முதல் மகாயுத்தம் முடிந்து ஒன்பதே நாட்களில் பாரதி பகிரங்கமாகப் புதுவையை விட்டுச் சென்னை மாகாணத்துக்குத் திரும்புவதாகத் தீர்மானித்துவிட்டார். அதற்கு முன்பாக, பாரதியின் மாமனார் இறந்துவிட்டதனால், செல்லம்மா தம் ஊராகிய கடயத்துக்குச் சென்று, ஒரு மாதம் கழித்துத் திரும்பி வந்தார். திரும்பி வந்தது முதல் பிரிட்டிஷ் இந்தியாவுக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை அவருக்கிருந்தது. உற்றார் உறவினரும் பாரதிக்குக் கடிதம் எழுதினார்கள்.
1918ஆம் வருஷம் நவம்பர் மாத வாக்கில், ஒரு நாள் பாரதி தம்பதிகளுக்குள்ளே ஏதோ பிணக்கு. செல்லம்மாள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, முக்கியமான சாமான்களுடன் கடயத்துக்குக் கிளம்பிச் சென்றார். ஆனால் ஒரு வாரத்தில் தம் தமயன் அப்பாதுரையுடன் செல்லம்மாள் திரும்பி வந்துவிட்டார்.
1918ஆம் வருஷம் நவம்பர் மாத 20ஆம் தேதி பாரதி, செல்லம்மாள், அப்பாதுரை மூவரும் வில்லியனூர்ப் பக்கம் குதிரை வண்டியில் போனார்கள். 6ஆவது மைலில் ஒரு ஹெட் கான்ஸ்டேபிள் அவரைக் கைது செய்திருப்பதாகச் சொன்னார். வாரண்ட் தன்னிடமில்லையென்றும், அவரைக் கைது செய்ய வாரண்ட் தேவையில்லை யென்றும் அவர் சொன்னார். பாரதியை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்று, போலீஸ் ரிப்போர்ட் சகிதம் கடலூர் ஸ்டேஷனரி ஸப் மாஜிஸ்ட்ரெட் ஆர். சக்கரவர்த்தி அய்யங்கார் முன் ஆஜர் செய்தார்கள். பாரதியை இரண்டு நாள் கடலூர் ஸப் ஜெயிலில் வைத்திருக்கும் படி மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.
கடலூர் வக்கீல் சடகோபாச்சாரியார், நடராஜய்யர் என்ற இருவர் பாரதியை ஜாமீனில் விடவேண்டு மென்று கோரினார்கள். பாரதி ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டிடம் அன்றே அனுப்பபப் படுவாரென்றும், தம்மிடம் ஜாமீன் மனு கொடுப்பதில் பயனில்லை என்றும் மாஜிஸ்ட்ரேட் கூறினார்.
செல்லம்மாளும் அப்பாதுரையும் புதுவை திரும்பி, வீட்டைக் காலி செய்துகொண்டு, பாக்கிகளைத் தீர்த்து குழுந்தைகளுடன் திருநெல்வேலியில் அம்பா சமுத்திரம் தாலூகாவிலுள்ள தங்கள் ஊரான கீழக்கடயம் போய்ச் சேர்ந்தார்கள்.
24.11.1918 ஞாயிற்றுக் கிழமைதான் சிதம்பரத்தில் முகாம் செய்த ஜில்லா மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் ஸ்டோடாட்டிடம் பாரதி ஆஜர் செய்யப்பட்டார். வக்கீல்களும் ஜாமீன் மனு சமர்ப்பித்தார்கள் பாரதியை சென்னை
சர்க்கார் உத்தரவுப்படியே கைது செய்திருப்பதாயும், யுத்தம் ஆரம்பித்த சமயம் அமுலுக்கு வந்த "இந்தியா பிரவேசச் சட்ட"த்தின்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தென்றும், அன்றே சென்னை சர்க்காருக்கு ரிப்போர்ட் அனுப்புவதாகவும் ஜில்லா மாஜிஸ்ட்ரேட் கூறினார்.
கடலூர் ஸப் ஜெயில் இருப்பதற்கு வசதியானதல்ல வென்றும், ஸிவில் ஜெயில் இருப்பதற்கு வசதியானதல்ல வென்றும், ஸிவீல் ஜெயிலிலாகிலும் வேறு எந்த இடத்திலாகிலும் பாரதியை வைத்திருப்பது தகுமென்றும், சமீபத்தில் காய்ச்சல் நோயினால் மிகவும் க்ஷீணப்பட்டிருக்கும் பாரதிக்கு இயன்ற சௌகரியங்கள் செய்துதர வேண்டுமென்றும் வக்கீல்கள் கேட்டுக்கொண்டார்கள். அவ்விதமே செய்வதாக ஜில்லா மாஜிஸ்ட்ரேட் வாக்களித்து, கடலூர் ஸிவில் ஜெயில் சூபரிண்டெண்டுக்கு கடிதம் எழுதியனுப்புவதாகவும் சொன்னார்.
இரண்டொரு தினங்களில் சென்னை போலீஸ் டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் மிஸ்டர் ஹானிங்டன் கடலூர் ஜெயிலில் பாரதியைக் கண்டு பேசினார். அப் பேச்சிலிருந்து பாரதி நிபந்தனையின்றி விடுவிக்கப்படுவாரென்று ஊகிக்கப்பட்டது.
1918 டிஸம்பர் 16ஆம் தேதி "சுதேச மித்திரன்" தினசரியில் தலையங்கத்துக் அடுத்தாற்போல் பின்வரும் செய்தி வெளிவந்தது:
ஸ்ரீமான் சப்பிரமணிய பாரதிக்கு விடுதலை
"கடலூர் ஜெயிலிலிருந்து ஸ்ரீமான் சப்ரமணிய பாரதி விடுதலை யடைந்துவிட்டதாகவும், அவர் திருநெல்வேலி வழியாய் கடயம் போய்ச் சேர்ந்துவிட்டதாகவும், அவருடைய உடம்பு அசௌகரியமாயிருப்பதால் பாபநாசத்திலாவது குற்றாலத்திலாவது கொஞ்ச காலம் தாமதிப்பரென்றும் அவர் திருநெல்வேலியைக் கடந்து சென்றபொழுது அவருடைய சிநேகிதர்கள் ரயில்வே ஸ்டேஷனில் எதிர் கொண்டழைத்து சந்தோஷ ஆரவாரம் செய்ததாகவும் தந்தி கிடைத்திருக்கிறது."
பாரதி விடுதலையான சரியான தேதி இதிலிருந்து தெரியவில்லை. ஆனால் டிஸம்பர் 14ஆம் தேதி என்று ஊகிக்கலாம். அப்படியென்றால் நவம்பர் 20 முதல் டிஸம்பர் 14 வரை 24 நாட்கள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார் பாரதி.
பாரதி புதுச்சேரிக்குப் போனது 1908ஆம் வருஷம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில். அங்கிருந்து வெளியேறியது 1918ஆம் வருஷம் நவம்பர் மாதம் 20ஆம் தேதி. பாரதியின் புதுவை அஞ்ஞாதவாசம் பத்தேகால் வருஷம் நடந்தது.
கடயம் போய்ச் சேர்ந்த இரண்டு தினங்களில் பாரதி "மித்திரன்" ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி அய்யங்காருக்கு ஒரு வந்தனக் கடிதம் எழுதினார். இது "மித்திர"னில் 19.12.1918 பிரசுரமாயிற்று:
கடயம்,
டிசம்பர், 17
ஸ்ரீமான் ரங்கஸ்வாமி அய்யங்காருக்கு நமஸ்காரம். ஞாயிற்றுக்கிழமை (15ஆம் தேதி) இரவு நான் இவ்வூருக்கு வந்து சேர்ந்தேன். என் விடுதலையின் பொருட்டாகத் தாங்களும் மற்ற நண்பர்களும் மிகவும் சிரத்தையுடன் பாடுபட்டதற்கு என் மனப்பூர்வமான நன்றி தெரிவிக்கிறேன்.
ஸ்ரீமதி அன்னி பெஸண்ட், ஸ்ரீ மணி அய்யர், ஸ்ரீ சி.பி.ராமசாமி அய்யர் முதலாக என் விடுதலை விஷயத்தில் சிரத்தை யெடுத்துக் கொண்ட தங்களுடைய மித்திரர்களுக்கெல்லாம் எனது நன்றி தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.
தங்கள் அன்புள்ள
சி.சுப்பிரமணிய பாரதி.
டிஸம்பர் 21ஆம் தேதியன்று கடயத்திலிருந்து பரலி சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில் தமது நூல்களைப் பிரசுரிப்பதில் அரசாங்கத் தடைகள் ஏதும் இல்லையென்றும், டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹானிங்டன் தம்மிடம் அன்புடன் நடந்து கொள்வதாயும் பாரதி எழுதுகிறார். ஏற்கனவே "நாட்டுப் பாட்"டைவெளியிட்ட நெல்லையப்பரே "பாஞ்சாலி சபத"த்தையும் வெளியிடலாமென்று யோசனை சொல்கிறார். தமது நூல்களைப் பிரசுரிக்கும் காரியத்தில் தீவிரமாக ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் வற்புறுத்துகிறார்.
கடயம் என்பது, திருநெல்வேலியிலிருந்து தென்காசி போகும் ரயில் பாதையில், தென்காசிக்கு நான்கு ஸ்டேஷன்கள் முன்னே உள்ள ஒரு சிற்றூர். செல்லம்மாளின் சொந்த ஊர் இது. கடயம் இயற்கையழகு நிறைந்த இடம். ஊருக்கு வெளியே அழுகானதோர் சிற்றாறு உண்டு. அதற்கப்பால் எலுமிச்தைத் தோட்டங்களும் மாந்தோப்புகளம் பசுமையான நெல் வயல்களும் இருக்கும். ஊருக்கு மேற்கே எங்கு பார்த்தாலும் ஒரே நீலமலைச் சிகரங்கள். அவைகளிலிருந்து விழும் அருவிகளும் சலசலவென்றோடும் ஓடைகளும் பாரதிக்கு பேரானந்தம் அளித்தன.
கடயத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் நித்திய கல்யாணி அம்மன் கோவில் இருக்கிறது. மலையடிவாரத்தில், ஒரு கற்பாறையிலுள்ள சுனையும், பாறைகளுக்கு நடுவே ஓர் அழகான ஏரியும் இருக்கின்றன. ஏரிக்கரையில் ஒரு பத்திரகாளி கோயில். அதனருகே ஒரு பழைய ஆலமரம். இந்த ஆலமரக் காட்சியை "ஜகத்சித்திரம்" என்ற நாடகத்தில் பாரதி வர்ணித்திருக்கிறார்.
நித்திய கல்யாணி அம்மனைப் பற்றியும் பாரதி பாடியிருக்கிறார். "நின்னையே ரதியென்று நினக்கிறேனடி" என்று தொடங்கும் பாட்டிலும், "பூலோக குமாரி" என்ற பாட்டிலும் "உஜ்ஜயினி நித்திய கல்யாணி" என்ற நவராத்திரிப் பாட்டிலும் நித்திய கல்யாணி அம்மனைப் போற்றியிருக்கிறார்.
இயற்கை அழகு மிகுந்திருந்தாலும் கடயம் நாகரிக வாசனையற்ற பிற்போக்கான கிராமம்தான். அதிசீக்கிரத்தில் கடயம் வாசம் பாரதிக்குப் புளித்துப் போய்விட்டது. புதுச்சேரியே தேவலை என்றுகூட ஆகிவிட்டது!
கடயத்தில் முதலில் ராமசாமி கோயிலுக் கெதிரேயுள்ள அக்கிரகாரத்தில் தமது மைத்துனர் வீட்டில் பாரதி தம் குடும்பத்தாரோடு வசித்தார். முஸ்லிம்கள் முதலியோரும் நண்பர்களாயிருந்தனர். ஒரு சமயம் ஓர் உற்சவத்தில் சைவப் பிள்ளைமார்களுடன் உட்கார்ந்து போஜனமருந்தினார் பாரதி. அது கடயம் பிராம்மண சமூகத்துக்கு மன்னிக்க முடியாத குற்றமாகி விட்டது. அவரை உணவு அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு போட்டார்கள். செல்லம்மாளும் குழந்தைகளும் ஊரார் நிர்ப்பந்தத்தினால் பாரதிக்கு உணவளிக்க இயலாது போனார்கள். புதுவையில் நிர்க்கதியாய்ப் பட்டினி கிடந்த பாரதி கடயத்தில் நிர்ப்பந்தமாய்ப் பட்டினி கிடக்கும்படி நேர்ந்தது.
பாரதி மூன்றுநாள் பட்டினியிருந்தார். பசி தாங்காமல் தவிக்கும் அவரைக் கண்டு இரக்கப்பட்டுக் குடியானவன் ஒருவன் அவருக்கு ஏதோ தின்பண்டங்கள் கொண்டு கொடுத்தான். பாரதி இறந்து விடுவாரோ என்று பயந்து அக்கிரகாரத்தினரும் உணவு கொடுத்தார்கள். ஆனால் ஆகாரம் செல்லவில்லை; வாந்தியெடுத்து அவஸ்தைப்பட்டார் கவிஞர்.
வழக்கம் என்ற கட்டுப்பாட்டை சிறிதும் மதிப்பவரல்ல பாரதி. கழுதையைத் தொடக்கூடாது என்ற தமிழ்நாட்டில் ஒரு குருட்டு வழக்கமுண்டு. கடயத்தில் ஒரு நாள் அழகான கழுதைக்குட்டி யொன்று பாரதியின் வீட்டெதிரே மேய்ந்துகொண்டிருந்தது. அதன் அழகில் லயித்து அதைக் கட்டியணைத்தார் கவி. ஊரார் அவரை கேலி செய்தனர்.