்யரிடம் வேலை பற்றி வற்புறுத்தி வந்தார். அய்யாசாமி அய்யரின் தாய்மாமன் ராஜாராமய்யர் என்பவர் 'ஹிந்து' முதலிய பத்திரிகைகளின் நிருபராயிருந்தார். அவருக்கு ஜீ.சுப்பிரமணிய அய்யரை நன்கு தெரியும். மதுரைக் காலேஜ் பிராஞ்சு தமிழ்ப் பண்டிதர் கோபால கிருஷ்ணய்யர் ராஜாராமய்யரை நெருங்கி "சுதேசமித்திரனில் உதவியாசிரியர் வேலை காலியாக இருக்கிறது. அதற்கு நீங்கள் பாரதியைச் சிபாரிசு செய்யவேண்டும்" என்றார். ராஜாராமய்யர் யாருக்கும் ஒன்றும் செய்யமாட்டார். தாட்சணியம் பொறுக்காமல் அவர் ஜீ.சுப்பிரமணிய அய்யருக்குக் கடிதம் கொடுத்தார். இதன் வழியாகவே பாரதிக்குச் சென்னையில் வேலை கிடைத்தது. (இவ்விவரங்களை, இக்கடிதத்தைத் தாமே நேரில் வாங்கி பாரதியிடம் கொடுத்த அய்யாசாமி அய்யர் தெரிவிக்கிறார்)

பாரதியார் "சுதேசமித்திர"னில் எப்படிச் சேர்ந்தார் என்பதைப் பற்றி மாறுபட்ட விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. பாரதி மதுரையில் தமிழ்ப் பண்டிதராக இருந்த சமயத்தில் "மித்திரன்" ஆசிரியர் ஜீ.சுப்பிரமணிய அய்யர் மதுரைக்கு வந்ததாகவும், அப்போது அவருக்கு பாரதி அறிமுகமானதாகவும், பாரதியின் மேதையை உடனே அறிந்து கொண்ட அவர் எப்படியாவது அவரைச் சென்னையில் தம் பத்திரிகைக்குக் கொண்டு செல்ல விரும்பியதாகவும், அதன்படி பாரதியைச் சென்னைக்கு வந்துவிடுமாறு சொன்னதாகவும் வ.ரா.கூறுகிறார்.

சேதுபதி ஹைஸ்கூல் வேலை முடியும் சமயம், பாரதி தமது உறவினரும் சென்னை போதனாமுறைக் கல்லூரி வைஸ் பிரின்ஸ்பாலுமான லக்ஷ்மண அய்யர் என்ற சென்னைவாசிக்கு எழுதியதாகவும், ரக்ஷ்மண அய்யர் தமது நண்பரொருவர் மூலம் விசாரித்து, மிகுந்த சிபாரிசின் பேரில் வேலை வாங்கி கொடுத்ததாயும் சிலர் கருதுகிறார்கள்.

ஆனால், இவ்விவரங்களெல்லாம் இவ்விஷயத்தில் நேரிடையாக சம்பந்தப்படாதவர் களாலேயே கூறப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஸ்ரீ ப.ரா.அய்யாசாமி அய்யர் தெரிவிக்கும் செய்திகளிலிருந்து அவர் கூறுவதே சரியாயிருக்கும் என்று தோன்றுகிறது.

எது எப்படியானாலும், தமிழ்த் தினசரியான "சுதேசமித்தி"னில் பாரதிக்கு வேலை கிடைத்துவிட்டது. தமிழ்ப் பண்டிதர் வேலை முடிந்த பின் என்ன செய்வதென்ற கவலை நீங்கியது.

ஜீ.சுப்பிரமணிய அய்யர் தமிழ் நாட்டுக்கு தேசபக்தியூட்டிய முதல்வர். அவர் 1904-ல் தமது பத்திரிகைக்கு ஆங்கில ஞானமும் தமிழ் அறிவும் கொண்ட சிறந்த ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தார். பாரதியைப் பார்த்த மாத்திரத்தில் அவர் பாரதியிடம் மோகித்துப் போனார். தமிழாசிரியர் என்ற குறுகிய வரம்பை மீறி, அத்தமிழ்ப் பத்திரிகை உலகம் வாயிலாகத் தமிழ் எழுத்துலகிலும் இந்திய தேசிய உலகிலும் பாரதியை இட்டுச் சென்ற பெருமை ஜீ.சுப்பிரமணிய அய்யருடையது.

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur