49. தந்திக் காகிதத்தில் ரசீது! |
புதுவையிலிருந்த 'சுதேசி' தலைவர்களுக்கு நிலையான வருவாய் கிடையாது. முதல் மகாயுத்தம் நடந்த காலத்தில் பிரிட்டிஷ் இந்தியப் போலீஸார் புதுச்சேரியில் ஒரு பங்களாவை வாடைக்கு வாங்கிக் கொண்டு அங்கே முகாம் போட்டிருந்தார்கள். 'சுதேசி'கள் மீது கண்காணிப்பும், அவர்களுக்கு உதவி கிடைக்காமல் செய்யும் நடவடிக்கைகளும் அதிகமாகிவிட்டன.
பாரதி, அய்யர், அரவிந்தர், ஸ்ரீநீவாஸாச்சாரி முதலிய 'சுதேசி'த் தலைவர்களின் பணக் கஷ்டத்தைச் சொல்லி முடியாது. தபால் சரியாகக் கிடைக்காது; பிரிட்டிஷ் போலீஸார் வழிமறித்து விடுவார்கள். மணியார்டர்கள் வந்து சேரவே சேராது. புதுச்சேரி மக்களோ போலீஸ் பயத்தினால் உதவி செய்யப் பயந்தார்கள். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து சில்லறையாக சாமான்கள் கடன் வாங்கிக்கொள்வதுகூட அருமையாகிவிட்டது.
பண விஷயத்தில் பாரதியார் நிலைமைதான் மிக மோசம். வ.வே.ஸு.அய்யர் கட்டுப்பாடானவர்; கையில் கொஞ்சம் பணம் வைத்துக்கொண்டு சிக்கனமாகச் செலவு செய்யும் சுபாவமுள்ளவர். ஸ்ரீநிவாஸாச்சாரியாரும் பாதகமில்லை. உள்ளூரில் தொடர்பு கொண்டவர்; ஆதலால் அவருக்குப் புதுவையில் தெரிந்த நண்பர்கள் இருந்தனர். அரவிந்தரின் நிலைமையும் சுமாராக இருந்தது. கையில் கொஞ்சம் பணம் இருந்தால் நல்லதென்று சிக்கமாயிருக்கும் யோசனையே இல்லாத பாரதியாரின் நிலைமைதான் ரொம்பவும் சங்கடமாயிருந்தது.
தப்பித் தவறி பாரதிக்கு யாராவது பணம் அனுப்பினாலும், கர்ணனைப்போல அதைக் கொடையில் செலவழித்து விடுவார் அவர்.
கும்பகோணத்துக்குக் கிழக்கே நாச்சியார்கோயில் என்றொரு ஊர். அதில் டி.ஜி.கிருஷணசாமிப் பிள்ளை என்றொரு சித்திரக்காரர் இருந்தார். இவர் சில சிறு புத்தகங்கள் கூடப் பிரசுரம் செய்திருக்கிறார். கிருஷ்ணசாமிப் பிள்ளை பாரதியாருடைய புத்தகங்களை விற்பனை செய்ய விரும்பி, பாரதியாருக்கு நூற்றைம்பது ரூபாய் அனுப்பினார். பணம் எப்படியோ போலீஸின் கண்களுக்குத் தப்பி பாரதியார் கைக்குப் போய்ச் சேர்ந்தது.
இந்த நூற்றைம்பது ரூபாய்க்கு பாரதியார் அழகான தமிழில் ஒரு ரசீது எழுதியனப்பினார். கடிதம் எழுதுவதில் பாரதியாரின் நடையே தனி அழகு வாய்ந்தது. கூடியவிரையில் தமிழிலேயே எழுதுவார்; தமிழ்ச் சொற்களையே உபயோகிப்பார்; வாக்கியங்கள் வெகு நயமாய் இருக்கும்.
1918 ஜூலை 9ஆம் தேதியிட்டு, கிருஷ்ணஸ்வாமி பிள்ளைக்கு பாரதி அனுப்பிய ரசீதின் வாசகம் வருமாறு:
"தங்களுக்கும் எனக்கும் பின்னே எழுதிக் கொள்ளக்கூடிய உடன்படிக்கைப்படி ஏற்படப்போகிற புஸ்தக வியாபார ஸம்பந்தமாக இப்போது தங்களிடம் முன்பணமாகப் பெற்றுக் கொள்ளுகிற ரூபாய் நூற்றைம்பது (ரூ.150)க்கு இதை ஏற்புச் சீட்டாகவும் கடன் பத்திரமாகவும் அங்கீகரிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன்.
