புதுவையில் கல்வே கல்லூரி என்ற உயர்நிலைப்பள்ளி இருக்கிறது. அதில் ஆங்கில போதகாசிரியர் புரோபஸர் என்.சுப்பிரமணிய அய்யர் என்ற ஒருவர் இருந்தார். பாரதி, வ.வே.சு.அய்யர் போலவே ஈசுவரன் தர்மராஜா கோயில் வீதியில் இருந்தார். புதுவையை வேதபுரம் என்று வர்ணிக்கும் பல கட்டுரைகளில், இவரை "பிரம்மராயர்" என்றும் "பிரம்மராய அய்யர்" என்றும் பாரதி குறிப்பிடுகின்றார். "பெண்" என்ற கட்டுரையில் பாரதி கூறுகிறார்:
"வேதபுரத்தில் தர்ம வீதியில் வாத்தியார் பிரம்மராய அய்யர் என்றொரு பிராமணர் இருக்கிறார். இவர் சாக்த மதத்தைச் சேர்ந்தவர்... இங்கிலீஷ், பிரெஞ்சு என்ற இரண்டு பாஷைகளிலும் நல்ல பாண்டித்தியமுள்ளவர். கொஞ்சம் சமஸ்கிருதமும் தெரியும்... வேதாந்த விசாரணையிலே நல்ல பழக்கமுண்டு. கதை, காலக்ஷேபம் உபந்நியாசம் முதலியன நடந்தால் தவறாமல் கேட்கப் போவார். பெரும்பாலும் கதை கேட்டுவிட்டு அதிருப்தியுடனே திரும்பி வருவார்... மேற்படி பிரம்மராய வாத்தியாருக்குத் தமிழிலும் கொஞ்சம் ஞானமுண்டு. ஐயோப்பியரின் சாஸ்திரங்களில் பலவற்றைத் தமிழில் எழுதியிருக்கிறார். சில சமயங்களில் கவிதைகூட எழுதுவார்...
"இவர் இந்தத் தெருவில் வார்த்தை சொன்னால் மூன்றாவது தெருவுக்குக் கேட்கும்... ஸாயங்காலம் திண்ணையில் சிநேகிதர்களுடன் பேசிக்கொண்டு அதாவது கர்ஜனை செயது கொண்டிருப்பார்... இவருடைய வீட்டுத் திண்ணைக்கு அக்கம் பக்கத்தார் 'இடிப் பள்ளிக்கூடம்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்... மேற்படி வாத்தியாருக்கும் எனக்கும் சிநேகமுண்டு. நானும் அடிக்கடி இடிப்பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் பேச்சுக் கேட்கும் வழக்கமுண்டு."
கலவை சங்கர செட்டியார் என்பவர் தனவந்தர், தயாளு. அரவிந்தர் வந்த சமயம் தன் வீட்டு மாடியில் தங்கியிருக்க இடமளித்தவர். "சுதேசி"த் தலைவர்களிடம் அன்பு கொண்டவர்.
1911-12ல் பாரதி, வ.வே.சு.அய்யர், அரவிந்தர் முதலியவர்களை வெளியேற்ற ஒரு முயற்சி நடந்தது. ஐந்து கௌரவ மாஜிஸ்டரேட்டுகளிடம் கையெழுத்து வாங்கிப் போலீஸாரிடம் பதிவு செய்து கொண்டாலன்றி, புதுவையிலுள்ள பிரஞ்சுப் பிரஜையல்லாதவர்கள் வெளியேறிவிட வேண்டும் என்று ஒரு சட்டம் வந்தது. விஷயமறிந்த சங்கரசெட்டியார் அன்று பகல் மூன்று மணிக்குள்ளாக ஐந்து மாஜிஸ்ட்ரேட்டுகளின் கையெழுத்தை வாங்கிக் கொடுத்துவிட்டார்.
ஆறுமுகம் செட்டியார் என்று மற்றொரு நண்பர் செல்வாக்குள்ள வர்த்தகர். மகா சாது. அரசியலில் அப்பாவி. மெலிந்த குரல். இவர் தம் வீட்டில் சீமை வெள்ளை எலிகளை வளர்த்தார். இதனால் இவரை "எலிக் குஞ்சு செட்டியார்" என்று பாரதி தம் கட்டுரைகளில் அழைக்கிறார்.
வ.ரா. பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து பல தந்திரமான வழிகளில் பணம் தருவிக்க ஆறுமுகம் செட்டியாரின் பெயரைத்தான் - அவர் அறிந்தும் அறியாமலும் - உபபோகித்துக் கொண்டார்.
மணியாச்சி ஜங்ஷனில் ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட்டதில் சம்பந்தப்பட்டவ ரெனக் கருதப்பட்டவரும், திடீரெனத் தலைமறைவாகி இருந்த இடமே தெரியாமல் மறைந்தவருமான மாடசாமிப் பிள்ளை என்பவர் புதுவை வந்து ஆறுமுகம் செட்டியார் வீட்டின் மாடியில் யாருமறியாமல் தங்கியிருந்தாராம். போலீஸார் தம் வீட்டைச் சோதனையிட வந்து, மாடியைப் பார்க்க விரும்பியபோது, முன்னால் அடுக்கியிருந்த நெல் மூட்டைகளை காட்டி அவர்களைத் திருப்பியனுப்பினார் செட்டியார்.
ஒரு நாள் பாரதியார் வீட்டில் சிறு கூட்டம். நடுவில் தீ வளர்த்து, தீயைச் சுற்றி வேத மந்திரங்களை ஜபித்துக் கொண்டிருந்தனர். தீயைச் சுற்றி வ.வே.சு.அய்யர், கோவிந்தராஜுலு நாயுடு என்ற நண்பர் முதலியோர் வீற்றிருந்தனர். ஒரு பலகையில் பாரதி அமர்ந்திருந்தார்; மற்றொரு பலகையில் கனகலிங்கம். கனகலிங்கத்துக் பிரம்மோபதேசம் செய்து, பூணூல் அணிவித்தார் பாரதி. "நீ இன்று முதல் பிராமணன். யார் உனக்குப் பூணூல் போட்டுவித்தது என்றால், அதட்டியே 'பாரதி' என்று சொல்" என்றும் உபதேசித்தார்.
மூன்று பிரிவினருக்குப் பூணூல் இருப்பதால், மற்ற இரு பிரிவுகளுக்கும் பூணூல் போட்டுச் சமத்துவம் உண்டாக்கலாம் என்ற அக்காலத்தில் ஒரு நம்பிக்கை நிலவியது. பாரதி இதை யொட்டியே கனகலிங்கத்தைப் பிராமணன் ஆக்கியிருக்க வேண்டும்.
கனகலிங்கம் "என் குருநாதர் பாரதி" என்ற சிறந்த நூலை எழுதியிருக்கிறார். அவரும் ஆறுமுகம் செட்டியாரும் இன்றும் ஜீவிதமாக இருக்கின்றனர்.
34. திருப்பள்ளியெழுச்சி மடு |
ஒரு நாள் குவளைக் கண்ணன் பாரதியிடம் வந்து, "இந்த ஊரில் தியாகராஜ பிள்ளை மடு என்று ஒரு நல்ல மடு இருக்கிறது. ஸ்நானம் செயதுவரச் சிறந்தது. ஆனால் கொஞ்ச தூரத்தில் இருக்கிறது தாங்கள் தினம் அங்கு ஸ்நானத்துக்கு வரமுடியுமா?" என்று கேட்டார்.
பாரதியார் ஆவலுடன் சம்மதித்தார்.
"ஊருக்கு மேற்கே இரண்டு மைலில் இருக்கிறது. காலை 4 மணிக்கு எழுந்து சென்றால்தான் நிம்மதியாகக் குளிக்கலாம்" என்றார் குவளை. "நீ எப்பொழுது வந்து எழுப்பினாலும் வருவேன்" என்றார் பாரதி.
மறுநாள், குறித்தபடி காலை 4 மணிக்குக் குவளை பாரதி வீட்டுக் கதவை தட்டினார் "யார்?" என்ற அதிகாரமான கேள்வியுடன் பாரதி வெளியே வந்தார். இருவரும் மடுவை நோக்கி நடந்தனர். ரஸ்தாவின் இருமருங்கிலும் உள்ள நஞ்சை புஞ்சை வயல்களும் தென்னந் தோப்புகளும் அதிகாலையின் மந்தமாருதமும் புட்களின் குரலொலிகளும் பாரதியைப் பரவசப் படுத்தின. மடுவில் குளித்து மகிழ்ந்து திரும்பினார்.
மறுநாளும் அப்படியே. மூன்றாம் நாள் குவளை வந்து கூப்பிடவில்லை. அவரைத் தேடிக் கொண்டு பாரதி போய்விட்டார். பாரதி கதவைத் தட்டியதும் குவளையின் தாயார் கதவைத் திறந்நு உள்ளே அழைத்துச் சென்றாள்.
இவர்தான் பாரதி யென்று குவளை அறிமுகம் செய்து வைக்கவே, அந்த அம்மாள், "அவர் நன்றாகப் பாடுவார் என்கிறாயே, சுப்பிரபாதம் பாடச் சொல்லு" என்றாள்.
"சுப்பிரபாதம் என்றால் என்ன?" என்று பாரதி கேட்டார்.
"சுப்பிரபாதம் என்றால் என்ன என்று கேட்கிறாரே, இவ்வளவுதானா உன் பாரதி!" என்று நகைத்தாள் கிழவி.
வடமொழியில் சுப்பிரபாதம் என்றால் திருப்பள்ளியெழுச்சி என்றர்த்தம். பாரதியும் குவளையும் மடுவுக்குப் போகும் வழியில் சுப்பிரபாதம் என்றால் என்ன வென்பதை பாரதி கேட்டறிந்தார். "இவ்வளவுதானே!" என்று சொல்லி, சில தினங்களில் "பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி" என்ற பாடலைக் கவனம் செய்து, குவளையின் தாயாரிடம் பாடியும் காட்டினார் கவிஞர்.
"காலைப் பொழுது" என்ற தனிப் பாடலில், காலையில் மடுவுக்குப் போய் வந்தபோது பாரதி கண்ட காட்சிகள் வர்ணனையாக அமைந்துள்ளன.
தியாகராஜ பிள்ளை மடுவின் படிக்கரையில் அடர்ந்த மரங்களில் நிழலில் ஒரு பங்களா இருந்தது. இந்தச் சுகமான இடத்தில் பாரதி தம் நண்பர்களுக்கு ஒருவிருந்து நடத்தினார்.
தியாகராஜ பிள்ளை மடுவுக்குத் தினம் போய்வரத் தலைப்பட்ட பாரதியார், ஒருநாள் மடுவுக்குப் போகும்போது குவளைக் கண்ணனிடம், "கண்ணா, ஆழ்வார்கள் எத்தனை பேர்?" என்று கேட்டார்.
"பன்னிரண்டு பேர்", என்று பதிலளித்தார் குவளைக் கண்ணன்.
"அவர்கள் பாடியுள்ள பாடல்கள் மொத்தம் எவ்வளவு?"
"நாலாயிரம். உண்மையில் நாலாயிரத்துக்கும் கொஞ்சம் குறைவு"
"இவ்வளவுதானா! யார், நான் ஒருவனே ஆறாயிரம் பாடல்கள் பாடுகிறேன். அவர்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பாடினால், நான் தனியாக 'பாரதி ஆறாயிரம்'" பாடுகிறேன்!" என்றார் பாரதி.
அன்று முதல் 40 நாள் மௌன விரதமிருந்து பல பாடல்களை இயற்றிவரலானார். "எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா! யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாடினிலே" என்று கடவுள் வாழ்த்து, பராசக்தி துதியுடன் முதற் காண்டம் ஆரம்பிக்கும் இந்தப் பாடல்களில், மரணத்தை வெல்லும் வழி, சினத்தின் கேடு, பொறுமையின் பெருமை, கடவுள் எங்கே இருக்கிறார்?, குருக்கள் துதி, குவளைக் கண்ணன் புகழ், குரு தரிசனம், உபதேசம், பெண் விடுதலை, காதலின் புகழ், ஸர்வமத ஸமரஸம் முதலிய பற்பல விஷயங்களைப் பற்றி பாரதி பாடியிருக்கிறார்.
"பாரதி ஆறாயிர"மாக விரிய வேண்டிய இந்நூல் முற்றுப் பெறாமல் 66 பாடல்களுடன் நிற்கிறது. பாரதி பிரசுராலயத்தினர் இதனை வெளியிட்டபோது, காரணப் பெயராக, இதற்கு "பாரதி அறுபத்தாறு" என்ற பெயரை ஈந்தனர்.
அறுபத்தாறே பாடல்கள்தான் இருக்கின்றன வென்றாலும், பாரதியின் முதிர்ந்த அனுபவ ஞானம் முழுதும் இப்பாடல்களில் கனிரஸமெனப் பிழிந்து தரப்பெற்றுள்ளன.