மதுரை ரா.ஸ்ரீநிவாஸவரதய்யங்காருக்கு முதல் கடிதம் எழுதிய இருபது நாட்களில், 1920 ஆகஸ்ட் 20ஆம் தேதி, இரண்டாவது கடிதம் ஒன்று பாரதி எழுதினார். ஸெப்டம்பர் மாதம் முதலாக வெளிவருவதாயிருந்த "அமிர்தம்" பத்திரிகை அடுத்த 1921 ஜனவரி முதலே ஆரம்பமாகுமென்று இக்கடிதத்தில் தெரிவிக்கிறார். பணத்துக்கு அவசியம் முன்னைவிட கடுமையாக இருக்கிறது. "தாங்கள் சொலியபடி சொத்தை விற்றேனும் கொண்டு வரக்கூடிய தொகையைக் கொண்டு இவ்விடத்திற்கு உடனே வந்து சேரும்படி" பிரார்த்திக்கிறார் கவிஞர்.
1920ஆம் ஆண்டில், திருநெல்வேலியில் தாமிரவருணி நதிக்கரையில் தமிழ் மாகாண அரசியல் மகாநாடு கூடியது. அப்போதுதான் அட்வகேட் - ஜெனரல் பதவியை உதறியெறிந்துவிட்டு வந்திருந்த எஸ்.ஸ்ரீநிவாஸய்ங்கார் தலைமையில் இம் மகாநாடு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.
மகாநாட்டுக்கு பாரதி வருவதாயிருந்தது; வரவில்லை ஸ்ரீநிவாஸவரதய்யங்காரும், பாரதியின் மருமான் சங்கரனும் மற்றும் இருவரும் மகாநாட்டுக்குப் போய்விட்டு, பாரதியைக் காணக் கடயம் சென்றார்கள்.
இரவு பத்து மணிக்கு பாரதியின் வீட்டை அடைந்தார்கள். செல்லம்மாளும் குழந்தை சகுந்தலாவும் உறங்குகின்றனர்; பாரதி படுக்கையை விரித்து, எதிரே ஒரு மரக் கைப்பெட்டியின் முன் உட்கார்ந்து "சுதேசமித்திர"னுக்கு ஒரு வியாசம் எழுதிக்கொண்டிருந்தார். அருகே ஒரு முக்காலியில் ஹரிகேன் விளக்கு; பக்கத்தில் வெற்றிலைப் பெட்டி. கறுப்புக் கோட்டு, வால்விட்ட தலைப்பாகையுடன்தான் அந்த நேரத்திலும் விளங்குகிறார் பாரதி.
வந்தவர்கள் பாரதியை நமஸ்கரித்தனர்.
அரசியலைப் பற்றிப் பேச்சு ஆரம்பித்தது. "நாடு எப்படியும் முன்னேறப் போகிறது. தீவிரமான தீர்மானங்கள் நிறைவேறியிருக்கின்றன. காந்தியடிகள் வழிகாட்டப் போகிறார்கள். எல்லாரும் சுகமடைய வேண்டும்" என்று பாரதி சொன்னார்.
பிறகு, பாரதி, தாம் புதிதாய்ப் புனைந்துள்ள சில பாடல்களைப் பாடினார். தம்மைப் போலவே உணர்ச்சியுடனும் கம்பீரத்துடனும் பாடக் கூடியவரான சங்கரனிடம் "இதைக் கேட்டாயா?" என்று பாடிக் காண்பித்தார். "சந்திரமதி காதல்"(பச்சைக் குழந்தையடி),"வருவாய், வருவாய் கண்ணா", "காலா சற்றே என் காலருகே வாடா" முதலிய பாடல்களைப் பாடியபின், "ஆறுதுணை" என்ற ஓம் சக்திப் பாட்டையும் பாடினார் கவிஞர். சமீபத்தில் பொட்டல்புதூரில் பாடிய "அல்லா" பாட்டையும் பாடிக் காட்டினார்.
பாட்டு முடிந்தது. மனிதன் அமரத்தன்மையடையும் விதத்தை விளக்க ஆரம்பித்தார் பாரதி. பயத்தை ஒழி, சாவுக்கு அஞ்சாதே, கவலையை விடு என்று கூறி, "ஒவ்வொருவரும் அமரநிலை எய்தல் வேண்டும்" என்று வற்புறுத்தினார்.
இரவு 12:30 மணிக்கு எல்லாரும் உறங்கப் போனார்கள். காலையில் நண்பர்களுக்குச் செல்லாம்மாள் சிற்றுண்டி அளித்தார். பாரதி காலைப் பத்திரிகை "மித்திர"னைப் பார்த்தார். அப்போது உள்ளூர் பிராமணரல்லாத அன்பர்கள் சிலர் வந்து பாரதியுடன் உரையாடினார்கள். ஆரியர் - திராவிடர் பற்றிப் பேச்சு. "அன்பர்களே! ஆரியர்களுக்கு முன்னால் திராவிடர்கள், அவர்களுக்கு முன்னால் ஆதித் திராவிடர்கள், அதற்கு முன் இருந்தது மிருகங்கள், ஜீவராசிகள். அவைகள் வாழ்ந்த இடத்தை வெட்டித் திருத்தி வீடு கட்டி, பயிர் செய்து நாம் வாழுகின்றோம். அவைகள் உரிமை கொண்டாடினால் நாம் அனைவரும் அவைகளிடம் விட்டுப் போக வேண்டியதுதான்" என்று நகைத்தார் கவிஞர்.
பிறகு, "அமிர்தம்" பத்திரிகைத் திட்டத்தைப் பற்றியும், தமது நூல்கள் எப்படிப் பிரசுரமாக வேண்டுமென்பது பற்றியும் அவர் பேசினார். மணி 11. பாரதி ஸ்நானம் செய்து வந்தார். ஸ்நான அறைக்குக் கச்சம், கோட்டு தலைப்பாகையுடன் சென்றவர், ஸ்நானம் முடித்து, அதே போலத் திரும்பினார்.
பகல் உணவும் நடந்தது. மணி ஒன்று. பாரதி உள்ளே சென்று ஒரு சாக்கு மூட்டையைக் கொண்டு வந்து பிரித்தார். அருமையான காவியங்களின் எழுத்துப் பிரதிகள்! அவைகளை வைக்கப் பெட்டிகூட இல்லை!
"பாஞ்சாலி சபத"த்தை ஆரம்ப முதல் கடைசி வரை பாடிக் காட்டினார். எல்லாம் நேரில் நடப்பதுபோல் கேட்போருக்கும் உணர்ச்சி பொங்கியது. மாலை 5 மணியாகிவிட்டது. 6 மணிக்கு ரயில். அன்பர்கள் பிரிய மனமின்றி விடை பெற்றனர். "சென்று வாருங்கள். கடிதம் போடுங்கள்" என்று விடை சொல்லி அனுப்பினார் பாரதி.
அவர் வாழ்க்கையில் அது ஒரு நாள்; மற்றவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாததோர் சுதினம்.
60. மீண்டும் சென்னை வாசம் |
கடயத்திலிருக்கையில் பாரதி தம் உறவினர் வீட்டுக் கல்யாணம் ஒன்றுக்காகத் திருவனந்தபுரம் போயிருந்தார். திருவனந்தபுரம் விஜயத்தின்போது சில குறிப்பிடத்தக்க சம்பவங்கள் நடந்தன.
கல்யாண வீட்டில் பலர் புகழ் பெற்ற திருவனந்தபுர மிருகக் காட்சிகாலைக்குப் போயிருந்தார்கள். பாரதியும் செல்லம்மாளும் கூடப் போனார்கள். மிருகக் காட்சி சாலையில் ஒவ்வொரு மிருகத்தையும் அன்புடன் தடவிக் கொடுத்து வந்தார் பாரதி. குரங்குகள் கரடிகள் பாதகமில்லை; புலி சிங்கத்தை நம்ப முடியாது என்று காட்சிசாலைக் கிழவன் எச்சரிக்கை செய்தான். என்னை ஒன்றும் செய்யாது, சிங்கத்தைக் கூப்பிடு, தழுவிக்கொள்கிறேன் என்றார் பாரதி. அரை மனதுடன் கிழவன் சிங்கத்தை அழைத்தான். எதற்கும் முன்ஜாக்கிரதையாக அதன் வாலைப் பிடித்துக் கொண்டு, தொடச் சொன்னான்.
பாரதி பயமின்றி சிங்கத்தினருகே போனார். "மிருகராஜா! கவிராஜன் பாரதி வந்திருக்கிறேன். உன் சக்தியையும் வீரத்தையும் எனக்குக் கொடுக்க மாட்டாயா? நீ பொல்லாதவனென்று இவர்கள் பயப்படுகிறார்கள். உங்கள் இனம் மனிதரைப்போல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் சுபாவம் இல்லாதது என்பதையும், அன்பு கொண்டோரை வருத்தாதது என்பதையும் இங்கிருப்போர் தெரிந்து கொள்ளும்படி உன் கர்ஜனையின் மூலம் தெரியப்படுத்து ராஜா" என்றார்.
உடனே சிங்கம் கம்பீரமாகப் பத்து நிமிஷம் கர்ஜித்தது. தமக்குத் திருப்தியாகும் வரை பாரதியும் சிங்கத்தின் தலை, பிடரி, காது எல்லாவற்றையும் தடவிக் கொடுத்தார். செல்லம்மாள் முதலியோர் மட்டும் தடுக்காமலிருந்தால், வாயிலும் கைவிட்டுப் பார்த்திருப்பாராம்!
திருவனந்தபுரத்தில் பிரபல வக்கீலாகவிருந்த கே.ஜி.சேஷையர் வீட்டில் பாரதி இறங்கியிருந்தார். சேஷையர் நல்ல தமிழபிமானி. அவரது சகோதரர் கே.ஜி.சங்கரய்யரும், கவிமணி தேசிக விநாகம் பிள்ளையும், அப்போது திருவனந்தபுரத்தில் வக்கீலாயிருந்த எஸ்.வையாபுரி பிள்ளையும் சைவப் பிரசார சபை என்ற சங்கத்தில் மாலைதோறும் திருக்குறள் வகுப்பு நடத்தி வந்தனர். திருவனந்தபுரத்தில் தெருவழியே சென்ற பாரதி, மலையாள நகரில் தமிழ்ப் பெயர்ப் பலகை ஒன்றைக் கண்டார். குதூகலத்துடன் உள்ளே நுழைந்து, அங்குறரை எதிர்பார்த்து நின்ற வையாபுரிப் பிள்ளையுடம் தாம் யாரென்று அறிவித்துக் கொண்டார். வையாபுரிப் பிள்ளை பாரதியை உள்ளே யழைத்துச் சென்று எல்லாருக்கும் அறிமுகப் படுத்தி வைத்தார், பாரதியை பாடும்படியும் வேண்டினார். "சின்னஞ் சிறு கிளியே", "வெடுபடி மண்டத் திடி பல தாளம் போட" என்ற பாடல்களை பாரதி பாடினார்.
பாரதி குடிக்க நீர் கேட்டார். பிளையவர்கள் ஆரஞ்சு கிரஷ் கொண்டுவர ஆளை அனுப்பினார். "தண்ணீர் போதுமானது" என்றால் பாரதி. அக்கம் பக்கத்தில் பிராமணர் வீடுகள் இல்லையென்றார் பிள்ளை. எரித்துவிடும் பார்வையுடன், தாம் அவ்வாறான ஜாதி வேறுபாடுகளைப் பாராட்டுவதில்லை என்று கடுமையாகவே பாரதி சொன்னாரென பிள்ளையவர்கள் குறித்திருக்கிறார்.
நாளாக ஆக, கடயம் வாசம் பாரதிக்கு அலுத்துவிட்டது. சிறிய கிராமம், முற்போக்கில்லாத மக்கள், தம் ஜீவனோபாயத்துக்கும் வசதி இல்லை. பாரதி மீண்டும் சென்னை செல்லத் தீர்மானித்துவிட்டார். இளமையில் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் சென்னையில் உல்லாசமாய்க் காலம் கழிந்ததும் அவருக்கு நினைவுத் திரையில் தோன்றியிருக்கக் கூடும்.
1920ஆம் ஆண்டு முடிவில்,அனேகமாக நவம்பர் மாதத் துவக்கமாயிருக்கலாம், பாரதி சென்னை வந்து சேர்ந்தார்.
பாரதி நேராகத் தம் பழைய நண்பர் வக்கீல் எஸ்.துரைசாமி அய்யர் வீட்டுக்குச் சென்றார். ஜார்ஜ் டவுன், ராமசாமித் தெருவில் வசித்து வந்தார் துரைசாமி அய்யர். பாரதியின் விருப்பப்படி அவர் "சுதேசமித்திரன்" ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி, ராமசாமித் தெருவில் வசித்து வந்தார் துரைசாமி அய்யர். பாரதியின் விருப்பப்படி அவர் "சுதேசமித்திரன்" ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி அய்யங்காரிடம் போனார். தம் காரியாலயத்தில் பாரதிக்கு எப்போதும் வேலை உண்டென ரங்கஸ்வாமி அய்யங்கார் மலர்ச்சியுடன் தெரிவித்தார். 14 வருஷங்களுக்குப் பின் மீண்டும் "மித்திரன்" உதவியாசிரியரானார் பாரதி.
1920, நவம்பர் 15ஆம் தேதி முதலாக பாரதியின் நானாவிதக் குறிப்புகள் அநேகமாய் தினங்தோறும் "மித்திர"னில் வெளிவரத் தொடங்கின அவ்வப்போது வரும் செய்திகளை வியாஜமாகக் கொண்டு, அரசியல் சமூகம், கலைகள் முதலிய பற்பலை சுடர்களை எழுதித் தள்ளினார் பாரதி.