- சி.சுப்பிரமணிய பாரதி"
இந்த ரசீது ஒரு தந்திக் காகிதத்தின் பின் பக்கத்தில் எழுதப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். புதுவையில் நல்ல காகிதம், மை இல்லாமல் பாரதி தவித்த சமயங்கள் பல. ஆனால், காகிதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கையில் கிடைத்த காகிதத்தில் எழுதும் வழக்கம் அவருக்கு உண்டு. இந்த ரசீது எழுத நினைத்த சமயம் தந்திக் காகிதம்தான் கிடைத்தது போலும்!
புதுவையிலிருக்கையில் "சுதேசமித்ர"னுக்கு பாரதியார் எழுதியனுப்பிய விஷயங்கள் அவ்வப்போது "மித்திர"னில் வெளியாயின. ஆனால், பத்திரிகையில் வெளியானவை தவிர புத்தக வடிவமாக அக்காலத்தில் வெளிவந்த சில விஷயங்களும் இருந்தன.
"பாரத ஜன சபை" என்ற ஒரு பெரிய நூலை பாரதியார் "சுதேசமித்ர"னுக்கு எழுதியனுப்பினார். இது இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபையின் சரிதம்; சுமார் ஐம்பது அத்தியாயங்கள் கொண்ட நூல்.
இந்திய விஞ்ஞான அறிஞர் ஜகதீச சந்திரவசு எழுதிய "ஜீவ வாக்கு" என்ற தாவர நூலும் தமிழில் பாரதியாரால் மொழி பெயர்க்கப்பட்டு சிறு நூலாக 2 அணா விலையில் விற்கப்பட்டது.
தாகூரின் சிறு கதைகள் சிலவற்றையும் ஆங்கலத்திலிருந்து தமிழ்ப்படுத்தினார் பாரதி. வங்காளியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, அதிலிருந்து தமிழ்ப்படுத்தப்பட்ட போதிலும் பாரதியின் மோழி பெயர்ப்பு முதநூலின் அழகுடன் விளங்குகிறதே தவிர, மொழி பெயர்ப்பாகவே தோன்றவில்லை.
"பாரத ஜன சபை", "ஜீவ வாக்கு", தாகூர் கதைகள் முதலியவை பாரதியின் நூல் தொகுப்புகளில் இன்னும் சேர்க்கப்படவில்லை.
1918ஆம் வருஷம் முதல் மகாயுத்தம் முடியும் தறுவாயில் பாரதியின் மைத்துனர் அப்பாதுரை புதுவைக்கு வந்திருந்தார். பாரதியிடம் அன்பும் மரியாதையும் கொண்டவர் அப்பாதுரை. தாமும் தேசபக்தி கொண்டவர். அரசாங்க வேலையை ராஜிநாமா செய்தவர். பாரதி புதுவையை விட்டு வெளிக்கிளம்புவதெப்படி யென்ற ஆலோசனைகளில் அப்பாதுரையும் கலந்துகொண்டார்.
1918ஆம் வருஷம் பாரதிக்குப் பல விதமான எண்ணங்கள் இருந்து வந்தன. புதுவை வாழ்வு சலித்துவிட்டது. ஒதே ஊரில் அடைபட்டுக் கிடப்பதை விடுத்து, தாயகமான சென்னை மாகாணத்தில் சஞ்சரிக்க விரும்பினார். ஒரு சமயம் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மன்னர்குடியை யடுத்த நாகை என்ற சிறு கிராமம்(நாகப்பட்டணம் அல்ல) வரை ரகசியமாயச் சென்று வந்தாராம். பாரதியாருக்குத் தலை வழுக்கை. அதை மறைக்க எப்போதும் தலைப்பாகை இருக்கும். நாகை போனபோது அவர் தம் தலைப்பாகையை எடுத்துவிட்டார்; மீசையை சிரைத்துவிட்டார். அவ்வளவுதான், அவர் முகத்தை நன்றாக அறிந்த எல்லைப் போலீஸ் கூட அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை!
பாரதி திடீரென்று கிளம்பிவிட்டது செல்லம்மாளுக்கும் தெரியாது.
பாரதி மாறு வேஷத்தில் போன பத்துப் பதினைந்து தினங்கள் கழித்து மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் வீட்டுக்கு யாரோ ஒரு புது மனிதர் வந்தார். தந்தையுடன் அவர் பேசிக்கொண்டிருக்கையில் ஸ்ரீநிவாஸாச்சாரியாரியின் குமாரி யதுகிரி மாடிக்குப் போனாள். பாரதியுடன் நெருங்கிப் பழகிய அவளால்கூட அந்தப் புது மனிதர் பாரதியே என்று கண்டு கொள்ள முடியவில்லை!
பாரதி இவ்வாறு மாறு வேஷத்தில் பிரிட்டிஷ் இந்தியாவுக்குப் போன சமயம்தான் "பாருக்குள்ளே நல்ல நாடு" என்ற பாட்டைக் கவனம் செய்தாராம். ரயிலில் ஒரு பிச்சைக்காரப் பெண் ஹிந்துஸ்தானிப் பாட்டொன்றைப் பாட அதே மெட்டில் பாரதி இப்பாட்டை அமைத்தாராம்.
1918ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி பாரதி தம் இளைய சகோதரர் சி.விசுவநாதனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அச்சமயம் அவர் மனதிலிருந்த கவலைகளை இக்கடிதம் வெளிப்படுத்துகிறது. முழுக் கடிதமும் வருமாறு:
ஓம் சக்தி
C.Subramania Bharati Pondicherry,
3rd August, 1918
ஸ்ரீமான் விசுவநாதனுக்குப் பராசக்தி துணை செய்க. உன்னுடைய அன்பு மிகுந்த கடிதம் கிடைத்தது. அதைப் படித்து அதினின்றும் உன்னுடைய புத்திப் பயிற்சியின் உயர்வைக் கண்டு சந்தோஷ மடைந்தேன். தந்தைக் கப்பால் நீ என்னை முக்கிய சகாயமாகக் கருதுவது முறையே. இதுவரை உன்னை நேரே பரிபாலனம் செயவ்தற்குரிய இடம் பொருளேவல் எனக்கு தெய்வ சங்கற்பத்தால் கிடையாமல் போய்விட்டது. அதையெண்ணி இப்போது வருந்துவதிலே பயனில்லை. எனினும் இயன்றவரை விரைவாகவே எனக்கு நற்காலமும் அதனால் உன் போன்றோருக்குக் கடமைகள் செய்யும் திறமும் நிச்சயமாக வரும். உன் கடிதத்தில் கண்டபடி நீ இங்கே என்னைப் பார்க்க வரும் காலத்தை மிக ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் - சீக்கிரம் வா. தங்கை ஸ்ரீ லக்ஷ்மி சில வருஷங்களுக்கு முன் எட்டயபுரத்துக்கு வந்திருந்த காலத்தில் என்னைக் கொஞ்சம் பணம் அனுப்பச் சொல்லியிருந்தாள். அப்போது என் கையில் பணம் இல்லாதபடியால் அனுப்பவில்லை. அதுமுதல் என்மீது கோபங் கொண்டு எனக்கு ஒரு வார்த்தை கூட எழுதாமல்ருக்கிறாள். என்னை மன்னிக்கும்படிக்கும் எனக்கு அடிக்கடி காயிதங்களெழுதும்படிக்கும் நீ அவளை அழுத்தமான பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறேன். "தம்பியுள்ளோன் படைக்கஞ்சான்" என்ற வாக்கியத்தின் உண்மையை உன் விஷயத்தில் நம்பியிருக்கலாமென்றே நம்புகிறேன்.
எனக்கு இனிமேல் இங்கிலீஷில் காயிதம் எழுதாதே. நீ எழுதும் தமிழ் எத்தனை கொச்சையாக இருந்தபோதிலும் அதைப் படிக்க நான் ஆவலுறுவேன். கொச்சைத் தமிழ்கூட எழுத முடியாவிட்டால் ஸம்ஸ்கிர்தத்திலே காயிதம் எழுது. திருப்பயணம் வி.ராமஸ்வாமி அய்யங்கார் என்னிடம் "விநாயகர் ஸ்தோத்திரம்" (தமிழ் நூல்) அச்சிட வாங்கிக் கொண்டு போனார். இன்னும் அச்சிட்டனுப்பவில்லை. மேலும், அவர் பணம் சேகரித்துப் பட்டணத்துக் கனுப்புவதாகச் சொன்னார். அங்ஙனம் அனுப்ப முடியுமானால் உடனே புதுச்சேரியில் எனது விலாசத்துக்கனுப்பும்படி ஏற்பாடு செய்.
அது மாத்திரமேயன்றி, "விநாயகர் ஸ்தோத்திரம்" வேலையை விரைவில் முடித்துப் புஸ்தகங்களனுப்பும்படி சொல்லு. உடம்பை யெண்ணிப் பயப்படாதே. அடிக்கடி பால் குடி. ஜலத்தை எப்போதும் காய்ச்சிக் குடி. வேறு எந்த விஷயத்துக்கும் கவலைப்படாதே. பொறுமையாலும் பயமின்மையாலும் இவ்வுலகத்தில் மனிதன் தேவத் தன்மை அடைகிறான். அந்நிலைமை உனக்கு மஹாசக்தி அருள் செய்க.
உனதன்புள்ள ஸஹோதரன்,
சி.சுப்பிரமணிய பாரதி