55. செட்டி நாட்டில் கவியரசர் |
தமிழ் நாட்டில் தனவணிக மக்கள் தமிழ்ப் பற்றுதலுக்குப் பெயர்போனவர்கள். கவியரசர் பாரதியிடமும் அவர்கள் மெய்யன்பு பூண்டதில் ஆச்சரியமில்லை.
புதுவையிலிருந்து திரும்பிக் கடயத்திலிருக்கும் பாரதியாரைச் செட்டி நாட்டுக்கும் அழைத்துவர வேண்டும் என்ற எண்ணம் 1919ல் சில ஆர்வமிக்க தனவணிக இளைஞர்களுக்கு உதித்தது. கானாடுகாத்தானுக்கு வருமாறு வை.சு.சண்முகம் என்ற தனவணிக அன்பர் வேண்டிக் கொண்டதன் பேரில், சுப்பிரமணிய பாரதியார் 28.10.1919 அன்று காலை 10:30 மணிக்கு காரைக்குடியில் சிவன் செயல் ஊருணித் தென் கதையிலிருந்த மதுரை பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கினார். பல இளைஞர்கள் அவரை வரவேற்றனர்.
அன்று மாலை பாரதி கானாடுகாத்தான் போய்ச் சேர்ந்தார். அங்கே வை.சு.சண்முகம் இல்லத்தில் ஒன்பது நாட்கள் இருந்தார். கவிஞரின் தேவைகள் யாவும் அங்கு கவனிக்கப் பெற்றிருந்தன. அந்த ஊரிலேயே பாரதி இனித் தங்கி வசதியாய் வாழலாமென சண்முகம் கூறினார். பாரதியும் இசைந்து செல்லம்மாவை அழைத்துவர ஒரு ஆளைக் கடயத்துக்கு அனுப்பினார். ஆனால் செல்லம்மா வரவில்லை. அதனால் மனைவியின்றி இங்கே வாழ இயலாதென்று, பாரதி 6.11.1919 அன்று கிளம்பிச் சென்றுவிட்டார். கானாடுகாத்தானிலிருந்து அன்று மாலையே காரைக்குடி சென்றார்; பின்னர் கடயம் போனார்.
கானாடுகாத்தானில் வள்ளல் சண்முகத்தின் மீது பாரதி ஒரு பாடல் பாடியுள்ளார். இது இன்னம் வெளிடப் பெறவில்லை. "மன்னர் மிசைச் செல்வர் மிசைத் தமிழ் பாடி யெய்ப்புற்று மனங் கசந்து பொன்னனைய கவிதையினி வானவர்க்கேயன்றி மக்கட்புறத்தோர்க்கீயோம்" என்று கொண்டிருந்த முடிவை வை.சு.சண்முகத்தின் வள்ளன்மை கண்டு மாற்றிக் கொண்டதாக இப்பாடலில் பாரதி குறிப்பிடுகிறார்.
கடயம் திரும்பும் வழியில் காரைக்குடி போன சமயம்தான் அந்நகர் ஹிந்து மதாபிமான சங்கத்தின் மீது வாழ்த்துப் பாடல் பாடினார் பாரதி.
செட்டிநாட்டு அன்பர்கள் பாரதிக்கு தேவையான பொருளுதவியும், அணிவதற்கு ஒரு கோட்டும், எழுதுவதற்கு மாணிக்கம் பதித்த ஒரு பவுண்டன் பேனாவும், அழகான வேலைப்பாடமைந்த ஒரு மரக் கைப்பெட்டியும் அளித்தனர். இவைகளை பாரதி பத்திரமாய்க் கடயம் கொண்டு சேர்த்தார். ஆனால் பேனாவை நாராயணப் பிள்ளை என்ற நண்பருக்குக் கொடுத்துவிட்டார்.
இதற்கு இரண்டு மாதம் கழித்து, பாரதி மீண்டும் ஒரு முறை கானோடுகாத்தான் வந்திருந்தார். இரண்டாவது தடவையாக 6.01.1920 முதல் 10.01.1920 வரை அந்த ஊரில் அவர் தங்கினார், இம்முறை காரைக்குடி வழியே சென்றபோது, ஹந்து மதாபிமான சங்க இளைஞர்களான சொ. முருகப்பா, ராய.சொக்கலிங்கம் முதலியோரது விரும்பபத்திற்கிணங்க தனியாகவும் அவர்களுடனும் இரு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
இந்தப் புகைப் படங்களில் பாரதி தமது கைத் தடியை வைத்திருக்கும் கோலம் விசித்திரமானது. அன்று நடந்த விஷயங்களை சொ.முருகப்பா அவர்கள் ஒரு கடிதத்தில் விவரித்திருக்கிறார்.
