57. "தீப்பெட்டியிலும் ஸாதாரணமாக" |
தமது நூல்களை வெளியிடுவதற்கு பாரதி போட்ட திட்டமும் அதற்காக விடுத்த வேண்டுகோளும் அக்காலத்திய தமிழ் மக்கள் மனதைக் கவரவில்லை. தாம் எதிர்பார்த்தபடி எவரும் உதவி செய்ய முன்வராதது கண்டு பாரதி மனம் வெதும்பினார். ஆனால் அவர் இந்தத் திட்டத்தை அதன் பின்னரும் விட்டுவிடவில்லை.
கடயத்தில் இருந்தவரை வேறு திட்டங்களும் போட்டுப் பார்த்தார். அதன்பின், 1921ல் மீண்டும் சென்னைக்குத் திரும்பி "சுதேசமித்திர"னில் பணியாற்றிய சமயம், தமது நூல் பிரசுரத் திட்டத்தை மீண்டும் வற்புறுத்தி ஆங்கிலத்திலும் தமிழிலும் சுற்றறிக்கைகள் அனுப்பிப் பார்த்தார்.
சென்னையில் அப்போது ஸ்தாபிக்கப்பட்டிருந்த "தமிழ் வளர்ப்புப் பண்ணை"யின் பெயரால் தமிழ் விளம்பரமொன்று அச்சடிக்கப்பெற்றது. அதில், பாரதியின் கீர்த்தி "பூமண்டலம் நிறைந்த கீர்த்தி" என்று எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. அந்த விளம்பரப் பிரசுரம் கூறியதாவது:
"இவருடைய கீர்த்தி தமிழ்நாட்டில் மாத்திரமே பரவி யிருப்பதாக நினைத்துவிடக் கூடாது. இவருடைய பாட்டுக்கள் பல தெலுங்கு பாஷையில் மொழி பெயர்க்கப்பட்டு ஆந்திர தேசத்தாரால் கொண்டாடப்படுகின்றன. ஐர்லாந்து தேசத்து மகாகவிகளில் ஒருவரும், ஜபபான் தேசத்தின் ராஜதானியாகிய டோக்யோ நகரத்திலுள்ள இம்பீரியல் யுனிவர்ஸிடி என்ற ஸாம்ராஜ்ய ஸர்வகலா ஸங்கத்தில் இங்கிலீஷ் ஆசிரியராக விளங்கியவருமாகிய ஜேம்ஸ் எச்.கஸின்ஸ் என்பவர் இவருடைய தமிழ்ப் பாட்டுக்கள் சிலவற்றை இங்கிலீஷில் மொழிபெயர்த்து மேல் நாட்டார் வியப்புறும்படி செய்திருக்கிறார்.
"மேலும் மேற்படி கஸின்ஸ் என்ற வித்வான் 1916 டிஸம்பர் 8ஆம் தேதியன்று பிரசுரமான 'காமன்வீல்' என்ற பத்திரிகையின் வெர்ஹேரன் என்ற பெல்ஜியம் தேசத்துக் கவிச் சக்கரவர்த்தியைப் பற்றி எழுதியிருக்கும் நீண்ட வியாஸத்தினிடையே, மேற்படி வெர்ஹேரனையும் நம் இந்திய தேசத்துப் புலவர் சிலரையும் சீர்தூக்கிப் பார்க்குமிடத்தே பின் வருமாறு சொல்கிறார்:
"ஒரு வஸ்துவின் புறத்தே காணப்படும் ஸெளந்தரியத்தை மட்டுமன்றி அதனை ஊடுருவிப் பார்த்து, (அதில் மறைந்துகிடக்கும்) உள்ளழகையும் உணரும் சக்தி ஞான திருஷ்டிக்குரியதாகும். புறத்தோற்றம் வெறுமே வாய்க்கால் போன்றது, வெறும் அடையாள மென்பதை ஒரு புலவன் எத்தனைக் கெத்தனை தெளிவாகக் காண்கிறானோ அத்தனைக்கத்தனை அந்த வஸ்துவுக்கும் அந்தப் புலவனுக்கும் அதிக மஹிமை யேற்படும். இங்ஙனம் விமோசனம் படைத்த ஞான திருஷ்டியெய்தும் பருவத்தை வெர்ஹேரன் கவி மிகவும் நெருங்கி வந்தார். ஆனால் ரவீந்திரநாத டாகுர், ஸரோஜினி நாயுடு, அரவிந்த கோஷ், சுப்பிரமணிய பாரதி இவர்களுடைய கவிதையிலும் இவர்களைப் போன்ற ஞானத் தெளிவு கொண்ட ஐரிஷ் கவிஞர் சிலரின் கவிதையிலே யுந்தான் ஸெளந்தரிய தெய்வத்தைப் பிரத்தியேக்ஷமாசுக் கண்டு, அதை உண்மையாகவும் சுத்தமாகவும் உணர்த்தும் சக்தி காணப்படுகிறது' என்கிறார்.
"இங்ஙனம் கீர்த்தி வாய்ந்த கவியரசர் ஒருவர் தமிழ்நாட்டில் இருப்பது நமக்கெல்லாம் சாலமிகப் பெருமை யன்றோ? இவர் தமிழ்நாட்டையும் தமிழ் பாஷையையும் மேம்படுத்தியதற்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்?..."
பாரதி தமது நூல்களை நாற்பது புத்தகங்களாய் அச்சிடப் போகிறார் என்றும், ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் பிரதி அச்சடிப்பார் என்றும் குறிப்பிட்டு, "இந் நான்கு லக்ஷம் புத்தகங்களும் தமிழ்நாட்டில் மண்ணென்ணெய் தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக ஸாதாரணமாகவும் அதிக விரைவாகவும் விலைபட்டுப் போகுமென்பதில் சிறிதேளும் ஸந்தேஹத்துக்கிடமில்லை" என்றும் தமிழ் வளர்ப்புப் பண்ணையின் பிரசுரம் வற்புறத்தியது.
பாரதியின் திட்டத்துக்குப் பொருள் கடனாகவோ நண்கொடையாகவோ தந்து "எக்காலத்திலும் அழியாத புண்ணியம்" அடையும்படியும் இப் பிரசுரம் கோரிக்கை விடுத்தது. "ஸமயத்தை மதிமயக்கத்தாலே தவறவிட்டுவிடாதீர்கள்! அன்பர்களே! உடனே, உடனே, உடனே தத் தம்மால் இயன்ற தொகைகளை அடியிற்கண்ட ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியாரின் விலாசத்துக்கனுப்புங்கள். உங்களுக்கு மஹாசக்தி அமர வாழ்க்கை தருக!" என்றும் இப் பிரசுரம் கூறிற்று.
ஆனால் தமிழ் மக்கள் பாரதிக்குப் போதிய ஆதரவு தரவில்லை. பிரசுரத் திட்டமும் நடைபெறவில்லை. 36 ஆண்டுகளுக்குப் பின் 1957ல் கூட நிறைவேறியிராத இந்தக் கனவை 1921ல் தமிழ் மக்கள் நிறைவேற்றவில்லையென்ற குறைசொல்ல இடமேது!
58. நோபல் பரிசுக்குப் போட்டி |
"மேதை என்பது தொண்ணூற்றொன்பது சதவிகிதம் உழைப்பு; ஒரே ஒரு சதவிகிதம்தான் வரப் பிரசாதம்" என்று எடிஸன் என்ற அமெரிக்க மேதை கூறினான்.
பாரதி விஷயத்தில் இது மிகவும் பொருந்தும். தமக்கு அளவற்ற வரப் பிரஸாதம் இருந்தும், அவர் அதற்குமேல் உழைப்பும் உண்டென்று ஓயாமல் காட்டி வந்தார்.
தமது புத்தகங்களை வெளியிடத் தாம் வகுத்த திட்டத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை யென்றதும், அவர், சளைக்காமல், "அமிர்தம்" என்ற பெயரில் புதிய பத்திரிகையொன்று ஆரம்பிக்க முயன்றார். இந்தப் பத்திரிகை சம்பந்தமாக "சுதேசமித்திர"னில் 1920 ஆகஸ்ட் 2ஆம் தேதி விளம்பரமும் செய்தார்.
தமது வாழ்நாளின் கடைசி வருஷங்களில் பாரதி சாகாமை என்ற விஷயத்தில் அளவு கடந்த கவனம் செலுத்தலானார்.
1919ம் வருஷம் டிஸம்பர் முடிவில், அதாவது தாம் இறப்பதற்கு ஒன்றேகால் வருஷத்துக்கு முன்பு வெளியான "சுதேசமித்திரன் ஆண்டு மல"ரில் "காலனுக் குரைத்தல்" என்ற பாடல் பிரசுரமாயிற்று. "காலா உன்னைச் சிறு புல்லென மதிக்கின்றேன்; சற்றே என் காலருகே வாடா, உனை மிதிக்கின்றேன்" என்று காலனைக் காறி உமிழ்கின்றது இப்பாட்டு. முன்பு மார்க்கண்டனைப் பிடிக்கப் போய் நீ பட்ட பாட்டை மறந்தனையோ என்றும் ஏளனம் செய்கிறது.
"ஏசு செத்தான்; கண்ணன் மாண்டான்; ராமன் இறந்தான் - 'பார்மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்'" என்று பாரதி அறுபத்தாறிலும் கவி வலியுறுத்துகிறார்; மரணத்தை வெல்ல உபாயமெல்லாம் சொல்கிறார்.
பாரதிக்கு தமது அந்திய காலம் நெருங்கிவிட்டதெனத் தோன்றிற்றா? மார்க்கண்டன் போலத் தாமும் என்றும் சிரஞ்சீவியாக வாழ விரும்பினாரா?
1920 ஸெப்டம்பர் முதல் தேதியிலிருந்து "அமிர்தம்" பத்திரிகை ஆரம்பமாகுமென்று நண்பர் ஸ்ரீநிவாசவரதனுக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி எழுதிய கடிதத்தில் பாரதி கூறுகிறார். "நன்கொடை, சந்தாக்கள், கையிலுள்ள பொருள் எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு" இரண்டு மூன்று தினங்களில் வந்து சேரும்படியும் கடிதம் துரிதப்படுத்துகிறது. "இயன்றவரை பணத்துடன் வாருங்கள்" என்று மீண்டும் கடித முடிவில் வற்புறுத்துகிறார் பாரதி.
இதையெல்லாம் கவனிக்கும்போது, தமது திட்டங்களுக்குப் போதிய வெல்வமில்லாக் குறை அவரை வாட்டி வதைப்பதை ஒருவாறு அறிந்து கொள்கிறோம்.
புதிய பத்திரிகை முயற்சியின் நடுவே பாரதி அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களுக்கும் பிரசங்கம் செய்யப் போய் வருகிறார். 1920 ஜூன் மாதம் 20ஆம் தேதி வாக்கில், ரவணசமுத்திரம், பொட்டல் புதூர் என்ற இரு ஊர்களுக்குச் சென்று, அங்கே முஸ்லிம் சகோதரர்களிடையே இஸ்லாம் மார்க்கத்தின் மகிமைபற்றி பாரதி பேசுகிறார். பொட்டல்புதூர் முஸ்லிம் வாலிப சகையில் நபிகள் நாயகம் பிறந்த தினத்தன்று "அல்லா, அல்லா, அல்லா!" என்று தாம் பாடியுள்ள பாட்டையும் பாரதி அரங்கேற்றுகிறார்.
பாரதி இந்த ஆண்டு இருந்த மனோநிலைக்கு உதாரணமாக இன்னொரு சம்பவமும் கூறப்படுகிறது. 1920ல் ரவீந்திரநாத் டாகுர் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது பாரதி திருநெல்வேலி போயிருந்தார். ரவீந்திரர் தென்னாடு வந்திருக்கும் சேதி கேட்டு, அருகிலிருந்த நண்பரிடம், "மதுரைக்குப் புறப்பட வேண்டும். ரயிலில் சீட்டு வாங்கு" என்றாராம். நண்பர் எதற்கெனக் கேட்க, "நான் தாகூரோடு பேசி வென்று நோபல் பரிசைத் தமிழுக்குப் பெற்றுத் தரப்போகிறேன்" என்றாராம். எப்படி என்று நண்பர் கேட்டார். "மதுரை சென்று தாகூரிடம் போய், 'நீர் வங்கக் கவி, நான் தமிழ்க் கவி. விக்டோரியா ஹாலில் கூட்டம் போடுவோம். உமது நோபல் பரிசைச் சபை முன்பு வையும். இருவரும் பாடுவோம். ஜயித்தவர் பரிசை எடுத்துக்கொள்ளலாம். எனது பாடலையே ஜனங்கள் சிறந்ததென மதிப்பார்கள். உமது கையாலேயே அப் பரிசை எனக்குத் தர வேண்டும்' என்பேன்" என்றாராம் பாரதி.
நண்பருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. "தாகூர் வங்காளியில் பாடுவார்; நீங்களோ தமிழில் பாடுவீர்கள். எப்படிப் போட்டிச நடத்த முடியும்?" என்றாராம். உடனே பாரதி "அட சனியனே! கடவுள் தமிழனுக்கு எல்லாம் வைத்தான்; புத்தியை மட்டும் வைக்கவில்லையே! தமிழுக்கு ஏன் நோபல் பரிசு வரக் கூடாது? தமிழனே தமிழைத் தாழ்வாக மதிக்கலாமா?" என்று ஆத்திரத்துடன் பேசினாராம். தமிழை உலகம் போற்றும்படி செய்ய வேண்டும் என்ற நினைப்பு பாரதிக்கு எப்போதும் மங்காச் சுடராக இருந்தது.