பாரதி
வழி
வீ.சு.இராமலிங்கம், தஞ்சாவூர்
(திருச்சி,
அகில இந்திய வானொலி நிலையம், தஞ்சாவூர் பாரதி சங்கம், திருவையாறு
பாரதி இயக்கம் இணைந்து நடத்திய பாரதியாருடைய 130ஆவது ஆண்டு
பிறந்தநாள் விழவில் பேசியது - 11.12.2011)
நமக்குத்
தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல்,
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே யிம்மூன்றுஞ் செய்
திருச்சி
வானொலி நிலைய இயக்குநர் அவர்களே, கீழப்பாவூர் அ.சண்முகையா
அவர்களே, இங்கே குழுமி இருக்கின்ற பெரியோர்களே, தாய்மார்களே,
மகாகவி பாரதியாருடைய 130-ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவினை,
நான் தனியாக நடத்த முடியாமல், அகில இந்திய வானொலி நிலையத்தோடும்
பாரதி இயக்கத்தோடும் சேர்ந்து இந்த விழா நடைபெறுகிறது. இந்த
விழாவை சிந்தித்து வடிவமைத்தவர் சண்முகையா அவர்கள் திருச்சி
வானொலி நிலையத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று ஞாயிற்றுக் கிழமை. காலை பத்து மணிக்கு யாருக்கும்
எந்த வேலையும் கிடையாது. வீட்டிலே உட்கார்ந்து டி.வி. பார்ப்பார்கள்.
அல்லது ஏதாவது வெட்டிக் கதைகள் பேசிக்கொண்டிருப்பார்கள்.
டி.வி.யிலே இருக்கிற பாழாய்ப் போனப் பட்டிமன்றங்களை கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
இந்த பாரதி பிறந்தநாள் விழா பற்றி திருச்சி வானொலி நிலையத்திலே
பல முறை அறிவிக்கப் பட்டிருக்கிறது. இன்றைக்கு செய்தித்தாள்களில்
எல்லாம் வந்திருக்கிறது. விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த மன்றத்திலே ஒரு நூறு பேர்கூட இல்லை. மகாகவி பாரதியாருக்கே
இந்த நிலைமை. மகாகவி பாரதியாரைப் பற்றி யோசித்தால் வருவார்கள்.
ஆனால் இன்றைக்கு யார் பேசுகிறார்கள், என்ன விளம்பரம் செய்யப்படுகிறது,
எந்த சூழ்நிலையில் நடத்தப்படுகிறது, அதை வைத்துத்தான் கூட்டமே
தவிர, கருத்துக்காக கூட்டம் வருவது இல்லை. அதற்காக நாம்
அதை அப்படியே விட்டுவிட முடியாது. நாம் கருத்துக்களை சொல்லியே
ஆகவேண்டும். அதுவும் இந்தத் தருணத்திலே சொல்லியாகவேண்டும்.
பாரதியார்
எதற்காகவெல்லாம் குரல் கொடுத்தாரோ, பாரதியார் எப்படிப்பட்ட
தமிழகமும் இந்தியாவும் வரவேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அது
சுத்தமாக இல்லை. ஒரு முறை ஜெயகாந்தன் சொன்னார், "திலகர்,
விவேகாநந்தர், வ.உ.சி இவர்களெல்லாம் அடிமை நாட்டிலே வாழ்ந்த
சுதந்திர புருஷர்கள்; நாமெல்லாம் சுதந்திர நாட்டில் வாழ்கிற
அடிமைகள்". 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்று முழக்கமிட்ட
பாரதி 1921-ல் இறந்துபோனார். வெள்ளைக்காரனுடைய ஆட்சிக் காலத்தில்
ஆங்கிலத்துக்குத்தான் மரியாதை என்று இருந்த காலத்தில், ஆங்கிலேயர்களெல்லாம்
ஆளப்பிறந்தவர்கள், நாம் அவர்களுடைய அடிமைகள் என்று நாமே
நம்பிக்கொண்டிருந்தக் காலத்தில், ஏதோ வெள்ளைக்காரன் அடிமைப்
படுத்திவிட்டான் என்பது அல்ல. அது ஒரு பொய். நாம் அடிமையாக
இருக்கிறோம் என்கிற நினைவே நமக்குக் கிடையாது. நாம் வெள்ளைக்காரனுடைய
ஆட்சியிலே மிக சுகமாக வாழ்ந்தோம். தீனி போட்டு வளர்த்த மாடுகள்,
பன்றிகளைப்போல் நாம் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தோம்.
இது அடிமைத்தனம் என்று சொல்லிக்கொடுத்தார்களே அவர்கள் ஏதோ
நம்மை தொல்லை செய்கிறார்கள் என்று மக்கள் நினைத்தார்கள்.
ஏதோ இந்தியாவிலே இருக்கிற மக்கள் எல்லாம் கொதித்து எழுந்திருந்தார்கள்,
வெள்ளைக்காரன் துப்பாக்கியை வைத்து அடிமைப்படுத்தியிருந்தான்
என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம். நமக்கு அந்த சிந்தனையே
கிடையாது. 1921-ல் பாரதியார் சாகிறபொழுது இந்தியா என்பது
எழுச்சி ஏற்படாமல் இருந்த நாடு. அதுவும் தமிழகத்திலே வெள்ளைக்காரனைப்போல
நாம் ஆங்கிலம் பேசுவதிலே திறமையானர்வள் என்று சொல்லிக்கொள்வதில்
நமக்குப் பெருமை. அந்தக் காலத்திலே பாரதியார் சொன்னார் "யாமறிந்த
மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்"
என்று. தமிழர்களைப் பார்த்து நீ உயர்ந்தவன், நீ உயர்ந்தக்
குலத்தில் பிறந்தவன், உனக்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது
என்று தட்டி எழுப்பினார் பாரதி, நமக்கு அந்த உணர்ச்சியை
ஊட்டினார். வ.ரா.அவரைப் பார்ப்பதற்குப் பாண்டிச்சேரி போனார்.
அது 1910-16-ல். பாரதியாரைப் பார்த்தார். யார் என்று கேட்டவுடனே
"I am Ramasamy Iyangar from Thirupazhanam" என்றார்
வ.ரா. தோட்டத்திலிருந்த வேலைக்காரனை பாரதியார், "ஏய்
பாலு, இங்கே வாடா! உன்கிட்ட பேச இங்கே ஒரு ஆள் வந்திருக்கிறான்"
என்றார் ஏறிச்சலில். வ.ரா.அதிர்ச்சி அடைந்து நின்றவுடனே,
பாரதியார் வ.ரா.விடம்,"ஏனய்யா, தமிழனும் தமிழனும் பார்க்கிறபோது,
எவ்வளவு காலத்துக்கு ஆங்கிலத்திலே பேசுவீர்கள்?" என்று
கேட்டார். ஒரு தமிழன் ஆங்கிலத்திலே தமிழனிடம் பேசுவதை வெறுத்தார்
பாரதியார். நம்முடைய எல்லா நடவடிக்கைகளும் தமிழிலே இருக்கவேண்டும்
என்று குரல் கொடுத்தார். எல்லா ஐரோப்பிய சாஸ்திரங்களும்
தமிழ் பாஷையிலே தரவேண்டும் என்று பாரதியார் சொன்னார். பாரதியார்
மட்டுமல்ல, அவருக்கு அரசியல் கற்றுக்கொடுத்த ஜி.சுப்பிரமணிய
ஐயர் சொன்னார். இன்றைக்கு நிலைமை என்ன? எதை நாம் உயர்வான
பாடமாகக் கருதுகிறோம்? அரசாங்கத்தில் சமச்சீர் கல்வி என்று
போட்டவுடனே அதை மாற்றுவதற்கு அத்தனைப் பேர் துடிக்கிறார்களே!
எதற்காக? கல்வியிலே மேல் ஜாதி கீழ் ஜாதி வந்துவிட்டது. கல்வியால்
ஜாதியை ஒழிப்போம் என்று கல்வி தரவேண்டும் என்று சொன்னார்கள்.
பள்ளிக்கூடங்களில்தான் ஜாதியை ஒழிக்க முடியும் என்று நம்
முன்னோர்கள் கனவு கண்டார்கள். ஆனால் கல்வியிலேயே ஜாதி இருக்கிறது.
மேல்ஜாதிக் கல்வி, கீழ்ஜாதிக் கல்வி. ஆங்கிலத்திலே படிப்பதெல்லாம்
மேல்ஜாதி. தமிழிலே படிப்பதெல்லாம் கீழ்ஜாதி. தமிழில் யாரும்
படிப்பதே இல்லை. ஆங்கிலத்திலே படித்தால்தான் பெருமை என்று
வந்துவிட்டது. பாரதியைப் பற்றி நீங்கள் சரியாகத் தெரிந்துகொண்டிருந்தால்,
இந்த நிலை வருமா? அதிலே பாரதியைப் பற்றி புதிய ஆராய்ச்சி
பண்ணுகிறேன் என்று பாரதி மேல்ஜாதிக்குப் பாடினார். பாரதி
ஆரியர் என்றுப் பாடினார். ஒருத்தனும் பாரதியை முழுவதுமாக
படிக்கவே இல்லை. பாரதியை புரிந்துகொள்ளவில்லை. குவளைக்கண்ணன்
ஒரு முறை பாரதியாருடன் நடந்துபோகிறபோது "ஐயா, நீங்கள்
பெரிய மகான். ஆனால் உங்களை பலபேருக்கு இன்னும் தெரியவில்லையே!"
என்று கேட்டார். அதற்குப் பாரதியார் "நாம் நானூறு வருடங்களுக்கு
முன்னாலே பிறந்துவிட்டோம்" என்று சொன்னார். என்னைப்
புரிந்துகொள்வதற்கு இன்னும் நானூரு வருஷம் ஆகும் என்று அதற்கு
அர்த்தம். 39 ஆண்டுகளே வாழ்ந்த பாரதியார், எழுதிவைத்தவற்றை
நம்மால் படிப்பதற்கு, இன்னும் படித்துப் புரிந்துகொள்ள நமக்கு
ஞானம் வளரவில்லை. நம்முடைய அறிவு தெளிவில்லை. பாரதியார்
என்பர், நீங்கள் அறிவு பெறப்பெற அவரைப் படித்துப் படித்து
உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளக்கொள்ள புதுப்புது வெளிச்சத்தை
அவர் நமக்குக் கொடுக்கிறார். இன்றைக்கு எடுத்து அவர் கட்டுரைகளைப்
படியுங்கள், அவருடைய கவிதைகளைப் படியுங்கள், இன்றைக்கு 2011-க்கு
எழுதப்பட்டக் கவிதைகள் போல கட்டுரைகள் போல அது சுடர்விடுவதை
நாம் பார்க்கலாம். அவருடைய ஒரு கவிதைக்கு நிகராக இன்றைக்கு
ஒருவர் புத்தகம்கூட எழுதுவதில்லை. இன்னொரு செய்தி, அதுவும்
மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி, பாரதியாருடைய எழுத்துக்களில்
கமா, ஃபுல்ஸ்டாப் விடாமல் எல்லாவற்றையும் படிக்கவேண்டும்.
