47. 'பற! பற! - மேலே, மேலே, மேலே' |
துன்பத்தின் நடுவே இன்பம் என்பதற்கு பாரதியின் இந்த நீண்ட கடிதம் சிறந்த இலக்காக விளங்குகிறது. வாழ்வில் எவ்வளவோ இன்னல்கள் இருந்தும் அவைகளில் அழுந்திப் போகாமல் லட்சியச் சிறகுகள் கொண்டு மேலே மேலே பறந்து சென்றது கவியின் உள்ளம். நெல்லையப்பருக்கு எழுதியுள்ள இந்த நீண்ட கடிதத்தில் கடைசி ஒரு பாரா மட்டுமே அவருக்குள்ள வாழ்க்கைச் சங்கடங்களைக் குறிப்பிடுகிறது. கடிதத்தின் பாக்கிகளைக் குறிப்பிடுகிறது. கடிதத்தின் பாக்கி பகுதிகள் யாவும் கவிஞனது மனோ எழுச்சி சிறகெடுத்துப் பறப்பதையே காட்டுகிறது.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்று வாயாரப் பாடிய கவிஞர், பிற மொழிகள் பெற்றுவரும் வளர்ச்சியைக் கண்டு தமிழில் அத்தகைய வளர்ச்சி இல்லையே என்று மனம் குமுறினார். "ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து, அந்தப் பாஷைப் பத்திரிகைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்துகொள்ள முடியுமானால் தமிழ்நாட்டிற்கு எத்தனை நம்மையுண்டாகும்! தமிழ், தமிழ், தமிழ் - என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும்" என்று நெல்லையப்பருக்கும் அவர் மூலம் பிற தமிழர்களுக்கும் உபதேசிக்கிறார்.
தமிழ்நாட்டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் எற்பட்டு, அவைகளில் நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர வேண்டும் என்றார் கவிஞர். ஜாதி பேதம் என்ற நாசப் பூண்டை அடியோடு ஒழிப்போம் என்றார். பெண்ணுக்கு விடுதலையைப் பேச்சளவின்றிச் செயலளவிலும் காட்டுவோம் என்றார். தொழில்கள் வளரவேண்டும், தொழில் செய்பவன் தாழ்ந்தவனென்று கருதுவது முட்டாள்தனம் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். மேலும்,
"தம்பி, நான் ஏது செய்வேனடா! தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியான் எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது. தம்பி, உள்ளமே உலகம். ஏறு! ஏறு! ஏறு! மேலே, மேலே, மேலே!"
பாரதி இந்தக் கடிதம் எழுதிய சமயம் அவர் வீட்டில் செல்லம்மாள், சகுந்தலா மூவரே இருந்தனர். மூத்த பெண் தங்கம்மாள் காசியில் வளர்ந்து வந்தார்.
மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியின் மனைவியார் சகுந்தலாவுக்கு ஒரு மைசூர் வெள்ளி கிருஷ்ண விக்ரகம் தந்திருந்தார். திடீரென ஒரு நாள் அது காணாமற்போயிற்று. அன்று முதலே சகுந்தலா ஜுரத்தினால் பீடிக்கப்பட்டு இரண்டு மாத காலம் மிகுந்த கவலையை உண்டாக்கினாள்.
நோய்க் கிருமிகள் என்றாலே பாரதிக்கு பயம் அதிகம்.
"பாப்பாவைத் தொட்டுவிட்டுக் கையைக் கழுவாவிட்டால் உள்ளே போகவிடமாட்டார். ஏதோ ஒரு மருந்தை ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் கையைக் கழுவு என்பார். எதைத் தொட்டாலும் அந்த மருந்தின் நாற்றம்!" இவ்வாறு செல்லம்மாள் கூறியுள்ளார்.
இரண்டாவது வாரம், சகுந்தலாவுக்கு ஜுரம் அதிகமாயிருந்த சமயம் நடந்த ஒரு சம்பவத்தையும் செல்லம்மாள் விவரித்திருக்கிறார்:
"இரவு எட்டு மணி இருக்கும். இவர்(பாரதி) காய்ச்சல் குச்சியை வாயில் வைத்தார். ஐந்து நிமிஷம் கழித்து எடுத்துப் பார்த்தால் அளவு மீறி இருந்தது. மறுபடி வைக்கலாம் என்று உதறினார். அது கை நழுவிக் கீழே விழுந்து சுக்கல் சுக்கலாக ஆகிவிட்டது. கை நடுக்கம்! மனத்தில் பயம்!... இரவெல்லாம் தூங்காமல் 'சக்தி, சக்தி' என்று கதறினார். காலையில் ஜுரம் குறைந்தது.
தமிழிச் சொல்லுக்குப் புதுப் புது சக்தி பிறக்கவேண்டும் என்ற துடிப்பும் பாரதிக்கு இந்தச் சமயம் இருந்தது. வாரத்தில் மூன்று நாள் பேசாமல் இருந்து, எழுத்து வேலையில் முனைந்தார் அவர். இது ஒரு விதத்தில் நல்ல பலன் தந்தது. "சுதேசமித்திர"னுக்கு பாரதி ஒழுங்காக எழுதவாரம்பித்தார்.
"புதிய சொல் - அதாவது 'ஓம்' என்பதைப் போல் தமிழில் ஒரு பதம் கண்டுபிடிக்க வேண்டும்" என்று பாரதி மௌன விரதமிருந்து வந்தார். இந்த லட்சியத்தையே அவர் "சொல்" என்ற பாடலில் ("தேவர் வருகவென்று சொல்வதோ?" என்று ஆரம்பிப்பது) பாடியுள்ளார். "சொல் ஒன்று வேண்டும். தேவ சக்திகளை நம்முன்னே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும் என்பது இப்பாடலின் உப-தலைப்பு"
"புகை நடுவினிலே தீயிருக்கும் புதுமையைக் கண்டோமே" என்று பாடிய கவிஞர் அதைத் தம் நித்திய வாழ்விலும் அனுபவித்தே பாடினார். கடன் தொல்லை, நோய் வேதனை என்று பல்வேறு கஷ்டங்களான புகைக்கு நடுவேயும் பாரதி பராசக்தியின் பொன்மேனியைக் கண்டு போற்றிப் பரவசமடைந்தார்.
"ஜயபேரிகை கொட்டடா!" என்ற சின்னஞ் சிறிய பாடல் அவரது அடங்காத நம்பிக்கையூற்றுக்குச் சிறந்த சான்று.
"பயமெனும் பேய்தனை யடித்தோம்" என்று முழங்குகிறது இப்பாடலின் முதல் பா. பயம்தான் மனிதனுக்கு முதல் எதிரி என்று பாரதி பன்முறை பலவிடங்களில் வற்புறுத்தியுள்ளார்.
"அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே! உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!" என்ற ஓரிடத்தில் பாடுகிறார். "பாரதி அறுபத்தா"றில், "மரணத்தை வெல்லும் வழி" என்ற பாவில்,
"அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்"
என்று உறதியுடன் கூறுகிறார்.
"காக்கை குருவி எங்கள் ஜாதி" என்று வரும் சிந்தனை பாரதியின் விரிந்த நோக்குக்கு ஓர் உதாரணம். ஆனால், இந்த விரிந்த நோக்கை கவிதையளவில் கொட்டி முழக்குவது எளிது; வாழ்வில் - செயலில் செய்து காட்டினால் எவ்வளவு சிரமமாக இருக்கும்? பாரதி இதைச் செய்யும் துணிவும் பெற்றிருந்தார்.
புதுவையில் பாரதி குடும்பம் நடத்திய சமயம் நிகழ்ந்த சம்பவங்கள் பலவற்றை மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் புதல்வி யதுகிரியம்மாள் தமது "பாரதி நினைவுகள்" நூலில் விவரித்திருக்கிறார்.
ஒரு நாள் சிறுமி யதுகிரி பாரதி வீட்டுக்குச் சென்றார். அங்கே செல்லம்மாள் தவிர வேறு யாருமில்லை; செல்லம்மாளும் வழக்கம் போல் கலகலப்பாயில்லை. விசாரித்ததில், வழக்கமான திரவியக் கோளாறும் பாரதி செய்ததோர் 'தர்ம கைங்கரிய'முமே செல்லம்மாளின் வருத்தத்துக்குக் காரணமென்று தெரிந்தது.
வழக்கமாக அன்று "சுதேசமித்திர"னுக்கு அனுப்பவேண்டிய கட்டுரையை பாரதி அனுப்பவில்லையாம். காலையில் குளித்து, காப்பி குடித்து, வெற்றிலை பாக்கு எல்லாம் கிரமமாக ஆனபிறகு, மேஜைமேல் காகிதம் பேனா மை புட்டி எல்லாவற்றையும் வைத்துச் சென்றார் செல்லம்மாள். அதாவது பாரதி ஒழுங்காக உட்கார்ந்து "சுதேசமித்திர"னுக்கு கட்டுரை எழுதும்படி தூண்டுதல் இவை.
பாரதி மேஜையில் உட்கார்ந்திருக்க, செல்லம்மாள் சமையலுக்கு அரிசியை எடுத்து, முறத்தில் போட்டுக் கல் பொறுக்கி, முறத்தோடு வைத்துவிட்டு உள்ளே ஏதோ காரியமாய்ப் போனார். திரும்பி வந்து பார்க்கும்போது, முறத்தில் இருந்த அரிசியில் கால் பங்கு முற்றத்தில் வாரியிறைந்து கிடந்தது; குருவிகள் கூடிக் கொத்திக் கொண்டிருந்தன; பாரதி பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்! அரிசியை எடுத்துக் குருவிகளுக்குப் போட்டிருந்தார் பாரதி!
செல்லம்மாளுக்கு அழுகை வந்துவிட்டது. இதைக் கண்ட பாரதி, "வா, செல்லம்மா, இந்தக் குருவிகளைப் பார்! எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன! நாமும் அவைகளைப்போல் ஏன் இருக்கக்கூடாது?"என்றாராம்.
இது தனிப்பட்ட ஒரு நாள் சம்பவமல்ல. பிற்காலத்தில் புதுவையைவிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் குடியிருந்தபோதும் இப்படியே சமையலுக்கான அரிசையை காக்கை குருவிக்கும் அணிலுக்கும் அளித்து விடுவாராம் பாரதி!
பாரதியின் மணி மணியான கையெழுத்துக்கும் இப்பாடலின் பிரதி ஓர் உதாரணமாகும். முத்து முத்தான எழுத்துகள், வார்த்தையின் இடையிலேயே இடம் விட்டுப் பிரித்து எழுதும் அழகு, சிந்தையினின்று வரும் தெளிந்த கருத்துகள் அடித்தல் திருத்தலின்றிக் காகிதத்தில் உருப்பெறுதல் - இவைகளையேல்லாம் கவனிக்கும்போது, பாரதியைப் பற்றிப் பல விஷயங்களை உணருகிறோம்.
பாரதிக்கு பல சமயம் எழுதுவதற்கு நல்ல காகிதம், பேனா, மைகூடக் கிடைத்ததில்லை. அப்படிப்பட்ட நிலையிலும் அவரது எழுத்துகள் இவ்வளவு அழகும் உருவச் சிறப்பும் பெற்றிருப்பது இந்த எழுத்துகளின் மேன்மையை மேலும் அதிகரிக்கின்றன.
தமிழ்நாட்டுக் குழந்தைகள் தங்கள் கையெழுத்துப் படிவதற்கு பாரதியாரின் முத்து எழுத்துகளைப் பார்த்தெழுதிப் பழகலாம். அழகுற எழதிப் பழகினால், எதையும் அழகுறக் செய்து முடிக்கும் பழக்கமும் ஏற்படும்.