சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
9
17. புதிய கட்சித் தலைவர்
முன் பக்கம்
   

சூரத் காங்கிரஸின்போது தீவிரக் கட்சிப் பத்திரிகாசிரியர்கள் ஒன்றுகூடித் தங்கள் நோக்கங்கள் நாட்டில் பரவ ஒரு ஒழுங்கான திட்டப்படி வேலை செய்யத் தீர்மானித்தார்கள். சர்க்கார் செய்யும் யதேச்சாதிகாரக் செயல்களைக் கண்டிக்கும் போது எல்லாப் பத்திரிகைகளும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றியே எழுதி நாடெங்கும் பெருங்கிளர்ச்சி யுண்டாக்க வேண்டும் என்றும் தீர்மானமாயிற்று. சென்னையின் பொறுப்பை பாரதி ஏற்றுக் கொண்டார். அதற்கொப்ப, சூரத்திலிருந்து சென்னை திரும்பியது முதலே பாரதி திலகரின் தீவிர வழியை ஆதரித்துப் பல காரியங்கள் செய்தார். உடல் வலிமை அவருக்கு அதிகமில்லை. ஆனால் மனவலிமை அதிகம். கடற்கரையில் அவர் பேசாத கூட்டமிராது. அவரது வீர மொழிகளையும் பாடல்களையும் கேட்க ஜனங்கள பல்லாயிரக் கணக்கில் காத்திருப்பர்.

அவரது எழுது கோலுக்கும் இரவு பகலாய் வேலை இருந்தது.

இப்போது திருவல்லிக்கேணி கடற்கரை ரேடியோ வைத்திருக்கும் இடத்தில்தான் விபின சந்திர பாலர் அமோகமான சொற்பொழிவு நடத்தினார். பாரதியின் கூட்டங்களும் அங்கேயே நடந்தன. பாலர் பேசிய சமயம் கூட்டம் ஜன சமுத்திரமாக விருந்தது; மிதவாதிகள் கூட ஆங்காங்கு மறைவிலிருந்து தீவிரவாதி பாலரின் பேச்சைக் கேட்டுப் போனார்கள். இப்பேச்சுகளுக்காக பாலர் மீது ராஜத் துரோக வழக்கு நடத்த சென்னை அரசாங்கம் விரும்பியதாகவும், அட்வகேட் ஜெனரலாகவிருந்த வி.பாஷ்யமயங்கார் வேண்டாமென யோசனை கூறியதாகவும் ஒரு வதந்தி.

ஆனால் பஞ்சாபில், வேறு இரண்டு "புதிய கட்சி"த் தலைவர்கள், லஜபத்ராயும் அஜித் ஸிங்கும், நாடு கடத்தப்பட்டார்கள். 1907, மே மாதம் 9ஆம் தேதி அவர்கள் விடுவிக்கப்பெற்று நாடு திரும்பினர். தீவிரவாதிகளுக்கு உற்சாகம் அதிகமாயிற்று.

இதே சமயம், தெற்கே, சுதேசித் தொழிலை விருத்தி செய்வதற்காகத் தூத்துக்குடி வக்கீல் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஒரு சுதேசிக் கப்பல் கம்பெனி ஆரம்பித்தார். இந்தியா - இலங்கைக் கடல் மார்க்கத்தில் ஒரு சில பாய்க் கப்பல்கள் ஏற்றிச் செல்லும் சரக்குகள் தவிர மற்றெல்லாச் சரக்குகளும் ஒரு பிரிட்டிஷ் கம்பெனியின் கப்பல்களிலேயே போய் வருவது வழக்கமாயிருந்தது. இந்தியக் கப்பல் கம்பெனி ஒன்று ஆரம்பித்தால் நல்ல லாபம் கிடைக்குமென்று, "சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி"யென்ற கூட்டுத் தொழில் கம்பெனியை ரிஜிஸ்டர் செய்து இரு புகைக் கப்பல்களை விலைக்கு வாங்கினார் சிதம்பரம் பிள்ளை. இந்தக் கம்பெனிக்குப் பணம் சேர்க்க பாரதியார் ஒத்துழைத்தார். 'புதுச்சேரியார்' என்ற மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் குடும்பம் கப்பல் கம்பெனிக்கு 70 ஆயிரம் ரூபாய் பொருள் உதவியது. சிதம்பரம் பிள்ளையைப் புதுச்சேரியாரிடம் அறிமுகம் செய்து வைத்தது பாரதியே.

1908ஆம் வருஷம் ஒரு குறிப்பிட்ட தினத்தை நாடெங்கும் 'சுயராஜ்ய தின'மாகக் கொண்டாட வேண்டும் என்று தீவிரக் கட்சியினர் தீர்மானித்தனர். சென்னையில் அத் தினத்தை வெகு ஆடம்பரமாகக் கொண்டாட ஏற்பாடாயிற்று. நகரின் பல பாகங்களிலிருந்தும் ஊர்வலங்கள் புறப்பட்டு, திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடில் கூடி, பைகிராப்ட்ஸ் ரோடு வழியாகக் கடற்கரை சென்று பொதுக்கூட்டம் நடத்துவதென சென்னை ஜனசங்கம் முடிவு செய்தது. பாரதியும், எதிராஜ், சுரேந்திரநாத் ஆரியாவும் மற்றும் பல தொண்டர்களும் இரண்டு மூன்று தினங்கள் முன்னிருந்தே, ஆங்காங்கு காலையிலும் மாலையிலும் சிறு சிறு கூட்டங்கள் கூட்டி மாணவர்களையும் மற்றவர்களையும் ஊர்வலமாக வரும்படி தூண்டி வந்தார்கள்.

குறிப்பிட்ட தினத்தில் எல்லா ஊர்வலங்களும் பெல்ஸ் ரோடு - பைகிராப்ட்ஸ் ரோடு மூலையில் கூடும்போது மேளதாளங்களோடு கடற்கரையை நோக்கிச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். பொது ரஸ்தாவில் மேளதாளங்களோடு போக போலீஸ் கமிஷனருக்கு எழுதிப் போட்டும் லைசென்ஸ் வரவில்லை. பாண்டு மேள கோஷ்டியினர் தயங்கினார்கள். "நான் இருக்கிறேனடா, தம்பிகளா!" என்று தைரியமளித்து, கழுத்தில் மாலையுடன், மேள தாளங்கள் முழங்க, பெரும் படை ஒன்றை முன்னின்று நடத்திச் செல்லும் போர்த் தலைவன்போல ஊர்வலத்தைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார் பாரதி. கடல் மணலில் மிகப் பெரிய கூட்டம் நடந்தது; போலீஸார் யாதொன்றம் செய்யத் துணியவில்லை.

18. கடல் மணலில் ஒரு கூட்டம்
முன் பக்கம்

1908ல் பாரதத்தில் இருந்த அரசியல் குமுறலை நேரில் பார்த்து விவரிக்க நம் நாட்டுக்கு ஹென்றி டபிள்யூ. நெவின்ஸன் என்ற பிரபல பிரிட்டிஷ் பத்திரிகையாளர் வந்தார். வடக்கே திலகர், லஜபதிராய், கோகளே முதலியோரைச் சந்தித்தது போலவே தெற்கே பாரதியையும் அவர் சந்தித்தார். பிரிட்டன் திரும்பியதும் தாம் எழுதிய "இந்தியாவில் புதிய உணர்ச்சி" (The New Spirit in India) என்ற பிரசித்தமான நூலில் "கடல் மணலில்"(On the Beach) என்ற ஒரு அத்தியாயம் முழுவதும் சென்னையில், திருவல்லிக்கேணி திலகர் கூட்டத்தல், பாரதி முதலானோர் நடத்தியதோர் கூட்டத்தைப் பற்றி நேரிடை வர்ணனையாக இருக்கிறது. கூட்டத்தில் "சென்னையின் தமிழ்க்கவி" பாரதி பாடிய மூன்று பாடல்களின் பொருளையும் கூட நெவின்ஸன் தந்திருக்கிறார். அவரது வர்ணனையின் சாரமாவது:

மாலை நேரம். மாரிக்கால சூரியன் வானில் வர்ண ஜாலம் பரப்பி அஸ்தமிக்கிறான். மரீனாவில் கோச் வண்டிகள் ஒன்றிரண்டே போகின்றன; ஆங்கிலோ இந்திய யுவர்களும் யுவதிகளும் சுகமாய்ப் போலோ முதலிய விளையாட்டுகளில் அலுத்து வீடு திரும்புகிறார்கள். போக்குவரத்து ஓய்கிறது. ஆனால், மணல் வெளியில், விளக்கு வைத்த ஒரு மேடையைச் சுற்றி நாலைந்தாயிரம் பேர் கூடியிருக்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்கள். பொதுக் கூட்டம். எங்கோ கண் காணாத பஞ்சாப் மாகாணத்தில் சமீபத்தில்தான் பிரபலமான ஸர்வார் அஜித் ஸிங், லாலா லஜபதிராய் என்ற இருவர் விடுதலையானதைக் கொண்டாடும் கூட்டம்.

கூட்டம் ஆரம்பமாயிற்று ஒரு சிறுவன் உச்சஸ்தாயியில் "வந்தே மாதர" கீதத்திற்கு பாரதி செய்துள்ள தமிழ் மொழி பெயர்ப்பைப் பாடுகிறான். பாட்டு முடிந்ததும் ஆயிரமாயிரமான குரல்களும் "வந்தே மாதரம்" "தாயை வணங்குகிறோம்!" என்று அதிர முழங்குகின்றன. பாட்டு கனிவுமிக்க நயமான கீதம்; பிரஞ்சு கீதம் 'லா மார்ஸலேஸ்' போன்ற கொதிப்பூட்டும் புரட்சிக் கீதமல்ல. ஆனால் மக்களின் வந்தே மாதர கோஷத்தில் புரட்சியின் அதிர்ச்சி முழுதும் ஒலித்தது.

இனி பாரதி எழுந்து பாட ஆரம்பிக்கிறார். நெவின்ஸன் வாக்கில் இதைக் கவனிப்போம்: "இந்த தேசீய கீதம் பாடி முடிந்தபின், சென்னையின் தமிழ்க் கவிஞர் தாம் லஜபதி ராய் நாடு கடத்தப்பட்டபோது இயற்றியதோர் ஏக்கப் பாடலைப் பாடினார். அது, நாடு கடத்தப்பட்ட எல்லா தேச பக்தர்களுக்குமே பொதுவான புலம்பலாக இருந்தது. தன் இல்லத்தைப் பற்றிய இன்ப நினைவுகள், தன் இளமையைக் கழித்த தாய்த் திருநாட்டிடம் ஆழ்ந்த பற்று, அந்நியர்களிடையே, விளங்காத மொழி பேசுவோரிடையே வாழ்வதிலுள்ள ஏக்கம் நிறைந்த தனிமை - இவை யாவும் அப்பாடலில் அமைதியுடனும் எளிமையுடனும் சொல்லப்பட்டன. பின்னர் கவிஞர் திடீரெனத் தம் போக்கை மாற்றிக்கொண்டு, ஏளனச் சுவையில் புகுந்தார். இந்தியா மந்திரி ஜான்மார்லிக்கும் இந்தியாவுக்கும் 'ஹோம் ரூல்' என்ற சுயராஜ்யம் பற்றி நடப்பதாக ஒரு சம்பாஷனையைப் பாட்டில் விவரித்தார் அவர்."

முதல் பாட்டு "லஜபதிராய் பிரலாபம்" ('நாடிழந்து மக்களையும் நல்லாளையும் பிரிந்து..."). அடுத்தபடி பாடியவை, "தொண்டு செய்யும் அடிமை" ('ஸ்வராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாஸிக்கு ஆங்கிலேய உத்யோகஸ்தன் கூறுவது') என்று துவங்கும் பாட்டும், ஆங்கிலேயனுக்குப் பாரதவாஸி பதிலளிப்பதான "சுதந்திரப் பெருமை" ('வீர சுதந்திரம்') என்ற பாட்டுமாகும்.

பாரதி பாடிய பின் வேறு சிலர் பேசினார்கள், சிலர், ஆங்கிலத்தில், வெள்ளையரும் வியக்கும் வாதங்களுடன் 'தீவிரவாதிகள்' கட்சியையும் சுதந்திரத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்களாம். முடிவில், காவி தரித்த சந்நியாஸி ஒருவர் - 'உயரமானவர், கையில் தடிகொண்டவர், பூர்வத்தில் பிராமணர், இப்போது எல்லாரும் ஒன்றெனக் கொண்டவர், பெரிய தாடியுள்ளவர்' - தாம் லஜபதிராயைச் சமீபத்தில் சந்தித்ததாகவும், லஜபதி தியாக சீலர், மக்களுக்காக எதையும் அளிக்க அஞ்சாதவர் என்றும் பேசினார். கூட்டம், வானதிரும் 'வந்தே மாதர' கோஷத்திடையே கலைந்தது. இவ்வளவு சுதந்திர உளர்ச்சி வேகம் இருந்தும் கூட்டத்தில் களேபரமில்லை, கூச்சலில்லை, ஆர்ப்பாட்டமில்லை; அவ்வளவு அமைதியாக நடந்தது; லண்டன் ட்ரபால்கர் சதுக்கத்தில்கூட இவ்வளவு ஒழுங்காகக் கூட்டங்கள் நடப்பதில்லை; அன்று கூட்டம் போடப்படுமென்று பகிரங்கமாய் அறிவித்திருந்தும், அங்கே ஒரு போலீஸ்காரன்கூட இல்லை; ஒரு சிப்பாயும் இல்லை; தேவைப்படவில்லை; "எதிர்பார்க்கத் தக்கபடி, அங்கு இருந்த ஒரே ஐரோப்பியன் நான்தான்" என்று நெவின்ஸன் வியக்கிறார்.

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur