சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
16
31. செல்வக் குடும்பத்தின் சேவை
முன் பக்கம்
   

1911ல் மணியாச்சியில் ஆஷ் என்ற ஸப்-கலெக்டரை வாஞ்சி அய்யர் என்ற இளைஞர் சுட்டுக் கொன்று, தம்மையும் மாய்த்துக் கொண்டார். இதனால் சுதேசித் தலைவர்கள் மட்டுமல்ல, அவர்ளுடன் பழகியவர்களுக்கும் போலீஸ் கண்காணிப்பு ஏற்பட்டது. புதுவையில், துணிச்சலற்றவர்கள் பாரதியை நெருங்குவதும் இயலாததாகவிருந்தது.

இந்ததகைய நெருக்கடியான சமயங்களில் பாரதிக்கு உற்ற துணையாக விளங்கியவர்கள் மூவர் - சுந்தரேசய்யர், பொன்னு முருகேசம் பிள்ளை, கலவை சங்கர செட்டியார் - என்று வ.ரா. கூறுகிறார்.

பொன்னு முருகேசம் பிள்ளை பாரதியின் வீட்டுக் இரண்டு மூன்று வீட்டுக்கப்பால் இருந்த தனிகர். பிரெஞ்சு பாஷை நன்கறிந்தவர்; தெய்வம் கிடையாதென்று வாதிப்பவர்; பாரதியின் தெய்வ நம்பிகைகையைப் பற்றி அவரைக் கிண்டிவிட்டு அவருடன் கட்சி வாதம் செய்து ஆனந்தப்படுபவர். இவர் பாரதிக்குப் பண உதவி செய்ததில்லை. ஆனால், தமது நிலத்திலிருந்து வரும் தானியங்களை ஐயர், பாரதி முதலியோருக்கு வெளியில் விற்பதை விட சரசமான விலையில் தருவார்.

பண உதவி செய்யவில்லை யென்றாலும் பிள்ளையவர்கள் தம் வீட்டையே, குடும்பத்தையே பாரதி சேவைக்குக் கொடுத்துவிட்டார் எனலாம். பாரதி அநேகமாய் எப்பொழுதும் பிள்ளையவர்கள் வீட்டிலேயே தங்கிவிடுவார். பெரிய வீடு, மாடியில் தனி அறை ஒன்று. அது பாரதி அறை. சில சமயம் இரவு கூட அங்கேயே தங்கிவிடுவார்.

முருகேசம் பிள்ளையின் மனைவி அண்ணியம்மாள் என்ற சௌந்திரம்மாள் உத்தம குணம் பொருந்திய ஹிந்து கிருஹலக்ஷ்மி. சமயமறிந்து பாரதிக்கு அன்னமளித்து சிற்றுண்டி யளித்து உபசரிப்பார். தாயைப் போலவே குமாரர்கள் ராஜா பகதூர், கனக ராஜா இருவரும்கூட பாரதி சேவையில் ஈடுபடலானார்கள். இவர்கள் பாரதியின் "மெய்க்காவலர்" என்றால் தவறாகாது.

பாரதி கட்டுக்கடங்காத செல்லக் குழந்தை; நினைத்த சமயம் கவிதை வரும், உரக்கப் பாடுவார். உட்கார்ந்த இடத்திலிருந்து எச்சிலைத் துப்புவார். இந்தக் குறைபாடுகளைப் பற்றிப் பிள்ளையவர்கள் வீட்டில் மூச்சுப் பேச்சு இராது.

முதல் மகாயுத்தம் ஆரம்பிப்பதற்கு முன், பிள்ளையவர்களின் மூத்த புதல்வர் ராஜா பகதூர் எஞ்சினீயர் படிப்புக்காகப் பாரிஸ் சென்றிருந்தார். படிப்பு முடிந்து திரும்பி வரும் சமயம் யுத்தம் மூண்டுவிட்டது. செல்வப் புதல்வனை வரவேற்கப் பிள்ளையவர்கள கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்தார். ராஜா பகதூருக்குப் பதில் ஒரு தந்தி வந்து நின்றது. ராஜா பகதூர் வந்த கப்பல் ஜெர்மன் குண்டுகளால் தாக்குண்டு சுக்குநூறாயிற்று என்று தந்தி கூறியது. தந்தியைப் படித்த முருகேசம் பிள்ளை மூர்ச்சையானார்; மூர்ச்சை தெளிந்து கதறினார், புலம்பினார், அரற்றினார். யார் என்ன சொல்லியும் தேறவில்லை. அண்ணியம்மாளும் அழுதார்.

பாரதியார் அந்தத் தம்பதிகளைத் தேற்ற வெகு பாடுபட்டார். இந்திரஜித்தன் இறந்ததும் மண்டோதரி புலம்பிய கம்ப ராமாயணச் செய்யுள்களையும், குலசேகராழ்வார் பாடிய "வன் தாளின் இணை வணங்கி" என்ற தசரதன் புலம்பலையும், "ஆலைநீள் கரும்பன்னவன தாலேலோ" என்ற தேவகி புலம்பலையும் மனம் உருகப் பாடித் தேற்றினார்.

என்ன தேற்றியும் முருகேசம் பிள்ளை உடம்பு தேறவில்லை. ராஜா பகதூர் சுகமாயிருப்பதாய்ப் பொய்த் தந்தியை அரவிந்தரே கொண்டு கொடுக்கச் செய்தும், ராஜா பகதூர் போன்ற ஒருவனுக்கு அவன் போலவே உடையணிவித்து இதோ ராஜா பகதூர் வந்துவிட்டான் என்று காட்டியும்கூட அவர் படுத்த படுக்கையாகவே இருந்தார். பொய் ராஜா பகதூரைப் பார்த்ததும் அவநம்பிக்கையும் அதிருப்தியும் முகத்தில் தோன்ற மறுபுறம் புரண்டு படுத்தார்; சற்று நேரத்தில் உயிர்நீத்துவிட்டார்!
தந்தை இறந்த 27ஆம் நாள் ராஜா பகதூர் சௌக்கியமாக வந்து சேர்ந்தான். 'தனயனுக்காகத் தந்தை உயிர் கொடுத்தார்' என்றார் பாரதி.

ராஜா பகதூர் பிறகு புதுவை சட்ட சபையின் காரியதரிசியாகி 1950ஆம் ஆண்டு வரை இருந்தார். தம் புதல்வனுக்கு முருகேச பாரதி என்று பெயரும் இட்டார்.

சென்னை திரும்பிய பின், 1920ல் குள்ளச்சாமி என்ற புதுவை யோகியை சென்னைக்கு வரச் செய்தார் பாரதி. புதுவையிலிருந்து அவரை அனுப்பிவைத்தவர் கனக ராஜா. (அவருக்கு பாரதி எழுதிய கடிதம் இந்நூலில் பிறிதோரிடத்தில் இருக்கிறது).

கனகராஜா இளமையிலேயே அகால மரணமடைந்தார்.

32. ஏழைக் குடும்பம் சளைத்ததா?
முன் பக்கம்

பொன்னு முருகேசம் பிள்ளை வீட்டில் ஒரு வேலைக்காரக் கிழவி. பார்க்க, ஔவைப் பாட்டிதான். அம்மாக்கண்ணு என்று பெயர். வீட்டு எஜமானருக்கும் எஜமானியம்மாளுக்கும்தான் பாரதியிடம் பரிவு என்றால், இந்த எழுத்து வாசனையறியாத செவிட்டுக் கிழவிக்கும் அவரிடம் அளவற்ற வாஞ்சை. கிழவியின் மூன்று புதல்வர்களுக்கும் அப்படியே.

பொன்னு முருகேசம் பிள்ளை வீட்டில் பாரதி செய்யும் லூட்டிகளை - கண்ட இடத்தில் துப்புதல் முதலியவைகளை - அம்மாக்கண்ணு பொருட்படுத்தாமல் அவருக்கு சிசுரூஷை செய்தாள்.

ஒரு சமயம், 1917ல் இருக்கலாம், பாரதிக்குப் புதுவையின் குறுகிய வாழ்வு அலுத்துப் போய்விட்டது. என்ன ஆனாலும் சரி, பிரிட்டிஷ் இந்தியாவுக்குப் போய்விடுவது என்று தீர்மானித்துவிட்டார். மனைவியிடம் என்ன கோபமோ, யாரிடமும் சொல்லாமல் தனியே கிளம்பிவிட்டார்.

பாரதி கிளம்பிப் போய்விட்ட சேதி தெரிந்தது; எல்லாரும் தேடினார்கள். கடைசியில் ரயில்வே ஸ்டேஷனில் அகஸ்மாத்தாய்ச் சந்தித்த பாரதிதாசன் அவரைச் சமாதானம் செய்து திரும்ப அழைத்து வந்தார். புதுவையில் பின்னாலிருந்து தள்ளும் ரிக்ஷா வண்டியைப் 'புஷ் வண்டி' என்பர். அதில் பாரதியும் பாரதிதாசனும் வருகிறார்கள். இதை யறிந்த அம்மாக்கண்ணு வழியில் அவர்களைச் சந்தித்தாள் - கையில் சுண்டல் முதலிய எளிய தின்பண்டங்களுடன். பாதிக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

அம்மாக்கண்ணு 1939க்குப் பின் காலமானாள். அவளுடைய மூன்று புதல்வகர்களில் தெய்வசிகாமணி, கோவிந்தசாமி இருவரும் இளவயதிலேயே காலமானார்கள். வேணு என்ற வே.வேணுகோபால் நாயக்கர் மட்டும் சமீப காலம் வரை வாழ்ந்திருந்தார் "தாய்நாடு" என்ற பத்திரிகை ஒன்றும் புதுவையில் சிலகாலம் நடத்தினார்.

நம் நாட்டில் உயர் வகுப்பார் கீழ் வகுப்பாருடன் சிநேகமாயிருந்தால்கூட அவர்களது வீடுகளுக்குச் சென்று உணவருந்துவதும் தெய்வம் தொழுவதும் மிக அதிசயம். பாரதி இதற்கு விதிவிலக்கு. பார்ப்பார் முதல் பள்ளர் வரை எல்லாருடைய வீடுகளுக்கும் அவர் சகஜமாய்ப் போய் வந்தார். அந்தக் காலத்திலே இது பெரும் புரட்சி யென்று சொல்லத் தேவையில்லை.

இந்த நூலாசிரியர் 1938-39ல் புதுச்சேரியில் அம்க்கண்ணுவின் வீட்டுக்குப்போய் அந்தக் கிழவியைப் பார்த்த சமயம், அவள் வீட்டில் ஒரு தத்தாத்ரேய விக்ரகமும் இரு வாள்களும் ஒரு குத்துவாளும் பூஜை அறையிலிருந்தன. இவை பாரதியாரால் பூஜிக்கப்பட்டவை என்று சொன்னார்கள்.

பாரதி இந்த வாள்களை வாள் பயிற்சிக்காக உபயோகித்தாராம். தேகப் பயிற்சி செய்யவேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளவர் அவர். தொடர்ந்து பயிற்சி செய்யும் பிடிவாதம் இல்லை. ஒருநாள் புதுவைக் கடற்கரை மணலில், நிலவொளியில் வாள் பயிற்சி செய்வதெனத் தீர்மானித்தார். நண்பரொருவர் - இது அம்மாக்கண்ணுவின் புதல்வர் வேணுவாக இருக்கலாம் - வாளை எப்படிச் சுழற்றுவது என்று காட்டினார். பாரதி வாளை கையில் வாங்கிச் சில தடவை சுற்றினார். திடீரென ஆவசம் வந்தவர் போல் வாளை அதிவேகமாய்ச் சுற்றி, எதிரேயிருந்த நண்பனைத் தாக்குவதுபோல வந்துவிட்டார். அவர் கையிலிருந்து வாளை வாங்குவது பெரும் பாடாகிவிட்டது. க்ஷணத்தில் தம்மை மறந்துவிடும் பாரதிக்கு அதன் பிறகு யாரும் வாள் பயிற்சி போதிக்கத் துணியவில்லை!

அம்மாக்கண்ணுவின் குடும்பம் மட்டுமல்ல, ஹரிஜன இளைஞர் ரா.கனகலிங்கம், உப்பளம் முத்துமாரிய்மமன் கோயில் பண்டாரம், கொட்டடி வேணு நாயக்கர் முதலிய பலதரப்பட்ட நண்பர்கள் பாரதிக்கு உண்டு. ஜாதி மத பேதத்தை அறியாதவர் அவர். எந்த ஜாதி மதத்தினரானாலும், நண்பர்களென்றால் வித்தியாசமின்றிப் பழகுவார். சல்லாபிப்பார், உண்டு உறங்குவார். 1912ல் புரோகிரஸிவ் யூனியன் கிரிக்கெட் கிளப் என்ற புதுவைச் சங்கத்தில் 'ஜாதி வித்தியாசம்' என்பது பற்றி பாரதி பேசினார். அரசாங்க அனுமதியின்றி இந்தக் கூட்டத்தை நடத்தியதாக, இளைஞர் ரா.கனகலிங்கத்துக் மூன்று ரூவாய் அபராதம் விதிக்கப்பட்டது.

புதுவையில் ஹரிஜனங்கள் போற்றும் உப்பளம் முத்துமாரியம்மன் கோயில் மீதுதான் "தேச முத்துமாரி பாட்டு" பாடியிருக்கிறார் பாரதி.

"வெள்ளைக்காரனை வீட்டுக்குப் போகச் செய்வது; ஜாதியென்ற இந்த நாசப் பூண்டை வேரோடு களைவது; பெண்களுக்கு விடுதலை இந்த மூன்றும் அத்தியாவசியம்" என்று பாரதி அடிக்கடி சொல்வாராம். இவற்றை அக்காலத்திலேயே செயலிலும் காட்டிவந்த தீரர் அவர்.

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur