63. திருவல்லிக்கேணியில் பாரதி |
குள்ளச்சாமியைத் தருவித்த பாரதி, தமது சாகாமை தத்துவத்தைப் பற்றியும் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். "நித்திய வாழ்வு" (Life Eternal) என்ற தலைப்பில் அவர் ஆங்கிலத்தில் பேசிய இக்கூட்டத்துக்கு நீதிபதி மணி அய்யர் (ஸர்.எஸ்.சப்பிரமணிய அய்யர்) தலைமை வகித்தார். கூட்டம் வி.பி.ஹாலில் நடந்தது.
கூட்டத்துக்கு இரண்டு நாள் முன்பு பாரதி பிராட்வேயில் இருந்த ரத்னா கம்பெனி என்ற போட்டாக் கடைக்குப் போனார். தாம் முக்கியமானதோர் பொதுக் கூட்டத்தை விளம்பரம் செய்யும் துண்டுப் பிரசுரம் பெளியிடப் போவதாயும், அதற்காகத் தம்மை நேர்த்தியான போட்டோ எடுக்க வேண்டும் என்றம் சொன்னார். அவர் வந்த சமயம் கடையில் முதலாளி இல்லை. வி.எஸ்.ஸர்மா என்ற பையனே இருந்தான். இவன் அப்போது கடையில் "கத்துக்குட்டி". தம் புகைப்படம் எடுக்கும் வேலையை ஒரு சிறு பையனிடம் ஒப்படைக்க பாரதி தயங்கினார். அவசரம் ஒரு பக்கம்; பையனின் தெம்பான பேச்சு ஒரு பக்கம். பாரதி போட்டோவுக்கு உட்கார்ந்தார். நெகடிவ்வைக் கழுவிப் பார்த்துத் தம்மிடம் காட்டும் வரை பாரதி காத்திருந்தார். படம் அவருக்கு மிகவும் திருப்தியாகிவிட்டது.
பாரதியால் புகழப் பெற்ற இந்தப் படம் இப்போது எங்கும் கிடைக்கவில்லை. இதேபோல் குவளைக் கண்ணனுடன் சென்று இதே ரத்னா கம்பெனியில் எடுத்துக் கொண்ட மற்றொரு படமும் கிடைக்கவில்லை.
ரத்னா கம்பெனியில் பாரதியால் பாராட்டப் பெற்ற இளைஞன், தற்சமயம் மதுரையில் வாழும் பிரபல சித்திரக்காரரான வி.எஸ்.ஸர்மா என்பவராகும்.
1920-21ல் பாரதி சென்னையில் வாழ்ந்த சமயம், பாரதி முதலில் தம்புச்செட்டித் தெருவிலும், பிறகு திருவல்லிக்கேணியில் தெளிசிங்கப் பெருமாள் கோயில் தெருவிலும் குடியிருந்தார். தெளிசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் 67ஆம் எண் வீடு, கிழக்குப் பார்த்த சிவப்புக் கட்டடம்; பழங்காலத்துப் பாணியில் மற்ற வீடுகளில் இல்லாதபடி அலங்கார முகப்புக் கொண்டது. இந்தப் பெரிய வீட்டின் பின்புறக் கட்டில், இருட்டான அறைகளில், அதற்கும் வாடகை கொடுக்க முடியாத நிலையில்தான் பாரதி வசித்தார்.
இக்காலத்திய பாரதி பற்றி அதே தெருவில் வசித்த கி.சடகோபன் விவரித்துள்ளார்.
திருவல்லிக்கேணி பார்த்தஸாரதி ஸ்வாமி வீதி பவனி வரும்போதும் உற்சவ காலங்களிலும் பாரதி தம்மை மறந்து விடுவார். அலுங்காமல் நலுங்காமல் இரண்டொரு வார்த்தைகளில் பிரார்த்தனை செய்தது தெய்வ அருள் பெற்று விட்டதாக நம்பும் கோஷ்டிக்கும் பாரதிக்கும் வெகு தூரம். ஸ்வாமியின் வாகனம் தெருவில் தென்பட்டால் ஓடோடி வருவார் தரிசனத்துக்கு. ஆனால், தரிசனமென்றால் நின்று கும்பிடுவதல்ல. வியர்க்க விறுவிறுக்க வாகனம் தூக்கும் ஆட்களில் தாமும் சேர்ந்து கொண்டு ஒரு தெரு முழுவதும் தோள் போட்டுச் செல்வார்.
பாரதியார் தெருவில் நடந்து போகும்போதும் இவர்தான் பாரதி என்று சொல்லிவிடலாம். தெருவில் நடக்கும்போது மார்பை முன்னே தள்ளி, தலையை உயர நிமிர்த்தி யார்க்கு மஞ்சாத பார்வையுடன் சிப்பாய் மாதிரி அடியெடுத்து வைப்பார் பாரதி. எதிரே எவராவது நமஸ்காரம் செய்தால் சட்டென்று நின்று, இரு பாதங்களையும் இணைத்து, அழகாகக் கையெடுத்துக் கும்பிடுவார்.
பெரியவர்களுக்கு பாரதி ஒரு அசட்டுப் பைத்தியம்; ஆனால் இளைஞர்களுக்கோ அவர் தீரமிக்க லட்சிய புருஷர். தம்மை அனுகியவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் பாரதி பிரியமாக அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயல்வார். பாரதியை சந்தித்துப் பேசிவிட வேண்டும், பாடிக் கேட்க வேண்டும் என்று சடகோபன் விரும்பினார். தம் விருப்பத்தை சடகோபன் குவளைக் கண்ணனிடம் தெரிவித்தார். "அதற்கென்ன பிரமாதம், வா" என்று குவளைக் கண்ணன் சடகோபனை "மித்திரன்" காரியாலத்துக்கு அழைத்துச் சென்று பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்து, விருப்பத்தைச் சொன்னார்.
உடனே பாரதி மாடியை விட்டுக் கீழே இறங்கி வந்தார். கீழே பத்திரிகைக் காகிதம் அடுக்கி வைத்திருக்கும் கிடங்குக்கு அழைத்துச் சென்றார். அங்கே காகித 'பைல்' மூட்டைகளில் ஒன்றின் மேல் சடகோபனும் மற்றொன்றின் மேல் குவளைக் கண்ணனும் அமரும்படி செய்தார். மற்றொரு மூட்டையின் மேல் தாம் ஏறி உட்கார்ந்து கொண்டார். உடனே ஐந்தாறு பாட்டுக்களைப் பாடித் தீர்த்துவிட்டார்! சிறுவனாயிற்றே பாடுவானேன் என்றோ, கேட்பவர்களிடமெல்லாம் பாடலாமோ என்றோ துளிக்கூட அகம்பாவம் அல்லது பிகு கிடையாது!
1921 ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு தேதிகளில் பாரதி ஈரோட்டுக்குப் போய் அங்கே கருங்கல்பாளையத்திலிருந்த ஒரு வாசக சாலையின் ஆண்டு விழாவில் "மனிதனுக்கு மரணமில்லை" என்ற பொருள் பற்றிப் பிரசங்கம் செய்தார். மறுநாள் ஈரோட்டில் வாய்க்கால் கரையில் ஒரு பொதுக்கூட்டத்தில் "இந்தியாவின் எதிர்கால நிலை" என்பது பற்றிப் பேசினார். "எனது ஈரோடு யாத்திரை" என்றொரு கட்டுரையும் எழுதினார். இது "சுதேசமித்திர"னில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாயிற்று.
இதற்குப் பின், ஆகஸ்ட் 11ல், காந்தியடிகளின் ஒரு கோடி ரூபாய் திலகர் நிதி முயற்சி பற்றியும், ஆகஸ்ட் 25ஆம் தேதி ரவீந்திரநாத் தாகூரின் ஐரோப்பா திக் விஜயம் பற்றியும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவையே அவரது கடைசிக் கடுரைகளாக முடிந்தன.
திருவல்லிக்கேணியில் வசித்த பாரதி தினமும் பார்த்தஸாரதி கோயிலுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் செய்து வருவார். கோயிலுக்குப் போகும்போது கையில் பழமும் தேங்காயும் எடுத்துச் செல்வார். ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்வதற்கல்ல; கோயில் யானைக்குக் கொடுப்பதற்காக.
1921ஆம் ஆண்டில் பார்த்தஸாரதி கோயிலில் ஒரு பெரிய யானை இருந்தது. அதைக் கோவிலுக்கு வெளியே கட்டி வைத்திருப்பார்கள். சிங்கத்தையே சகோதரனாகத் தடவிக் கொடுத்த பாரதி யானையையும் சகோதரனாக பாவிப்பார். கையில் எடுத்துச் செல்லும் பழம் தோங்காயை யானையிடம் தாமே நீட்டி, அது உண்பதைக் கண்டு மகிழ்வார். நாளாக ஆக, பழக்கம் ஏற்பட ஏற்பட, யானையிடம் தங்கு தடையின்றிப் போவார், பழம் தேங்காயைக் கொடுப்பார், யானையின் துதிக்கையைத் தடவிக் கொடுப்பார்.
கோயில் யானைக்கு ஒரு நாள் டீரென்று மதம் பிடித்துவிட்டது. அதைச் சங்கிலியால் பிணைத்து, கோயில் முன் கட்டிப் போட்டிருந்தார்கள். வழக்கம்போல் தேங்காய் பழத்துடன் யானையைத் தேடிக்கொண்டு வந்தார் பாரதி. யானைக்கு மதம் பிடித்திருக்கிறதென்று எச்சரித்தார்களோ இல்லையோ, பாரதி எதையும் கவனிக்கவில்லை. "சகோதரா! இந்தா பழம், தேங்காய்" என்று அன்புடன் நெருங்கிக் கையை நீட்டினார். யானை அதை வாங்கத்தான் வந்ததோ, மதத் திமிரில் தட்டிவிடத்தான் செய்ததோ தெரியவில்லை, துதிக்கையை விசிறிதியது. அடுத்த க்ஷணம் பாரதி யானையின் காலடியில் மூர்ச்சித்துக் கிடந்தார்!
வெறி பிடித்த யானை, என்ன செய்யுமென்று தெரியாது. காலடியில் கிடக்கிறார் ஒரு மனிதர், கவிஞர் பிரான். மக்கள் இன்னது செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.
யானைக் காலடியில் பாரதி கிடக்கிறாரென்ற செய்தி திருவல்லிக்கேணி முழுதும் தீபோல் பரவியது. எங்கோ இருந்த குவளைக் கண்ணன் காதிலும் விழுந்தது. பறந்து வந்ததுபோல, தூக்க முடியாத தமது சரீரத்தைத் தூக்கிக்கொண்டு, ஓடோடி வந்தார் குவளைக் கண்ணன். எவ்வித யோசனையுமின்றி, யானை இருந்த இரும்புக் கிராதிக் கோட்டத்துக்குள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தார். ரத்தப் பிரவாஹத்தில் கிடந்த பாரதியை எடுத்து நிமிர்த்தி, தோளில் சார்த்திக் கொண்டு வெளியே கொண்டு வந்து சேர்த்தார். கண் நொடிக்குமுன் எல்லாம் நடந்துவிட்டது!
மனிதச் சிங்கம் குவளைக் கண்ணனது தீரத்தைக் கண்டு மலைத்ததுபோல, மத யானையும் பிரமித்துப் போயிருக்க வேண்டும்!
குவளைக் கண்ணனுடைய அன்பு வேறு யாருக்கும் இல்லை! அன்றொரு நாள் புதுவையில் தெய்வமே அனுப்பிய தூதனாய்த் தோன்றிக் கைகொடுத்துக் காத்த அதே குவளைக் கண்ணன் இன்று மீண்டும் தெய்வமே அனுப்பிய தூதனாய் யானையினின்றும் பாரதியைக் காத்தார். "மிகத் தானும் உயர்ந்த துணிவுடைய நெஞ்சின் வீரர் பிரான் குவளையூர்க் கண்ணனென்பான்" என்று ஏற்கனவே பாரதி பாடிய புகழ்மாலையும் பொய்க்கவில்லை!
பாரதியை மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரும் மற்றும் சிலரும் ஒரு மோட்டாரில் வைத்து ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள். பாரதிக்கு உடம்பெல்லாம் காயங்கள். ஏற்கனவே பூஞ்சையான உடலில் இக்காயங்கள் மரண வாதனையை உண்டாக்கின. பாரதி சில நாட்கள் வலியால் அவதிப்பட்டார். ஆனால் விரைவில் குணமாகிவிட்டார். குணமடைந்த பின் "மித்திர"னில் எழுதியதோர் கட்டுரையில், 'யானை இன்னாரென்று தெரியாமல் தள்ளிவிட்டது; தெரிந்திருந்தால் தள்ளியிருக்காது. துன்புறுத்தும் எண்ணமிருந்தால் கீழே விழுந்ததும் தூக்கி எறிந்திருக்காதா? அல்லது கால்களினால் துவைத்திராதா? அப்படியே நின்றதன் அர்த்தம் எனன? என்னிடம் அதற்குள்ள அன்பே காரணம்' என்றாராம்.