அன்று பாரதியை முதலில் தனியாக ஒரு படமெடுத்தார்கள். புகைப்படத்துக்கு உட்கார்ந்த பாரதி தமது கைத் தடியை நடுபாதியில் சிலம்பு சுற்றுவது போல் பிடித்துக் கொண்டிருந்தார். புகைப் படமெடுப்பவர் தடியை இப்படிப் பிடித்தால் நன்றாயிராதென்று சொன்னார். "எனக்குத் தெரியும் பட மெடு" என்று கூறிவிட்டார் பாரதி.
ஹிந்து மதாபிமா சங்க இளைஞர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட இரண்டாவது படத்தின் போதும் பாரதி தடியை நடுவில் பிடித்த வண்ணம் உட்கார்ந்தார். அன்பர்கள் சொல்லிப் பார்த்தார்கள். பாரதி உடனே தடியை அதன் கொண்டைப் பக்கம் பிடித்து, செங்கோல் பிடிப்பதுபோல நுனியை மேல் பக்கம் நீட்டிப் பிடித்துக் கொண்டுவிட்டார்! அதிகம் சொன்னால் எழுந்து போய்விடுவாரென்று பயந்த அவர் இஷ்டப்படியே படமெடுத்துக் கொண்டார்கள்.
பாரதிக்கு முழங்கால்கள் உட்பக்கமாய் நெருங்கியிருக்கும். அவர் உட்கார்ந்திருந்தபோது, புகைப் படக்காரர் பாரதி தம் முழங்காலிகளை அகற்றி வைத்துக் கொள்ளும்படி சொன்னார். பாரதிக்கு அன்றிருந்த நிலைமையில் கோபம் வந்துவிட்டது. "என் கால்களைச் சீர்திருத்துவது இருக்கட்டும். முதலில் உன் கால்களைச் சீர்திருத்திக் கொண்டுவா!" என்று பதிலளித்தார். பாவம், அந்தப்பு புகைப் படக்காரருகுக் கால் ஊனம்!
56. புத்தகப் பிரசுரத் திட்டம் |
எட்டயபுரம் மன்னருக்குக் கடிதமெழுதி ஏமாற்றமடைந்த பாரதி மீண்டும் அங்கே வசிப்பதென்ற எண்ணத்தைக் கைவிட்டு விட்டு கடயம் திரும்பினார்.
கடயத்தில், தம்முடைய நூல்கள் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி வரிசையாய் வெளியிடப் பெரியதோர் திட்டமிட்டார் அவர். பிரசுரத் திட்டத்துக்குப் பணம் சேர்ப்பதற்காக பாரதி தமது அன்பர்களுக்கு ஒரு அச்சடித்த சுற்றறிக்கை விடுத்தார். தலைக்கு நூறு ரூபாய் வீதம் இருநூறு அன்பர்கள் கடனாகப் பண உதவி செய்தால் போதுமென்பது அவர் யோசனை.
ஆங்கிலத்தில் உள்ள அந்த சுற்றறிக்கை தமது நூல்களின் மகிமை பற்றி பாரதிக்கிருந்த தன்னம்பிக்கையையும், அவைகளை எப்படி வெளியிட்டு, எவ்வளவு பிரதிகள் அச்சிட்டு, என்ன விலையில் விற்கவேண்டும் என்று அவர் கொண்டிருந்த கருத்துகளையும் விளக்குகிறது.
மதுரை தேச பக்தர் ஆர்.ஸ்ரீநிவாஸவரதனுக்கு அனுப்பிய சுற்றறிக்கைப் பிரதி எதிர்ப்பக்கத்தில் பிசுரிக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையின் பொழிபெயர்ப்பு வருமாறு:
சி.சுப்பிரமணிய பாரதி.
கடயம்
28 ஜூன், 1920
ஆர்.ஸ்ரீநிவாஸ வரதாசாச்சர்யனுக்கு,
மதுரை.
அன்புள்ள நண்பரே,
எனது எழுத்துப் பிரதிகள் யாவும் - என்னுடைய பன்னிரண்டு வருஷ அஞ்ஞாத வாசத்தின் பலன்கள் - புதுவையிலிருந்து இங்கு வந்துசேர்ந்துவிட்டன. அவைகளை 40 தனிப் புத்தகங்களாகப் பிரிக்க வேண்டும்; முதல் பதிப்பாக ஒவ்வொரு புத்தகத்திலும் 10,000 பிரதிகள் நான் அச்சிடப் போகிறேன். இந்த வேலைக்கு ஆரம்பத்தில் 20,000 ரூபாய் மூலதனம் தேவைப்படும். புத்தகங்கள் வெளிவந்த ஒரு வருஷத்தில், அதிகமானால் இரண்டு வருஷத்திற்குள், செலவெல்லாம் போக நிகர லாபமாக ஒன்றரை லக்ஷம் ரூபாய் அடைவது நிச்சயம்.
வெளியிடுவதற்காக நான் இப்போது தேர்ந்தெடுத்திருக்கும் நூல்களில் பெரும்பாலானவை வசனக் கதைகள். அவை நெஞ்சை அள்ளக் கூடியவை; அதே சமயம் ஆழ்ந்த இலக்கிய அழகு கொண்டவை; எளிய நடையில் உள்ளவை; தெளிவானவை; ஒளி மிகுந்தவை. ஜனங்களுக்குப் பிடித்தமான நடையும் சொல்லழகும் கொண்டவை. அதே சமயம், பரிசுத்தமானவை, வழுவில்லாதவை. இவை காவிய ரஸம் பொருந்தியவை, காலத்தை மீறி நிற்க வல்லவை.
இதனாலும், இது தவிர (2) தமிழ் நாட்டிலும் தமிழ் படிக்கும் வெளிநாடுகளிலும் தினந்தோறும் தமிழ் வாசகர்கள் ஆண், பெண், குழந்தைகள் பெருகி வருவதனாலும்; (3) தமிழ் நாட்டின் முன்னேற்றத்துக்கு எனது நூல்கள் சரித்திர பூர்வமாய் அத்தியாவசியமானவை யென்பதனாலும், உடனே நிகழப் போகின்றதும், தெய்வ சித்தமானதும் தவிர்க்க முடியாததுமான கீழ்த் திசை நாடுகளின் மறுமலர்ச்சிக்குத் தமிழகத்தின் மேம்பாடு அத்தியாவசிய மென்பதனாலும்; (4) என்னுடைய பதிப்புகளில் நான் கையாளப் போகிற புதுமையான, அமெரிக்க வழியிலுள்ள முன்னேற்றங்களாலும், கதைகளில் வரும் சம்பவங்களுக் கேற்ப அழகான பொருத்தமான சித்திரங்களைக் கொடிருப்பதாலும் மக்கள் பிரமித்துப்போய் மனதைப் பறிகொடுத்து விடுவார்கள் என்பதனாலும்; (5) எனது நூல்களின் மலிவான விலையினாலும் - வசன நூல்களை எட்டணா விலையிலும், கவிதை நூல்களைக் கூடுமானவரை நான்கணா விலையிலும் நான் விற்கத் திட்டமிட்டிருப்பதனாலும்; (6) என்னுடைய பழைய பிரசுரங்களினால் எனக்கிருக்கும் உயர்ந்த மதிப்பினாலும் ஈடு இணையற்ற செல்வாக்கினாலும் - இவை எல்லாவற்றினாலும் என்னுடைய நூல்கள் அமோகமாக விற்பனையாவது திண்ணம்.
புத்தகங்களை அச்சடிப்பதற்கான செலவிற்காக உங்களால் முடிந்த அளவு தொகையை தயவு செய்து கடனாக அனுப்பி வையுங்கள். உங்களிடமிருந்து குறைந்த பட்சம் 100 ரூபாயாவது எதிர் பார்க்கிறேன். கிருபை கூர்ந்து தங்கள் நண்பர்கள் இருபது பேரையாவது இதே மாதிரியோ அல்லது அதிகமான தொகையோ கடன் தந்து உதவும்படி தூண்டுங்கள்.
உங்களிடமிருந்தும் உங்கள் நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும் தொகைகளுக்கு நான் ஸ்டாம்பு ஒட்டி புரோ-நோட்டு எழுதிக் கொடுக்கிறேன். எனக்குக் கிடைக்கக் கூடிய அபரிமிதமான லாபத்தை முன்னிட்டு, மாதம் 2 சதவிகிதம் தாராளமாகவே வட்டி தருகிறேன். உங்கள் அன்பான பதிலையும் உங்கள் தரப்பிலிருந்து பற்பல மணியார்டர்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தங்களுக்கு நீடித்த ஆயுளும் இன்பகரமான வாழ்க்கையும் அளிக்குமாறு கடவுளைப் பிரார்த்தித்திருக்கும்.
தங்கள் அன்புள்ள,
சி.சுப்பிரமணிய பாரதி.
குறிப்பு: என்மீதிருந்த அரசாங்கத் தடைகள் யாவும் நீக்கப்பட்டுவிட்டன. என் மீதிருந்த குற்றச்சாட்டுகள் யாவும் வாபஸ் பெறப்பட்டுவிட்டன. ஆகையால், அரசாங்க அதிகாரிகள் கூட இந்தக் கடனுக்கு உதவி செய்யும்படி தூண்டலாம். இது சம்பந்தமாக அவர்கள் பெயரும் வெளியிடப்படமாட்டாது. கடன் தருபவர்கள் யாவரும் தனிப்பட்ட முறையில் கடன் தந்தவர்களாகவே கருதப்படுவார்கள். இரண்டே வருஷங்களில் இக்கடன்கள் யாவும் தீர்க்கப்படும். - சி.எஸ்.பி.