பாரதியார் ஒரு சொல்லைக்கூட தேவையில்லாமல் சொல்லவில்லை. ஒரு
சொல்லைக்கூட தேவைக்கு மேலே சொல்லவில்லை. ஒரு சொல்லைக்கூட
பொருளில்லாமல் சொல்லவில்லை. இன்னொரு பெரிய விஷயம் யாருக்காகவும்,
யாரை திருப்திப்படுத்தவும், யாருடைய ஆசைக்காகவும் ஒரு வார்த்தைக்கூட
எழுதியதில்லை. தான் மனம் ஒப்பாத ஒரு விஷயத்தை அவர் சொன்னது
இல்லை. தான் எதை உண்மை என்று கருதினாரோ, அதை மட்டுமே சொன்னார்.
"ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்"
என்று சொன்னார். ஏனென்றால், பாரதியார் என்பர் நம்முடைய குரு.
தமிழ் மக்களை கடைத்தேற்றுவதற்காக வந்த குரு. அவர் ஒரு ரிஷி.
இந்த ஞாபகத்தோடு பாரதியைப் படிக்கவேண்டும். நீங்கள் வைரமுத்து
கவிதையைப் படிக்கிறேன்; பா.விஜய் கவிதையைப் படிக்கிறேன்
என்று நினைத்துக்கொண்டு பாரதியைப் படித்தால் உங்களுக்கு
விளங்காது. பாரதி என்னுடைய குரு என்கிற பக்தியோடு படிக்கவேண்டும்.
சொல்லில்
உயர்பு தமிழ்ச் சொல்லே
அதைத் தொழுது படித்திடடி பாப்பா
என்று பாரதியார்
சொன்னார். தமிழைத் தொழுது படிக்கச் சொன்னார். நான் அதே வார்த்தைகளை
பாரதிக்குச் சொல்கிறேன். நீங்கள் பாரதியைத் தொழுது படிக்கவேண்டும்.
உங்களை வாழ்விக்க வந்தவர்.
பாரதியார்
எப்படி வந்தார். அவரே சொல்கிறார்.
மொய்க்குங்
கவலைப் பகைபோக்கி
முன்னோன் அருளைத் துணையாக்கி,
எய்க்கு நெஞ்சை வலியுறுத்த்,
யுடலை யிரும்புக் கிணையாக்கிப்
பொய்க்குங் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே,
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன் - தெய்வ விதியிஃதே.
பாரதி சும்மா
வரவில்லை. அவர் அவதாரம். தெய்வ விதியால் பிறந்தவர். அவர்
சொல்கிறார். தெய்வ விதி.
பொய்க்குங்
கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே,
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன்
கிருத யுகத்தை
இப்போது நான் கொணர்வேன். செத்த பிறகு அல்ல சிவலோகம். கலி
என்றால் என்ன? எல்லா துன்பங்களும் நோயும் மிடியும் அத்தனை
அக்கரமங்களும், கொடுமைகளும் கலி. இது நம்முடைய மனதிலே இருக்கிறது.
கலி என்பது கொடுமையானது. அதை அப்படியே எடுத்துக்கொண்டார்.
அதற்குப் புதியப் பொருளைக் கொடுத்தார். இத்தனைத் துன்பங்களும்
தர்மம் நிலவுகிற யுகம் கிருத யுகம். இது நம்முடைய tredition-ல்
இருக்கிறது. ஆனால் அதனுடைய அர்த்தத்தை பாரதியார் புதிதாகச்
சொன்னார்.
பொய்க்குங்
கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே,
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன்
நான் புதிய
உலகத்தைக் கொணடு வருவேன். இந்த மக்களை, பன்றிகளாக வாழ்கின்ற
இந்த மக்களை சிங்கப் போத்துகளாக நான் மாற்றுவேன். அவர் வேண்டுவதே
அதுதான். 'பன்றிகளை சிங்கங்களாக மாற்றுகிற வலிமை எனக்கு
வேண்டும். இவர்களை மக்களாக மாற்றுகிற வலிமை எனக்கு வேண்டும்'.
அவர் பாடியப் பாடல்களெல்லாம் நம்மை மனிதர்களாக்குவதற்காக.
நம்மைத் தமிழர்களாக்குவதற்காக. தமிழர்கள் என்று சொன்னால்,
உலகத்தைவிட்டு விலகி குருகிப்போய் இருப்பதற்காக அல்ல. உண்மையான
தமிழனாக இருந்தால் உலகம் நம் வசப்படும் என்று அவர் நம்பினார்.
'கீழ்த்திசை நாடுகள்தான் உலகத்துக்கு வழிகாட்டப் போகிறது.
அந்தக் கீழ்த்திசைக்கு வழிகாட்டுவதற்கு தமிழ்நாடுதான் வரப்போகிறது.
தூங்கிக் கிடக்கிற அந்தத் தமிழகத்தை எழுப்புகிற வேலைகளை
என்னுடைய நூல்கள் செய்யும்' என்று மதுரையிலே இருக்கிற வக்கீலுக்கு
ஆங்கிலத்திலே கடிதம் எழுதினார். அவர் எழுத்திலே அவருக்கு
அவ்வளவு நம்பிக்கை. அவர் எழுத்து செய்யுமா செய்யாதா என்பதல்ல.
அவருடைய நோக்கம் அது. அதோடு நீங்கள் படிக்கவேண்டும்.
பாரதியார்
சொன்னார்
சூழ்கலி நீங்க
தமிழ்மொழி ஓங்க
துலங்குக வையகமே
வையகம் துலங்கவேண்டுமானால்,
கலி நீங்கவேண்டும். எப்போது கலி நீங்கும்? தமிழ்மொழி ஓங்கினால்
கலி நீங்கும். சூழ்கலி நீங்க, தமிழ்மொழி ஓங்கவேண்டும். தமிழ்மொழி
ஓங்கி, சூழ்கலி நீங்கி, துலங்குக வையகமே. பாரதிக்கு எவ்வளவு
நம்பிக்கை நம் மீது! தமிழுக்கு அந்த வலிமை உண்டு. ஆனால்
நமமது தமிழென வாழ்க்கிறோம். பாரதி காலத்திலே ஒரு அம்மாக்கணணுக்கு
பாரதியைத் தெரிந்தது. குவளைக்கண்ணன் கிருஷ்ணமாச்சாரிக்குத்
தெரிந்தது. வை.சு.சண்முகம் செட்டியாருக்குத் தெரிந்தது.
அன்றைக்கு அவரோடு வாழ்ந்த எலிக்குஞ்சு செட்டியாருக்குக்
தெரிந்தது. செட்டியார் வாடகைக் கேட்க வந்தார். பாரதியார்,
”இந்தியா சுதந்திரம் அடைந்துவிடும், நான் உனக்குக் காசோலைக்
கொடுக்கிறேன். கஜானாவிலே போய் வாங்கிக்கொள்” என்றார். "நீங்கள்
மகான். சொன்னால் பலிக்கும்" என்றார் அவர். வாடகைக்கு
வீடுவிட்டவர். அவர் மகான். அது தெரியாமல், இவன் பெரிய ஆராய்ச்சிக்
கண்ணோடு பார்க்கிறானாம். பாரதியை முதலில் படி.
நம்முடைய
கரிச்சான் குஞ்சு சொன்னார் ஒரு கூட்டத்தில், திரிலோகம் பாரதியினுடைய
ஞானப் புத்திரர். திரிலோகத்திடம் போய், "என்ன திரிலோகம்,
பாரதியைப் பற்றி பேசியாச்சு, எழுதியாச்சு என்ன பண்ணலாம்?"
என்று கேட்டாராம். உடனே திரிலோகம், "எல்லர்ம் சரி,
போய் பாரதியைப் படி" என்றாராம். பாரதியைப் படிக்கவேண்டும்.
எப்பொழுதும் படித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் இன்றைக்கு
ஒரு அவலம், நம்முடைய பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும்
பாரதி பயிற்சி இல்லை. ஏன் இல்லை? சாயி சொன்னார், "நாம்
பேசுகிறோம் கூட்டமே வரவில்லை. personality development course
நடத்துகிறார்கள். கூட்டமாக வந்து நிற்கிறார்கள்" என்று.
ஏனென்றால் நீங்கள் எல்லாம் மனிதர்களாவதற்குப் படிக்கவில்லை.
நீங்கள் எந்திரங்களாகி பணம் சம்பாதிப்பதற்காகப் படிக்கிறீர்கள்.
நம் படிப்பெல்லாம் என்ன? எந்தக் கல்லூரியிலே கூட்டம்? எதற்கு
பத்து லட்சம் இருபது லட்சம் பணம் கொடுக்கிறோம்? எல்லாம்
Information Technology. அமெரிக்காக் காரணிடமும், இங்கிலாந்திலும்,
ஜெரமனியிலும், பிரான்ஸிலும் போய் கூலி வேலை, அடிமை வேலை
செய்வதற்காக இந்திய மூளை பயன்படுகிறது. இதில் பெரிய பெருமை,
அமெரிக்காவில் இருக்கிற பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம்
இந்தியர்கள். உன் விஞ்ஞானம் என்ன செய்தது? தமிழ்நாட்டிலே
இருக்கிற அடிமட்ட மக்களை முன்னேற்றுகிறதா? உங்களை மனிதனாக்குகிறதா?
கோடிகோடியாக சம்பாதித்து நீ செய்வது என்ன? கண்டுபிடித்தது
என்ன? அமெரிக்காக்காரன் இன்றைக்கு விரட்டுகிறான். நீ பிச்சை
எடுக்கப் போகிறாய்? ஏனென்றால் அமெரிக்காக்காரன் தூங்கிக்கொண்டிருப்பதற்காக,
உங்களிடம் வேலை வாங்குகிறான். பணத்தைப் பார்த்தவுடன் கூலிக்காரனாகப்
போகிறோம். நமக்கு சுதந்திர உணர்ச்சி இல்லை. பாரதியார் சொன்னார்,
என்று தணியும்
எங்கள் சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
முதல் அடி
'என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்' தாகம் இருந்தால்
தண்ணீர் குடிப்பான். தணித்துக்கொள்ளலாம். எங்கேயாவது தேடி
தணிப்பான். ஆனால் அந்தத தாகமே இல்லையே. நாம் எப்படி இருக்கிறோம்?
'என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' அடிமைத் தனத்திலே
ஒரு ருசி. அதிலே இருக்கிற லயிப்பு. பாரதியாரே ஒரு பன்றிக்
கதை சொல்லியிருக்கிறார். ஒரு அரசன் சாபத்தினாலே பன்றியாகப்
போய்விட்டான். அப்போது சாபம் நீங்குவதற்கு வழி என்றால்?
அவனுடைய மகன் ஒரு நாள் வந்து அந்தப் பன்றியைக் கொல்வான்.
கொன்ற உடனே மனித உருவம் வந்துவிடும். என்று ஒரு சாபம். இவன்
பன்றியாகப் போன பிறகு பன்றியாக இருந்து பல குட்டி போட்டு
சகதியில் இருந்தான். இவனுடைய பையன் வெட்டவந்தான். அந்தப்
பன்றியாக இருக்கிற அரசன் சொன்னான், "அய்யா வெட்டாதே,
இதுவே எனக்கு சுகமாக இருக்கிறது" என்று. இது பாரதியார்
சொன்ன கதை. அந்த நிலையிலே நாம் இருக்கிறோம்.
சமச்சீர்
கல்வி கொண்டுவந்தவுடனே, இருக்கிற எல்லா மெட்ரிக்குலேஷன்
பள்ளிகளும் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறார்கள். படிப்பதற்கு
நாம் அங்கேதான் போகிறோம். டி.வி. நிகழ்ச்சியில் சினிமா பாட்டு
பாடுகிறான். சினிமா பாட்டு தமிழில் இருக்கிறது. பாடுகிறவன்
தமிழ் நாட்டுக்காரன். பாடின ஆளே உட்கார்ந்திருக்கிறார்.
இதற்குத் தொகுத்து வழங்க ஒரு அம்மா வந்திருக்கிறது. அரையும்
குறையுமாக. எந்தப் பெண்ணுரிமைப் பேசுகிறவரும் இதைப் பற்றி
யாரும் கேட்கவே இல்லை. பெண்களை வைத்து விளம்பரம் செய்கிறார்கள்.
இதை ஒரு பெண்ணியம் பேசுகிறவனும் கேட்கவில்லை. அவன் பாரதியைத்
திட்டிக்கொண்டிருக்கிறான். காந்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறான்.
அந்த டி.வி.யைப் பார்த்தீர்களென்றால், நான் என்ன சொல்லவருகிறேன்
என்றால், அதில் பாடுகிறவர்கள் தமிழர். நீதிபதிகள் தமிழர்கள்.
அவரிடம் கேள்வி கேட்பவர்களும் இங்கிலீஷில் கேட்கிறார்கள்.
நம்முடைய பாடகர்கள் கமென்ட் பூராவும் இங்கிலீஷில்தான் 'அதற்கு
அவர்கள் அது இருக்கு, இது இருக்கு, கெமிஸ்ட்ரி இருக்கு,
ஃபிசிக்ஸ் இருக்கு' இப்படியே பேசிக்கொண்டிருக்கிறான். இந்த
நிகழ்ச்சிக்கு பெண் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள்
போய் உட்கார்ந்திருக்கிறார்கள். இதிலே அவர்களுக்குப் பெரிய
சந்தோஷம். ஏன் இந்த அவல நிலை? இது அடிமைத்தனத்தினில் மோகம்.
வெள்ளைக்காரன் போய்விட்டான். ஆனால் வெள்ளைக்காரன் மேலிருக்கிற
அடிமைத்தனம் போகவில்லை. டைரக்டர் மன்னிக்கவேண்டும். வெள்ளைக்காரன்
போய்விட்டான். அந்தக் காலனி ஆதிக்கத்தில் வந்த கிரிக்கட்
நம்மைவிட்டுப் போச்சா? அமெரிக்காக்காரன் வெள்ளைக்காரனே,
கிரிக்கட் ஆடுவதில்லை. பெர்னாட்ஷா சொன்னார் 'America and
England are two countries which are seperated by same
language.' என்று. அதனால் அமெரிக்காக்காரன் English என்று
சொல்வதில்லை. அவன் American என்று சொல்கிறான். சுதந்திர
உணர்ச்சி. வெள்ளைக்காரனை எதிர்த்துப் போராடிய அமெரிக்காக்காரர்கள்,
எதெல்லாம் வெள்ளைக்காரத்தனமோ, அவை எல்லாவற்றையும் தூக்கி
எறிந்துவிட்டான். ஆங்கிலேயர்களுக்கு உடை உடுப்பதிலே இருந்து
எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு உண்டு. ஆனால் அமெரிக்கன் பிரசிடென்ட்
ஸ்லாக் போட்டுக்கொண்டு வெளியில் வருவார். எல்லாவற்றையும்
தலைகீழாக மாற்றினார்கள். அதனாலே அமெரிக்காவில் கிரிக்கட்டே
ஆடுவதில்லை. அவன் பேஸ்பால் என்று ஒன்று கண்டுபிடித்தான்.
ஆனால் எங்கெல்லாம் ஆங்கிலேய ஆதிக்கம் இருந்ததோ, அங்குதான்
கிரிக்கட் இருக்கிறது. இன்றைக்கு நிலைமை என்ன? அகில இந்திய
வானொலி நிலையம் ஒவ்வொரு நாளும் எட்டு மணிநேரம் பத்து மணிநேரம்
கிரிக்கட் நேர்முக வர்ணணை கொடுத்துக் கொண்டிருக்கிறது. டைரக்டரால்
ஒன்றும் பண்ண முடியாது. ஏனென்றால் டெல்லியிலே செய்கிறார்கள்
இதை. எவன் கிரிக்கட் கமென்டரியை ரேடியோவில் கேட்கிறான்?
உங்களுக்கு விஷுவல் மீடியா வந்துவிட்டது. வீட்டில் டி.வி.
வைத்துக்கொண்டு அவனவன் குதிக்கிறான். எதற்குச் சொல்கிறேன்
என்றால், நம்முடைய அடிமைத்தனம் எந்த அளவுக்குப் போயிருக்கிறது.
கிரிக்கட் விளையாடுகிறவனுக்கு 'பாரத ரத்னா' கொடு என்கிறான்.
பாரதத்திற்கு உழைத்தது எல்லாம் யார் என்றே தெரியவில்லை.
யார் வரலாறு தெரியும்? மகாதேவ தேசாயை உங்களுக்குத் தெரியுமா?
பியாரி லாலை தெரியுமா? வினோபா பாவே பெயர் பூமிதான இயக்கம்
என்று வந்து உங்கள் மேல் திணிக்கப்பட்டுவிட்டது. திப்பித்துக்கொள்ள
முடியவில்லை. மற்ற எந்தத் தியாகியாவது உங்களுக்குத் தெரியுமா?
உயிரைவிட்டத் தியாகிகளைத் தெரியுமா? நம்முடைய வரலாறு தெரியுமா?
ஒன்றும் தெரியாது.
பழமைப ழமையென்று
பாவனை பேசலன்றிப்
பழமையி ருந்தநிலை - கிளியே
பாமர ரேதறிவார்?
என்று பாரதியார்
கேட்டார். அவர் கேட்காத விஷயம் இல்லை. தொடாத விஷயமில்லை.
சங்கீத விஷயம் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சங்கீதம்
பாடுகிறர்கள் எடுத்துப் படிக்கவேண்டும். அதிலே சொல்கிறார்,
”பொய்க் குரலிலே பாடாதீர்கள். வாயைத் திறந்து ஆ என்றுப்
பாடுங்கள்” எத்தனை வித்வான் அப்படிப் பாடுகிறார்கள்? இன்றைக்கு
மதுரை சோமு உண்டா? பழைய வித்வான் பாடினது மாதிரி மூன்று
மணிநேரம் நான்கு மணிநேரம் பாடுகிறவர்கள் உண்டா? ஏன்? நாம்
எல்லாவற்றிலும் சலித்துப்போய்விட்டோம். எல்லாவற்றையும் காசாகப்
பார்க்கிறோம். மதுரை சோமுவுக்கு பிள்ளையார் கோவிலில் கச்சேரி
வைத்தால் ஐந்து மணிநேரம் பாடுவார். பாடி ஆர்வம் முடியாது.
கச்சேரி முடிந்துவிடும். போய் எங்கே தங்கியிருக்கிறாரோ,
அங்கே தொடர்ந்து பாடிக்கொண்டிருப்பார். சங்கீதமாகவே வாழ்ந்தவர்கள்.
இன்றைக்கு ஒரு மணிநேரம் பாடினால் இவ்வளவு ரூபாய் என்று எல்லாம்
காசாகிவிட்டது.
பாரதியைப்
படித்தால், பாரதியைப் பயின்றால், நாம் மனிதர்களாக இருப்போம்.
நாம் தமிழர்களாக இருப்போம். அவர் சொன்னதுபோல ஒரு இந்திய
ஒற்றுமையை யாரும் சொல்லவில்லை. தாகூர் கூட சொல்லவில்லை.
அப்படி சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. பாரதியார் பாடினார்,
வங்கத்தில்
ஒடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்
என்ற பாடலில்
அவர் இந்தியா முழுமையையும் பாடினார். இந்தியாவை முழுமையாகப்
பார்க்கும்போது தாம் தமிழன் என்பதை அவர் மறக்கவில்லை.
வாழிய செந்தமிழ்,
வாழ்கநற் றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு,
வாழிய பாரத
மணித்திரு நாடு, எப்போது? தமிழர் நற்றமிழராக வாழ்வதற்கு.
செந்தமிழ் வாழக்கூடிய பாரதம் வேண்டும். தமிழை அழிக்கக்கூடிய
பாரதம் அல்ல. தமிழனின் முகவரியை நீக்கக்கூடிய பாரதம் அல்ல.
ஒவ்வொருவனும் அப்படி இருக்கவேண்டும். இதைத்தான் காந்தியும்
சொன்னார். யாருக்காவது ஆர்வம் இருக்குமானால், ஒரு மாணவர்
தமிழை ஆய்கிறவர் அல்லது சமூகவியல் மாணவர்கள் யாராவது இருந்தால்
'மகாகவி பாரதியும்-மகாத்மாவும்' என்று நீங்கள் ஆய்வை எடுத்துக்கொண்டால்,
ஆயிரம் பக்கத்திற்கு புத்தகம் எழுதலாம். இருவருடைய கருத்துக்களுடைய
ஒற்றுமையை நீங்கள் ஆய்வு செய்யலாம். பாரதியார் கவிதையிலும்
கட்டுரையிலும் எந்தக் கருத்துக்களைச் சொல்லிவிட்டு மறைந்தாரோ,
அதை விரிவுப்படுத்தினால் காந்தியம் வெளிப்படும். பாரதியார்
நமக்குச் சொன்னார், 'வன்முறையிலே நம்பிக்கை வைக்காதீர்கள்.
இந்த வெடிக்காய் விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.' என்று.
வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டபோது பாரதியார் துணிச்சலாக
எழுதினார். அந்த ஆஷ் மனைவியோடு வந்தார். "பரமசிவன்-பார்வதியைப்
போல் வந்தவரை சுட்டுக்கொன்றதை நம்மால் ஏற்கமுடியவில்லை"
என்று பாரதி எழுதினார். அவர் என்ன தேச துரோகியா? வன்முறையை
எப்பொழுதும் எதிர்த்தார்.
இன்றைக்குக்
காலையில் செய்தி, தீவிரவாதி என்று ஒரு வார்த்தை, தயவுசெய்து
டைரட்டரிடம் கேட்டுக்கொள்கிறேன், இந்த பயங்கரவாதத்தை தீவிரவாதம்
என்ற பெயரால் சொல்லாதீர்கள். தீவிரவாதம் என்பது வேறு, பயங்கரவாதம்
என்பது வேறு. இவர்கள் பயங்கரவாதிகள் சமூக விரோதிகள். தீவிரவாதம்
என்றால் குறிக்கோளில் ஒரு நல்லது இருக்கிறது என்ற அர்த்தம்.
காங்கிரஸில் மிதவாதம், தீவிரவாதம் இருந்தது. குறிக்கோள்
இந்திய சுதந்திரம். ஆக குறிக்கோளில் ஒரு நன்மை இருக்கிறது.
இவர்களைத் தீவிரவாதி என்று சொன்னால் இவர்கள் நோக்கத்திலே
ஏதோ நல்லது இருப்பதுபோல ஒரு தவறான கருத்தை நாம் உருவாக்குகிறோம்.
எப்பொழுது ஒரு உயிரைக் கொல்லத் துணிகிறானோ, அவன் பயங்கரவாதி.
அது எப்படி தீவிரவாதம் ஆகும்? அப்படி தீவிரவாதம் என்கிற
ஒரு நம்பிக்கையை உருவாக்கியதால்தான் இன்றைக்கும் அந்த பயங்கரவாதம்
நிலைக்கிறது.
பாரதியார்
சொன்னார் நீங்கள் உழவேண்டாம், பயிர்செய்யவேண்டாம், ஊனுடலை
வருத்தாதீர். உணவு இயற்கை கொடுக்கும். நீ என் மதத்தைக் கைக்கொணமின்.
இங்கு உங்களுக்குத் தொழில் அன்பு செய்தல் கண்டீர். அன்பு
செய்தல். அன்பு காட்டுவதில்லை. அன்பு என்பது நீங்கள் வெறுமனே
வீட்டிலிருப்பதில்லை. வெளியே வந்து துன்பம் செய்பவனுக்கு
உதவி செய்கிறீர்களே அது அன்பு செய்தல். பாரதி நம்முடைய இராமலிங்க
வள்ளலாரை மாடலாக வைத்துக்கொண்டார். அவர்தான் சொன்னார், 'ஆருயிர்கட்கெல்லாம்
நாம் அன்பு செயல் வேண்டும்' அதனால்தான் அன்னசாலை வைத்தார்.
'பேசாப்பொருளை
பேசநான் துணிந்தேன்'
அவருக்குத்
தெரியும் யாரும் பேசவில்லை என்று
'கேட்காவரத்தை
கேட்க நான் துணிந்தேன்'
என்ன வரம்?
மண்மீ துள்ள
மக்கள் பறவைகள்
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
யாவுமேன் வினையாலிடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட னிணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டுந் தேவ தேவா!
எவ்வளவு பெரிய
ஆசை. வள்ளலாருக்கு வந்த ஆசை. எல்லா உயிர்களும் இன்புற்று
இருக்கவேண்டும். எப்படி இருக்கவேண்டும். யாவும் என் வினையால்
இடும்பை தீர்ந்தே. அதற்கு நாம் உழைக்க வேண்டும். காந்தி
சொன்ன நிர்மானத் திட்டம் இதுதான். மக்கள் நல்வாழ்வு வாழ
நான் உழைக்கவேண்டும்.
ஞானாகா சத்து
நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீக்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுள மிரங்கி
அங்ஙனே யாகுக' என்பாய், ஐயனே!
ததாஸ்து.
ததாஸ்து என்பது ஸமஸ்கிருத வார்த்தைக்கு பொருள் அங்ஙனே ஆகுக.
இவர் கட்டளையிடுகிறார். கணபதிக்கு. அங்ஙனே ஆகுக ஐயனே! எப்பேர்பட்ட
ஆசை! எப்பேர்பட்ட கனவு! யோகத்துக்கும் யாகத்துக்கும் விளக்கம்
சொன்னார்.
ஊருக் குழைத்திடல்
யோகம் - நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் - உளம்
பொங்கல்இல் லாத அமைதிமெய்ஞ் ஞானம்
வேறு என்ன
சொல்ல முடியும்? உங்களுடைய வேதம், வேதாந்தம் இருக்கிற அத்தனைத்
தத்துவங்களுடைய பிழிவை, இன்றைக்குத் தேவையானதை பாரதி அன்றே
சொன்னார்.
பாரதியார்
சொன்னார், தெய்வத்தை மற்றவர்களுக்கு தொண்டு செய்து உணர்ந்துகொள்
என்று. எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்றான் கண்ணபெருமான்
என்றார் பாரதியார். எல்லா உயிர்களிலும் கண்ணபெருமான் இருக்கிறார்.
பிறகு கண்ணனை எதற்குத் தேடிக்கொண்டுப் போகவேண்டும். எதிரிலே
இருக்கிறவனுக்கு தொண்டு செய். சிவனடியார்களுக்கு செய்வதுதான்
நாகேஸ்வர பூஜை. எல்லாருக்கும் சோறு போடுவதல்லை. பிச்சைக்காரனுக்கு
சோறு போடுவதல்ல. சிவனடியார்களுக்கு உணவு பாலித்ததுதான் நாகேஸ்வர
பூஜை. ஆனால் பாரதி எல்லா உயிர்களுக்கும் நீ அன்பு செய்தால்
மோட்சம் என்று சொன்னார். ஊருக்கு உழைத்திடல் யோகம். வீட்டுக்குள்ளே
உட்கார்ந்து மந்திரம் சொல்வது அல்ல. நலம் ஓங்கிடுமாறு வருந்துதல்
யாகம். வேறு எதுவும் செய்ய வேண்டாம். இப்படி மணிமணியாக முத்து
முத்தாக திருக்குளைப்போல் நமக்கு நீதி உபதேசித்தார் பாரதியார்.
பாரதியார்
கவிதைகளைப் படியுங்கள். எதுவும் பொழுதுபோக்கு அல்ல. உங்களுக்கு
மகிழ்ச்சி தருவதற்காக கவிதைகளை எழுதியிருக்கிறார். உங்கள்
உள்ளம் மேம்படுவதற்காக கவிதைகள் எழுதியிருக்கிறார். அந்தக்
கவிதைகள்கூட உங்களை மேம்படுத்தும், பண்படுத்தும், மகிழ்ச்சியிலே
ஆழ்த்தும். இலக்கியத்தினுடைய நோக்கம் என்ன? மனிதத்தை உயர்த்துவது.
மனிதர்களைப் பண்படுத்துவது. மனிதர்களுக்கு அமரத்துவம் கொடுப்பது.
எது உயர்த்துமோ அது இலக்கியம்.
பாரதியார்
ஒரு கட்டுரையிலே எழுதியிருக்கிறார். நீங்கள் அன்போடு இருந்தால்
உங்களுக்கு சைந்யம் தேவையில்லை. உங்களுக்கு இராணுவம் தேவையில்லை.
அன்பென்று
கொடு முரசே
நிகரென்று
கொடு முரசே - இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்
தகரென்று கொட்டு முரசே - பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.
21-ல் அவரது
மறைவுக்கு முன்னால் பாரதியார் சொன்னார். நான் உங்களைக் கேட்கிறேன்,
உங்களுடைய உரிமையுடைய இந்தியாவில், உரிமை உரிமை என்று தினம்
சத்தம் போடுகிறார்களே அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்,
ஜாதி ஒழிந்ததா? யாராவது ஜாதி வேண்டாம் என்று போராடுகிறீகளா?
Human rights council வைத்துக்கொண்டு அதில் எத்தனை வக்கீல்,
எத்தனை தீர்ப்பு! யார் ஜாதி வேண்டாம் என்கிறீர்கள்? முஸ்லீம்களுக்கு
தனியாக தொகுதி வேண்டும். பள்ளருகுத் தொகுதி, பறையருக்குத்
தொகுதி. செட்யூல்டு காஸ்டுக்கென்று தொகுதி ஒதுக்கினால் எனக்கு
சக்கிளியனுக்கு ஒதுக்கு. எங்கேடா ஜாதி ஒழியும்? எப்போ ஒழியும்?
சேர்ந்து வாழ வேண்டாமா? எப்போ உங்களுக்கு அந்தப் புத்தி
வரும்? பாரதியைப் படியுங்கள்.
நிகரென்று
கொடு முரசே - இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்
தகரென்று கொட்டு முரசே - பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.
நமக்கு வேதம்.
இன்றைக்குத் தேவைப்படுகிற அறிவு. வேதத்தை நம்பிய பாரதி,
வேதங்களைப் பயின்று தேர்ந்த பாரதி நமக்குச் சொன்னார். கண்ணன்
பாட்டில்
வேதம் என்னும்
கதைத் திரளில்
சில பேதங்கள் கோர்த்து வைத்தான்
வேதம் என்றால்
அறிவு. நீ வேதம் என்று சொல்கிற கதைத் திறளில் சில பேதங்கள்
கோர்த்து வைத்தான். இந்தத் துணிச்சல் யாருக்கும் வருமா?
உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.
வேதம் என்றால்
உண்மை. உண்மைக்குப் பொருத்தம் இல்லையா, அதைத் தூக்கி எறிந்துவிடு.
முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்களே என்று கேட்டால், 'உனக்கு
முன்னால் முட்டாள்கள் பிறந்ததில்லையோ?' என்றார் பாரதி. அப்பன்
வெட்டிய கிணறு என்பதற்காக எவன் உப்புத் தண்ணீரைக் குடிப்பான்
என்று கேட்டார்.
எனவே சுதந்திரமான
சிந்தனை, தூய அறிவு, கொஞ்சம் கூட மங்காத அறிவு, வறுமையிலே
வாழ்ந்த செம்மையான வாழ்க்கை. பாரதியை நீங்கள் படிப்பதோடு
மட்டுமல்லாமல், அவர் வாழ்க்கையைப் படியுங்கள். பாரதியினுடைய
வாழ்க்கை முழுமையானது. சொல் செயல் சிந்தனை அத்தனையும் ஒருமை
உடையன. முறண்பாடு இல்லாத வாழ்க்கை. அதனால்தான் பாரதிதாசன்
தன்னை, தன்னை பாரதிதாசன் என்று வைத்துக்கொண்டார். பல மூடர்கள்
பாரதிதாசன் என்ற பேரைச் சொல்லாமல் மறைக்கிறார்கள். இது யாரும்
அவருக்கு வைத்தப் பெயரில்லை. பாரதிதாசன் தனக்கு வைத்துக்கொண்டப்
பெயர். கனக சுப்புரத்தினம் தனக்கு வைத்துக்கொண்ட பெயர் பாரதிதாசன்.
புலவர் கனக சுப்பு ரத்தினத்தை புரட்சிக் கவிஞனாக மாற்றியது
மகாகவி பாரதியார். அதனால்தான் பாரதிதாசன் சொன்னார்,
என்னென்று
சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்
'பாரதி தமிழைத்
தூக்கிப் பிடித்தார்' இதை நான் சொல்லவில்லை. 'தமிழைப் பழித்தவனை
தாய் தடுத்தாலும் விடேன்' என்று சொன்ன பாரதிதாசன் மகா வாக்கியம்.
பாரதியைப்
பயிலுங்கள் நீங்கள் வாழுங்கள்.
நன்றி. வணக்கம்.