சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
5
9. 'மித்திரன்' உதிவியாசிரியர்
முன் பக்கம்
   

1904ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாரதி சென்னை வந்து "சுதேச மித்திர"னில் சேர்ந்தார். முன்பின் பழக்கமில்லாத பத்திரிகை வேலை யென்றாலும், ஏற்கனவே எட்டயபுரத்திலும் மதுரையிலும் பார்த்த வேலைகள் ஒத்துவரவில்லையென்றாலும், வந்தவுடனேயே பாரதி தமக்கும் பத்திரிகைத் தொழிலுக்கும் நிறைய பாந்தவ்யம் இருப்பதை உணர்ந்துவிட்டார்.

தமிழ்த் தினசரிப் பத்திரிகைகளில் முக்கியமான வேலை ஆங்கிலத்தில் வரும் செய்திகளைத் தமிழில் வேகமாய் மொழி பெயர்ப்பதேயாகும். ஆங்கிலத்தில் வரும் பல புதுப் புதுப் பதங்களுக்குத் தகுந்த தமிழ்ப் பதங்கள் கண்டுபிடிப்பதும் உண்டாக்குவதும் ஒரு பெரிய தலைவலி. பாரதிக்கு இந்த வேலை சுலபத்தில் பழகிவிட்டது. எவ்வளவு கடினமான செய்தியானாலும், எவ்வளவு நீளமான பிரசங்கமானாலும் அசல் தமிழிலேயே முதலில் வந்தது போல அழகான எளிய நடையில் வேகமாகவும் மொழி பெயர்ப்பதில் பாரதி சமர்த்தரானார். ஆசிரியருக்கு பாரதியிடம் தனி அபிமானம் ஏற்பட்டுவிட்டது. பாரதியை நயமாய் "ஏய்த்து" வேலை வாங்குவாராம் அவர்.

பாரதி இதைப்பற்றிக் கூறியதாக வ.ரா. சொல்கிறார்: சாயங்காலம் ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போக நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார் பாரதி. ஆனால் கையில் பணம் இல்லையென்ற குறையும், வீட்டில் செலவுக்குப் பணம் வேண்டும் என்ற நினைவும் ஞாபகம் வந்துவிடும். ஜீ.சுப்பிரமணிய ஆய்யரைக் கேட்கலாமா என்று நினைத்திருக்கும் சமயம் சேவகன் அய்யர் அனுப்பியதாக ஒரு டம்ளர் காபியை பாரதியிடம் வைத்துச் செல்வான். அய்யரின் அன்பைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும்போது, அய்யரே நேரில் வந்து நிற்பார். வீடு வாசல் பணமுடை எல்லாம் பாரதிக்கு மறந்துவிடும்.

சீமையிலே ஸர் ஹென்றி காட்டன் இந்தியாவைப் பற்றி உருக்கமாய்ப் பிரசங்கம் செய்திருப்பதைப் பார்த்தாயோ என்று பாரதியிடம் கேட்பார் அய்யர். பாரதி பார்த்திருப்பார்; நன்றாயிருக்கிறது என்றும் சொல்வார். அதை நாளையே நம் பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டாமோ என்று கேட்பார் அய்யர். பாரதி கட்டாயம் பிரசுரிக்க வேணுமென்பார்.

அந்தப் பிரசங்கத்தின் சுவை கெடாமல் உன்னைத் தவிர யார் மொழி பெயர்க்க முடியும் என்று மனம் குளிரச் சொல்வார் ஆசிரியர். அதை ஆபீஸில்தான் மொழி பெயர்க்க வேண்டு மென்பதில்லை; வீட்டிற்கு எடுத்துச் சென்று விளையாட்டாய் மொழி பெயர்த்துவிடலாம் என்றும் கூறுவார்.

பாரதி சந்தோஷமாய் அந்தப் பிரசங்கத்தை வீட்டுக்கு எடுத்துக் கொண்டுபோய், மொழி பெயர்த்து, காலையில் வரும்போது கொண்டு வருவார்.

ஜீ.சுப்பிரமணிய அய்யர் இப்படி பாரதியிடம் நிறைய வேலை வாங்கினாரென்றாலும், எல்லாம் பாரதிக்கு மிகச் சிறந்த பயிற்சியாகவே உதவின. பாரதி விளையாட்டாகவே விவேகானந்தர் பிரசங்கங்கள், அரவிந்தர் பேச்சுகள், காங்கிரஸ் மகாசபைத் தலைமையுரைகள் முதலியவற்றை அசல் தமிழில் எழுதப்பட்ட விஷயங்களேபோல் மொழிபெயர்த்துத் தள்ளியிருக்கிறார்.

"மித்திர"னில் சேர்ந்த முதல் பத்து மாதங்கள் பாரதி தம்மைப் புதிய வேலைக்குப் பயிற்சி செய்து கொள்ளுவதிலேயே ஈடுபட்டிருக்கவேண்டும். அப்போது அவர் தம்முடைய கவித்துவத் திறமையை அடக்கி வைத்திருக்கவேண்டும். ஏனெனில், "சுதேச மித்திர"னில் பாரதியின் சொந்தச் சரக்காக ஒரு பாட்டு, "வங்கமே வாழிய" என்ற தலைப்புடன், முதன் முதலாக 1905ஆம் ஆண்டு ஸெப்டம்பர் மாதம் 15ஆம் தேதிதான் வெளியாயிற்று. அதாவது பாரதி பத்திரிகையில் சேர்ந்து பத்து மாதங்களுக்குப் பிறகு.

"மித்திர"னில் பாரதிக்கு பிரமாதமான சம்பளமில்லை. ஆகையால் அவருக்கு பணமுடை இருந்து கொண்டேயிருந்தது. ஜீ.சுப்பிரமணிய அய்யர் வஞ்சனையற்றவர்; பாரதியின் திறமை அவருக்குத் தெரியும். ஆனால் நிறையச் சம்பளம் கொடுக்க வசதியில்லை. "பாரதி, நீ காளிதாஸன்தான். ஆனால் உனக்கு அட்சர லட்சம் கொடுக்க நான் போஜனாக இல்லையே" என்பாராம் அவர்.

குறைந்த சம்பளத்தில் சென்னையில் குடித்தனம் நடத்துவது அக்காலத்திலும் சிரமமாகவே இருந்தது. நகரின் ஒண்டிக் குடித்தன அனுபவம் பாரதிக்கு ஏற்பட்டது. இந்த அனுபவத்தையே அவர், நான்கு வருஷங்களுக்குப் பிறகு "ஞானரதம்" என்ற நூலில் மண்ணுலகம் என்ற பகுதியில் நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார்.

10. சீர்திருத்தவாதி பாரதி
முன் பக்கம்

1904ஆம் ஆண்டு முடிவில் சென்னைக்கு வந்த பாரதிக்கு வயது 22. அப்போது அவர் தோற்றத்தில் எப்படி இருந்தார்? அக்காலத்திலும் அதன்பின் கடைசிவரையிலும் பாரதிக்கு உத்தம நண்பராக வாய்த்த எஸ்.துரைசாமி அய்யர் பாரதியை வருமாறு வர்ணிக்கிறார்: "அவருடைய முகம் மிகவும் வசீகரமாக இருக்கும். எப்போதும் உற்சாகம் நிறைந்திருப்பார். பேச்சில் தெளிவு இருக்கும். எதையும் பளிச்சென்று சொல்லிவிடுவார். சூதுவாது தெரியாது. பிறர் பேச்சுத் துணையை ரஸிக்கும் ஸரஸி. நல்ல உணவு அருந்துவதில் விருப்பமுள்ளவர். அவர் உடலோ மிகப் பூஞ்சை. பலமே இல்லாத மெலிந்த தேகம். விளையாட்டாய்த் தள்ளினால் கூட விழுந்துவிடுவார்". ஆனால் அந்தப் பூஞ்சை உடலில் இருந்த சக்திதான் என்னே!

சென்னைக்கு வந்த புதிதில் பாரதிக்கு அரசியலில் ஈடுபாடே கிடையாது. தேச பக்தித் துடிப்பும் இல்லை. இந்திய சமூகம் திருந்த வேண்டும், விரைவில் திருந்த வேண்டும் என்ற கருத்துக் கொண்ட சமூக சீர்திருத்தவாதியாகவே அவர் விளங்கினார். காசியில் இருந்த சமயமே மாதர் முன்னேற்றத்தை வற்புறுத்திப் பேசிய பாரதி, சென்னை வந்ததும் இதர சமூக சீர்திருத்தங்களிலும் ஊக்கம் காட்டினார்.

சென்னை வந்த புதிதில் தம்புச் செட்டித் தெருவில் குடியிருந்தார். அந்தச் சமயம் "சுதேச மித்திரன்" அரமனைக்காரத் தெருவின் தெற்குக் கோடியில், மேற்குப் பார்த்த ஒரு வீட்டில் இருந்தது.

ஜார்ஜ் டவுனில் இருந்த பாரதிக்கு அந்த வட்டாரத்திலேயே பல நண்பர்கள் எளிதில் உண்டாகிவிட்டார்கள். சட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்த எஸ்.துரைசாமி அய்யர், பிற்காலத்தில் தொழிலாளர் தலைவரான வி.சக்கரை(செட்டியார்), பால் என்ற உபாத்தியாயர், ஜயராம் நாயுடு என்ற டாக்டர், பிற்காலத்தில் பத்திரிகையாளரான சி.எஸ்.ரகுநாதராவ் முதலியோர் பாரதியின் உற்ற நண்பர்கள். நெடுநாளைய பிரசுர கர்த்தர்களும் பிரபல காப்பிக்கொட்டை வியாபாரிகளுமான கணேஷ் அண்டு கம்பெனி முதல்வர் ராமசேஷய்யர் இந்த இளைஞர்களுக்குப் போஷகர்.

மாலையில் இந்த நண்பர்கள் கணேஷ் அண்டு கம்பெனியில் ஒன்று கூடுவர். அங்கிருந்து உற்சாகமாய்ப் பேசிய வண்ணம் ஹைக்கோர்ட் கடற்கரை சென்று, மணலில் "மகாநாடு" நடத்துவார்கள். அரட்டை நடக்கும், விவாதம் நடக்கும், பெரிய பெரிய சீர்திருத்தத் திட்டங்கள் போடப்படும், பாரதியின் பாட்டு ரசிக்கப்படும். பாரதிக்கு அக்காலத்தில் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகள் மிகவும் பிடிக்கும்; அப்பாடல்களை ரசித்துப் பாடுவார்.

அந்தக் காலத்தில் சென்னையில் 'ஸோஷல் ரிபார்ம் அஸோஸியேஷன்' என்ற மிக மிதவாதமான சமூக சீர்திருத்த சங்கம் ஒன்று இருந்தது. "இந்த நாட்டின் முன்னேற்றத்தை முன்னிட்டு, பல ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக சமபந்தி போஜனம் செய்வதில் தீமையில்லை. இது இங்கு கூடியுள்ள இந்த சபையின் அபிப்பிராயம்" என்பதுபோல நீட்டி முழக்கித் தீர்மானம் நிறைவேற்றிவிட்டுத் தூங்குவது தவிர வேறொன்றும் செய்வதில்லை என்று பாரதி முதலிய இளைஞர்கள் இச் சங்கத்தை வெறுத்தார்கள். தாங்கள் செயலில் இறங்கி வழிகாட்டவும் அவர்கள் உறுதி கொண்டார்கள்.

அதன்பேரில், பல ஜாதிகளைச் சேர்ந்த, பல மதங்களைச் சேர்ந்த அந்த இளைஞர்கள் தங்களுள் பிராமணரல்லாத ஒருவரை சமையல் செய்யச் செய்து, அந்த உணவை விருந்தாக எல்லாரும் சேர்ந்து உண்டார்கள். டாக்டர் ஜயராம் நாயுடுதான் சமையல் செய்தார். இந்த விருந்து நடத்தியதுடன், இதில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் இதைப் பற்றிப் பெருமையாக எல்லாரிடமும் சொல்வதென்று தீர்மானித்து, அவ்வோறே சொன்னார்கள். அடிக்கடி இம்மாதிரி சமபந்தி போஜனம் நடத்தினார்கள். சென்னையில் இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இளம் நண்பர்கள் அத்துடன் நிற்கவில்லை. "ராடிகல் ஸோஷல் ரிபார்ம்" (தீவிர சமூக சீர்திருத்தம்) என்ற ஆங்கில வாரப் பத்திரிகையொன்றும் நடத்தினார்கள். இந்த 4 பக்கப் பத்திரிகைக்கு சி.எஸ்.ரகுநாதராவ் ஆசிரியராக இருந்தார். சென்னையிலிருந்த இதர சீர்திருத்த வாதிகளுக்கு இப் பத்திரிகை மிகுந்த உற்சாமூட்டியது.

இந்தப் பத்திரிகையில் பாரதி எழுதினாரா என்பது தெரியவில்லை; எழுதியிருக்கக் கூடும். இப் பத்திரிகையின் இதழ்கள் தற்சமயம் கிடைக்கவில்லை. தேடுதற்குரியன.

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur