சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
35
68. அனுபந்தம்: 2 - பாரதிக்குப் பின் பாரதி எழுத்துகள்


பாரதி எழுதிய எல்லா நூல்களுமே அவர் இருந்த காலத்தில் பிரசுரமாகவில்லை. ஆனால் அவர் இறந்து 36 வருஷங்களுக்குப் பின் இன்று கூட பாரதி எழுதிய பல பாடல்களும் கதைகளும் கட்டுரைகளும் குறிப்புகளும் புத்தக உருவம் பெறாமலே இருப்பதுதான் விந்தை. பாரதியின் கவிதைகளுக்கு அத்தாட்சி பெற்ற "முத்திரைப்" பதிப்பாக சென்னை அரசாங்கத்தின் பாரதி பதிப்புக் குழு வெளியிட்டுள்ள பெரு நூலில்கூட பல பாரதி பாடல்கள் சேர்க்கப்படாமல் விடுபட்டுப் போயிருக்கின்றன.
என்றுதான் முடிவான, எல்லா பாரதி எழுத்துகளும் கொண்ட பாரதி நூல் தொகுதிகள் வருமோ, நாம் சொல்ல இயலவில்லை. ஆனால், ஒன்று நிச்சயம். காலம் மேன்மேலும் அதிகமாகி, பழம் பத்திரிகைகளும் சுவடிகளும் நசித்துப் போகுமுன் பாரதி எழுத்துகள் என்னென்ன இருக்கின்றன என்ற பாரதியன்பர்கள் தேடுவது அத்தியாவசியமாகும். இக்காரியத்தை அரசாங்கமோ குறிப்பட்ட குழக்களோதான் செய்யவேண்டும், செய்ய இயலும் என்பதில்லை. ஆங்காங்குள்ள தனிப்பட்ட பாரதி அன்பர்கள் கூட முன்று பாரதி எழுத்துகளைக் காக்க முடியும். ஏனெனில் ஏற்கனவே அச்சேறியுள்ள பாரதி எழுத்துகளில் பெரும்பாலானவை தனிப்பட்டவர் முயற்சியினால் தேடிக் காக்கப் பட்டவையே.

பாரதி காலத்தில் வெளிவந்த நூல்கள்

பாரதி வாழ்ந்த காலத்தில் அவரது நூல்களில் புத்தகமாக அல்லது சிறு பிரசுரமாக வெளிவந்தவை வருமாறு:

தேசீய கீதங்கள் (பெரும் பகுதி), தோத்திரப் பாடல்கள் (பெரும் பகுதி), வேதாந்தப் பாடல்கள் (ஒரு பகுதி), 'கனவு'என்ற ஸ்வசரிதை, 'முரசு', 'பாப்பா பாட்டு', 'புதிய ஆத்திசூடி', 'பாஞ்சாலி சபதம்'(முதல் பாகம் மட்டும்), 'கண்ணன் பாட்டு', 'ஞான ரதம்' முதலிய நூல்களும், தற்போது கிடைக்காதவைகளான 'பாரத ஜன சபை' (காங்கிரஸ் சரிதம்), 'எங்கள் காங்கிரஸ் யாத்திரை', 'புதிய கட்சியின் கொள்கைகள்' (திலகர் கட்சியின் கொள்கைகள் பற்றி), 'திலகர் பிரசங்கங்கள்', 'விவேகானந்தர் பிசங்கங்கள்', 'ஜீவ வாக்கு'(ஜகதீச சந்திர வஸுவின் ஆராய்ச்சி பற்றிய கட்டுரை), 'பொன்வால் நரி' (ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய கேலிக்கதை முதலிய நூல்களுமேயாகும்.

'ஞானரதம்' பாரதியின் 'இந்தியா'வில் தொடர்கதையாக வந்து, பிறகு தனி நூலாக வெளியிடப் பெற்றது.

பாரதி காலமாகுமுன் 'சுதேச மித்திரன்' காரியாலயம் வெளியிட்ட நூலான 'கதாமலிகா'வில் பெரும் பகுதி பாரதியின் கதை, கட்டுரைகளே. இவைகளில் பெரும் பகுத் என்றளவும் பாரதி நூல் தொகுதிகளில் இடம் பெறவில்லை.

பாரதி தாம் இருந்த காலத்திலேயே தமது நூல்களை நாற்பது தனிப் புத்தகங்களாக வெளியிட்டு, பல்லாயிரக் கணக்கான பிரதிகள் அச்சடித்து, கவிதைகளை பிரதி நாலணா விலையிலும் வசனங்களை பிரதி எட்டணா விலையிலும் விற்கவேண்டுமென்று கனவு கண்டார். "மண்ணெண்ணெய் தீப்பெட்டியிலும் ஸாதாரணமாக" தம் நூல்கள் பரவ வேண்டும் என்று அவர் கொண்ட அவா, அந்த 1920-21ஆம் ஆண்டில் மட்டுமல்ல, இன்றுகூடப் பூர்த்தியாகவில்லை.

'பாரதி ஆசிரமம்'

பாரதி நூல்களையெல்லாம் பிரசுரிக்க வேண்டும், அதற்கு மக்கள் நிறைய ஆதரவு தரவேண்டும் என்ற முறையீடு பாரதி காலமானவுடனேயே எழுந்தது. இந்நூல்களின் விற்பனை மூலம் பாரதி குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்பதே முதலில் தோன்றிய எண்ணம். பாரதி காலமானவுடன் எஸ்.ஸத்தியமூர்த்தி விடுத்ததோர் அறிக்கையில் அவர் இதை வற்புறுத்தியுள்ளார். சென்னையில் கூடிய பாரதி நண்பர்கள் சிலர் பாரதி நூல் பிரசுரத்துக்கென சோமதேவ சர்மா உள்ளிட்டதொரு கமிட்டியையும் நிறுவினார்கள். இது 1921, ஸெப்டம்பரில்.

இதன் பின், அதே ஆண்டில், நண்பர்கள் உதவிய தொகை கொண்டும், தமிழ் மக்கள் 12 ரூபாய் வீதம் அனுப்பிய முன்பணம் கொண்டும், திலகர் ஸ்வராஜ்ய நிதியிலிருந்து கிடைத்த ஆயிரம் ரூபாய் கொண்டும், ரங்கூன் தமிழன்பர்கள் அனுப்பிய நிதிகொண்டும் பாரதியின் மனைவி செல்லம்மாளும் மைத்துனர் க.ரா.அப்பாதுரையும் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் 'பாரதி ஆசிரமம்' என்ற ஸ்தாபனத்தை அமைத்து, 12 பாரதி நூல்களை வெளியிடுவதென முடிவு செய்தார்கள்.

1922ஆம் ஆண்டுக்குள் 'தேசீய கீதங்கள்' இரு பாகங்களும், 'குயில்', 'கண்ணன் பாட்டு', 'பாரதி அறுபத்தாறு' மூன்று முடங்கிய ஒரு நூலும் வெளியாயின. அதன்பின் வரவிருந்த நூல்கள் வெளிவரவில்லை. நூல்களின் விற்பனையும் சுமாராகவே இருந்தது.

பாரதி இருந்த காலத்தில் அவருக்குப் பொருளுதவி செய்தவரும், கவிஞரை கானாடுகபாத்தானுக்கு அழைத்துச் சென்று போஷித்து, அங்கேய குடும்ப சகிதம் நிந்தரமாய் வசிக்கும்படி வேண்டிக் கொண்டவருமான வை.சு.சண்முகம், 1923ல் பாரதி குடும்பத்தின் சிரமத்தை போக்கும் கருத்துடன், பாரதி நூல்களின் உரிமைகளுக்கு 10,000 ரூபாய் கொடுக்கவும் அவைகளை ஒழுங்காய்ப் பிரசுரிக்கவும் முன் வந்தார். இதற்குச் செல்லம்மா சம்மதித்தாரெனினும் அவரது தமையனார் ஆர்வம் காட்டாததால் ஏற்பாடு முற்றுப் பெறாமலே போயிற்று.

1923ஆம் ஆண்டு முடிவுக்குள் 'பாரதி ஆசிரமம்' நூல் பதிப்பு வேலை நின்றுபோய், பிரசுரமாயிருந்த நூல்களின் விற்பனையும் ஒடுங்கிப் போயிற்று.

'பாரதி பிரசுராலயம்'

மறு வருஷம், 1924ல் விற்பனையாகாமல் முடங்கிக் கிடந்த நூல்களின் பிரதிகளை பாரதி குடும்பத்தினர் தங்களுக்கு நெருங்கிய நண்பரும் துர பந்துவும் பாரதியின் 'இந்தியா' பத்திரிகையில் உழைத்தவருமான ஹிந்தி பிரசாரகர் வி.ஹரிஹர சர்மாவிடம் ஒப்படைத்தார்கள். நூல்களை விரைவில் விற்று பார குடும்பத்தின் சம்ரட்ணைக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை தருவதாக ஏற்பாடாயிற்று.

,ச் சமயம், பாரதி நூல்களின் உரிமைகளை விற்பதுபற்றி மறுபடி பேச்சு வந்தது. ஆனால், இவ்வமயம் யாரும் 3,500 ரூபாய்க்கு மேல் தர முன் வரவில்லை. அதையும் தவணைகளாய்க் கொடுக்கவே முன் வந்தனர்.

இதே 1924ஆம் வருஷம் பாரதியின் இளைய புதல்வி சகுந்தலாவின் திருமணத்துக்காக ஹரிஹர சர்மாவும், பாரதியின் தம்பி சி.விசுவநாதனும் பாரதி நூல்களை வைத்து 2,000 ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தார்கள்; பூ.சுப்புராஜா என்ற அன்பர் 2,000 ரூபாய் நன்கொடயைளித்தார்.

இதன்பின் அதே ஆண்டில், ஹரிஹர சர்மா, சி.விசுவநாதன், சகுந்தலாவின் கணவர் நடராஜன் மூவரும் சேர்ந்து 'பாரதி பிரசுராலயம்' என்ற ஸ்தாபனத்தை அமைத்தனர். பாரதி நூல்களின் உரிமை பாரதி குடும்பத்தாரிடமே இருக்க, பாரதி நூல்களைக் கிரமப்படுத்தி வெளியிடும் பணியை பாரதி பிரசுராலயம் மேற்கொண்டது. பாரதி நூல்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வெளிவரத் தொடங்கின. சதிலமான கையெழுத்துப் பிரதிகளிலிருந்தும் பத்திரிகை விள்ளல்களிலிருந்தும் பாரதி எழுத்துக்களைத் தேடிப் பிடித்து, ஓழுங்குபடுத்தி வெளியிட்டு பாரதி தினக் கொண்டாட்டங்களிலும் பாட்டுப் போட்டிகள் மூலமாகவும், இதர வகைகளிலும் பாரதி நுல்களைப் பரப்பிய பெருமை பாரதிபிரிசுராலயத்தையும், முக்கியமாக வி.ஹரிஹர சர்மாவையும் சார்ந்ததாகும். அலட்சியமாயிருந்த தமிழ் மக்கள் பாரதியின் மேதையை உணரச் செய்யும் கடினமான ஆரம்ப வேலையை பாரதி பிரசுராலயம் செய்தது.

பாரதியின் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலப்படுத்தி, மகாத்மா காந்தியின் 'யங் இந்தியா'வில் வெளியிடச் செய்து கவிஞரை பாரத தேசத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் சி.ராஜகோபாலாச்சாரியார். இதன் பின், பாரதியின் கீதை மொழிபெயர்ப்பு வெளியான போது அதற்கு காந்தியடிகள் ஒரு முகவுரை வழங்கினார்.

பாரதி பாடல்களுக்குத் தடை!

பாரதி பாடல்களைப் பரப்புவதில் சமீப காலத்திய சென்னை அரசாங்கங்கள் தாம் தொண்டு புரிந்துள்ளன என்று நினைப்பது தவறு. சுதந்திரத்துக்கு முன்பிருந்த சென்னை அரசாங்கம் ஒன்றுகூட இவ்வழியில் பெருந்தொண்டு புரிந்தது!

1928ஆம் ஆண்டு, ஆகஸ்டு 7ஆம் தேதி பர்மா கவர்னர், திருவல்லிக்கேணி பாரதி ஆசிரமம் வெளியிட்டுள்ள பாரதி 'தேசீய கீதங்கள்' இரண்டு பாகங்களும் பர்மா மாகாண எல்லையில் நுழையக் கூடாதெனத் தடையுத்தரவு பிறப்பித்தார். ராஜத்துவேஷமான நூலெனக் கருதி இந்நூலின் பிரதிகளையெல்லாம் பறிமுதலும் செய்ய உத்தரவிட்டார் அவர்.

,ந்தச் சமயம் பர்மா இந்தியாவில் ஒரு மாகாணமாக இருந்தது. பர்மா அரசாங்க உத்தரவு 1928, ஸெப்டம்பர் 11ஆம் தேதி (பாரதி தினம்!) சென்னை அரசாங்க கெஜட்டில் வெளியிடப் பெற்றது. அதைத் தொடர்ந்து, சென்னைப் போலீஸ் துப்பறியும் இலாகாவினர் பிரதம மாகாண மாஜிஸ்ட்ரேட்டிடம் விண்ணப்பித்து, திருவல்லிக்கேணி தலையாரி தெருவிலிருந்த 'பாரதி ஆசிரமத்தையும் பாரதி நூல்கள் அடிக்கடிப் பெற்ற ஞிந்தி பிரசார் பிரஸ்ஸையும், பாரதி நூல்களை விற்று வந்த ஓ.என்.தண்டபாணி கம்பெனி யென்ற புத்ககக் கடையையும் சோதனை போட்டு தேசிய கீத நூல் பிரதிகளைப் பறிமுதல் செய்ய உத்தரவு பெற்றார்கள். இந்த சோதனையில் பாரதி தேசீய கீத நூல்களின் 2,000 பிரதிகளைப் போலீஸார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றார்கள். கி.பு.கோ. 99 ஸெக்ஷன் ஏ பிரிவின்படி கோர்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு நியாயமானதல்ல என்று பாரதி ஆசிரமத்தார் உடனே ஹைக்கோர்ட்டில் விண்ணப்பித்தார்கள்.

ஒத்திவைப்புப் பிரேரணை

இதன் பின், எஸ்.சத்தியமூர்த்தி சென்னை சட்டசபையில் இவ்விஷயத்தை அக்டோபர் 8ஆம் தேதி கிளப்பினார். போலீஸின் நடவடிக்கையைக் கண்டிப்பதாக அவர் கொண்டு வந்த ஒத்திவைப்புப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாமா கூடாதா என்ற சட்ட நுணுக்கப் பிரச்னை எழுந்தது. பாரதி பாடல்கள் ராஜத்துவேஷமானவையா அல்லவா என்ற பிரச்னை ஹைக்கோர்ட் முன் இருப்பதால் அந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசலாகாதென்றம், பர்மா அரசாங்கம் ஏதோ உத்தரவு பிறப்பித்த தென்பதற்காக சென்னைப் போலீஸ் நடவடிக்கை யெடுத்தது சரியா தவறா என்ற விஷயத்தைப் பற்றி மட்டும் பேசுவதானால் ஒத்தி வைப்புப் பிரேரணையை விவாதத்துக்கு அனுமதிப்பதாகவும் சட்டசபை சபாநாயகர் ராவ் பகதூர் ஸி.வி.எஸ்.நரசிம்மாராஜு கூறினார். ஸத்தியமூர்த்தி இதற்கிணங்கவே, மறுநாள் - 1928, அக்டோபர், 9ஆம் தேதி - பிர்பகள் 230 மணிக்கு ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நூல்களின் அரசியல் தன்மையைப்பற்றிப் பேசக்கூடாதென்று சபாநாயகர் தீர்ப்பளித்து விட்டதால், சத்தியமூர்த்தியும் அவரை ஆதரித்துப் பேசியவர்கயெல்லாரும் பாரதி பாடல்களின் மேன்மையையும், அவற்றை அரசாங்கம் பறிமுதல் செய்தது முட்டாள்தனம் என்றும் பேசினார்கள். சில மாதங்களுக்கு முன்தான் பாரதி பாடல்களை அரசாங்கப் பள்ளிக் கூடங்கள் உட்பட எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் போதிப்பதில் சர்க்காருக்கு ஆட்சேபனையில்லை என்று கல்வி மந்திரி டாக்டர் சுப்பராயன் சட்டசபையில் பதிலளித்திருக்க, அதே மந்திரிசபையின் போலீஸ் இப்போது இவ்வாறு செய்திருப்பது அர்த்தமற்றது என்று ஸத்தியமூர்த்தி வாதித்தார். பாரதி பாடல் நூல் ஒன்று தம் கையில் இருக்கிறது என்று காட்டி, அதிலிருந்து 'வந்தே மாதரமென்போம்', 'செந்தமிழ் நாடெனும் போதினிலே', 'வீர சுதந்திரம் வேண்டி நின்றார்', 'யாமறிந்த மொழிகளிலே' முதல்ய பாக்களைப் படித்துக் காட்டி, "இவற்றில் என்ன தவறு இருக்கிறது? தேசபக்தி பரிமளிக்கச் செய்வதுகூடக் குற்றமா? டென்னிஸன், ப்ளேக், கீட்ஸ் பாடல்களில் இருப்பதுபோல்தானே பாரதி பாடலிலும் இந்த தேசபக்தி உணர்ச்சி இருக்கிறது? அவர்களாவது தங்கள் தேசம் மடடும் வாழ வேண்டுமென்றார்கள்; பாரதியோ உலகமே செழிக்க வேண்டுமென்கிறார். இத்தகைய பாடல்களைப் போலீஸார் பறிமுதல் செய்தது தமிழ் இலக்கியத்துக்கு சவால், தமிழைத் தாய் மொழியாய்க் கொண்டோர்க்கெல்லாம் சவால். அரசாங்கம் தன் பறிமுதல் கோரிக்கையை உடனே ரத்து செய்துவிட வேண்டும்" என்றார் ஸத்தியமூர்த்தி.

சட்டசபையில் பாரதி பாட்டு

பாரிஸ்டர் ஆதிநாராயண செட்டி, ஜி.ஹரிஸர்வோத்தம ராவ், டி.ஸி.ஸ்ரீநிவாஸய்யங்கார், டி.கே.சிதம்பரநாத முதலியார், எல்.கே.துளசிராம், ராமநாத் கோயங்கா முதலிய பல தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்களும், என்.சிவராஜ், ஷாம்னாடு சாயபு, டெனியல் தாமஸ் முதலிய நியமன அங்கத்தினர்களும், ஜே.ஏ.டேவிஸ் என்ற வெள்ளையரும்கூட ஆதரிக்க, தீர்மானம் நிறைவேறியது. "புத்தகங்களைப் பறிமுதல் செய்துவிட்டீர்கள். மக்கள் மனதில் மனப்பாடமாகிவிட்டதை என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று குத்தலாகக் கேட்டுவிட்டு, எல்.கே.துளசிராம், 'செந்தமிழ் நாடு', 'விடுதலை' ஆகிய இரண்டு பாடல்களையும் சங்கீதச் சுவையுடன் ரசித்துப் பானார். "பிரிட்டிஷ் சாம்ராஜ்யமா, ஷேக்ஸ்பியர் இலக்கியங்களா இரண்டில் ஒன்றுதான் கிடைக்குமென்றால், எது வேண்டும் என் கேட்கப்பட்டால், ஷேக்ஸ்பியரே வேண்டுமென்பேன் என்றான் கார்லைல். அதேபோல பாரதி இலக்கியமும் மக்கள் மனதைக் கவர்ந்ததாகும்" என்று டி.ஸி.ஸ்ரீநிவாஸ அய்யங்கார் சொன்னார்.

சட்ட மெம்பர் எம்.கிருஷ்ணன் நாயர், போலீஸ் நடவடிக்கை மாமூல் நடவடிக்கையென்றும், ஹைக்கோர்ட் என்ன செய்கிறது என்று அரசாங்கம் காத்திருக்கும் என்றம் விவாத்துக்கு பதிலளித்தார். ஒத்திவைப்புத் தீர்மானத்தை எதிர்த்துப் பேசியவர் அவர் ஒருவரே!

தீர்மானம் வோட்டுக்கு விடப்பட்டபோது, 79 அங்கத்தினர்கள் அதை ஆதரித்தனர்; ஸர் மகமது உஸ்மான், எம்.கிருஷ்ணன் நாயர் ஆகிய மந்திரிகளும், சி.வி.அனந்தகிருஷ்ணய்யர், ராவ் பகதூர் ஆர்.ஸ்ரீநிவாஸன் என்ற இரு அங்கத்தினர்களும், எட்டு வெள்ளையரும், மொத்தம் 12 பேர் தீர்மானத்தை எதிர்த்தனர். கல்வி மந்திரி டாக்டர் சுப்பராயனும், சுகாதார மந்தி எஸ். முத்தையா முதலியாரும், மற்றும் பதின்மூன்று பேரும், மொத்தம் 15 பேர் வோட்டளிப்பில் கலக்காமல் நடுநிலைமை வகித்தனர். மந்திரிகளே சர்க்கார் நடவடிக்கையை ஆதரிக்காமல் நடுநிலைமை வகித்தது அக்காலத்தில் மிக அபூர்வமானதொரு விஷயமாகும்.

சென்னை சட்டசபை விவாதத்துக்குப் பின், ஹைக்கோர்ட்டில் அப்பீல் விசாரணை நடந்தது. முடிவில், பாரதி தேசீயப் பாடல்களில் ராஜத் துவேஷமாக ஏதும் இல்லை என்று கோர்ட் உத்தரவிட்டது. இதனால், சென்னை அரசாங்கம் தான் பறிமுதல் செய்த பாரதி தேசீயப் பாடல் பிரதிகளை பாரதி ஆசிரமத்துக்குத் திருப்பிக் கொடுத்தது. இது, 1929ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் நடந்தது. அரசாங்கம் இந்நூல்களைத் திருப்பித் தருமாறு நேர்ந்தது பாரதி நூல்கள் விற்பனைக்கு நல்ல விளம்பரமாயிற்று. "இந்நூல் சர்க்காரால் பறிமுதல் செய்யப்பட்டுத் திருப்பித் தரப்பட்டது" என்று பாரதி தேசீய கீதங்கள் பிரதிகள் ஒவ்வொன்றிலும் ரப்பர் ஸ்டாம்பு முத்திரையடித்து, மேலும் உற்சாகத்துடன் விற்றது பாரதி பிரசுராலயம்.

மக்கள் நாவில்

அரசாங்கத் தடையினால் மக்களுக்கு பாரதி பாடல்களில் பற்றுதல் அதிகரிப்பதற்கு முன்பே, பல தனிப்பட்ட பாரதியன்பர்கள் தங்கள் தேசபத்திப் பிரசாரத்திற்கு பாரதி பாடல்களை ஊன்று கோலாய்க் கொண்டு நாடெங்கும் பாரதி பாடல்களைப் பாடிப் பரப்பி வந்தார்கள். தேசபக்த சிங்கம் சுப்பிரமணிய சிவா திருநெல்வேலி சுதேசிக் கலகத்தின்போது சிறை புகுந்து வெளியே வந்ததும் தேசபக்த சமாஜம் என்ற தொண்டர் படையை ஆரம்பித்தார். இப்படையைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழ் நாடெங்கும் ஏழு மாதம் ஊர் ஊராய்ச் சென்று தமது தேசாவே சப் பேச்சுக்களுடன் பாரதி பாடல்களையும் பாடி வந்தனர். 'கல்கி' தி.சதாசிவம், மதுரை ரா.சிதம்பர பாரதி, ரா.ஸ்ரீநிவாஸ வரதன், தியாகராஜ சிவம், தூத்துக்குடி ந.சோமயாஜுலு, சென்னை எவரெஸ்ட் ஹோட்டல் ஸ்தாபகர் சுந்தரம், திருமயம் கிருஷ்ணமூர்த்தி, மதுரை கிருஷ்ண குந்து முதலியோர் சிவாவின் சிஷ்யர்களாவர்.

சிவாவைப் பின்பற்றி அவரது சிஷ்யர் ஸ்ரீநீவாஸவரதனும் தமது வீர பத்தினி பத்மாஸனி அம்மாளுடன் பாரதி பாடல்களைத் தமிழ்நாடெங்கும் பரப்பும் பாடல்களைத் தமிழ்நாடெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டார். "நம் நாட்டு முன்னேற்றத்தைக் கருதி, காலம் சென்ற கவிச் சக்ரவர்த்தி சுப்பிரமணிய பாரதியார் கீதங்களைப் பரப்புவதற்காக"வென்று 'பாரதி பஜனை சமாஜம்' மதுரையில் 1933ல் ஸ்ரீநிவாஸவரதனால் ஆரம்பிக்கப்பட்டது. தினந்தோறும் காலையிலும் மாலையிலும் பாரதி கீதங்களைப் பாடிக்கொண்டு வீதி பஜனை வருவது சமாஜத்தின் முக்கிய வேலையாக நடந்தது. ஸ்ரீநிவாஸவரதனது பாட்டில் சங்கீதத்தைவிட உணர்ச்சியே முக்கியமானதாக விளங்கியதாலும், 'ஜயபேரிகை கொட்டடா' என்ற பாட்டை இவர் விரும்பிப் பாடி வந்ததாலும் இவரது ஊராகிய சோழவந்தான் மக்கள் இவரை 'கொட்டடா அய்யங்கார்' என்று அழைத்து வந்தார்களாம்!

1922ஆம் ஆண்டிலேயே பாரதி பாடல்கள் நாடகமேடையேறத் தொடங்கிவிட்டன. பெண் வேஷத்துக்குப் பெயர் போன கே.எஸ்.ஆனந்தநாராயணனும், சங்கீத மேதை எஸ்.ஜீ. கிட்டப்பாவும் நாடக மேடையில் பாரதி பாடல்களைப் பாடித் தமிழ் மக்களைப் பரவசப் படுத்தினார்கள். தமது நண்பர் ஆக்கூர் அனந்தாச்சாரி கொடுத்த 'தேசீய கீதங்கள்' நூலிலிருந்து 'முன்னையிலங்கை' பாட்டை மனனம் செய்து தம் நாடகங்களில் அதை உற்சாகமாகப் பாடி வந்தார் கிட்டப்பா.

1932ஆம் ஆண்டு உப்பு சந்தியாக்கிரக காலத்தில் பாரதி பாடல்களைப் பாடக்கூடாதென்ற தடையை மீறி நாடக மேடையில் பாரதி பாடல்களைப் பாடி வந்தார் கிட்டப்பா.

மந்திரக் கவிகள்
உப்பு சத்தியாக்கிரக இயக்கத்தின்போது பாரதியின் மந்திரக் கவிகள் தமிழ் நாட்டில் சாதித்த அற்புதம் சொல்லி மாளாது. சோர்ந்து கிடந்த மக்களைத் தட்டியெழுப்பி, அவர்கள் நரம்பில் முறுக்கேறச் செய்து, தேசததுக்காக எண்ணற்ற பேர்கள் தங்களைத் தியாகம் செய்துகொள்ளத் தூண்டியதற்கு பாரதி பாடல்கள் பொறுப்பாக இருந்தன. இந்தக் காலத்தில், 'சங்கு' சுப்பிரமணியம், ஈ.கிருஷ்ணய்யர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், 'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி முதலியோர் பாரதி பாடல்களை இசையழகும் உணர்ச்சி வேகமும் சேர்த்துப் பாடிப் புகழெய்தினார்கள். பாரதியின் மருமான் சங்கரன் என்பவரும், தம்பி சி.சுவிகூநாதனும் பாரதி பாடல்களை இசையழகுடன் பாரதியைப் போலவே பாடுவார்கள். சங்கீதமறியாத மற்றும் எண்ணற்ற தொண்டர்கள், உணர்ச்சியே பிரதானமாய் பாரதி பாடல்களைப் பாடி மக்களைத் தேசப் பணிக்குத் தயாராக்கினார்கள். கவிதை மூலம் புதிய மானுட ஜாதியை உண்டாக்க முடியும் என்பதைத் தமிழகம் கண்ணெதிரே கண்டது.

பத்திரிகைகளின் தொண்டு

மக்கள் நாவில் பரவியது போலவே, தமிழ்ப் பத்திரிகை உலகின் மூலமாகவும் பாரதி எழுத்துகள் பரவத் தொடங்கின. பிரசுரமாகாத பாரதி எழுத்துகளை தேடிக்கண்டு பிடித்து வெளியிடும் பணியிலும் தமிழ்ப் பத்திரிகைகள் பெருந்தொண்டு புரிந்துள்ளன.

பாரதியின் நண்பரும் அவர் காலத்தில் 'கண்ணன் பாட்'டையும், 'நாட்டுப் பாட்டு' என்ற பெயரில் பாரதியின் தேசீய கீதங்களையும் பிரசுரித்தவருமான பரலி. சு. நெல்லையப்பர், பாரதி காலமான பின் தமது 'லோகோபகாரி' வாரப் பத்திரிகையில் அநேகமாய் வாரந்தோறும் ஏதாவதொரு பாரதி கட்டுரை அல்லது கவிதையை வெளியிட்டு வந்தார். 'இனி', 'ஜாதிபேத விநோதங்கள்', 'தமிழருக்கு' முதலிய கட்டுரைகளை ஒரு முறையல்ல இருமுறையல்ல, பன்முறை வெளியிட்டது 'லோகோபகாரி'.

அ.மாதவய்யா தமது 'பஞ்சாமிர்தம்' மாதப் பத்திரிகையில் பாரதி பாடல்களின் இலக்கிய மேன்மையை இலக்யி விமர்சனம் மூலம் வெளியிட்டார்.; மாதவய்யாவின் புதல்வர் மா. அனந்த நாராயணன் இவ் விமரிசனத்தை எழுதினார்.

பழம் பெரும் பத்திரிகையாளர் எஸ்.ஜீ.ராமாநுஜுலு நாயுடுவின் 'பிரஜாநுகூலன்', பிற்காலத்தில் அவரை ஆசிரியராகக் கொண்ட 'அமிர்த குண போதினி', தஞ்சையில் வ.ரா.நடத்திய 'சுதந்திரம்',
ச.து.சுப்பிரமணிய யோகி, பெரியசாமித் தூரன் முதலியோர் நடத்திய 'பித்தன்', வ.ரா.வை ஆசிரியராகக் கொண்ட 'மணிக்கொடி' வாரப் பதிப்பு, பாரதிதாசனை ஆசிரியராகக் கொண்டு புதுவையிலிருந்த வந்த 'பாரதி கவிதா மண்டலம்' என்ற முற்றிலும் கவிதையாலான அதிசய மாதப் பத்திரிகை, சங்கு சுப்பிரமணியனை ஆசிரியராகக் கொண்ட 'சுதந்திரச் சங்கு', தெ.ச.சொக்கலிங்கத்தின் 'காந்தி', ரா.நாராயணசாமியின் 'பாரதி', ரா.நாராயணனை ஆசிரியராகக் கொண்ட 'ஜெய பாரதி', சங்கு சுப்பிரமணியம், 'றாலி' என்ற எம்.ஜே. ராமலிங்கம் ஆகியோரை ஆசிரியராக கொண்ட 'ஹநுமான்', கி.வா.ஜகந்நாதனை ஆசிரியராகக் கொண்ட 'கலைமகள்', ஈ.ஆர்.கோவிந்தனையும் ரா.நாராயணனையும் ஆசிரியர்களாகக் கொண்ட 'ஹிந்துஸ்தா'னில் இந்நூலாசிரியர் பதிப்பித்த 'பாரதி மலர்'கள், ஏ.என்.சிவராமனை ஆசிரியராகக் கொண்ட 'தினமணி'யின் ஆண்டு மலர்கள், கே.அருணாசலத்தை ஆசிரியராகக் கொண்ட 'பாரததேவி' முதலிய பழங்கால, தற்காலத் தமிழ்ப் பத்திரிகைகள் ஏற்கனவே நூல் வடிவம் பெறாத பற்பல பாரதி கவிதைகளையும் கதைகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டன.

'சுதேசமித்திர'னில் 1930ஆம் ஆண்டிலேயேஇ பாரதி தனிப் பாடல்கள் பலவும் 'பாஞ்சாலி சபத'மும் கே.ஆர்.சர்மா என்ற பிரபல ஓவியரின் சித்திரங்களுடன் வெளியிடப் பெற்றன. இதே போல, சி.வி.மார்கன், சேகர் முதலியோரது அழகான சித்திரங்களுடன் பல பாரதி பாடல்களை 'ஆனந்த விகடன்' 1933 முதலாக வெளியிட வாரம்பித்தது.

சிறு பிரசுரங்கள்

தமிழ்ப் பத்திரிகைகள் தவிர தனிப்பட்ட பாரதி தொண்டர்களும் தத்தமக்குக் கிடைத்த பாரதி பாடல்க்ளைச் சிறு பிரசுரங்களாக வெளியிட்டு உதவினார்கள் - புதுவையில் பணிப் பெண் அம்மாக் கண்ணுவின் புதல்வர்களில் ஒருவரும் பாரதியின் சிஷ்யகோடிகளில் ஒருவரும் 'தாய்நாடு' என்ற பத்திரிகையின் ஆசிரியருமான வ.வேணுகோபால் நாயக்கர் 'உயிர் பெற்ற தமிழன்' என்ற இதுவரை பாரதி தொகுப்புகளில் சேராத பாட்டை 1936ல் சிறு பிரசுரமாக வெளியிட்டார். புதுவை தேசீய வாலிபர் சங்கம், மதுரை பாரதி ஆசிரமம் முதலிய ஸ்தாபனங்கள் 'சத்ரபதி சிவாஜி தன் சைனியத்துக்குக் கூறியது', 'குரு கோவிந்தன்' முதலியயயயய பாடல்களைத் தனிப் பிரசுரங்களாக வெளியிட்டன.

தஞ்சை ஜில்லா குடவாசல் புதுக்குடியைச் சேர்ந்த சாமி உடையார் என்ற அன்பர் தினமும் கையெழுத்தில் ஒரு பாரதி பாட்டை எழுதி, இவ்வாறு பாரதி பாட்டு எழுதிய காகிதங்களின் பின்புறத்தை நண்பர்களுக்கு கடிதமெழுத உபயோகித்து வந்தார். தமது கடிதங்களில் முடிவில், பரம பக்தியுடன், "சுப்பிரமணிய பாரதி திருவடிகள் வெல்க!" என்றும் இவர் எழுதுவாராம். இவ்வாறு கையெழுத்தில், கடிதங்களின் பின்புறத்தில் பாரதி பாடல்களை எழுதிப் பரப்பிய தனிப் பெருமை இவரைச் சேர்ந்தது. இவ்வாறு இவரிடமிருந்து கிடைத்த கடிதத்தின் பின்புறம் இருந்த பாட்டைப் படித்துத்தான் தாம் 'விண்ணும் மண்ணும் தனியாளும். என்ற பாரதி பாட்டை அறிந்து மனனம் செய்ததாக சங்கு சுப்பிரமணியம் கூறுகிறார்.

'மகாகவி அல்ல!'

இவ்வாறாக, பற்பல அன்பர்களின் பலபித முயற்சிகளினால் பாரத பாடல்கள் தமிழ் மக்களுக்கு அறிமுகமாயின. ஆனால், பாரதியின் வேதாந்தப் படர்லகளினாலும் கவ்ரச்சியுள்ள தமிழகம் அவரை ஒரு தேசியக் கவி என்று மட்டுமே ஒப்புக் கொண்டிருந்தது, பாரதி ஓர் இலக்கிய மேதை என்றோ மகாகவி என்றோ ஒப்புக்கொள்ளத் தமிழ் அறிவாளிகள் தயாராயில்லை: 1935ல் கூட, சிறந்த தமிழ்ப் புலமை கொண்ட இலக்கிய விமர்சகரான பி.ஸ்ரீ. ஆச்சாரியார், "பாரதி மகாகவி அல்ல; ஒரு நல்ல கவி" என்று சொல்லிவிட்ட, இளம் எழுத்தாளர்களின் தாக்குதலுக்கு இலக்கானார். அக்காலப் பத்திரிகைகளில் இந்த இலக்கிய விவாதம் காரசாரமாக நடந்தது. பாரதியின் சிறப்பை எடுத்துக் காட்டும் நோக்கத்துடன் கு.ப.ராஜகோபாலன் 'பாரதியின் இலக்கிய பீடம்' என்றொரு நூலும், பெ.கொ.சுந்தரராஜன் ('சிட்டி') 'கண்ணன் என் கவி' என்றொரு நூலும் எழுதி, தற்கால மேனாட்டு இலக்கிய விமர்சன முறையில், பாரதி மகாகவி என்ற வாதித்தார்கள்.

1938ஆம் ஆண்டில், வ.ரா.வின் ஊக்கத்தினாலும், பாரதி நண்பர் சா.துரைசாமி அய்யரின் ஆதரவினாலும் பாரதி சங்கம் என்ற சங்கம் தோன்றியது. இதில் பாரதி பற்றிச் சில விவாதங்கள் நடந்தன. ஆனால் இச்சங்கம் அதிக காலம் நடக்கவில்லை.

நூல் உரிமை மாற்றம்

1931ல் பாரதி குடும்பத்தார் பாரதி நூல்களின் உரிமைகளை 4,000 ரூபாய்க்கு பாரதி பிரசுராலயத்துக்கு விற்றனர். ஏற்கனவே சகுந்தலாவின் கல்யாணச் செலவுக்காக வாங்கப்பெற்ற கடனைத் தீர்த்து, பாக்கியை தவணைகளில் செல்லம்மாவிடம் தருவதாக ஒப்பமாயிற்று.

இந்தச் சமயத்தில், பாரதி பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் உரிமை ஸரஸ்வதி ஸ்டோர்ஸ் வெளியிட்டு வந்த 'பிராட்காஸ்ட்' ரிகார்டுகளுக்காக ஏ.வி.மெய்யப்ப செட்டியாரால் 400 ரூபாய்க்கு வாங்கப் பெற்றது.

இதற்கிடையே, 1929ல் பாரதியின் தேசீயப் பாடல்களை ஒரு தனி நூலாகவும், 'விநாயகர் நான்மணி மாலை'யைத் தனி நூலாகவும் பாரதி பிரசுராலயம் வெளியிட்டது. 1930ல் 'தோத்திரப் பாடல்கள்', 'வேதாந்தப் பாடல்கள்' என்ற பாடல் தொகுதிகள் வெளிவந்தன. இதுவரை பாரதி கவிதைகளை மட்டுமே வெளியிட்டு வந்த பாரதி பிரசுராலயம், 1930ல் பாரதியின் வசன நூல்களையும் தனித் தனிப் புஙததகங்களாக வெளியிட ஆரம்பித்தது. இதன்பின், 'பாரதி நூல்கள் - கவிதை', 'பாரத நூல்கள் - வசனங்கள்' என்ற இரு பெருந் தொகுதிகளையும் வெளியிட்டது.

1935ஆம் ஆண்டில், பாரதி நூல்கள் விற்பனையினால் பாரதியின் மனைவிக்குத் தக்க லாபம் கிடைக்கவில்லை என்று ஒரு புகார் எழுந்தது. தாம் வறுமையால் வாடுவதாயும், பாரதி பிரசுராலயம் குறித்த தவணைகளில் பணம் அனுப்பவில்லை என்றும், விவரம் தெரியாமல் நூல்களை உரிமைகளைக் கொடுத்துவிட்டதாயும், நூல்களின் விற்ப்னையால் கிடைக்கும் லாபத்தில் பங்கு வேண்டும் என்றும் செல்லம்மா பாரதி கூறினார். இவருக்கு ஆதரவாக ஆக்கூர் அனந்தாச்சாரி முதலிய இளைஞர்கள் பத்திரிகைகளில் கிளர்ச்சி செய்தார்கள். பாரதி பிரசுராலயத்தினர், இப்புகார்கள் உண்மையல்ல வென்று மறுத்து, பாரதி புரசுராலயம் நிறைய லாபம் சம்பாதிப்பதாய்க் கூறுவது அபாண்டமென்று பதிலளித்தார்கள்.

பாரதியின் ஆங்கில நூல்கள்

இந்தச் சமயத்திலும் பிரசுரமாகாத பாரதி நூல்களை ஒழுங்கு செய்து பிரசுரிக்கும் வேலை தொடர்ந்து நடந்தது. செல்லரித்துப்போன பழைய கையெழுத்து ஏடுகளினின்று சேர்க்கப்பட்ட பாரதி கவிதைகளைப் பரிசோதித்து சரிவர வெளியிடும் பணியில் பாரதி பிரசுராலயத்துக்கு தமிழ் லெக்ஸிகன் காரியாலய வி.நாராயணன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, எஸ்.வையாவுரிப் பிள், சுத்தானந்த பாரதி ஆகியோர் உதவியுரிந்தனர்.

1937ல் முதன் முதல் தடவையாக, பாரதி எழுதிய ஆங்கில நூல்கள் இரண்டு பாரதி பிரசுராலயத்தால் பிரசுரிக்கப் பெற்றன. அன்னி பெஸண்டின் 'காமல்வீல்' பத்திரிகையிலும், அரவிந்தரின் 'ஆரியா' பத்திரிகையிலும் பாரதி காலத்தில் வெளிவந்த அவரது ஆங்கிலக் கவிதைகளும் கட்டுரைகளும் 'அக்னி அண்டு அதர் ப்ரோஸ் ப்ராக்மெண்ட்ஸ்' ('Agni and Other Poems', 'Essays and Other Prose Fragments') என்ற நூல்களாக வெளியாயின. இவைகளைத் தொகுத்து வெளியிடுவதில் புரொபஸர் கே.ஸ்வாமிசாதனும், ஆசிரியர் கே.எஸ்.வெங்கடரமணியும் உதவி செய்தார்கள்.

அடுத்த 1938-ம் ஆண்டில், 'ஸ்வசரிதையும் பிற பாடல்களும்' என்ற தொகுதி வெளி வந்தது. அத்துடன், ஏற்கனவே 'சுதேசமித்தரனிலும்' 'இந்தியா'பிலும் பாரதி காலத்தில் வெளியான பல கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, 'தத்துவம்', 'மாதர்', 'கலைகள்', 'சமூகம்' என்ற நான்கு பிரிவுகளாகவும், 'பாரதி நூல்கள் - கட்டுரைகள்' என்ற தொகுதியாய்த் தனி நூலாகவும் வெளியிடப் பெற்றன.

பாரதி சரிதங்கள்

பாரதியைத் தமிழ் மக்கள் சரிவரப் புரிந்து கொள்ளுமுறையில் முதல் பாதி சரிதம் கவிஞர் மறைந்த வருஷமே வெளியாயிற்று. ஆனால், இதை உருவான பாரதி சரிதத்ம என்பதைவிட பாரதியை நேரில் அறிந்த மூன்ற அறிஞர்களின் நினைவுக் குறிப்புகள் என்பதே பொருத்தமாகும். 'பாரதியார் சரித்திரம்' என்ற இச் சிறு நூலை பாரதி பிரசுராலயம் வெளியிட்டது. இதில் சோமசுந்தர பாரதி, பரலி சு.நெல்லையப்பர், வி.சக்கரை ஆகிய மூவரும் தனித்தனியே ஓரொரு கட்டுரை எழுதியிருந்தார்கள்.

இதற்குப் பல வருஷங்களுக்குப் பின், 1929ல் பாரதியுன் தம்பி சி.விசுவநாதன் எழுதிய 'பாரதியும் அவரது நூல்களும்' (Bharati and His Works) என்ற சிறு ஆங்கில நூலை பாரதி பிரசுராலயம் வெளியிட்டது. பாரதியின் வாழ்க்கை விவரங்களில் முக்கியமானவைகளைக் கொடுத்து, பாரதி பாடல்களின் உயர்வை விமர்சித்தது இந்நூல்.

ஆனால், முதன் முதல் தடவையாக, ஆதியோடந்தமான விரிவான பாரதி சரிதம் எழுதியவர் வ.ரா.தான். 'சுப்பிரமணிய பாரதியார்' என்ற தலைப்பில் அவர் 'காந்தி' பத்திரிகையில் 1935-36ல் எழுதிய தொடர்ச்சியான கட்டுரைகளே, பின்னர் 1944ல் 'மகாகவி பாரதியார்' என்ற நூலாக உருப் பெற்றன.

1936ஆம் ஆண்டு ஆக்கூர் அனந்தாச்சாரியார் 'கவிச் சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதி சரித்திரம்' என்ற நூலைப் பிரசுரித்தார். புத்தக வடிவில் வெளிவந்த முதல் பாரதி சரிதம் இதுவாகும்.

1938ல் சக்திதாஸன் சுப்பிரமணியம் பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் கொண்ட "பாரதிலீலை" என்ற சிறியதோர் நூலை வெளிக் கொணர்ந்தார். இதே ஆண்டு "ஹிந்துஸ்தான்" பத்திரிகையில் இந்நூலாசிரியர் பதிப்பித்த பாரதி மலர்களில் முதல் மலர் பிரசுரமாயிற்று. இம் மலர்களில் வெளியிடப் பெற்ற அதுவரை வெளிவராத பல தகவல்கள் பாரதி வாழ்க்கைச் சரிதம் விரிவானதாக வெளிவர ஊக்கமளித்தன. 1941ஆம் ஆண்டு பாரதியின் மனைவி செல்லம்மா எழுதிய 'சுப்பிரமணிய பாரதியார்' என்ற நூல் அச்சிடப்பட்டது. இதன்பின், ரா.கனகலிங்கத்தில் 'என் குருநாதர் பாரதி', 'வ.உ.சி. கண்ட பாரதி', தங்கம்மா பாரதியின் 'பாரதியின் கவிதை', சுத்தானந்த பாரதியின் 'கவிக்குயில் பாரதியார்', யதுகிரியம்மாளின் 'பாரதி நினைவுகள்', பாரதி பற்றி பாரதிதாசன் பாடியுள்ள பாடல்கள் முதலிய மற்றம் பல பாரதி சரிதங்கள் வெளியாயின.

யுத்த காலத்தில்

1938ல் சகுந்தலாவின் கணவர் நடராஜன் பாரதித பிரசுராலயத்திலிருந்து விலகிக் கொண்டார். 1941ல் ஹரிஹர சர்மாவும் சொந்தக் காரணங்களால் விலகிக் கொண்டார். பாரதி பிரசுராலயம் பாரதியின் தம்பி விசுவநாதனின் தனிப் பொறுப்பாயிற்று.

யுத்த காலத்தில் காகிதப் பஞ்சம் பாரதி நூல்களைஹயம் பாதித்தது. பழுப்பு நிறக் காகிதத்தில் பாரதி நூல்கள் காட்சி யளித்தன. ஆனால், முதன் முறையாக உள்ளே பாடல்களுக்கேற்ற படங்கள் சேர்க்கப் பெற்ற பதிப்புகளும் தலைபாட்டலாயின. பாரதி நூல்கள் சிறப்பான கண்கவல் பதிப்புகளாக வெளிவராததற்கு நூல்களின் உரிமை தனிப்பட்டவர்களிடம் இருப்பதுதான் காரணம் என்று சிலரும், பாரதி பாடல்களைத் தேசத்தின் பொது சொத்தாக்கிவிட்டால் பல வேர் பல்லாயிரக் கணக்கில் பிரதிகள் வெளியிட இடமுண்டாகிப் பாடல்கள் விரைவில் பரவும் என்ற சிலரும் குறைபட்டு வந்தார்கள். இதே சமயம், பாரதி நூல்கள் விற்பனையால் வரமூ லாபத்தில் அதிகப் பங்கு பாரதி குடும்பத்துக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்திய சிலரும் இருந்தனர்.

எட்டயபுரம் பாரதி மண்டபம்

1945ஆம் ஆண்டு ஸெப்டம்பர் 11ஆம் தேதி, எட்டயபுரத்தில் பாரதி நினைவுச் சின்னம் ஒன்று அமைத்த சி.ராஜகோபாலாச்சாரியார் அஸ்திவாரக்கல் நாட்டினார். பாரதி பிறந்த ஊரில் அவர் நினைவாக ஒரு மணி மண்டபம் வேண்டுமென 'கல்கி' ரா. கிருஷ்ணமூர்த்தி தம் பத்திரிகையில் விடுத்த வேண்டுகோள் தமிழ் மக்களின் உற்சாகமான ஆதரவைப் பெற்றது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அறித்த நன்கொடையினால் அழகான பாரதி மணி மண்டபம் எட்டயபுரத்தில் கட்டப் பெற்றது. 1948ஆம் ஆண்டில், அப்போது மேற்கு வங்காள கவர்னராகவிருந்த சி.ராஜகோபாலாச்சாரியார் மண்டபத்தைத் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் கலந்துகொள்ளச் சென்னையிலிருந்து சென்ற பிரதிநிதிகள் பாரதி படத்துடன் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட எஞ்சின் பூட்டிய தனி சயிலில் எட்டயபுரம் சென்று கூடினார்கள். அரசியலில் அபிப்பிராய பேதமுள்ள பல கட்சியினரும் ஒருங்கே கூடியிருக்க, மிகுந்த கோலாகலத்துடன் மண்டபத் திறப்பு விழா நடந்தேறியது. திறப்பு விழாவை முன்னிட்டு, ஒரே ரூபாய் விலையில், உயர்ந்த காகிதத்தில், வர்ணச் சித்திரங்கள் நிறைந்த பாரதி பாடல் நூலொன்றும் வெளியிடப்பட்டது.

எட்டயபுரம் பாரதி மணி மண்டபத்தில், வங்காளி ஓவியர் ஹரிபாத ராய் எழுதிய பாரதி படமொன்றும், 'பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா', 'காணி நிலம் வேண்டும் பராசக்தி', 'காணி நிலம் வேண்டும் பராசக்தி'. 'ஜயமுண்டு பயமில்லை மனமே', 'பறையருக்குமிங்கு தீயர் புலையருக்கும் விடுதலை' என்று துவங்கும் பாரதி பாடல்களின் பாரதி கையெழுத்துப் பிரதியின் புகைப்படங்களும், பாரதி சிலையொன்றும் திறந்து வைக்கப்பட்டன.

பாரதி மண்டபத்தை நிர்வகித்து நடத்த ஒரு 'ட்ரஷ்ட்டும்', பாரதியார் ஞாபகார்த்த சங்கம் என்ற சங்கம் ஒன்றும் இச்சம்யம் அமைக்கப்பட்டன. ஆண்டு தோறும் பாரதி தினத்தைப் பெருங் கொண்டாட்டத் திருவிழாவாக நடத்திவரும் மபணியில் ஈடுபட்டிருக்கிறது பாரதியார் சங்கம்.

அரசாங்கம் மேற்கொள்கிறது

பாரதி நூல்களைப் பொது சொத்தாக்க வேண்டும் என்ற கிளர்ச்சி நாளுக்கு நாள் வலுக்கவே, ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியாரை முதன் மந்திரியாய்க் கொண்ட சென்னை மந்திரி சபை இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொண்டது. இதன் பலனாக 1949ஆம் ஆண்டில், பாரதி பிரசுராலயத்திடமிருந்த பதிப்புரிமையை சி.விசுவநாதனிடமிருந்து அரசாங்கம் விலைக்கு வாங்கிற்று. பாரதி பாடல்களின் ஒலிப் பதிவு உரிமையை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் இலவசமாக வழங்கினார். பாரதியின் மனைவி செல்லம்மாவுக்கு 5,000 ரூபாயும், புதல்வியர் தங்கம்மா, சகுந்தலா இருவருக்கும் தலைக்கு 5,000 ரூபாயும் நிதியளித்து, பாரதி குடும்பத்தாரின் சம்மதமும் பெற்று அரசாங்கம் பாரதி நூல்களின் உரிமைகளை ஏற்றுக் கொண்டது. பாரதி பிரசுராலயம் தவிர்த்த பிற ஸ்தாபனங்களிடமிருந்த பாரதி நூல்களின் உரிமைகளை அரசாங்கம் வாங்கபில்லை; அவைகளின் உரிமைகள் நிலைமை முன் போலவே இருந்து வருகிறது.

பாரதி பிரசுராலயத்திடமிருந்து உரிமையை வாங்கிக் கொண்டபோது, அவர்களிடம் கைவசம் பாக்கி நின்ற பாரதி நூல் பிரதிகளையும் அரசாங்கம் எடுத்துக் கொண்டது. இவை சென்னை அரசாங்க நூல் விற்பனை நிலையத்திடம் ஒப்படைக்கப் பெற்றன.
1950ஆம் ஆண்டு முதலாகவே பாரதி நூல்களுக்கு 'அத்தாட்சி பெற்ற' பதிப்பொன்று வெளியிடும் வேலையிலும் அரசாங்கம் கவனம் செலுத்திற்று. பாரதி நூல்களைப் பரிசோதித்துப் பதிப்பிக்க உதவுமாறு, 'பாரதி நூல்கள் பதிப்புக் குழு' ஒன்றும் அரசாங்கம் அமைத்தது. இக் குழுவில், ரா.பி.சேதுப்பிள், சி.விசுவநாதன், கி.ஸ்வாமிநாதன், ரா.கிருஷ்ணமூர்த்தி ('கல்கி') ஆகிய நால்வர் அங்கம் வகித்தனர். இவர்களுக்கு ஆலோசனை சொல்ல 'கவிதைப் பதிப்பு ஆலோசனைக் குழு'வாக பரலி சு.நெல்லையப்பர், கி.வா.ஜகந்நாதன், மு.வரதராசன், ரா.பி.சேதுப்பிள்ளை ஆகிய நால்வரும் நியமிக்கப்பட்டார்கள். சி.விசுவநாதன், ஆலோசனைக் குழுவினர் குறிப்பபிட்டபடி கவிதைகளை வரிசைப்படுத்திக் கொடுத்தார். மு.சண்முகம் பின்ளை பதிப்புக் குழுவினர் விருப்பப்படி பாடல்களை முற்பதிப்புகளோடு இப்பிட்டு, பிழையற எழுதி, அச்சடிக்கத் தகுந்தபடி பிரதி தயாரித்தும் அநுபந்தங்கள் வகுத்துக் கொடுத்தும் உதவி புரிந்தார். முடிவாக, 1954ஆம் ஆண்டு இறுதியில் அரசாங்கப் பதிப்பின் கவிதைத் தொகுதி வெளி வந்தது. இது 'தேசீய கீதங்கள்', 'தெய்வப் பாடல்கள்', 'பல்வகைப் பாடல்கள்', "முப்பெரும் பாடல்கள்' என்ற நான்கு பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஏற்கனவே நூல் வடிவில் வழங்கி வந்த பாடல்களைத் தவிர மூன்றே பாடல்கள் புதிதாக இப்பதிப்பில் சேர்க்கப்பட்டன. ஏற்கனவே பாரதி பாடலொன்று, பாரதி பாடலாக இல்லாதிருந்தும் பாரதி கவிதைத் தொகுதியில் இடம் பெற்றுவிட்டது! சைவ எல்லப்ப நாவலரின் செவ்வந்திப் புராணப் பாடல் அது! அதை பாரதி தம் கைப்பட எழுதி வைத்திருந்ததனால் பாரதி பதிப்புக் குழுவினர் வட அது பாரதி பாடலெனக் கருதிவிட்டனர்!

சென்னை அரசாங்கப் பதிப்பில் பயனுள்ள பல அனுபந்தங்கள் சேர்க்கப்பட்டிருக்
கின்றன. ஆராய்ச்சியாளர்களுக்கும் பாரதியன்பர்களுக்கும் இப்பதிப்பின் அனுபந்தங்
களில் தரப்பட்டுள்ள விரிவான விவரங்கள் மிகவும் உபயோகமாக இருக்கும். ஆனால், இப் பதிப்பில் பாடல்களுக்குக் கவிஞர் கொடுத்த தலைப்புகள் பலவிடங்களில் பதிப்புக் குழுவினரால் மாற்றப்பட்டிருக்கின்றன. தமிழ நாட்டில்தற்போது நிலவும் கருத்துப்படி தனித் தமிழ்த் தலைப்புகளாக இவை மாற்றப்பட்டிருப்பினும், கவிதைகளுக்குக் கவிஞர் கொடுத்த தலைப்புகளை இவ்வாறு அவரவர் இஷ்டப்படி மாற்றுவது முறையா என்பது சிந்தனைக்குரிய விஷயம்.

மியூஸியத்தில் கையெழுத்துப் பிரதிகள்

பாரதி பிரசுராலயத்திடமிருந்து அரசாங்கம் பெற்ற பாரதி கையெழுத்துப் பிரதிகளும் பழம் பதிப்புப் பிரதிகளும், 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னை அரசாங்கப் பொருட்காட்சி சாலையிடம் (எழும்பூர் மியூஸியம்) ஒப்படைக்கப்பட்டன. இவை இப்போது, அங்கே மி பத்திரமாக, தக் முறையில், எழுத்தை மறைக்காத மிக மெல்லிய துணியில் ஒட்டப் பெற்று, பைண்டு சய்யப்பட்டு நீண்டகாலம் இருக்குமாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவைகளில் எதையும் பொதுஜனப் பார்வைக்கு பைக்கவில்லை. இவைகளைப் பார்க்க விரும்புவோர் பொருட்காட்சிச்சாலை அதிகாரிகளிடம் தனி அனுமதி பெற்று பார்க்கலாம்.

எவரும் வெளியிடலாம்!

பாரத பிரசுராலயம் வெளியிட்ட பாரதி நூல்களை சென்னை அரசாங்கம் வாங்கி விற்கிறதென்றாலும், அரசாங்க இலாகாவின் சிவப்பு நாடாவின் முறைகளால் நூல் பிரதிகள் இருப்பதும் இல்லாததும் தெரியாமல் சில வருஷங்கள் பொதுமக்கள் கஷ்டப்பட்டார்கள். நூல் இருப்பது தெரிந்தவர்கள் கூட இவைகளை வெளியூர்களிலிருந்து தருவிப்பது, சிவப்பு நாடா தொல்லையால், அநேகமாய் சாதிக்க முடியாத காரியமாகவே இருந்து வருகிறது.

ஆனால் நல்லவேளையாக, பாரத கவிதைத் தொகுதி யொன்றை வெளியிட்ட கொஞ்ச நாட்களுக்கெல்லாம், பாரதி கவிதைகளை இனி எவர் வேண்டுமானாலும் பிரசுரிக்கலாம் என்ற அரசாங்கம் அனுமதி கொடுத்துவிட்டது. அதாவது, அத்தாட்சி பெற்ற பதிப்பாகிய தன் பதிப்பில் வெளியான பாடல்களை எவர் வேண்டுமானாலும் பிரசுரிக்கலாம் என்று பாரதி கவிதைப் பதிப்புரிமையைப் பொது சொத்தாக்கினார்கள். இப்போது இதைப் பயன்படுத்திக் கொண்டு பல பிரசுரகர்த்தர்கள் பாரதி கவிதைகளுக்குத் தத்தம் பதிப்புகளைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அரசாங்கம் வாங்கிக் கொள்ளாத பல பாரதி பாடல்களின் உரிமை நிலையோ முன்போலவே தனிப்பட்டவர்களிடமே இருக்கின்றது. அப்போடல்கள் அரசாங்கப் பதிப்பில் இடம்பெறாமல் நிற்கின்றன. மேலும், பாரதியின் வசனங்களை வெளியிடும் உரிமையைப் பற்றி அரசாங்கம் ஒன்றும் சொல்லவில்லை. பாரதி நூல் பதப்புக் குழு வசனட்ஙகளுக்கு அரசாங்கப் பதிப்பு வெளியிட்டு விட்டால், பிறகு அந்த உரிமையையும் அரசாங்கம் அதிகார பூர்வமாக பொதுமக்கள் சொத்தாகிக் விடும்போலும். பாரதி நூல் பதிப்புக் குழு இப்போது வசனங்களைப் பதிப்பது பற்றி ஆராய்ந்து வருகிறது. கால சென்ற 'கல்கி' கிருஷ்ணமூர்த்திக்கு பதிலாக ம.ப.பெரியசாமித் தூரன் பதிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

'பாரதி தமிழ்'

பாரதி நூல்கள் பிரசுரத்தில் முக்கியமானதோர் சம்பவம் 1953ல் நடந்தது. 1905 முதல் பாரதியின் கடைசிக்காலம் வரை 'சுதேசமித்திர'னில் வெளியான பாரதி கவிதைகளையும் கதை, கட்டுரை, குறிப்புகளையும் பெரியசாமித் தூரன் தொகுத்து, "பாரதி தமிழ்" என்ற நூலாக 1953ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ளிக் கொணர்ந்தார். இது அமுத நிலைய வெளியீடாகப் பிரசுரமாயிற்று.

பதினாறு வருஷத்து தினசரிப் பத்திரிகை இதழ்களைப் பக்கம் பக்கமாய்ப் புரட்டிப் பார்த்து, புத்தக வடிவில் பிரசுரமாகாத கவிதை, கதை, கட்டுடரை, குறிப்புகளைப் பிரதியெடுத்து, புத்தக வடிவில் வந்துள்ள கவிதை, கதை முதலியவைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, பாடபேதங்களையும் விட்டுப் போன பகுதிகளையும் 'சுதேசமித்திர'னில் பிரசுரமான தேதிகளையும் கிரமமாய் எழுதி, மிகுந்த ஆராய்ச்சியுடன் ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார் தூரன். தூரன் தந்துள்ள இந்த விவரங்களும், இதுவரை புத்தக வடிவில் கிடைக்காதிருந்த ஏராளமான பாரதி கவிதை, கதை, கட்டுரை, குறிப்புககள் இந் நூலில் வெளியாகியிருபபதும் இதை பாரதி பக்தர்களுக்குப் பெருவிருந்து ஆக்குகின்றன. அவர்கள் இதற்கு பெரியசாமித் தூரனுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

மேலும் தேடவேண்டும்

இதே போல, பாரதி காலத்திய இதர பத்திரிகைகளையும் தேடிப் பிடித்து ஆராய்ந்தால் இன்னும் பல பாரதி எழுத்துகள் கிடைக்கும். மேலும், 'சுதேசமித்திரன்' பழம் பிரதிகளை மீண்டும் ஒரு முறை சோதித்துப் பார்த்தால், தூரன் கண்களுக்கும் படாமல் போன சிற்சில கதை, கட்டுரைகள் கிடைக்கும். இவ்வாறு இரண்டொரு பாரதி கதைகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் யான் தேடியபோது கிடைத்தன. ஒருவரே எவ்வளவுதான் கண்ணிலு விளக்கெண்ணெய் போட்டுத் தேடினாலும் அவர் கண்ணில் சில விஷயங்கள் படாமல் தப்பிப் போவது இயற்கையே.

முடிவான பாரதி நூல் தொகுதிகள் வெளியிடுவதற்காக, குறைந்த பட்சம் பின் வரும் பழம் பத்திரிகைகளைக் கண்டுபிடித்து, பக்கம் பக்கமாய் ஆராய்வது அவசியமாகும்:

1. 'சுதேசமித்திரன்' (தினசரி, வாரப் பதிப்பு, ஆண்டு மலர்கள்) 1905 முதல் 1921
ஸெப்டம்பர் முடிய
2. 'சக்கரவர்த்தினி' மாதப் பத்திரிகை, 1905 முதல் 1921 முடிய.
3. 'பால பாரதா'(Bala Bharata): ஆங்கில வாரப் பத்திரிகை, பாரதி நடத்தியது. சென்னை, புதுவை, 1906 - 1910.
4. 'இந்தியா' வாரப் பதிப்பு. சென்னை, புதுவை, 1906-1910.
5. 'விஜயா', சென்னை, புதுவை, 1908 - 1910.
6. 'சூர்யோதயம்', வாரப் பதிப்பு, புதுவை, 1910.
7. 'கர்ம யோகி', மாதப் பதிப்பு, புதுவை, 1909 - 10.
8. 'சித்ராவளி', மாதப் பதிப்பு. புதுவையில் ஆரம்பிக்கப் போவதாய் அறிவிக்கப் பெற்ற ஆங்கில - தமிழ் கார்ட்டூன் பத்திரிகை.
9. 'ஞானபாநு', சென்னை. 1912 - 1919(?)
10. 'மெட்ராஸ் ஸ்டாண்டர்டு' - சென்னை ஆங்கில தினசரி. (பாரதி - சுதந்திர ராமன் கீதா விவாதத்துக்காக)
11. 'நியூ இந்தியா', 'காமன்வீல்' 'ஆர்யா' முதலிய ஆங்கிலப் பத்திரிகைகள். (இவைகளில் பாரதியின் ஆங்கிலக் கட்டுரைகள், கவிதைகள் வெளிவந்துள்ளன.)
12. "தேசபக்தன்" தினசரி, (வ.வே.சு. அய்யர், திரு.வி.க., பரலி. சு நெல்லையப்பர் வெ.சாமிநாத சர்மா முதலியோர் ஆசிரியர்களாக இருந்த பத்திரிகை): ஆரம்பம் முதல் கிடைத்தவரை.
13. "ஹிந்து" தினசரி. (கீதை பற்றிய விவாதத்துக்கும், குள்ளச்சாமி படத்துக்கும் சென்னையில் 1921ல் நீதிபதி மணி அய்யர் தலைமைபில் பாரதி செய்த "நித்திய வாழ்வு" (Life Eternal) என்ற பேச்சின் விவரத்துக்கும், இதர செய்திகளுக்கும்.)

தேடுவதென்று ஆரம்பித்தோமானால், இன்னும் இதர பத்திரிகைகளிலும் எதிர்பாராதபடி பல பாரதி எழுத்துகள் கிடைக்கும். பிற்காலத்தில் வந்த தமிழ்ப் பத்திரிகைகளிலும் பல பாரதி கதை, கட்டுரைகள் வெளியாகியிருப்பதால், அவைகளையும் பார்ப்பது பலனளிக்கும். தமிழ்நாடெங்கும் உற்சாகமான தேடுதல் முயற்சி ஆரம்பிக்கப் பெற்றால், ஆங்காங்குள்ள தனி அன்பர்களிடமும் நூல் நிலையங்களிலும் இருக்கும் பழைய தமிழ்ப் பத்திரிகைகைளப் புரட்டிப் பார்த்துத் தேடினோமானால், மேலும் பல புதிய பாரதி கவிதைகளும் கதைகளும் கட்டுரைகளும் கிடைக்குமென்பதில் ஐயமில்லை. இந்த முயற்சிக்கு ஏதாவதுதொரு தமிழ்ப் பத்திரிகை முன் வந்து ஊக்கமளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், பரிபூரணமாக பாரதி நூல் பதிப்பு ஒன்று விரைவில் வெளிவரச் செய்த புண்ணியம் தமிழ் மக்களைச் சாரும்.

 

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur