சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
19
37. சாமியார்கள் நட்பு
முன் பக்கம்
   

"வேதபுரத்துக்கு வடக்கே இரண்டு கல் தூரத்தில் சித்தாந்தசாமி கோவில் என்றொரு கோவில் இருக்கிறது. அதற்கருகே ஒரு மடம். அந்த மடத்தில் பல வருஷங்களுக்கு முன் சித்தாந்தசாமி என்ற பரதேசி ஒருவர் இருந்தார். அவருடைய சமாதியிலேதான் அந்தக் கோயில் கட்டியிருக்கிறது."

"கோயில் மூலஸ்தானத்திற் கெதிரேயுள்ள மண்டபத்தில் நாளது சித்திரை மாதம் பதினோராந் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு முன்னதாகவே நானும் என்னுடன் நாராயணசாமி என்றொரு பிராமணப் பிள்ளையும் வந்து உட்கார்ந்தோம். பகல் முழுதும் ஊருக்கு வெளியே தனியிடத்தில் போயிருந்து உல்லாசமாகப் பொழுது கழிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வந்தோம். எப்போதும் வழக்கம் எப்படியென்றால், மடுவில் ஸ்நானம் செய்துவிட்டு மாந்தோப்புகளில் பொழுது போக்குவோம். (நள வருஷம்) புயற் காற்றடித்த பிறகு மாந்தோப்புகளில் உட்கார நிழல் கிடையாது. ஆதலால் மேற்படி கோயில் மண்ணபத்துக்கு வந்து சேர்ந்தோம்"

சித்தாந்தசாமி கோயிலையும் மடத்தையும் பற்றிய இந்தக் குறிப்பு "பிங்கள வருஷம்" என்ற கட்டுரையில் ("கதைக் கொத்து" நூலில் உள்ளது) இருக்கிறது.

"சித்தாந்தச் சாமி திருக்போயில் வாயிலில்
தீப வொளி யுண்டாம் - பெண்ணே
முத்தாந்த வீத முழுவதையுங் காடிட
மூண்ட திருச் சுடராம் - பெண்ணே."

"உள்ளத் தழுக்கும் உடறிற் குறைகளும்
ஓட்ட வருஞ் சுடராம் - பெண்ணே
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ் சுடராம் - பெண்ணே."

புதுவையில் பாரதிக்குப் பல பண்டாரங்களும் சாமியார்களும் சிநேகம். குள்ளச்சாமி என்ற மாங்கொட்டைச்சாமி, கோவிந்தசாமி, யாழ்ப்பாணத்துச்சாமி என்ற பரதேசிகள் ஒவ்வொருவரிடமும் ஒரு உயர்குணத்தை பாரதி கண்டார். இவர்களைப் பற்றி "பாரதி அறுபத்தா"றில் பாடியுமிருக்கிறார்.

கோவிந்தசாமி என்ற பண்டாரம் பாரதிக்கு இறந்துபோன அவருடைய தந்தையின் உருவம் தெரியும்படி காட்டினான் என்று ஒரு பாட்டில் தெரிவித்திருக்கிறார்.

குள்ளச்சாமி "மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்" என்று குறிப்பால் உணர்த்தியதாய்க் கூறுகிறார். இந்தச் சாமியார் தமக்குத் தொழில் வண்ணான் தொழில், உள்ளத்தில் உள்ள அழுக்குகளை வெளுப்பதாகும் என்பாராம்.

ஒரு நாள், பழங் கந்தை அழுக்கு மூட்டை ஒன்றை வளமுறவே கட்டித் தன் முதுகில் சுமந்து வந்த குள்ளச் சாமியை பாரதி, "இது பித்தர் செயலன்றோ! இதென்ன செய்கை!" என்று வினவ, குள்ளச்சாமி, புன்னகை பூத்து, "புறத்தே நான் சுமக்கின்றேன். அகத்தினுள்ளே இன்னதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ!" என்று பதிளளித்தாராம். "மனத்திலுள்ளே பழம் பொய்கள் வளர்ப்பதாலே இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே. இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்" என்று கவிஞர் இதினின்று உணர்ந்து பறையறைவிக்கிறார். பிறர் கண்ணுக்குப் புலப்படாத பெரு விஷயங்களையும், பிறர் மதியாத, ஓதுக்கித் தள்ளும் சாதாரண அனுபவங்களிலிருந்து தேர்ந்து கொள்ளும் அதிசய சக்தி படைத்தவர் பாரதி.

தென் பாண்டி நாட்டில் நெட்டையபுரம் என்ற ஊரில் ஜமீன்தார் ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் 'கொட்டையசாமி' என்ற கடுரையில் பாரதி சொல்கிறார். நெட்டையபுரம் என்பது எட்டயபுரத்திற்கு பாரதி தந்துள்ள மாற்றுப் பெயர் என்று ஊகிப்பது எளிது. இக்கட்டுரையிலிருந்து எட்டயபுரத்திலேயே பாரதிக்கு சாமியார்கள் பழக்கம் இருந்ததெனத் தெரிகிறது.

சாமியார்கள் சகவாசத்தால் பாரதி வேதாந்த உண்மைகளை அறிந்தாரென்றாலும், சாமியார்களுக்குள்ள சில துர்வழக்கங்களும் பாரதிக்குப் பிடித்துக்கொண்டன. எட்டயபுர ஜமீன்தார் கற்றுக் கொடுத்த அபின் பழக்கம் புதுவைச் சாமியார்களால் மீண்டும் வலிவாக அவரைப் பிடித்துக்கொள்ளும் துர்பாக்கியமும் ஏற்பட்டது. வறுமைத் துயரை மறந்து கவிதா லோகத்தில் சஞ்சரிக்க அபின் போதை பயன்பட்டது; ஆனால், ஏற்கனவே பூஞ்சையான உடலைப் பாழாக்கி இவ்வாழ்க்கையின் பொறுப்புகளை பாரதி சிறிதும் கவனிக்காமல் போகும்படியும் அது செய்தது.

38. உழைப்பு நிறைந்த வருஷம்
முன் பக்கம்

புதுச்சேரிக்கு வந்த இரண்டாண்டுகளில் பாரதியாரின் பத்திரிகை முயற்சிகளெல்லாம் நின்றுபோயின. அதன்பின், புதுவையில் இருந்த காலம் வரை, அவர் வேறு பத்திரிகைகள் ஆரம்பிக்க முயலவேயில்லை.

1910ஆம் வருஷத்துக்குப் பிறகு பாரதி பத்திரிகை விவகாரங்களை மறந்து, புத்தகமாக வெளியாகக்கூடிய விஷயங்களை எழுதுவதில் முனைந்தார். 1912ஆம் வருஷம் அவருக்கு முக்கியமான காலம். அந்த ஒரே ஆண்டில், புகழ் பெற்ற பல நூல்களை அவர் எழுதி முடித்தார்.

"பகவத் கீதை தமிழ் மொழி பெயர்ப்பு", "கண்ணன் பாட்டு", "குயில்", "பாஞ்சாலி சபதம்" முதலிய நான்கு பெரிய நூல்களும் 1912ஆம் ஆண்டிலேயே உருப்பெற்றன.

1912ல் எழுதப்பெற்ற "கண்ணன் பாட்டு" 1918ல்தான் வெளியாயிற்று. சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலிருந்த பரலி சு.நெல்லையப்பர் அதை வெளியிட்டார். "பாஞ்சாலி சபத"த்தின் முதல் பாகம் மட்டும் 1912ஆம் ஆண்டில் புதுச்சேரியில் நூலாக வெளியாயிற்று. ஆனால் அதன் இரண்டாம் பாகம், பாரதி காலமான பிறகு, 1924ல்தான் பிரசுரமாயிற்று. "குயில் பாட்டு" 1923ஆம் ஆண்டில்தான் வெளியாயிற்று; அதன்முன் அது வெளியானதாய்த் தெரியவில்லை.

"கண்ணன் பாட்டு" முதற் பதிப்பின் முகவுரையில் பரலி சு.நெல்லையப்ப பிள்ளை, "ஸ்ரீமான் பாரதியார் ஒரு பெரிய மேதாவி; மகா பண்டிதர்; தெய்வீகப் புலவர்; ஜீவன் முக்தர். இவர் தமிழ்நாட்டு ரவீந்திரநாதர். இவர் எனது நாட்டின் தவப்பயன்... இந்த ஆசிரியன் காலத்திற்குப் பின் எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின், இவர் பாடல்களைத் தமிழ் நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான் இப்பொழுதே காண்கின்றேன்" என்று உறுதியோடு கூறினார்.

"கண்ணன் பாட்"டின் இரண்டாம் பதிப்புக்கு வ.வே.ஸு.அய்யர் 1920ஆம் ஆண்டு அளித்த முகவுரையில், "பத்து வருஷங்களுக்கு முன் அவர் பதிப்பித்த ஜன்ம பூமியிலேயே ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம் என்று இரண்டு செய்யுள்கள் காணப்படுகின்றன. ஆனால் பிற்பட்டுத்தான் கண்ணனுடைய செயல்களும் திருவிளையாடல்களும் அவர் மனத்தைப் பூரணமாக ஆகர்ஷித்தன" என்றும், இந்தக் கவர்ச்சிக்குப் பெரியாழ்வார் பாசுரங்களை பாரதி பாடி உளமகிழ்ந்ததே பெரிதும் காரணம் என்றும் சொல்கிறார்.

கண்ணன் பாட்டுகளின் கவிதையழகை மாத்திரம் அனுபவித்துவிட்டு நூலின் பண்ணழகை மறந்துவிடக் கூடாது என்றும் வ.வே.ஸு.அய்யர் நினைவு படுத்துகிறார். அவர் மேலும் கூறுகிறார்:

"இதிலுள்ள பாட்டுக்களில் பெரும்பாலானவை தாளத்தோடு பாடுதற்காகவே எழுதப் பட்டவையா யிருக்கின்றன. கடற்கரையில், சாந்தி மயமான சாயங்கால வேளையிலே, உலகனைத்தையும் மோஹ வயப்படுத்தி நீலக்கடலையும் பாற்கடலாக்கும் நிலவொளியில், புதிதாகப் புனைந்த கீர்த்தனங்களைக் கற்பனா கர்வத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான குரலில் பாடினதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்நூலிலுள்ள பாட்டுகளை மாணிக்கங்களாக மதிப்பர்.... நமது ஆசிரியரின் நூல்களை நம் நாட்டவர் சரிவர ஆதரிக்காததினாலே,

"சுற்றி நில்லாதே போ, பகையே!
துள்ளி வருகுது வேல்!"


என்றும்

'கைதனில் வில்லும் உண்டு
காண்டீவம் அதன் பேர்'

என்றும் உள்ள அக்ஷர லக்ஷம் பெறுமான பாக்களை எழுதியிருக்கும் அவருடைய உற்சாகம் குன்றிப்போயிருக்கிறது. தமிழபிமானிகள் இப்பதிப்பை ஆதரித்து வாங்கி ஆசிரியனுடைய உற்சாகத்தை உயர்த்தி அவரால் தமிழில் புதிய இலக்கியங்கள் பிறக்கும்படி செய்வார்கள் என நம்புகிறேன்."

192ல் விடுக்கப்பட்ட வேண்டுகோள் இது. ஆனால், பாரதி காலமான இரண்டு வருஷங்களுக்குப் பின்தான் இந்த முகவுரையே கூட அச்சேறிற்று!

"பாஞ்சாலி சபதம்" நூலின் சமர்ப்பணத்தில், "தமிழ் மொழிக்கு அழியா உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற வரகவிகளுக்கும், அவர்களுக்குத் தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப் போகிற பிரபுக்களுக்கும் இந் நூலைப் பாத காணிக்கையாகச் செலுத்துகிறேன்" என்று பாரதி குறித்திருப்பது கவனித்தற்குரியது.

மேலும், நூலின் முகவுரையில், "எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான்" என்று தெரிவித்திருப்பதும் எழுத்தாள அன்பர்கள் கவனிக்கத் தக்க லட்சியமாகும்.

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur