யானையிடமிருந்து பாரதி உயிர் தப்பிப் பிழைத்தாரென்றாலும், அந்தச் சம்பவத்துக்குப் பின் வெகுநாளாகவில்லை, அவரை யமன் வெறொரு வகையில் அழைத்துச் செல்ல வந்துவிட்டான். யானைச் சம்பவத்துக்குப் பின்னர் பாரதிக்கு வயிற்றுக் கடுப்பு நோய் கடுமையாய்ப் பிடித்துக்கொண்டது.
பாரதி உடல் நலமற்றிருந்தது அவரது நண்பர்கள் பலருக்குக் உடனே தெரியவில்லை. பரலி சு.நெல்லையப்ப பிள்ளைகூட, இவ்விஷயத்தை ஸெப்டம்பர் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகலில்தான் அறிந்தார். லக்ஷ்மண அய்யர் என்ற ஒரு நண்பருடன் நெல்லையப்பர் பாரதியைப் பார்க்கச் சென்றார்.
அதற்கு முன்னதாக, அப்போது சென்னை "தேசபக்தன்" ஆசிரியராக இருந்து கைது செய்யப்பட்ட வ.வே.ஸு.அய்யர் பாரதியைப் பார்த்துச் செல்ல அனுமதி பெற்று வந்திருந்தார். "பாரதி, நீ நோய்க்கு மருந்து சாப்பிடமாட்டே னென்கிறாயாமே. சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக்கொள்ள வேண்டாமா?" எந்று நல்ல வார்த்தை கூறிச் சென்றார் வ.வே.ஸு.அய்யர்.
நெல்லையப்பர் வந்து பார்த்தபோது பாரதியின் உடல் நிலை கவலைக்கிடமா யிருப்பதை உணர்ந்தார். நெல்லையப்பர் அந்த நாளும் இரவும் அங்கேயே இருந்தார். பாரதியின் கடைசி நாளை அவர் விவரிக்கிறார்:
"பாரதி மயக்க நிலையில் கிடந்தார். திருவல்லிக்கேணி மாடவீதியில் குடியிருந்த டாக்டர் ஜானகிராம் என்ற வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்து காட்டினோம். (இவர் ஆந்திர கேசரி ஸ்ரீமான் தங்குதூரி பிரகாசத்தின் தம்பியென்று எனது நினைவு) அவர் பாரதியார் உடம்பைப் பரிசோதித்து, ஏதோ மருந்து கொடுக்க விரும்பினார். ஆனால் பாரதியார் மருந்தை அருந்துவதற்குப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். டாக்டர் அவரிடம் பேசி மருந்தை அருந்துமாறு வாதாடியபொழுது பாரதியார் தமக்கு எந்த மருந்தும் வேண்டாம் என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார். வைத்தியர் ஏமாற்றத்துடன் திரும்பினார். இரவெல்லாம் பாரதியார் மயக்க நிலையிலேயே கிடந்தார்.
"பாரதியார் நிலையை அறிந்த நானும் அன்பர் லக்ஷ்மண அய்யரும் இரவில் அங்கேயே தங்குவதென முடிவு செய்தோம். எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி எழுந்து, யமனுடன் போராடிக் கொண்டிருந்த பாரதியாரைக் கவனித்துக் கொண்டிருந்தோம். பின்னிரவில் சுமார் இரண்டு மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கிவிட்டது. உலகத்தாருக்கு அமரத்துவ உபதேசம் செய்த பாரதியார் மரணம் அடைந்தார்.
கரவினில் வந்த உயிர்க் குலத்தினை அழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்
என்றும்
காலா உனை நான் சிறுபுல்லென மதிக்கின்றேன் - என்றன்
காலருகே வாடா! சற்றேஉனை மிதிக்கின்றேன், அட (காலா)
என்றும் பாடிய பாரதியார் காலனுக்கு இரையானார்.
"பாரதியாரின் மரணச் செய்தியைப் பொழுது விடிந்தவுடன் நகரத்திலுள்ள நண்பர்களுக்குச் சொல்லி அனுப்பினோம். எங்களுக்கு நண்பர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் மிக மிகச் சிலரே. அப்பொழுது மண்ணடி ராமசாமித் தெருவில் குடியிருந்த வக்கீல் சா.துரைசாமி அய்யர், ஹிந்திப் பிரசாரகர் ஹரிஹர சர்மா, வி.சர்க்கரைச் செட்டியார், அப்பொழுது கிறிஸ்தவப் பாதிரியாகப் புரசைப்பாக்கத்தில் ஒரு பங்களாவில் குடியிருந்த எதிராஜ், சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் திருமலாச்சாரியார் ஐவரும் குறிப்பிடத் தக்கவர்கள். பாரதியார் குடும்பத்தக்கு எப்பொழுதும் ஆதரவு புரிந்து வந்த வக்கீல் துரைசாமி அய்யரே பாரதியாரின் கடைசி நாள் கிரியைகளுக்கும் உதவி புரிந்தார்.
"பாரதியார் உடலை காலை எட்டு மணிக்குத் திருவல்லிக்கேணி மயானத்திற்குக் கொண்டு போனோம். நானும் லக்ஷ்மண ஐயரும், குவளை கிருஷ்ணமாச்சாரியார், ஹரிஹர சர்மா, ஆர்யா முதலியவர்களும் பாரதியார் பொன்னுடலை இறுதியாகச் சுமந்து செல்லும் பாக்கியம் பெற்றோம். பாரதியார் உடல் மிகச் சிறிது. அன்று தீக்கிரையான அவர் உடல் நிறை சுமார் 100 பவுண்டுக்கும் குறைவாகவே யிருக்கும். இன்று உலகம் போற்றும் கவிச் சக்கரவர்த்தியுடன் அன்று அவரது கடைசிநாளில் திருவல்லிக்கேணி மயானத்துக்குச் சென்றவர்கள் சுமார் இருபது பேருக்கும் குறைவாகவே இருக்கலாம். பாரதியாரின் பொன்னுடலை அக்னி தேவரிடம் ஒப்புவிக்கும் முன்னர் நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா சிறியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார்."
பாரதிக்கு அன்று கர்மம் செய்தவர் ஹரிஹர சர்மாவாகும்.
பல நூற்றாண்டுக்கோர் முறை தோன்றும் மகா மேதை ஒருவரின் வாழ்வு இவ்வாறு முடிவெய்தியது. தம்மிடையே ஒரு அதிசய புருஷர் வாழ்ந்தாரென அவர் காலத்திய தமிழுலகம் அறியவில்லை; நண்பர் சிலரே உணர்ந்திருந்தனர்.
தென் தமிழ் நாட்டில் எட்டயபுரத்தில் 1982ஆம் ஆண்டு டிஸம்பர் மாதம் 11ஆம் தேதி தோன்றிய அம்மேதை, சென்னை திருவல்லிக்கேணியில் 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி அதிகாலையில் சுமார் 2 மணிக்கு பூதவுடல் நீத்துப் புகழுடல் எய்தினார். அப்போது அவருக்கு 39 வயது நிறையவில்லை!
1921, ஸெப்டம்பர் 12ஆம் தேதி, திங்கட்கிழமை, (துன்மதி வருஷம் ஆவணி மாதம் 28ஆம் தேதி), "சுதேசமித்திர"னில், 6 ஆம் பக்கம், 'நகரச் செய்திகள்' பத்தியில் கடைசிச் செய்தியாக இது வெளிவந்தது:
தென்னாட்டுக் கவிசிரேஷ்டர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி மரணம்
ஒரு வாரமாக ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி தேக நோய் கொண்டு திருவல்லிக்கேணியில் அசௌக்கியமாயிருந்து திடீரென்று நேற்று இரவு 1 மணிக்கு இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகமடைந்தார். அவர் இறந்த செய்தி தெரிந்தவுடன் ஸ்ரீமான்களான புதுச்சேரி ஸ்ரீநிவாஸாச்சாரியார், திருமலாச்சாரியார், ஹரிஹர சர்மா, சிருஷ்ணசாமி சர்மா, சின்னஸ்வாமி, நெல்லையப்பர், நீலகண்டன் முதலான பலர் வந்தனர், செய்ய வேண்டிய காரிய்ங்களுக்கு ஆரம்பஞ்செய்து தகனக்கிரியையும் நடந்தது. ஹரிஹர சர்மா, கிருஷ்ணசாமி சர்மா முதலானவர்கள் பிரேதத்தைத் தாங்கிக்கொண்டு சுடுகாடு சென்று, அங்கு, தகனத்திற்குச் சற்று முன்னர் ஸ்ரீமான் சக்கரைச் செட்டியார், கிருஷ்ணசாமி சர்மா, இராமச்சந்திர அய்யர் இவர்கள் தமிழில் பேசிய பிறகு, சுரேந்திர நாத ஆரிய தெலுங்கில் பேசினார். பாரதியார் இயற்றிய கீதங்கள் பாடின பிறகு தீ மூட்டப்பட்டது. பாரதியார் ஆவி நற்கதியடையும்படி எல்லோராலும் பிரார்த்திக்கப்பட்டது."
அன்றைய தினமே "சுதேசமித்திரன்" இரண்டாவது தலையங்கம் பாரதியின் மரணத்தைப் பற்றிக் குறிப்பிட்டது:
"காலஞ்சென்ற ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி"
"மக்கள் வாழ்வு நீர்மேல் குமிழிபோலும்! தமிழ் நாடு போற்றும் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் இவ்வுலக வாழ்வை நேற்றிரவு துறந்து விண்ணவருக்கு விருந்தாகிவிட்டார் என்ற செய்தியை அறிவிக்க நமது மனம் பதறுகிறது. சில தினங்களாக நோயினால் வருந்திக் கொண்டிருந்த அவரை மறுபடியும் ஸ்தூல சரீரத்தில் பார்க்கப் போகிறதில்லை என்று நாம் நினைக்கவில்லை. திங்கட்கிழமையன்று 'மித்திரன்' வேலைக்கு வந்துவிடுவதாகச் சில தினங்களுக்கு முன் சொல்லியனுப்பிய அவர் திங்கட்கிழமையன்று சாம்பலாகிவிட்டது என்ன கொடுமை! 39 வயதுக்குள் தமது கவித்திறமையாலும் தேசபக்தியாலும் தமிழ் நாட்டை வசப்படுத்திவிட்ட இச் சிறு பிள்ளையின் பிரிவை தமிழ் நாடு எப்படி சகிக்குமோ அறியோம். அன்பே உருவெடுத்தாற்போன்று விளங்கிய அவரைப் பிரிந்து மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் எப்படிப் பொறுத்திருப்பாரோ கொடிய எமனுக்குத்தான் தெரியும்.
"அவரது சரித்திரச் சுருக்கம் வேறிடத்தில் பிரசுரம் செய்யப்டுகிறது. பள்ளிக்கூடத்தை விட்டுக் கிளம்பியதும் ஸ்ரீமான் ஜீ.சுப்பிரமணிய அய்யரிடத்தில் மித்திரன் உதவி ஆசிரியராக அமர்ந்து வேலை செய்து வரும் நாளில் 'இந்தியா' என்ற வாரப் பத்திரிகை ஒன்றைத் தாமே நடத்தி வந்தார். அதன் மூலமாக ராஜாங்கத்தாருடைய கோபத்துக்கு ஆளாகி சுமார் 10 வருஷகாலம் பிரஞ்சு இந்தியாவில் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. பரபரப்பாக வேலை செய்யும் இயல்புடைய ஒருவர் சும்மா இருக்கும்படி நேர்ந்த காரணத்தால், அவருடைய தேகம் மெலிந்து போய் பழைய பாரதியின் சாயல் போல் இரண்டு வருஷங்களுக்கு முன் அவர் புதுச்சேரியிலிருந்து மீண்டு வந்தார். சிறிது காலம் தம்முடைய ஊராகிய கடயத்தில் இருந்து விட்டு தம் ஆசையைக் கவர்ந்த பத்திரிகை வேலைக்குத் திரும்பி வந்து மித்திரன் உதவியாசிரியர்களில் ஒருவராகி தேச ஊழியம் செய்துவரும் நாளில் திடீரென்று நம்மையெல்லாம் விட்டு மறைந்து போய்விட்டார். அவர் போய்விட்டாராயினும் அவருடைய அரிய பாட்டுகளும் அவருடைய கீர்த்தியும் எந்நாளும் பிரகாசிக்குமென்பதில் சந்தேகமில்லை. புதுச்சேரியில் வாழ்ந்து வந்த காலத்திலும் சக்திதாஸன் என்ற புனைப் பெயர்களுடன் அவர் மித்திரனுக்கு அடிக்கடி எழுதி வந்ததை இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகிறோம். 'இந்தியா' என்ற வாரப் பத்திரிகையை அவர் நடத்தி வந்த காலத்தில் படித்தவர்கள் அவரது திறமையை நன்கு அறிந்திருப்பார்கள். அன்னமர்த்தனம் செய்துகொண்டு நூறு வயது வாழ்வதைவிட லோகோபகாரமாகச் சின்னள் வாழ்வது சிறந்ததேயாகுமாயினும், தம்முடைய மனைவி மக்களுக்கு ஆதரவெதுவுமில்லாத நிலைமையில் பாரதியார் காலகதியடைந்து விட்டது மிகவும் பரிதாபகரமான விஷயம். 'வேதம் நிறைந்த தமிழ்நாடு, வீரம் செறிந்த தமிழ்நாடு' என்று தமிழ் நாட்டின் பெருமையைப் பாடின ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் குடும்பத்தைக் காக்க தமிழ்நாடு முன்வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். அவருடைய ஞாபகத்தைப் பாராட்டி பகல் இரண்டு மணியுடன் வேலை நிறுத்தப்படுகிறதால் ஏற்பட்ட சமாசாரங்கள் இன்று மித்திரனில் பிரசுரமாகமாட்டா."
1921 ஸெப்டம்பர் 12ஆம் தேதி "ஹிந்து" பத்திரிகையிலும் ஒரு உப தலையங்கம் வெளியாயிற்று; செய்தி தனியாகப் பிரசுரிக்கப் படவில்லை. "ஹிந்து" தலையங்கம் கூறியதாவது:
"We regret to learn of the death of Vara Kavi Subramaniya Bharati at his residence in Triplicane last night. the deceased was an ardent nationalist, a great thinker, a shining speaker and a powerful writer. He is the author of a number of Tamil works including 'National Sons'. His recitation of his national Songs infused genuine Patriotism in the hearts of his listeners. He, like many other Patriots of India, was an exile in Pondicherry for some years, because his patriotic speeches did not please the Gods in power. He has for some time past been ailing and by his premature death the country has lost a born poet and a sincere patriot."
இதன் மொழி பெயர்ப்பு:
"வரகவி சுப்பிரமணிய பாரதி நேற்றிரவு திருவல்லிக்கேணியில் தமது இல்லத்தில் காலமானது கேட்டு வருந்துகிறோம். காலம் சென்ற பிரமுகர் தீவிர தேசீயவாதி, கூர்ந்த சிந்தனையாளர், மனம் கவரும் பேச்சாளர், வல்லமையான எழுத்தாளர். "தேசீய கீதங்கள்" உள்ளிட்ட பல நூல்களை அவர் செய்திருக்கிறார். தமது தேசீயப் பாடல்களை அவர் பாடினால் கேட்போர் உள்ளத்தில் உண்மையான தேச பக்தி உண்டாகிவிடும். அவருடைய தேச பக்தி நிறைந்த பேச்சுகள் அதிகார தெய்வங்களுக்குப் பிடிக்கவில்லை யென்றதனால், அவர், மற்றும் பல இந்திய தேசபக்தர்களைப் போல, புதுச்சேரியில் அஞ்ஞாதவாசம் செய்ய வேண்டியிருந்தது. கொஞ்ச காலமாகவே அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருடைய அகால மரணத்தினால் நாடு ஒரு பிறவிக் கவியையும் மனப்பூர்வமான தேச பக்தரையும் இழுந்துவிட்டது."