13. புத்துணர்ச்சிப் பத்திரிகை 'இந்தியா' |
"பாரதியாருடைய முழு உரிமையையும் திருமலாச்சாரியார் பாரதியாரின் கையிலேயே விட்டுவிட்டார். அவருடைய எழுதுகோலுக்கு இனி தங்கு தடையில்லை. ஆழ்ந்த அவரெண்ணங்களையும் தமிழ் நாட்டின் ஆதர்சத்தையும் அது கண்ணாடிபோல் எடுத்துக் காட்டத் தொடங்கிற்று. அவருள்ளத்தின் ஆழத்திலிருந்து கனிந்தெழும் உணர்ச்சியை அது சுடச் சுட வரும் சொற்களால் வெளியிட்டு வந்தது. இப்படிக் கொதித்து வரும் சொற்களிலும்கூட, அவருக்கு நல்ல சங்கீத ஞானமிருந்தபடியால், இனிமையும் கம்பீரமும் கலந்தே இருந்தன." புத்துணர்ச்சிப் பத்திரிகை "இந்தியா"வில் பாரதி பிரசாசிக்கத் தொடங்கியதை மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் இவ்வாறு வர்ணிக்கிறார்.
1906ஆம் ஆண்டு ஏப்ரலில் "இந்தியா" ஆரம்பமாயிற்று. புதிய பத்திரிகையின் காரியாலய நிர்வாகஸ்தராக எம்.பி.திருமலாச்சாரி என்ற இளைஞர் இருந்தார். (இவரே 1908-ல் ஐரோப்பா சென்று, அங்கு பல நாடுகளிலும் அமெரிக்காவிலும் இந்திய விடுதலைக்காக உழைத்து, ரஷ்ய மாதொருத்தியை மணந்து, இந்தியா விடுதலை பெற்றபின் தம் மனையாளுடன் தாயகம் திரும்பி, பம்பாயில், மனையாள் இறக்க, சொல்லொணா வறுமையில் நோய்வாய்ப்பட்டு, யாரும் ஆதரிக்காமல் 20.03.1954 அன்று ஒரு ஆஸ்பத்திரியில் மரணமடைந்தவர். எம்.பி.டி.ஆச்சாரியா என்று பெயரைச் சுருக்கிக் கொண்டவர்)
ஆரம்பத்தில் இந்தியா 'அரை கிரவுன்' அளவில் (15க்குப் 10 அங்குலம்) 16 பக்கங்கள் கொண்டதாய் சனிக்கிழமைதோறும் வெளி வந்தது. 1908ஆம் வருஷத்தில் "இந்தியா" பெரிய அளவில் (கிரவுன் ஸைஸ், 19க்குப் 15 அங்குலம்) 8 பக்கங்களுடன் வந்தது. தனிப் பிரதி "உள்ளூருக்கு 9 பை - வெளியூருக்கு 1 அணா." பத்திரிகையின் ரிஜிஸ்டர் எண்: எம்.578. பாரதி ஆசிரிய வேலையை கவனித்தார்; ஆனால் சட்டரீதியான அறிவிப்பில், பத்திரிகை "அதன் சொந்தக்காரர் எம்.ஸ்ரீநிவாஸன் என்பவரால் பாப்பாம்ஸ் பிராட்வே 34ஆவது எண்ணில் இந்தியா பிரஸ்ஸில் வெளியிடப்படுகிறது" என்று இருந்தது.
முதல் பக்கத்தில் ஒரு பெரிய அரசியல் கார்ட்டூன் இருக்கும். தென்னாட்டில் இதழ்தோறும் கார்ட்டூன் வெளியிட்ட முதல் பத்திரிகை "இந்தியா". அக்காலத்தில் போட்டோ மூலம் படங்களை 'ப்ளாக்' செய்யத் தெரியாது; வெள்ளீயத் தகடுகளில் படமெழுதிக் கொண்டு வெட்டி ப்ளாக் ஆக்குவார்கள். கார்ட்டூன் சித்திரக்காரருக்கு எதெது எப்படியெப்படி இருக்க வேண்டுமென்று ஆசிரியர் பாரதி சொல்வார். அபிநயித்து நின்றும் காட்டுவார்!
அரசியல் கட்டுரைகள் தவிர பாரதியின் பாடல்களும் கதைகளும்கூட "இந்தியா"வை அலங்கரித்தன. "ஞானரதம்" "இந்தியா"வில் தொடர்கதை போல் வெளி வந்தது.
50 வருஷத்துக்கு முன், அக்காலத்தில் வாரம் 4,000 பிரதிகள் விற்றது "இந்தியா"!
சென்னை "இந்தியா" 1908, ஜூன், 13ஆம் தேதி இதழின் படம் எதிர்ப் பக்கத்தில் உள்ளது. இது, "மலர் 3 இதழ்7".
இந்த இதழின் முதல் பக்கத்தில் "சென்னப்பட்டணம் 1326 வரு ஜமாதிலவல் மீ 13உ கீலக வரு வையாசி மீ 31உ" என்ற தேதிகளே இருக்கின்றன. சந்தா விவரமும் விளம்பர விவரமும் உள்ளன. சந்தா உள் நாட்டுக்கு, தபால் கூலியுட்பட, ஒரு வருஷத்துக்கு 3 ரூபாய். விளம்பர விகிதம் "முழுப் பக்கத்துக் மாதம் ஒன்றுக்கு" (அதாவது 4 இதழ்களுக்கு) 40 ரூபாய். சிறு விளம்பரங்களுக்கு, வரி ஒன்றுக்கு
அணா 4.
இந்த இதழின் முதல் பக்கத்தில் "இந்திய நிதானஸ்தர்களும் ஆங்கிலேய பிரஜானுகூலர்களும்" என்ற அரசியல் கட்டுரையும், "தன் செயல் தனக்கே கெடுதி" என்ற கார்ட்டூனும் "சித்திர விளக்கமும்" இருக்கின்றன. "பெரியவர்கள் ஏற்பாட்டின்படி" நடந்த இந்திய தேச பக்தர்கள் "மனு எழுதி ஸ்வராஜ்யம் பெறலாம் என்பது பகற் கனவும் ஆகாயக் கோட்டையுமாம்" என்பதை உணர்ந்து, "இறந்த கைத்தொழில்களை உயிர்ப்பித்து கப்பல் முதலிய மார்க்கங்களால் வியாபாரத்தை பலப்படுத்தி" நாட்டின் செல்வத்தை வளர்க்க முயல்கிறார்கள்; இவர்களே "தேசபக்தர்கள்", "யாசகாதி பிரார்த்தனையால் நன்மை பெரலாமென்று கண்மூடித்தனமாய் இருக்கும் பழங் கக்ஷியார்கள் தான் நிதானஸ்தர்கள்" என்று கட்டுரை மிதவாதிகளைத் தாக்குகிறது.
பொதுஜன அபிப்பிராயத்தை அரசாங்கம் அறிந்து கொள்ளச் சிறந்த கை விளக்காக இருக்கும் சுதேச பாஷைப் பத்திரிகைகளை ஒடுக்க அவர்கள் சட்டமியற்றுவதைக் குறிப்பிட்டு, இப்படிச் செய்வதால் அரசாங்கம்தான் அஞ்ஞானமென்ற இருளில் மூழ்கி இருட் பேய்க்கு பலியாகும் என்றும் சதேசிய இயக்கத்துக்கு எந்தத் தடையும் எற்படாது என்றும் கார்ட்டூனில் விளக்கம் கூறுகிறது.
14. கலவரத்தில் முடிந்த காங்கிரஸ் |
1906ஆம் வருஷம் ஜூலை மாதம் ஸ்வாமி அபேதானந்தர் சென்னைக்கு விஜயம் செய்தார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரது சிஷ்யரும் விவேகானந்தரது சகாவுமான அவருக்கு சென்னையில் ராஜோபசாரம் நடந்தது.
பெரிய உபசரணை மடடும் போதாது; அவரது உபதேசங்களைப் பின்பற்ற வேண்டும்; அவர் போதிக்கும் தீரத்தன்மையையும் ஐக்கியத் தன்மையையும் பின்பற்ற வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார் பாரதி. அபேதானந்தர் மீது தோத்திரக் கவியும் புனைந்தார்.
மறு வருஷம், 1907ல் விபின சந்திர பாலர் என்ற "எரிமலை யொத்த பிரசங்கி" சென்னைக்கு வர பாரதி ஏற்பாடு செய்தார். பெஜவாடா சென்று பாலரை எதிர்கொண்டழைத்தும் வந்தார்.
இச்சமயம், மற்றொரு தீவிரத் தலைவரான லாலா லஜபதி ராய் நாடுகடத்தப்பட்டு பர்மாவில் வாழ நேர்ந்தது. சென்னை மாகாணத்தில், வ.உ.சிதம்பரம் பிள்ளை மீதும் சுப்பிரமணிய சிவா மீதும் "ராஜ நிந்தனைக் குற்றம்" சாட்டப்பட்டு, அவர்கள் தண்டனையும் அடைந்தார்கள்.
"சென்னை வாசிகளின் நிதானமெல்லாம் விபின சந்திர பாலரின் சந்நிதானத்திலே பறந்து போய்விட்டது." என்று பாரதி குறித்துள்ளார். "லஜபத்ராய் பிரலாபம்", "லஜபத் ராய் துதி" என்ற பாடல்கள் இக்காலத்தில் கிளம்பியவை.
இந்த நிலையில் 1907ஆம் ஆண்டு டிஸம்பர் மாதம் சூரத்தில் காங்கிரஸ் கூடுவதாயிருந்தது. இந்தக் காங்கிரஸில்தான் மிதவாதிகளிடமிருந்து காங்கிரஸ் சபையைக் கைப்பற்றத் தீவிரவாதிகள் திட்டமிட்டு முயன்றார்கள். சென்னையிலிருந்து தீவிரவாதிகளான பிரதிநிதிகளை ரயிலில் 'ரிஸர்வ்' பெட்டிகளில் அழைத்துச் செல்லப் போவதாகவும், முன் கூட்டியே பெயர் தெரிவிக்கும்படியும் பாரதி வேண்டுகோள் விடுத்தார். சென்னைக்கு வருமாறு தூத்துக்குடி வக்கீல் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்குத் தந்தி கொடுத்தார். தீவிரவாதிகள் ஸ்தாபனமான "சென்னை ஜன சங்கம்" கூடி ஆலோசனை செய்தது.
"பாரதி மாமா நூறு பிரதிநிதிகளுக்குக் குறையாமல் சென்னையிலிருந்து சூரத்துக்கு அழைத்துக் கொண்டு போகவேண்டுமென்று சொன்னார்... நூறு பிரதிநிதிகளைக் கூட்டிக் கொண்டு வருவதாகத் திலகருக்குத் தந்தி கொடுத்தோம்" என்று வ.உ.சி. தமது பாரதி நினைவு நூலில் கூறியுள்ளார். பணமில்லாத பிரதிநிதிகளுக்கு மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியும் வ.உ.சி.யும் பணம் கொடுத்துக் கூட்டிச் செல்வதாக ஏற்பாடு.
எதிர் பார்த்ததற்கு அதிகமாக, ஒரு பெட்டிக்கு பதிலாக இரண்டு பெட்டியாய், இரு தினங்களில் ரயிலில் இடம் 'ரிஸர்வ்' செய்து கொண்டு சென்னை இளைஞர்கள் கோஷ்டி சூரத்தை அடைந்தது.
சூரத்தில் மிதவாதத் தலைவர்களும் பரிவாங்களுடன் கூடியிருந்தனர். இரு கட்சிகளுக்கும் சமரசம் உண்டாக்க நடந்த முயற்சிகள் பலிக்கவில்லை.
மகாசபையின் முதல் நடவடிக்கையிலேயே சச்சரவு மூண்டது. மிதவாதிகள் சார்பில் மகாசபைத் தலைவராக ராஷ் பிஹாரி கோஷின் பெயர் பிரேரேபிக்கப்பட்டதுதான் தாமதம். திலகர் பாய்ந்தெழுந்து, அதைத் தாம் ஆட்சேபிப்பதாய்க் கூறினார். மிதவாதிகள், "பேசாதே! இடத்துக்குப் போ!" என்று கூச்சலிட்டனர். திலகர் அசையவில்லை.
இதற்குள் ராஷ் பிஹாரி கோஷ் மேடை மீதேறித் தம் தலைமைப் பிரசங்கத்தைப் படிக்கவாரம்பித்தார். "நீங்கள் இன்னும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. படிக்க வேண்டாம்!" என்ற கூச்சல்கள் தீவிரவாதிகளிடையே எழுந்தன. குழப்பம் முற்றியது. வாக்குவாதம் பலத்தது. கைகள் கலந்தன. நாற்கலிகள் பறந்தன. ஒரு மகாராஷ்டிரச் சிகப்புச் செருப்பும் வானத்தில் பறந்தது! சென்னைப் பிரதிநிதிகள் திலகரைச் சுற்றி அரண்போல் நின்றனர்.
"இந்த அமர்களமெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது பாரதியார் தூரத்தில் போய் ஸ்ரீ ஜி.ஏ.நடேசனுடன் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்." என்று சூரத் போயிருந்த ராஜாஜி சொல்கிறார்.
கலவரத்தை அடக்க போலீஸ் வந்தனர். காங்கிரஸ் ஒத்திப் போடப்பட்டது. இதை தீவிரவாதிகள் ஏற்கவில்லை. அரவிந்த கோஷ் தலைமையில் "தேசியவாதிகள் மகாநாடு" நடத்தினார்கள்.
சென்னைக்குத் திரும்பிய பாரதியார் "எங்கள் காங்கிரஸ் யாத்திரை" என்ற சிறு பிரசுரத்தை வெளியிட்டார். இது இரண்டேயணா விலையில் விற்கப்பட்டதாகவும், "புதிய கட்சியின் கோட்பாடுகள்" என்ற தலைப்பில் திலகரின் பிரசங்கம் ஒன்றையும் சிறு நூலாக வெளியிட்டதாகவும் அக்காலப் பத்திரிகாசிரியர் ஸ்ரீ எஸ்.ஜி.ராமாநுஜுலு நாயுடு கூறியுள்ளார்.