சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
8
15. முதல் பிரசுரம்
முன் பக்கம்
   

1904ல் சென்னை வந்தது முதலே பாரதியின் தேசாவேசம் பெருந்தீயாகக் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. வங்கப் பிரிவினை சமயம் "வந்தே மாதர" கீதத்தை, "இனிய நீர்ப் பெருக்கினை! இன் கனி வளத்தினை!" என்று துவங்கும் முதல் மொழி பெயர்ப்பை, 1905 டிஸம்பர் மாதம் "சக்கரவர்த்தினி" பத்திரிகையில் பாரதி வெளியிட்டார்.

இதற்கு இரண்டு மாதம் கழித்து 1906 பெருவரியில், "எமது தாய்நாடாகிய பாரதாம்பிகையின் பெருமையை வருணித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பல்வேறு காலத்துப் பல்வேறு புலவர்களால் பாடப் பெற்ற செய்யுள் மணிகளை ஓர் மாலையாகப் புனைந்து" பதிப்பித்து ஒரு நூல் வெளியிடத் தாம் விரும்புவதாகவும், பழைய நூல்களிலுள்ள நாட்டு வர்ணனைகளல்லாமல் புதியனவான தேசபக்திப் பாடல்களைப் புனைந்தனுப்புமாறும் "சுதேசமித்திர"னில் ஒரு வேண்டுகோள் வெளியிட்டார்.

பாரதி எதிர்பார்த்தபடி தேசீயக் கவிதைகளை எவரும் அனுப்பவில்லை. ஆதலால், குறையை நிவர்த்திக்கும் பணியில் தாமே ஈடுபட்டுவிட்டார் அவர்! அவர் இயற்றிய பல தேசாவேசப் பாக்கள் "மித்திர"னிலும் "இந்தியா"விலும் இதர பத்திரிகைகளிலும் வெளிவந்தன. ஆயினும் கவிஞருக்குத் திருப்தியில்லை. தமது பாடல்களை நூல் வடிவில் வெளியிட ஆவலாயிருந்தார்; ஆனால் பணத்துக்கோ வழியில்லை. என் செய்வது? தம் சிநேகிதரான ஸ்ரீ ஜீ.ஏ.நடேசனிடம் தம் மனக்குறையைத் தெரிவித்துக் கொண்டாராம். அதற்கு அவர், "உங்களுடைய ஆசையைப் பூர்த்தி செய்யக் கூடியவர் ஸ்ரீ வி.கிருஷ்ணஸ்வாமி ஐயரே. வேண்டுமானால் உங்களை அவரிடம் இன்றே அழைத்துச் செல்கிறேன்." என்றார்.

பழுத்த மிதவாதியும், தமது "இந்தியா" பத்திரிகையில் வாரம் தோறும் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகுபவருமான ஒரு அரசியல் எதிராளியிடம் இந்த சகாயத்துக்குப் போவதா? போனால்தான் பலிக்குமா? "அவர் சதா என்னைப் பற்றிக் கோபத்துடன் பேசுகிறாராமே! எனக்கு அவிரிடம் போக இஷ்டமில்லை" என்றார் பாரதி.

ஸ்ரீ நடேசன் விடவில்லை. "உங்களுக்கு அவர் சுபாவம் தெரியாது. உங்கள் பாட்டை அனுபவித்தாரானால் தகுந்த உபகாரம் செய்யாமல் இருக்கமாட்டார்" என்று திரும்பத் திரும்ப வற்புறுத்தி அன்று மாலை பாரதியை ஸ்ரீ.கிருஷ்ணஸ்வாமி ஐயர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

மயிலாப்பூரிலுள்ள தமது பங்களாவுக்கு முன்னால், திறந்த வெளியில் நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார் கிருஷண ஸ்வாமி ஐயர். சற்றே இருட்டிய சமயம் நடேசன் ஏதோ புது மனிதர் ஒருவருடன் வந்திருப்பதைக் கண்டு யாரென விசாரித்தார் கிருஷ்ணண்வாமி ஐயர். ஐயரும் பாரதியும் முன்னர் சந்தித்ததில்லை. நடேசன் புன்முறுவலுடன், "இவர் ஒரு தமிழ்க் கவிஞர்; சில பாட்டுக்களை இயற்றியிருக்கிறார். நிச்சயம் கேட்பீர்கள் என்று அழைத்து வந்திருக்கிறேன்" என்றார். ஐயரின் குறிப்பறிந்து பாரதியைப் பாடச் சொன்னார் நடேசன். கணீரென்ற குரலில் பாரதி "வந்தே மாதரம் என்போம்" என்ற பாட்டை, நாத நாமக்கிரியையில் ஆனந்தக் களிப்பு மெட்டில் பாடத் தொடங்கினார். "ஆயிரம் உண்டிங்கு ஜாதி" என்ற அடியில், நாற்காலியில் சாய்ந்ததிருந்த கிருஷ்ணஸ்வாமி ஐயர் உட்கார்ந்துவிட்டார்.

அடுத்தபடி "எந்தையும் தாயும்" என்று துவங்கும் "நாட்டு வணக்க'த்தை காம்போஜியிலும், முடிவாக "மன்னுமிமயமலை" என்று துவங்கும் 'எங்கள் நாடு' பாட்டை பூபாளத்திலும் பாடி முடித்தார் பாரதி, கிருஷ்ணஸ்வாமி ஐயருக்கு உற்சாகம் தாங்கவில்லை. "இவ்வளவு அழகான பாட்டுக்களை ஏன் நீர் ஊறப்போட்டு வைத்துக் கொண்டிருக்கிறீர்! நாடெங்கும் பள்ளிகளிலும், பெண்களுக்க சங்கீதம் சொல்லிக் கொடுக்கம் தனிகர்களிடையிலும் இவைகளைப் பரவச் செய்ய வேண்டாமா? ஏன் சும்மா இருக்கிறீர்?" என்று கேட்டார்.


நண்பர் நடேசன் கவிஞரின் நிலைமையை நயமாக விளக்கினார்; "நீங்கள் உதவி செய்தால்..." என்றார்.

"அதற்கென்ன தடை? இதோ உங்களுக்கு நூறு ரூபாய். இந்த மூன்று பாட்டுக்களை அச்சிட்டு இனாமாக வழங்க ஆகும் செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் பெயர் என்ன?"

தர்மசங்கடமான நிலைமை. பாரதி நடேசனைப் பார்த்தார். அவரோ, சிரிப்புடன், "இவர்தான் அடிக்கடி 'இந்தியா' பத்திரிகையில் நீங்கள் வாசிக்கும் கட்டுரைகளின் ஆசிரியர் பாரதியார்" என்று தெரிவித்தார். எதிர்பார்த்ததற்கு மாறாக கிருஷ்ணஸ்வாமி அய்யரும் "தாங்கள்தான் சுப்பிரமணிய பாரதியாரா! என்ன உயர்ந்த தேசாபிமானம் தங்களிடம் தெரிகிறது! இது தெரியாமல் தங்களை வெறும் வெறி பிடித்தலையும் தீவிரவாதிகளில் ஒருவராக அல்லவோ நினைத்தேன்!" என்றாராம்.

அன்று பாரதி பாடிய மூன்று பாட்டுக்களையும் பதினையாயிரம் பிரதிகளுக்மேல் அழகிய காகிதத்தில் அச்சிட்டு நாடெங்கும் பள்ளிக்கூடங்களுக்கும் பொது ஸ்தாபனங்களுக்கும் இலவசமாய் அனுப்பிவைத்தார் கிருஷ்ணஸ்வாமி அய்யர்.
(இந்த விவரங்களை, வி.கிருஷ்ணஸ்வாமி ஐயரின் புதல்வர் ஸ்ரீ கி.திரசேகரன் தமது தந்தையின் சரித்திர நூலில் வெளிட்டிருக்கிறார்.)

பாரதியின் பாடல்கள் தனிப் பிரசுரமாக வெளிவந்தது இதுதான் முதல் தடவை. 1904ல் முதல் தடவையாக பாரதி பாடல் அச்சேறியது; 1907ல் முதல் தடவையாக பாரதி பாடல்கள் சிறு தனிப் பிரசுரமாக வெளியாயின.

1907ல் வி.கிருஷ்ணஸ்வாமி அய்யர் வெளியிட்ட "ஸ்வதேச கீதங்கள்" பதிப்பில் "வந்தே மாதரமென்போம்" என்ற முதல் பாடலின் கடைசிப் பா பின்னர் வந்த பதிப்புகளில் விட்டுப் போயிருக்கிறது.

"தேவி நம் பாரதபூமி - எங்கள்
தீமைகள் யாவையுந் தீர்த்தருள் செய்வாள்
ஆவியுடன் பொருள் மூன்றும் - அந்த
அன்னை பொற்றாளினுக் கர்ப்பிதமாக்கி
(வந்தே)"
என்பதுதான் விட்டுப்போன பா. ஆனால், இந்த 1907ல் பதிப்பில் இல்லாத "புல்லடிமைத் தொழில் பேணி" என்ற பா தற்போதைய பதிப்புகளில் இருக்கிறது. பாரதியாரே பாடல்களைக் கூட்டிக் குறைத்துத் திருத்தினாரோ என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்ற சிறந்த பாட்டை பாரதி பாடியதற்கும் வி.கிருஷ்ணஸ்வாமி ஐயர் தூண்டுகோலாயிருந்தார் என்று தெரிகிறது.

கிருஷ்ணஸ்வாமி ஐயர், நம்முடைய நாட்டின் பழம் பெருமையை ஆண்களும் பெண்களும் பாடும் வண்ணம் எளிய நடைப் பாட்டாக அமைக்கவேண்டும் என்று அடிக்கடி உரைத்து வந்தார். அய்யருடன் பாரதி பழக்கமான பிறகு ஒரு நாள் சென்னை பிரஸிடென்ஸி காலேஜில் கிருஷ்ணஸ்வாமி அய்யர் செய்ததோர் பிரசங்கத்தில் "தமிழில் எத்தனை நூல்கள் இருக்கின்றன! திருவள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை இது; கம்பன் இராமாயணம் இயற்றியது இந்தப் பாஷையிலே; நாயன்மார் தேவராம் பாடிய பாஷை; மாணிக்கவாசகர் திருவாசகம் அருளிய பாஷை; ஆழ்வார்கள் திவ்வியப் பிரபந்தம் பெற்றதும் இப் பாஷையேதான்" என்றெல்லாம் கூறினார். அந்தப் பிரசங்கத்தைக் கேட்டவர்களில் பாரதியாரும் ஒருவர். அந்தப் பேச்சின் கருத்துக்களை வித்தாகக் கொண்டு, "செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்ற பாட்டைப் புனைந்து, கிருஷ்ணஸ்வாமி அய்யரிடம் பாடியும் மகிழ்வித்தார் பாரதி.
(இவ்விவரத்தை தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரவர்கள் தமது "நினைவு மஞ்சரி" நூலில் வெளியிட்டிருக்கிறார்.)

16. முதல் நூல்
முன் பக்கம்

1907ல் மூன்று பாட்டுகளும் ('வந்தேமாதரமென்போம்', 'எந்தையும் தாயும்', 'மன்னுமிமயமலை') நான்கே பக்கங்களுமாக வெளிவந்த "ஸ்வதேச கீதங்கள்" பிரசுரம், அடுத்த வருஷத்தில், பெரிய அளவில் தனி நூலாக வெளியாயிற்று.

1908ல் வெளியான "ஸ்வதேச கீதங்க"ளே முதன் முதலில் வெளியான பாரதி பாடல் நூல். இந்த புத்தகத்தில் இருந்த 14 பாடல்களின் முதலடிகளாவன:

1. வந்தே மாதரமென்போம்
2. வந்தே மதரம் - (ஜய ஜயபாரத)
3. எந்தையும் தாயும்
4. மன்னுமிமய மலை
5. வாழிய செந்தமிழ்
6. விண்ணகத்தே இரவிதனை (லஜபதிராய் துதி)
7. பாபேந்திரியஞ் செறுத்த (பூபேந்திரர் விஜயம்)
8. நெஞ்சிலுரமுமின்றி
9. நாடிழந்து மக்களையும் (லஜபதிராய் பிரலாபம்)
10. தொண்டு செய்யும் அடிமை
11. வீர சுதந்திரம் வேண்டி நின்றார்
12. முன்னாளில் இராமபிரான் (தாதாபாய் நௌரோஜி)
13. ஓய் திலகரே! நம்ம ஜாதிக்கடுக்குமோ
14. பேரருட் கடவுள் திருவடியாணை (மாஜினி சபதம்)

முதல் ஐந்து பாடல்கள் தவிர பாக்கி ஒன்பதும் அரசியல் நிகழ்ச்சிகளை யொட்டிய பாடல்களே, இதை யாவும் லஜபதி, திலகர், முதலிய தீவிரக் கட்சியினரின் போக்குக்கு ஆதரவாகவும், நிதானக் கட்சியினரின் போக்கை மதிப்பற்றதாக்குபவையாகவும் இருக்கின்றன. தமக்குப் பிடித்த நந்தன் சரித்திரக் கீர்த்தனை மெட்டுகளில் 10,11,13 எண்ணிட்ட பாடல்கள் பாடியிருக்கிறார்.

"ஸ்வதேச கீதங்கள்" நூலுக்கு ஸமர்ப்பணம், முகவுரை இரண்டும் இருந்தன. ஆழ்ந்த குருபக்தியுடன் பாரதி தமது நூலை நிவேதித்தா தேவிக்கு வருமாறு சமர்ப்பணம் செய்தார்:ஸ்ரீ கிருஷ்ணண் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதொப்ப, எனக்கு பாரத தேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச் சிறு நூலை சமர்ப்பிக்கிறேன்.
- ஆசிரியன்

தமது முகவுரையில் பாரதி கூறினார். "ஒருமையும் யௌவனத் தன்மையும் பெற்று விளங்கும் பாரததேவியின் சரணங்களிலே யான் பின் வரும் மலர்கள் கொண்டு சூட்டத் துணிந்தது எனக்குப் பிழையென்று தோன்றவில்லை. யான் சூட்டியிருக்கும் மலர்கள் மணமற்றன என்பதனை நன்கறிவேன். தேவலோகத்துப் பாரிஜாத மலர்கள் சூடத் தகுதி கொண்ட திருவடிகளுக்கு எனது மணமற்ற முருக்கம் பூக்கள் அணிக் குறைவை விளைக்கும் என்பதனையும் யான் தெரிந்துள்ளேன். ஆயினும் உள்ளன்பு மிகுதியால் இச் செய்கையிலே துணிவு கொண்டு விட்டேன். சாக்கியன் எறிந்த கற்களையும் சிவபிரான் மலர்களாகக் கருதி அங்கீகரிக்க வில்லையா? அதனையொப்ப, எனது குணமற்ற பூக்களையும் பாரத மாதா கருணையுடன் ஏற்றருளுக!

மயிலாப்பூர் ஸி.சப்பிரமணிய பாரதி
1908மூ வரு ஜனவரி 10உ

"குணமற்ற பூக்கள்" என்று கவிஞன் தன்னடக்கத்துடன் கூறிய இப்பாடல்களைத் தமிழறிஞர்கள் வரவேற்றுப் போற்றினார்கள். இந்த நூலுக்குக் கிடைத்த ஆதரவு, இன்னொரு நூலை வெளியிட பாரதியைத் தூண்டிற்று. இந்நூல் வெளியான மறு வருஷம், 1909ல் பாரதியார் புதுவை போனபின், "ஜன்ம பூமி" என்ற பெயரில் அவர் "ஸ்வதேச கீதங்கள்" நூலுக்கு இரண்டாம் பாகம் வெளியிட்டார். அதையும் அவர் நிவேதித்தா தேவிக்கே சமர்ப்பணம் செய்தார்.

"எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமலுணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய நிவேதித்தா தேவிக்கு இந்நூலை சமர்ப்பிக்கிறேன்
- ஸி.சுப்பிரமணிய பாரதி"

தேச பக்தி என்ற நவீன மார்க்கத்தில் வயப்பட்டு, புதிய சுடரினிடத்து அன்பு பூண்டு, "அவ்வன்பு காரணமாகச் சென்ற வருஷம் சில கவிதை மலர் புனைந்தேன். நான் எதிர்பார்த்திராத வண்ணமாக மெய்த் தொண்டர்கள் பலர் 'இம்மலர்கள் மிக நல்லன' என்று பாராட்டி மகிழ்ச்சி யறிவித்தார்கள். மாதாவும் அதனை அங்கீதாரம் செய்து கொண்டாள். இதனால் துணிவு மிகுதியுறப் பெற்றோனாகி, மறுபடியும் தாயின் பத மலர்க்குச் சில புதிய மலர்கள் கொணர்ந்திருக்கிறேன். இவை மாதாவின் திருவுள்ளத்திற்கு மகிழ்ச்சியளிக்குமென்றே நினைக்கிறேன்" என்று முகவுரையில் கவிஞர் கூறியிருக்கிறார்.

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur