சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
14
27. சென்னையில் செய்த விமானம்
முன் பக்கம்
   

பாரதி புதுவை வந்தவுடன் அங்கே அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் இந்திய உளவாளிகள் புதுவையில் நிரந்தரக் கூடாரமடித்துக் கொண்டார்கள். பாரதியும் மற்றவர்களும் என்னவோ ரகசியத் திட்டம் போடுவதாக நினைத்துக்கொண்டு, அவர்களை வேவுகாரர்கள் சதா நிழல்போல் தொடர்ந்தார்கள். கான்பகதூர் ஜி.எஸ்.அப்துல் கறீம் என்ற பிரிட்டிஷ இந்தியப் போலீஸ் அதிகாரி இந்த விசேஷ வேலைக்கு அதிகாரியானார். பாப்பா ராவி நாயுடு என்பவர் மற்றொரு பிரிட்டிஷ் இந்தியப் போலீஸ் அதிகாரி. இவர் சென்னையிலிருந்த போதே பாரதிக்கு இவரைத் தெரியும்.

பிரெஞ்சு இந்தியாவின் தபால் இலாகா பிரிட்டிஷ் நிர்வாகத்திலேயே நடந்தது. அது இந்த உளவாளிகளுக்கு மிக வசதியாயிற்று. பாரதிக்கும் "இந்தியா"வுக்கும் வரும் தபால்களை வழிமறித்துத் தணிக்கை செய்தார்கள். வரும் மணியார்டர்களைக் கூடத் தடுத்தார்கள். பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து பணம் அனுப்புபவர்கள் பெயரைக் கவனித்து, அங்கே அவர்களை மிரட்டச் செய்தார்கள். இவ்வளவு நெருக்கடியிலும் "இந்தியா" சிறப்பாக நடந்து வந்தது. பத்திரிகை அளவில் பெரிதாகி, பல சமயங்களில் விசேஷ அனுபந்தங்களுடன் வெளி வந்தது.

இப்படி 1909ல் வெளிவந்த அனுபந்தம் ஒன்றில் "சென்னையில் செய்த விமானம்" என்றொரு செய்தியும் விமானத்தின் படமும் வெளியாகியிருக்கின்றன. இவ் விமானம் சென்னையில் டாஞ்சலிஸ் திட்டப்படி ஸிம்ப்ஸன் கம்பெனி பட்டறையில் "தமிழ் வேலைக்கார்களால்" கட்டப் பெற்றது, கட்டியது தமிழ் வேலைக்கார்கள் என்று நினைவூட்டுகிறார் பாரதி. எதையெடுத்தாலும், அதிலும் சாட்டுப் பெருமையை, நாட்டு மக்கள் பெருமையைக் கண்டு அதை உரக்க வெளியிட்டு மக்களுக்குத் தம் பலம் தெரியும் வகையில் பேனா ஓட்டியவர்களில் மகா சமர்த்தர் பாரதி.

இந்த விமானம் யந்திரத்துடன் மேலே ஏறிப் பறந்ததாகவும் செய்தி கூறுகிறது. உலகில் மதன் முதலாக ரைட் சதோதரர்கள் விமானம் கட்டிப் பறந்ததாகவும் செய்தி கூறுகிறது. உலகில் முதன் முதலாக ரைட் சகோதரர்கள் விமானம் கட்டிப் பறந்ததற்கு மூன்றரை வருஷங்களுக்குள் சென்னையில் இப்படி ஒரு விமானம் கட்டி, அதில் வெற்றிகரமாய் பறந்தார்களென்பது அதிசயமல்லவா?

இதற்கிடையில் பாரதி பிரிட்டிஷ் இந்தியவுக்கு திரும்பும்படி செய்யப் பல முற்சிகள் நடந்தன. திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையின் தூண்டுதலின் பேரில் எட்டயபுரம் ஜமீன்தார் பாரதியின் தாய் வழிப் பாட்டனாரைப் புதுச்சேரிக்கு அனுப்பி, பாரதியை எட்டயபுரத்துக்குத் திருப்பியழைத்து வரும்படியும், பாரதிக்குத் தாம் சேலை தருவராயும் சொல்லியனுப்பினார்.

பாரதிக்குத் தம் பாட்டனார் ராமஸ்வாமி அய்யரிடம் மிகப் பிரியம். பாட்டனார் பாட்டியார், மாமா சாம்பசிவம் மூவரும் புதுவை வந்தது அவருக்கு எல்லையற்ற சந்தோஷம். சாத்தூரைக்கூடத் தாண்டியிராத தாத்தா தனக்காகப் புதுச்சேரியே வந்துவிட்டதில் அவர் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவர்கள் வந்த சமாச்சாரத்தைக் கேட்டதும், அவரது முகம் இருண்டது. மீசையில் கைவைத்துக் கொண்டே, "பாஞ்சாலங்குறிச்சியை முன்னர் காட்டிக் கொடுத்துப் பரிசு வாங்கின மாதிரி என்னையும் காட்டிக் கொடுத்துப் பரிசு வாங்கலாம் என்ற நினைப்பு போலிருக்கு ஜமீன்தாருக்கு! "ஞாபகமாய் இருக்கச் சொல்லுங்கள்!" என்று பதிலளித்தார்.

பிறகு, "வெள்ளைக்கானுக்கு என்னிடம் என்னடா இவ்வளவு கருணை! என் தாத்தாவையும் பாட்டியையும் பார்க்கும்படி செய்துவிட்டானே! இதற்கு நான் என்னடா அவனுக்கு சன்மானம் பண்ணப் போகிறேன்!" என்று ஆர்ப்பரித்தார்.

தாத்தாவும் பாட்டியும் மாமாவும் சுமார் ஒன்றரை மாத காலம் புதுவையில் தங்கும்படி செய்தார் பாரதி. தத்தாவின் வற்புறுத்தலின்பேரில், மகாராஜாவுக்கு ஒரு கடிதம் பட்டும் படாமலும் எழுதியனுப்பினார். ஆனால் அதற்குமேல் அதைப்பற்றிச் சிந்தனை செய்ததாய்த் தெரியவில்லை.

"கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ" என்றும், "பதம் இரண்டும் மாறிப் பழி மிகுந் திழிவுற்றாலும், சுதந்திர தேவி நின் பாதம் தொழுதிடல் மறக்கிலேனே" என்றும் பாடிய கவி வேறு என்ன செய்திருக்க முடியும்?

28. 'இந்தியா', 'விஜயா' நின்றன
முன் பக்கம்

பலவித புதுமைகள் நிறைந்த "இந்தியா" நன்றாக வளர்ச்சியுற்று வந்தது. சந்தாவை அதிகரியுங்கள், பத்திரிகையை வாரம் ஒருமுறை யாக்குங்கள் என்று வாசகர்கள் கடிதம் எழுதினார்கள். குறைந்தது 1,500 பேர் இதற்கு சம்மதம் தெரிவித்தால் வாரம் இருமுறையாக்குவதாக ஆசிரியர் முடிவில் அறிவித்தார். "அடுத்த யுகாதியிலிருந்து" (அதாவது 1910 ஏப்ரலில்) "இந்தியா" வராம் இருமுறையாகுமென்று 1910 ஜனவரி 24ஆம் தேதி இதழில் அறிவிப்பு வெளியாயிற்று.

இது பிரிட்டிஷ் இந்திய அதிகார வர்க்கத்துக்கு ஆத்திரமூட்டியிருக்கவேண்டும். பாரதியின் வீர மொழிகளை அடக்கிவிட அவர்கள் முயற்சி செய்யச் செய்ய, அவருக்கு மக்கள் ஆதரவு அதிகரிப்பதையே கண்டார்கள். எப்படியாவது "இந்தியா"வை ஒடுக்கிவிடவேண்டும் என் துடித்தார்கள்.

அந்தச் சமயத்தில் புதிதாக பத்திரிகை அடக்குமுறைச் சட்டம் ஒன்றை அமுலுக்குக் கொண்டு வந்தார்கள். இந்தச் சட்டத்தைப் பிரயோகித்து, "இந்தியா" பிரிட்டிஷ் இந்திய எல்லையில் நுழையக் கூடாது என்று தடை வித்தார்கள்.

இந்தத் தடைக்கு அரசாங்கம் காட்டிய காரணம் வேடிக்கையாக இருந்தது. ஐந்து மாதத்துக்கு முன்னால் "இந்தியா" பத்திரிகையில் ஒரு கட்டுரையும் படமும் வந்திருந்தன. அதுவே தடைக்குக் காரணம் என்று அரசாங்கம் நொண்டிச் சாக்கு சொல்லிற்று. குறிப்பிட்ட கட்டுரை பாரதி எழுதியது. இந்தியாவில் மக்கள் பட்டினி கிடக்கையில் வெளி தேசங்களுக்கு இங்கிருந்து கோதுமை ஏற்றுமதி செய்கிறிர்களென்று பிரிட்டிஷ் அரசாங்கத்தை பாரதி தாக்கியிருந்தார்; எலும்பும் தோலுமான இந்தியர்கள் பட்டினி கிடக்க, ஒரு கப்பல் இந்திய கோதுமையை ஏற்றிச் செல்வதாகக் கார்ட்டூன் இருந்தது.

"இந்தியா"வுக்குத் தடை விதித்த சமயமே தினசரி "விஜயா"வுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் இரு பத்திரிகைகளுக்கும் பிரிட்டிஷ் இந்தியாவில்தான் வாசகர்கள் அதிகம். பிரிட்டிஷ் இந்தியாவில்தான் சந்தாதாரர்களும் விளம்பரதாரர்களும் இருந்தனர். பத்திரிகைகளும் வேறு வழியின்றி நிறுத்தப்பட்டன.

"இந்தியா"வும் "விஜயா"வும் நிற்பதற்கு சில காலம் முன்பே இம்மாதிரி நெருக்கடி ஏற்படலாமென எதிர்பார்த்திருந்தார்கள். ஆதலால், பாரதி "இந்தியா"விலும் "விஜயா"விலும் எழுதவில்லை என்று அதிகாரிகள் நினைக்கும்படி செய்வதற்காக, அவர் "சூரியோதயம்" என்ற ஒரு புதுப் பத்திரிகைக்கு ஆசிரியரானார். "சூரியோதயம்" ஸைகோன் சின்னையா ரத்னசாமி நாயுடு என்ற அச்சாபீஸ் முதலாளியால் நடத்தப்பட்டது.

"இந்தியா" பத்திரிகையில் பாரதிக்கு உதவியாக எஸ்.ஹரிஹர சர்மா, நாகஸ்வாமி ஆகிய இரு இளைஞர்கள் தொண்டு புரிந்தனர். சர்மா உப தலையங்கங்களை எழுதி வந்தார்; நாகஸ்வாமி கணக்கு வழக்குகளைக் கவனித்தார். பாரதி "சூரியோதயம்" பத்திரிகையில் முனைந்த சமயம் வேங்கட ஆரியா என்ற அனுபவம் நிறைந்த பத்திரிகையாளர் "இந்தியா"வின் மாற்று ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

அணையும் சுடர் பிரகாசித்தெரிவது போல, "இந்தியா" நின்று போவதற்குமுன் அது எல்லா அம்சங்களிலும் உயர்ந்து விளங்கியது. கார்ட்டூன்கள் போடுவதற்கு ஒரு சித்திரக்காரர் சென்னையிலிருந்து தருவிக்கப்பட்டார்; தாமே சித்திரக்காரரானதால் அவர் ஈயத்தில் வெட்டிய ப்ளாக்குகள் ஆசிரியரின் கருத்துக்களைச் சிறப்பாகப் பிரதிபலித்தன.

இந்தச் சமயம், "இந்தியா" 1910 பிப்ரவரி 26ஆம் தேதி இதழில், ஒரு வேவுகாரன் தம்மைப் பிரிட்டிஷ் இந்தியப் போலீஸாரிடம் பிடித்துக் கொடுக்கச் செய்த சூழ்ச்சி வியர்த்தமானதைப் பாரதியாரே தலைங்கத்தில் குறித்திருக்கிறார்.

1910 மார்ச் 5ஆம் தேதி இதழின் தலையங்கம் "சிற்பமும் கவிதையும்" என்ற பொருள் பற்றி இருக்கிறது. "இதைக் குறித்து எழுதினால் பத்திரிகைச் சட்டம் நம்மை அண்டாது. ஆகையால் இதையாவது நம் ஜனங்களுக்குச் சொல்வோம்" என்று கிண்டல் செய்கிறார் பாரதி.

1908 அக்டோபர் மாதம் தோன்றிய புதுவை "இந்தியா", ஒன்றரை வருஷங்களுக்குப் பின், 1910 மார்ச் 12ஆம் தேதி இதழுடன் முடிவுற்றது. இந்த ஒன்றரை ஆண்டுகளில் வேறு பல காரியங்களையும் பாரதி சாதித்து வந்தார் 1909ஆம் ஆண்டு மார்ச் மாத சமயம் "ஸ்வதேச கீதங்க"ளின் இரண்டாம் பாகமாக "ஜன்ம பூமி" என்ற பாடல் தொகுதி பிரசுரமாயிற்று.

"இந்தியா"வுக்கு நேர்ந்த கதி, சீக்கிரமே மற்ற பத்திரிகைகளுக்கும் நேர்ந்தது. 1910ஆம் வருஷம் முடிவதற்குள், தமக்கென ஒரு பத்திரிகை இல்லாத சங்கடமான நிலைமையை அடைந்துவிட்டார் பாரதி.

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur