பாரதி மீண்டும் "மித்திர"னில் சேர்ந்த சமயம் அதன் காரியாலயம் ஜார்ஜ் டவுனில் எர்ரபாலு செட்டித் தெருவும் சிங்கண்ண நாய்க்கன் தெருவும் கூடுமிடத்திலுள்ள மூலைக் கட்டடத்தில் இருந்தது. பக்கத்தில், சிங்கண்ண நாய்க்கன் தெருவில், ஒரு மரப்படி. மாடியில் ஆசிரியர்கள் அறைக்கு இது வழியே தெருவிலிருந்தே ஏறலாம். பாரதி மரப்படிகளை அடிக்கு நாலு படியாகத் தாவி ஏறுவார், இறங்குவார்!
பாரதியைத் தாம் முதன் முதலாகச் சந்தித்த விவரத்தை "மித்திரன்" ஆசிரியர் சி.ஆர். ஸ்ரீநிவாஸன் சொற்சித்திரமாய் வரைந்து காட்டியிருக்கிறார். 1920ஆம் வருஷ இருதி, ஸ்ரீநிவாஸன் அப்போ "மித்திரன்" நிர்வாகக் குழுவில் இருந்தார். அவர் கூறுகிறார்:
"ஒரு நாள் காலை 10 மணி இருக்கும். ஆபிஸில் தபால் பார்த்துக் கொண்டிருந்தேன். கனவேகமாய் ஒரு ஜட்கா வண்டி ஆபீஸை நோக்கி வந்தது. ஆபீஸ் பெயரைப் பார்த்ததும் 'நிறுத்து' என்று கூறினார் வண்டியிலிருந்தவர். நிற்கிற வரையில் தாங்கவில்லை. குறுக்குக் கம்பியைத் தள்ளிக்கொண்டு கீழே குதித்தார். தள்ளின கம்பி திரும்பி வந்த சொக்காயில் மாட்டிக் கொண்டது. அலக்ஷியமாகக் கையை உதறினார். சொக்காயின் கை கிழிந்து விட்டது. அதையும் கவனிக்கவில்லை. ஓடோடியும் உள்ளே வந்தார். நான் இருந்த அறைக்குக் கதவுகள் இருக்கக் கண்டு, சற்று தயங்கினார். மெள்ளக் கதவைத் தட்டினார். பதில் இல்லை. கதவுக்குமேல் தலையைநீட்டி உள்ளே பார்த்தார். என்னைக் கண்டதும் சிறிது லஜ்ஜைப் பட்டார். 'யார்?'என்று நான் கேட்டேன். 'நான்தான் சுப்பிரமணிய பாரதி' என்றார். 'வாருங்கள், உள்ளே வாருங்கள், உட்காருங்கள்' என்றேன். "அன்று கண்ட பாரதி இன்றளவும் என் அகக் கண்முன் நின்றுகொண்டேயிருக்கிறார். நடுத்தர உயரம்; ஒற்றை நாடி; மாநிறம் படைத்த மேனி; பிரி பிரியாய்ச் சுற்றிய தலைப்பாகை; அகன்ற நெற்றி; அதன் மத்தியில் காலணா அளவு குங்குமப் பொட்டு. அடர்ந்த புருவங்கள் உருண்ட கண்களைக் காத்து வந்தன. நிமிர்ந்த நாசி வாடிய கன்னங்களை விளக்கிக் காட்டியது. முறுக்கிய மீசை மேல் உதட்டை மறைத்தும், உறதியிழந்த உயிர் நிலையைக் கீழ் உதடு காட்டி விட்டது. உடல் மீது பித்தான் இல்லாத ஷர்ட்டு; அதை மூட ஒரு அல்பகா கோட்டு; வண்டியிலிருந்து குதித்தபோது அதுவும் கிழிந்து விட்டது.
"நாற்காலியில் உட்கார்ந்தார். நாவெழவில்லை; கண்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன; அறையைச் சுற்றிப் பார்த்தன; என்னையும் ஏற இறங்கப் பார்த்தன. வெகுண்ட கண்கள்; வேதனை வடிந்த கண்கள்; சாந்தம் நிறைந்த கண்கள்; வசியம் மிகுந்த கண்கள். அவை என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டன!"
இந்த சொற்சித்திரத்துடன் இன்னொரு சொற்சித்திரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். புதுவையிலிருந்து கடயம் சென்ற பாரதி, 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதன் முதல் தடவையாக சென்னைக்குத் திரும்பி வந்தபோது துரைசாமி அய்யர், நெல்லையப்பர், சி.ராஜகோபாலாச்சாரியார் முதலிய நண்பர்கள் அவரை ரயிலடியில் சந்தித்து வரவேற்றார்கள். அப்போது தாம் கண்ட காட்சியை ராஜாஜி விவரிக்கிறார்:
"பாரதியார் ரயிலிலிருந்து இறங்கினார். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒரே துக்கமாய்ப் போய்விட்டது. ஏற்கனவே நான் அவரைப் பார்த்தபோது அவருடைய முகம் பூரண சந்திரனைப் போன்ற தேஜஸ் பொருந்தியதாயிருந்தது. ஆனால், இப்போதோ களையிழந்து வற்றி உலர்ந்து போயிருந்தது. 'ஐயோ! இவர் இப்படிப் போய்விட்டாரே!' என்று நான் வருத்தப்பட்டேன்"
1919 துவக்கத்தில் மலர்ச்சியற்றிருந்த பாரதி 1920 முடிவில் "மித்திர"னில் சேர்ந்த சமயம் ஓரளவாவது அகமலர்ந்திருந்தாரா?
"சுதேசமித்திர"னில் மீண்டும் வேலை பார்க்கத் தொடங்கிய பாரதி, தமது பொது வாழ்வு அலுவல்களையும் ஓரளவு ஆரம்பித்தார். ஆனால் முன்போல அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை; அவரது கவனமெல்லாம் இலக்கிய, வேதாந்த விஷயங்களிலேயே இருந்தது.
1920ல் பாரதிக்கு சுமார் நூறு ரூபாய் சம்பளம் கிடைத்து வந்த சமயம் "மித்திரன்" ஆசிரியருக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்துவந்தது. இதில் பாரதிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "தமிழ்ப் பத்திராதிபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் காலம் வந்துவிட்டது பார்த்தாயா!" என்று குவளைக் கண்ணனிடம் சொல்லி மகிழ்ந்தாராம்.
பாரதியுடன் "மித்திர"னில் உழைத்து வந்த உதவியாசிரியர்களில் எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யரும், டி.எல்.நடேசனும் இருவர். முதல்வர் தேசீய வீரர் சரித்திர நூல்களை எழுதிப் புகழ் பெற்றுள்ளார்; மற்றவர் "மித்திர"னில் இன்றும் தொண்டு புரிகிறார்.
62. சென்னையில் குள்ளச்சாமி |
புதுவையிலே பாரதிக்குப் பழக்கமான பரதேசிச் சாமியார்களில் குள்ளச்சாமி என்பார் ஒருவர். பாரதி கூறுகிறார்:
"அவருக்கு வயது ஐம்பதோ, அறுபதோ, எழுபதோ, எண்பதோ யாருக்கும் தெரியாது. அவருடைய உயரம் நாலரை அடியிருக்கும். கருநிறம். குண்டு சட்டியைப்போல் முகம். உடம்பெல்லாம் வயிரக்கட்டை போலே நல்ல உறுதியான பேர்வழி.
"அந்த மனுஷ்யன் ஜடபரதருடைய நிலைமையிலே இருப்பதாகச் சொல்லலாம். பேசினால் பயித்தியக்காரன் பேசுவது போலிருக்கும். இழுத்திழுத்து, திக்கித் திக்கி, முன்பின் சம்பந்தமில்லாமல் விழுங்கி விழுங்கிப் பேசுவார். தெருவிலே படுத்துக் கிடப்பார். பசித்த போது எங்கேனும் போய்ப் பிச்சை வாங்கிச் சாப்பிடுவார். கள் குடிப்பார். கஞ்சா தின்பார். மண்ணிலே புரளுவார். நாய்களுடன் சண்டை போடுவார்.
"வீதியிலே பெண் பிள்ளைகளுக்கெல்லாம் அவரைக் கண்டால் இரக்கமுண்டாகும் திடீரென்று ஒரு வீட்டிற்குள் நுழைந்து, அந்த வீட்டிலிருக்கும் குழந்தைகள் நெற்றியிலே திருநீற்றைப் பூசிவிட்டு ஓடிப் போவார். யாராவது திட்டினாலும் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடிப்போய் விடுவார்...
"பின்னொரு நாள் அவரிடம் பரிகாசமாக நான்... 'ஏதேனும் தொழில் செய்து பிழைக்கக் கூடாதா?' என்று கேட்டேன். அந்தப் பரதேசி சொல்கிறார்: 'தம்பி, நானும் தொழில் செய்துதான் பிழைக்கிறேன். எனக்கு வண்ணான் வேலை. ஐம்புலன்களாகிய கழுதைகளை மேய்க்கிறேன். அந்தக் கரணமான துணி மூட்டைகளை வெளுக்கிறேன்.'"
இந்தக் குள்ளச்சாமியை ஒரு நாள் நண்பர் ஒருவர் வீட்டில் சந்தித்து உலகில் உண்மை எது என்று கேட்டார் பாரதி. பிடித்த கையைத் திமிறிக் கொண்டு கொல்லைப் பக்கம் ஓடி, அங்கே ஒரு குட்டிச் சுவர் காட்டி, சூரியனைக் காட்டி, கிணற்றில் சூரிய பிம்பம் காட்டி, 'அறிந்தாயா?' என்று சைகையால் வினவினார் குள்ளச்சாமி. மனத்தைக் கட்டி, மண் போலே சுவர் போலே வாழ்ந்தால், கிணற்றுள் சூரிய பிம்பம் தெரிவது போல உளக்குள்ளே தெய்வ ஒளி காண்பாய் என்ற பொருள் தெரிந்து கொண்டார் கவிஞர்.
குள்ளச்சாமி அஷ்டமா சித்திகள் பெற்றவெரென்று பாரதி விவரித்திருக்கிறார். தமது யோக சித்தியாலும் காயகல்ப சிகிச்சையினாலும் வயதுரைக்க வழியில்லாமல் சாவைக் கடந்து விட்டவர் என்று பாடியிருக்கிறார். ஒரு சமயம் பாரதி தம் வீட்டு மேல் மாடியில் தனியே உலாவிக் கொண்டிருக்கையில் சாமியாரும் வேணு முதலி என்பவனும் வந்த போது, வேணு முதலியின் சுடு சொற்களை அடக்குவதற்கு சாமியார் விசுவ ரூப தரிசனம் காட்டிய அதிசயத்தை 'சும்மா' என்ற கட்டுரையில் பாரதி விவரித்திருக்கிறார்.
இத்தகைய மகிமை வாய்ந்த பெரியாரை சென்னைக்கு அழைத்து வர வேண்டுமென்று பாரதி தீர்மானித்தார். நண்பர் வக்கீல் துரைசாமி அய்யரிடம் சொல்லி ஏற்பாடு செய்து, சாமியாரைச் சென்னைக்கு அழைத்து வரும்படி புதுவையில் பொன்னு முருகேசம் பிள்ளையின் இளைய புதல்வர் கனகராஜாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
குள்ளச்சாமி சென்னைக்கு வந்தார். அவருக்கு கோகளே ஹாலில் ஒரு உபசாரம் நடந்தது. கூட்டத்தின் விவரமும் குள்ளச்சாமியின் படமும் அக்காலத்தில் "ஹிந்து" பத்திரிகையில் வெளி வந்தனவாம்.
குள்ளச்சாமியை பாரதி மிக உயர்வாகக் கருதிய போதிலும், அவ்வமயம் சென்னையிலிருந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை அவரை மிகத் தாழ்வகவே மதிப்பிட்டிருக்கிறார். பாரதியும் குள்ளச்சாமியாரும் பெரம்பூரில் உ.உ.சி.வீட்டுக்கு வந்திருந்தனராம்.
வ.உ.சி. தமது பாரதி நினைவுக் குறிப்புகளில் கூறுகிறார்: "மூவரும் மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டோம். சிரம பரிகாரத்தின் பொருட்டு மூவரும் படுத்து உறங்கினோம். மாலை சுமார் மூன்று மணிக்கு அவர்களிருவரும் பேயிரைச்சலிட்டு வாதாடிக் கொண்டிருப்பதைக் கேட்டு நான் விழித்துக் கொண்டேன். ஒரு சிறு அமிர்தாஞ்சன் டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஆளுக்கு ஒரு எழமிச்சங்காய் அளவு வாயில் போட்டுக் கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று"
"'அது என்ன மாமா?' எனக் கேட்டேன்.
'அதுவா, மோக்ஷ லோகத்திற்குக் கொண்டு போகும் ஜீவாம்ருதம்' என்றார் மாமா(பாரதி). எனக்கு விஷயம் விளங்கிவிட்டது .... மாமாவின் மாற்றத்திற்கு இம்மருந்துதான் காரணம் என்ற நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது."
ஆனால், குள்ளச் சாமியாரை அறிந்த மற்றும் பலர் அவர் பரம யோகியென்றும், மகா புருஷர் என்றுமே வற்புறுத்திக் கூறியிருக்கிறார்கள்.