சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
12
23. காந்திக்கு அஞ்சலி - 1908ல்
முன் பக்கம்
   

இந்தியத் தலைவர்களில் மகாத்மா காந்தியின் பெருமையை முதன் முதலில் உணர்ந்த வெகு சிலருள் பாரதியாரும் ஒருவர். பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம் சந்திர காந்தி 1908ல் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் நலனுக்காகப் போராட்டம் நடத்தியபோதே காந்தியின் மேன்மையை உணர்ந்து அவரை "இந்தியா"வில் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் நம் கவிஞர். தென் ஆப்பிரிக்க இந்தியர் போராட்டத்துக்காக நிதி வசூல் செய்து, தாமே ஐந்து ரூபாய் கொடுத்து, பணத்தைத் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினார் பாரதி.

காந்தியின் ஸத்தியாக்கிரக இயக்கம் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால் இந்தியப் பண்பாடு நிறைந்தது, அவரே வருங்காலத் தலைவர் என்று கூட பாரதி தீர்க்க தரிசனமாய்க் கண்டிருக்கிறார்.

1908ல் பாரிஸ்டர் காந்தி தென்னாப்பிரிக்க இந்தியர் சார்பில் லண்டனுக்கு தூது சென்று திருப்பிய சமயம் தென் ஆப்பிரிக்க அரசாங்கம் அவரைக் கைது செய்தது. இதைப்பற்றி பாரதி ஒரு கார்ட்டூன் மூலமாகவும், சித்திர விளக்கம் மூலமாகவும் தம் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

எதிர்ப் பக்கத்திலுள்ள படம், "இந்தியா" 18.12.1908 இதழில் வெளி வந்தது. படத்தின் கீழ் குறிப்பு கூறியதாவது: ஸ்ரீ காந்தியென்ற பசுவானது தனது கன்றுக்குட்டியாகிய இதர இந்தியர்களின் நன்மையின் பொருட்டு இங்கிலாந்துக்குப் போய்ப் பேசிவிட்டு, சிறையிலடைபடுவதற்காக மறுபடியும் திரான்ஸ்வாலுக்கு வந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்கா உத்தியோகஸ்தர்களாகிய புலிகள் அவருடைய மேன்மையை யறியாமல் சிறையிலடைத்தார்கள்.

உள்ளே சித்திர விளக்கம் வருமாறு கூறியது:

"முற்காலத்தில் நடந்ததாக ஹிந்துக்களின் புராணங்களில் சொல்லியிருக்கும் விஷயம் அநேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு காட்டில் புலியின் வாயிலகப்பட்ட பசுவானது தன்னுடைய கன்றுக்குட்டிக்குப் பால் கொடுக்காமல் வந்துவிட்டபடியால் புலியைப் பார்த்து, 'ஹேபிரபு! இன்று என்னுடைய கடமையைச் செலுத்தாமல் வந்துவிட்டேன். என்னுடைய கன்றுக்குப் பால் கொடுக்கவில்லை. ஆதலால் நான் இப்பொழுதே போய்ப் பால்கொடுத்துவிட்டு வந்து உமக்கு இரையாய் விடுகிறேன். உத்தரவளிக்க வேணும்' என்றது.

"புலி நெடுநேரம் யோசித்து அதனுடைய ஸத்தியத்தைப் பரீட்சிக்கும் பொருட்டு, போய்க் காரியமான உடனே வந்துவிடு என்று சொல்லி அனுப்பியது.

"பின்பு பசுவானது கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு, அதைத் தன்னுடைய சிநேகிதையான மற்றொரு பசுவினிடத்தில் ஒப்புவித்துவிட்டு, புலியினிடத்தில் வந்து, 'என்னுடைய தர்மத்தைச் செய்துவிட்டு வரும்படி உத்தரவளித்ததற்கு உமக்கு வந்தனமளிக்கிறேன். என்னைப் புசியும்' என்றது.

"இதைக் கண்ட புலி ஆச்சரியப்பட்டு, 'அம்மா ஸத்திய தேவதையே, உன்னைப் புசித்துவிட்டு நான் எந்த நீச கதிக்குப் போவேன்! நான் இதுவரைக்கும் செய்தது போதும்' என்று சொல்லிப் பட்டினியிருந்து பிராணனை விட்டது.

"இப் பசுவைப்போல் நடந்து கொண்ட நமது ஸ்ரீ காந்தி புரபுவை தென் ஆப்பிரிக்கா புலிகள் என்ன செய்கின்றன பார்த்தீர்களா? ஒன்றும் தெரியாத புலிகூட இந்துஷ்தானத்தில் தயையினுடைய பிரவாகத்தைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் மனுஷிய ரூபம் தரித்துப் புலிலைப் பார்க்கிலும் கொடுமையாக, (தங்களுக்கு உதவி புரிந்த) இந்தியர்களை நடத்தும் நாகரிக ஆங்கிலேயர்களை இக் கலிகாலத்தில்தான் காணலாம்".

மகாத்மா காந்தியை "வாழ்க நீ எம்மான்! ... புவிக்குள்ளே முதன்மை பெற்றாய்!" என்று பிற்காலத்தில வாயாரப் பாடிப் புகழ்ந்தார் பாரதி. ஆனால், இந்தியத் தலைவர்களில் பலர் காந்தியை அறியாதிருந்த 1908ஆம் ஆண்டிலேயே பாரதி மேலே குறித்த படத்தையும் குறிப்பையும் வெளியிட்டதுதான் விசேஷம். அதுவே கவியின் தீர்க்கதரிசனம்.

"விவேகானந்தர் கூட சாகுந்தறுவாயில் பாரதம் என்னவாகுமோ என்று கவலைப்பட்டார். ஆனால் அவருக்குக் கூடத் தெரிவிக்காமற்போன எதிர்கால ரகசியத்தை, இயற்கை சக்திகள் பாரதிக்குத் தெளிவாய் உணர்த்தியிருந்ததும், காந்தீயத்தால் உலகமே உய்யும் என்று கூறும் அளவுக்கு பாரதி துணிவான தீர்க்கதரிசனம் பெற்றிருந்ததும் வியப்பிலும் வியப்பு" என்கிறார் மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார்.

24. புதுவைத் தினசரி 'விஜயா'
முன் பக்கம்

பாரதி புதுவை வந்த ஓராண்டுக்குள் அவருடைய சக்தி மேன்மேலும் அதிகரித்து, அவர் மேலும் பல முயற்சிகளைச் செய்யத் தூண்டுதலாயிற்று.

சென்னையில் நடத்த முடியாமல் புதுவையிலிருந்து வெளிவரும் "இந்தியா"வுக்கு முன்னைவிட அதிக செல்வாக்கு ஏற்பட்டது. பிரெஞ்சிந்தியப் புகலிடமான புதுவையிலிருந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தைத் தாக்கி எழுதுவது எளிதாயிருந்தது. "இந்தியா" புதுவை வந்த ஒரு வருஷத்துக்குள், பாரதி சம்பந்தப்பட்ட மற்றொரு பத்திரிகையையும் சென்னையிலிருந்து புதுவைக்குக் கொண்டுவர பாரதியும் நண்பர்களும் திட்டமிட்டு விட்டார்கள்.

"விஜயா" என்ற இந்த தமிழ் தினசரிப் பத்திரிகை சென்னையில் திருவல்லிக்கேணி ஹைரோடிலிருந்து வெளி வந்தது. காங்கிரஸின் "புதிய கோட்பாடுக"ளை - அதாவது தீவிரவாதிகளைஆதரித்துக் காரசாரமாக எழுதிவந்தது இப்பத்திரிகை. இது சென்னையில் வெளிவரும்போதும் இதைப்பற்றிய விளம்பரம் புதுவை "விஜயா"வில் பிரசுரமாயிற்று. முடிவில் "விஜயா" 6.9.1909 கிருஷண ஜயந்தி முதல் புதுவையிலிருந்து வெளியாகுமென "இந்தியா"வில் ஒரு மாதத்துக்கு முன்பே விளம்பரம் செய்யலானார்கள்.

"விஜயா" பத்திரிகை, பாரதியின் இந்தியா சென்னையில் நின்றதும், அக்குறையைப் போக்குவதற்காக மண்டயம் ஸ்ரீநிவாஸாச்ச்ரியாரின் சொந்தத் தமயனாரான எஸ்.திருமலாச்சாரியாரால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. சென்னையில் அப்பத்ரிகையும் சர்க்கார் தலையீடின்றி நடக்க முடியாமற் போகவே அதுவும் புதுவை வந்தது.

தேச சேவை என்று வந்துவிட்டால் உற்றார் உறவினராயினும் தாட்சணியமின்றித் தாக்கும் இயல்புடையவர் பாரதி. தமது தேசீய கீதங்கள் முதன் முதலாக அச்சேற உதவிய கொடையாளி வி.கிருஷ்ணஸ்வாமி அய்யர் காங்கிரஸில் தமக்கு எதிர்க் கட்சியானபோது, பாரதி தயங்காமல் அவரைக் கண்டித்தெழுதினார்.

1909ஆம் ஆண்டு இறுதியில் வி.கிருஷ்ணஸ்வாமி அய்யர் நீதிபதிப் பதவியை ஏற்றபோது, தேசபக்தத் தலைவரொருவர் அரசாங்க வேலையை ஏற்பதா என்று அவருடைய நண்பர்களை கேட்டார்கள். பாரதியார், நீதிபதிப் பதவி ஏற்பது தேசத் துரோகம் என்று கருதினார். அச்சமயத்தில் அவர் "விஜயா" பத்திரிகையில் எழுதிய தலையங்கம் அவரது வாதத்திறமைக்கும் எழுத்து வன்மைக்கும் சான்றாக இருக்கிறது.

திலகர் கோஷ்டியைவிட நாங்கள் எந்த விதத்திலும் தேசபத்தி குறைந்தவர்கள் அல்லவென்ற சொல்லுகிறீரே, "ஓய் கிருஷ் ஸ்வாமி ஐயரே நாளை உங்களுடைய சகாக்களான தீவிரவாதிகளில் எவரேனும் போலீஸாரால் உமது கோர்ட்டில் நிறுத்தப்பட்டால் நீங்கள் "தயையும் கருணையும் கலந்து" பல வருஷம் கடுங்காவல் விதிப்பீர்களே; அதுவும் தேசபக்தியான செயல்தானோ! - என்று இடித்துக காட்டுகிறார் பாரதி இத் தலையங்கத்தில்.

1909ஆம் ஆண்டு இறுதியில் பாரதியாரும் நண்பர்களும் இன்னும் பல பத்திரிகைகளை வெளியிடத் தொடங்கினார்கள். அரவிந்தகோஷ புதிதாய் ஆரம்பித்த "கர்ம யோகின்" என்ற ஆங்கில மாதப் பத்திரிகையை யொட்டித் தமிழில் "கர்ம யோகி" என்ற மாதப் பத்திரிகையும் "விஜயா"வைப் போலவே அந்த ஆண்டு கிருஷ்ண ஜயந்தி முதல் வெளிவரலாயிற்று. இதில் "ஆயிரம் பிரதிகளே" அச்சிடப் போவதாய் முன்னேச்சரிக்கை செய்திருப்பதிலிருந்து பத்திரிகைகள் பல்லாயிரக் கணக்கில் விற்பனையாகும் சந்தர்ப்பம் இருந்ததென ஊகிக்கலாம்.

1909 டிஸம்பர் 4ஆம் தேதி இதழில் "சித்ராவளி" என்ற மற்றொரு மாதப் பத்திரிகை "இந்தியா" காரியாலயத்திலிருந்து விரைவில் வெளியாகப் போவதாக விளம்பரம் இருக்கிறது. இது முழுதும் சித்திரங்களாகவே இருக்குமென்றும், சித்திரக் குறிப்புகள் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் இருக்குமென்றும் கூறப்பட்டது. ஆனால் இப்பத்திரிகை வெளிவந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. இது வெளிவந்திருக்கும் பட்சத்தில் இந்தியாவின் முதல் முழுக்கார்ட்டூன் பத்திரிகையாக அது இருந்திருக்கவேண்டும். இதிலும் பாரதி இந்தியப் பத்திரிகை உலகம் முழுமைக்குமே வழிகாட்டியாக இருந்திருக்கிறார்!

இவை தவிர "பால பாரதா" என்ற சென்னை ஆங்கலி வாரப் பத்திரிகையும் புதுவையிலிருந்து பிரசுரமாகத் தலைப்பட்டது.

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur